ஆரவல்லி மலைத்தொடர் முதல் குல்தீப் செங்கார் வரை: உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகள், சமூகத்துடனான அதன் உறவுகள் குறித்து வெளிப்படுத்துவது என்ன?
-சுபம் சுக்லா மற்றும் கார்த்திகே சிங்
இந்த உத்தரவுகள், நீதிபதிகளும் சாதாரண மனிதர்களைப் போலவே தவறு செய்யக்கூடியவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றன. அத்தகைய தவறுகளை நீதித்துறை செயல்முறையிலேயே மேல்முறையீடு மூலம் சரிசெய்ய முடியும் என்பதையும் அங்கீகரிக்கின்றன. ஆனால், இது ஒரு நியாயமான கேள்வியையும் எழுப்புகிறது: பொதுமக்களின் ஆத்திரத்திற்கு பதிலளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து (suo motu) வழக்கு எடுப்பது, அவசர நடவடிக்கைக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையாக மாறிவிட வேண்டுமா?
சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களாலும் நீதிமன்றங்களின் கொள்கைகளாலும் சமூக உறவுகளை, சட்டம் ஒழுங்குபடுத்துகிறது. அரசியலமைப்பு நீதிமன்றங்கள், சட்டத்தின் பொருள் தெளிவில்லாத போது அதை விளக்கி, சட்டம் தன் நோக்கத்தை அடைய உதவுகின்றன. இதற்கு, உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி பிறப்பித்த இரு இடைக்கால உத்தரவுகளை உதாரணமாகச் சொல்லலாம்: ஒன்று, குல்தீப் சிங் செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது; மற்றொன்று, ஆரவல்லி சுரங்கம் தொடர்பான தன் முந்தைய தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இரு வெவ்வேறு பிரச்சினைகளை கையாண்டாலும், இந்த உத்தரவுகள் நீதிமன்றங்கள் சட்டத்தின் தெளிவுக்கும் சமூகத் தேவைகளுக்கும் இடையே சமநிலை தேடுவதையும், சட்டத்துக்கும் சமூக யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க முயல்வதையும் காட்டுகின்றன.
ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பான இந்தத் தடையாணை மிகத் தெளிவாக உள்ளது. வழக்கமாக நடக்காத ஒரு நிகழ்வாக, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட விடுமுறைக் கால அமர்வு, நவம்பர் மாதம் 20-ஆம் தேதி அதே எண்ணிக்கையிலான மற்றொரு அமர்வு வழங்கிய தீர்ப்பின் செயல்பாட்டைத் தடைசெய்தது. ஆரவல்லி மலைகளில் ஏற்பட்ட கடுமையான சுற்றுச்சூழல் சேதத்தை நீதிமன்றம் ஒப்புக்கொண்ட போதிலும், இந்த மலைத்தொடரின் புவியியல் எல்லைகள் பற்றி தெளிவின்மையும் வெவ்வேறு வரையறைகளும் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. முந்தைய தீர்ப்பு, “ஆரவல்லி மலைத்தொடர்கள்” பற்றிய குழுவின் வரையறை பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. முதல் பார்வையிலேயே, குழுவின் அறிக்கையும் முந்தைய தீர்ப்பும் சில முக்கியப் பிரச்சினைகளைத் தெளிவாகக் கையாளத் தவறிவிட்டன என்று நீதிமன்றம் குறிப்பிடுகிறது. அவை தெளிவுபடுத்தப்படும் வரை, தீர்ப்பை நிறுத்தி வைத்துவிட்டு, புதிய சுரங்க நடவடிக்கைகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் ஒரு நடைமுறை உண்மையைப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது: ஒரு முறை ஒழுங்குமுறை கட்டமைப்பு நடைமுறைக்கு வந்துவிட்டால், அதை மாற்றியமைக்க கடினமான நிர்வாக விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர். அதன் தலையீடு ஒரு விஷயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: சட்டம் முழுமையாக ஆராயப்படும் அல்லது மறுஆய்வு செய்யப்படும் வரை சட்ட அமைப்பிற்கு வழிகாட்ட ஒரு தற்காலிக ஏற்பாடாக இருந்த ஒழுங்குமுறை அதன் அசல் நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு முன்பு ஒரு "கட்டுப்படுத்தக்கூடிய அடிப்படையை" (controllable baseline) பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, நீதித்துறை சட்டமியற்றுதல் பொதுவாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஒரு கடுமையான சட்ட இடைவெளி இருக்கும் சூழ்நிலைகளைத் தவிர. பன்வாரி தேவி வழக்கின் (Bhanwari Devi case) விளைவாக பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கான விசாகா வழிகாட்டுதல்கள் உருவானதும், மரண தண்டனைக் கைதிகள் தொடர்பான வழக்குகளும் அத்தகைய அரிதான சூழ்நிலைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இத்தகைய தலையீடுகள் சாதாரண நடைமுறையாகிவிடக் கூடாது என்றும் கருதுகின்றனர். விசாகா போன்ற நீதித்துறை நடவடிக்கைகள் விதிவிலக்காகவே இருக்க வேண்டும். ஏனென்றால், சட்டமன்றமே மக்களின் விருப்பத்தை மிக நேரடியாகப் பிரதிபலிக்கிறது. நல்ல நோக்கம் இருந்தாலும், அவசரமாக நீதிபதியால் வெளியிடப்படும் உருவாக்கப்பட்ட சட்ட கட்டமைப்புகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், முந்தைய தீர்ப்பு வந்த ஒரு மாதத்திற்குள்ளேயே இடைக்கால உத்தரவு மூலம் வழங்கப்பட்ட ஆரவல்லி தடையாணை (Aravalli stay), நீதித்துறையின் நிலைத்தன்மை இல்லாத ஒரு தோற்றத்தை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. பொது நம்பிக்கை மற்றும் நிறுவன ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்துதல்
