மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த மாதிரி ஒரு புதுமையான அணுகுமுறையாகும்.
2014-ல் தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission) தொடங்கப்பட்டபோது, அதன் தொலைநோக்குப் பார்வை எளிமையாகவும் அதே சமயம் புரட்சிகரமானதாகவும் இருந்தது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை வசதி இருப்பதை உறுதி செய்வதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. பத்தாண்டுகளுக்குள், இந்தத் தொலைநோக்குப் பார்வை நிஜமாகியுள்ளது. இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு ஊரக பகுதியும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (Open Defecation Free (ODF)) பகுதியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந்தச் சாதனை பொது சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. பெண்களும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களும் எதிர்கொள்ளும் பாதிப்புகளைக் குறைத்துள்ளது. மேலும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள்
இருப்பினும், சுகாதார இயக்கத்தின் சாதனையானது அடுத்தகட்ட சவாலையும் வெளிப்படுத்தியுள்ளது. கழிப்பறைகள் என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டுமே. உண்மையான சவால், அதனால் உருவாகும் மலக் கழிவுகளை திறம்பட கழிவு நீர் தொட்டிக்குள் கொண்டு செல்வதில் தான் உள்ளது. பெரும்பாலான ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளில், கழிவு நீர் தொட்டிகளும் குழிகளும் கழிவுகளைத் தேக்கி வைப்பதற்கான முதன்மை முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. காலப்போக்கில், இந்தக் தொட்டிகள் நிரம்பிவிடுவதால், அவற்றைத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டியது முக்கியமான பணியாக இருந்து வருகிறது. கழிவுகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்படாவிட்டால், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத இயக்கம் மூலம் அடையப்பட்ட முன்னேற்றம் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். இது போன்ற சவால்களே, தூய்மை இந்தியா இயக்கம் (ஊரக பகுதிகள்) திட்டத்தின் அடுத்த கட்டமான, 'இரண்டாம் கட்டம்' தொடங்குவதற்கு முக்கியமான காரணியாக இருந்துள்ளன. இது திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலைக்கும் (Open Defecation Free (ODF)) மேலான அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.
திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலை திட்டமானது கழிப்பறை கட்டுமானம் என்பதைத் தாண்டி, திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, நடத்தை மாற்றம் மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவைச் சங்கிலிகள் மூலம் அதன் விளைவுகளின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. இந்த முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக உள்ளது. அக்டோபர் 2025 நிலவரப்படி, 5.68 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊரக பகுதிகளில் 97 சதவீதம்—திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இருப்பினும், மலம் கலந்த கழிவுகளை நிர்வகிப்பது, ஊரக மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில், இன்னும் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.
இந்த இடைவெளியை நிவர்த்திசெய்ய புதுமையான அணுகுமுறைகளை பரிசோதிப்பதில் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது. நகர்ப்புறங்களில் 200-க்கும் மேற்பட்ட மலக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் மாநிலம் முதலீடு செய்துள்ளது மற்றும் 41 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கூட்டு சுத்திகரிப்புக்கு ஊக்கமளித்துள்ளது. இந்த வசதிகள் நகரங்களுக்கு சுத்திகரிப்பு உள்கட்டமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. ஆனால், அவற்றின் நன்மைகளை அவற்றைச் சுற்றியுள்ள ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதில் சவால் உள்ளது. இது போன்ற சூழல்களில்தான் ஊரக மற்றும் நகர்ப்புற கூட்டாண்மைகள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.
ஊரகப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து மட்டத்தில்
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் இந்த கூட்டாண்மை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு 65 கிலோ லிட்டர் (kilo litres a day (KLD)) கொள்ளளவு கொண்ட சதாரா நகரத்தின் மலக் கழிவு சுத்திகரிப்பு நிலையம், முழு கொள்ளளவிற்கும் குறைவாகவே இயங்கியது. இதை அங்கீகரித்து, ஜகத்வாடி, சோங்கான், கோடோலி மற்றும் தேகான் ஆகிய நான்கு ஊரகப் பகுதிகள், நகரின் சுத்திகரிப்பு நிலையத்தை அணுக அனுமதிக்கும் ஒரு ஏற்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
அவர்களின் கழிவுநீர் தொட்டிகள், பெரும்பாலும் ஒருபோதும் சுத்தம் செய்யப்படாமலோ அல்லது முறைசாரா ஆபரேட்டர்களால் அதிக விலையில் மட்டுமே காலி செய்யப்படுவதோ இல்லாமல் இருக்கும் நிலையில், அவை இனிமேல் வழக்கமான இடைவெளிகளில் மற்றும் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை திட்டமிடப்பட்ட கழிவு அகற்றும் சேவைகளை வழங்குவதற்காக, ஊரகப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துகளால் ஒரு ஒப்பந்தத்தின்கீழ் ஒரு தனியார் சேவை வழங்குநர் நியமிக்கப்பட உள்ளார்.
ஊரக பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துகளால் விதிக்கப்படும் ஒரு மிதமான துப்புரவு வரி (sanitation tax) மூலம் செலவுகள் ஈடுகட்டப்படும். இது குறைந்த விலை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும். சதாரா பஞ்சாயத்து சமிதிக்கும் சதாரா நகராட்சிக்கும் இடையிலான ஒரு முறையான ஒப்பந்தம், ஊரகப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துகளிலிருந்து வெளிவரும் கழிவுநீக்கும் வாகனங்கள் மலக் கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அணுகவும், கழிவுகளை இலவசமாக சுத்திகரிக்கவும் அனுமதிக்கும். இது ஏற்பாட்டை நிலையானதாகவும் இருதரப்பு நன்மை பயக்கும் வகையிலும் மாற்றும்.
ஆனால், அனைத்து ஊரகப் பகுதிகளையும் ஒரு நகரத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புடன் இணைக்க முடியாது. சில ஊரகப் பகுதிகள் தங்கள் கழிவுகளைத் தாங்களாகவே சுத்திகரிக்க வேண்டியிருக்கும். காடவ் தாலுகாவில் உள்ள ஒரு பெரிய கிராமமான மாயானி இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் சேவைகளுக்கான அதிக தேவையைக் கருத்தில் கொண்டு, ஊரகப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை திட்டமிடப்பட்ட முறையில் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் முறையை அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இந்தப்பணியை ஒரு தனியார் நிறுவனமோ அல்லது உள்ளூர் சுயஉதவிக் குழுக்களோ கண்காணிக்கும்.
கூடுதலாக, சுற்றியுள்ள 80 ஊரக பகுதிகளுக்கு சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட, தூய்மை இந்தியா இயக்கம் (ஊரக) திட்டத்தின்கீழ் ஒரு கொத்து அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (cluster-level faecal sludge treatment plant) மேம்படுத்துவதற்காக மாயானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை, ஊரகப் பகுதிகளில் உள்ள குழுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். அதே நேரத்தில் நிதி மற்றும் தொழில்நுட்பரீதியாக சாத்தியமான, தனித்த சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை உருவாக்க தங்கள் வளங்களைத் திரட்ட முடியும் என்பதைக் காட்டுகிறது.
சதாரா மாதிரி, ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகள் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதையும், மலக்கழிவு மேலாண்மை எவ்வாறு ஒரு நீடித்த அமைப்பாகச் செயல்பட முடியும் என்பதையும் காட்டுகிறது. இந்த உதாரணம், மகாராஷ்டிராவின் ஊரகப் குதிகள் முழுவதும் பாதுகாப்பான சுகாதார சேவைகளைப் பராமரிக்க உதவும். மேலும், திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையின் வெற்றிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், மலக்கழிவு மேலாண்மையை ஊரகப் பகுதி சுகாதாரத்தில் திறம்பட ஒருங்கிணைப்பதற்கும், நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசாங்கங்கள், தனியார் மற்றும் பொதுத் துறையினர், குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்பதை இது போன்ற முன்னேற்றங்கள் காட்டுகின்றன.
அளவை அதிகரிக்கக்கூடிய ஒரு மாதிரி
விரிவாக்கப்பட்டால், இதுபோன்ற மாதிரிகள் மகாராஷ்டிராவில் உள்ள கிராமங்களை மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளில் உள்ள சமூகங்களையும் மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளன. அவ்வாறு செய்வதன் மூலம், இந்தியா தனது சுகாதார சாதனைகள் பல தலைமுறைகளுக்கு நீடிப்பதை உறுதி செய்ய முடியும். தூய்மை இந்தியா திட்டத்தின் உண்மையான வெற்றி என்பது கட்டப்பட்ட கழிப்பறைகளை மட்டுமல்லாமல், அவற்றை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளையும் பொறுத்தே அமையும். அந்த அமைப்புகள் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாகவும், இந்தத் திட்டம் அடைய முற்பட்ட இலக்கை நிலைநிறுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
ஆசிம் மன்சூரி, சிஇபிடி பல்கலைக்கழகத்தின் மேம்பாடு மற்றும் வசதிகள் ஆராய்ச்சி மையத்தில் (Centre for Research in Development and Facilities (CRDF)) உள்ள நீர் மற்றும் சுகாதார மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மற்றும் உத்தித் தலைவராக உள்ளார். துருவ் பவ்சார், CRDF-CEPT பல்கலைக்கழகத்தின் நீர் மற்றும் சுகாதார மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மற்றும் தலைவராக உள்ளார். உபாசனா யாதவ் அதே மையத்தில் மூத்த திட்டத் தலைவராகப் பணியாற்றுகிறார். கஸ்தூரி ஜோஷி திட்டத் தலைவராகவும், ஜினல் சேடா மூத்த ஆராய்ச்சி உதவியாளராகவும், அனைவரும் CRDF-CEPT பல்கலைக்கழகத்தின் நீர் மற்றும் சுகாதார மையத்தில் பணியாற்றுகின்றனர்.
Original Article : Recasting sanitation with urban-rural partnerships -Aasim Mansuri, Dhruv Bhavsar, Upasana Yadav, Kasturi Joshi, Jinal Chheda