செங்காரின் வழக்கில் வழங்கப்பட்ட தடையாணை, நீதிக்காக நீண்டகாலமாக நடந்த போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தில், கட்டமைப்பு ரீதியிலான தடைகளும், ஆழமாக வேரூன்றிய அதிகாரத்தை கையாள்வதில் ஏற்பட்ட கடுமையான நிறுவனரீதியான தோல்விகளும் நிரம்பியுள்ளன. உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை வழக்கமானது போலவே தோன்றும், ஏனெனில், அது ஒரு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இருப்பினும், பொதுவாக, விடுவிக்கப்பட்ட நபரின் கருத்தைக் கேட்காமல் பிணை அல்லது தண்டனை நிறுத்திவைப்பு (sentence-suspension) உத்தரவுக்குத் தடை விதிக்கக் கூடாது என்ற விதியை நீதிமன்றம் ஒப்புக்கொண்டாலும், இதற்கு விதிவிலக்கு அளிக்கும் அத்தியாவசியமான அசாதாரண சூழல்கள் இருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்தத் தலையீட்டின் நோக்கம், நீதி அமைப்பு திருத்த முடியாத சிக்கலான நிலைக்குச் செல்வதைத் தடுப்பதாகும். போக்சோ சட்டத்தில், போலீஸ் காவலர்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர்கள் (பட்வாரிகள்) போன்ற கீழ்நிலை அதிகாரிகள்கூட “கடுமையான பாலியல் குற்றங்களுக்கு” பொது ஊழியர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) அப்படிக் கருதப்படுவதில்லை என்கிற முரண்பாடு நிலவுகிறது. இதன் மூலம் நீதிமன்றம் தெளிவாகச் சொல்கிறது: குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்புச் சட்டத்தின் நோக்கத்தையும், அதன் பாதுகாப்பு விதிகளையும் அர்த்தமற்றதாக்கும் வகையிலான கடுமையான அல்லது தொழில்நுட்பரீதியான விளக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் முறையான "அரசு ஊழியர்" என்று வகைப்படுத்தப்படாததால், அவரால் சட்டப் பாதுகாப்புகளை அச்சுறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ, அல்லது பலவீனப்படுத்தவோ முடியாது என்று வாதிடுவது தவறானது. உச்சநீதிமன்றம் போக்சோ (Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2012)) சட்டத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் வகையிலான நீதிமன்றங்களின் குறுகிய விளக்கங்களை பலமுறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் அரசுத் தலைமை வழக்கறிஞர் vs சதீஷ் (2021) (Attorney General for India v. Satish (2021)) வழக்கில், ஒரு சிறுமியின் ஆடையின்மீது தொடுவது போக்சோ பிரிவு 7-ன் கீழ் "தொடர்பு" அல்லது "உடல் தொடர்பு" ஆகாது என்ற பம்பாய் உயர்நீதிமன்றத்தின் பார்வையை உச்சநீதிமன்றம் கண்டித்ததோடு அந்தத் தீர்ப்பை நிராகரித்தது. இதேபோல், இண்டிபென்டன்ட் தாட் எதிராக இந்திய ஒன்றியம் (Independent Thought v. Union of India) (2017) வழக்கில், நீதிமன்றம் ஒரு குறிக்கோள் சார்ந்த அணுகுமுறையை (purposive approach) கையாண்டது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 375-ன் விதிவிலக்கு 2-ஐ (Exception 2) நீக்குவதன் மூலம், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் அவரது சம்மதமின்றி பாலியல் உறவு கொள்வது கற்பழிப்பு குற்றத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்ததை நீக்கியது. இந்த விதிவிலக்கு, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்துடன் (போக்சோ சட்டம்) முரண்பட்டிருப்பதையும், மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துகள் 14, 15, மற்றும் 21 ஆகியவற்றை மீறுவதாகவும் கண்டறிந்த நீதிமன்றம், அரசியலமைப்பு சார்ந்த நீதிநெறி மற்றும் சட்டமியற்றும் நோக்கத்தை வலியுறுத்தியது. இந்தத் தீர்ப்புகள் அனைத்தும், குழந்தை பாதுகாப்பைப் பொறுத்தவரை, சட்டங்கள் அவற்றின் பாதுகாப்பு நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யாமல், வலுப்படுத்தும் வகையில் மட்டுமே அமைய வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
நிறுவன ரீதியான உள்ளுணர்வு
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவுகளிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், சட்டம் என்பது தர்க்கம் மற்றும் அனுபவம் ஆகிய இரண்டாலும் வடிவமைக்கப்பட்டிருப்பதால், அது இயல்பாகவே சிக்கலானதாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு முடிவுகளிலும் பொதுவாகத் தெரியும் ஒரு விஷயம் என்னவென்றால், சட்டச் சிக்கல்களுக்குப் பதிலளிப்பதில் நீதிமன்றம் கொண்டுள்ள “நிறுவனரீதியான உள்ளுணர்வு” (institutional reflex) ஆகும். இந்த உத்தரவுகள் நீதித்துறை விவேகத்தை வலியுறுத்துகின்றன. அதாவது, நீதிமன்றங்கள் மீள முடியாத சூழ்நிலைகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தெளிவு கிடைக்கும் வரை ஒரு “கட்டுப்படுத்தக்கூடிய அடிப்படை நிலையினை” பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இருப்பினும், அவை இந்தியாவின் நீதி வழங்கல் முறையைப் பற்றிய ஆழமான கவலைகளையும், குறிப்பாக ஒரு இறுதித் தீர்வு கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களையும் எடுத்துரைக்கின்றன. செங்கார் (Sengar) வழக்கில், பல அம்சங்களைக் கையாளும் விரிவான 53 பக்க உயர்நீதிமன்றத் தீர்ப்பு இருந்தபோதிலும், மேல்முறையீடு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மிகப் பொதுவாகப் பார்க்கும்போது, நீதி வழங்கல் முறை, பல்வேறு காரணங்களால், இடைக்கால உத்தரவுகளால் மேலும் மேலும் சுமையாகக் கருதப்படுகிறது. இந்த இடைக்கால உத்தரவுகளே, நடைமுறையில், செயல்திறன் மிக்க சட்ட ஆட்சிமுறையாக செயல்படத் தொடங்கிவிட்டன என்று தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில், இடைக்கால உத்தரவுகள் நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால், சட்டம் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கு இடையேயான ஒவ்வொரு இடைவெளியையும் நீதித்துறை முடிவுகளால் தீர்க்க முடியாது. அதேநேரத்தில், நீதித்துறைக்கு நிறுவனரீதியான பொறுப்புணர்வு இல்லை என்ற கூற்றையும் அவை எதிர்க்கின்றன. இந்த பொறுப்புணர்வு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பரவலாக உள்ள அதிருப்தியையும், ஒரு ஒழுங்குமுறை வெற்றிடத்தை தெளிவுபடுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிடும் ஆரவல்லி உத்தரவில் நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது. இந்த உத்தரவுகள், நீதிபதிகள் அனைவரும் மனிதர்களைப் போலவே தவறுகள் செய்யலாம் என்பதையும், அத்தகைய தவறுகள் நீதித்துறை செயல்முறை மூலம் திருத்தப்படுகின்றன என்பதையும் ஒப்புக்கொள்கின்றன. இருப்பினும், அவை ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன: பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக தாமாக முன்வந்து (suo motu) நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு, அவசரத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட காரணமாக மாறவேண்டுமா? அப்படியானால், குறைந்த கவனம் பெறும் அதே சமமான தீவிரமான பிரச்சினைகளுக்கு என்ன நிலை? அவை உண்மையிலேயே குறைந்த அவசரமானவையா, அல்லது வெறுமனே குறைந்த கவனத்தை பெறுபவையா? போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த உத்தரவுகள் ஒரு நல்ல அம்சத்தை காட்டுகின்றன: உச்ச நீதிமன்றம் எப்போதும் மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக (accessible) இருப்பதே ஆகும். நீதிமன்றங்களின் விடுமுறை காலத்தில்கூட – நீதிபதிகள் சிந்திப்பதற்கும், தீர்ப்புகள் எழுதுவதற்கும், சட்ட ஆராய்ச்சி செய்வதற்கும் தேவையான ஓய்வு நேரத்தில்கூட – அநீதி திருத்தமுடியாத அளவுக்கு ஆழமாகிவிடாமல் இருக்க, அவசர அமர்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அரசியலமைப்பின் முக்கிய அதிகார அமைப்பாக, உச்சநீதிமன்றம் ஒவ்வொரு வழக்கின் மூலமும் சமூகத்துடன் நெருக்கமாக இணைந்திருப்பதைக் காட்டுகிறது. இது நீதிபதி ஜாக்சனின் பிரபலமான வார்த்தைகளை நினைவூட்டுகிறது: “நீதிமன்றங்கள் தவறு செய்யாதவை என்பதால் இறுதியானவை அல்ல; மாறாக, அவை இறுதியானவை என்பதால்தான் தவறு செய்யாதவையாகக் கருதப்படுகின்றன” என்ற வரி நினைவுகூரப்படுகிறது.
எழுத்தாளர்கள், புது டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.
Original Article : From Aravallis to Kuldeep Sengar: What Supreme Court’s interim orders tell us about its relationship with society. -Shubham Shukla and Kartikey Singh