முக்கிய அம்சங்கள்:
— கடன் சுமையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ₹87,695 கோடி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue (AGR)) நிலுவைத் தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தவணை செலுத்தாமல் நிறுத்தி வைப்பது என்று கடந்த புதன்கிழமை அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இது நிறுவனத்துக்கு எதிர்கால நிதிப் பொறுப்புகள் குறித்த தெளிவை அளிக்கும் என்றும் தனியார் துறை வலியுறுத்திய முக்கிய முன்நிபந்தனை இதுவே என்றும் தெரிவிக்கப்படுகிறது.
— இரண்டு பெரிய நிறுவனக் குழுக்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிவித்தனர். அரசு தனது பங்கை வெளியேற்றுவதற்கான ஒரு உள் அளவுகோல் (internal yardstick) என்னவென்றால், அது தனது பங்கை லாபத்தில் விற்கவேண்டும். ஆனால், அரசு பங்குகளை விற்பதற்கான வழிமுறைகளைப் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
— வோடஃபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வட்டி நிலுவைத் தொகைக்குப் பதிலாக, அரசு அந்த நிறுவனத்தில் 49 சதவிகித பங்குகளை பிப்ரவரி மாதம் 2023-ஆம் ஆண்டில் கையகப்படுத்தியது. இந்த 49 சதவிகித பங்குகளுக்கு அப்பால், பங்கு விற்பனை நடந்தபிறகு புதிய முதலீட்டாளர் இறுதியில் பெரும்பான்மை கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முடியும் என்று தெரிய வருகிறது.
— இந்திய தொலைத்தொடர்பு துறையில் சேவை வழங்கும் நிறுவனங்கள் மிகக் குறைவாக இருப்பது குறித்து அரசு கவலைப்படுகிறது. இந்த முக்கியத் துறையில் பல நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்பதை அரசு விரும்புகிறது. அதற்கு வோடபோன் ஐடியா நிறுவனம் போட்டியிடக்கூடிய வலுவான நிறுவனமாக இருக்க வேண்டும். ஆனால், அதன் நிதி நிலைமை மோசமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், கடும் போட்டி உள்ள இந்தச் சந்தையில் இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்க முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
— தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரூ.87,695 கோடி அளவிலான சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகை (AGR) செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து மற்றும் அதை படிப்படியாக திருப்பிச் செலுத்தும் வகையில் மறுசீரமைப்பு செய்து அமைச்சரவை நிவாரணம் அளித்துள்ளது. மேலும், இந்த முடிவு, உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நிலுவைத் தொகைகளை அரசு மறுமதிப்பீடு செய்ய அனுமதித்த பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
— தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு அமைச்சரவை அளித்த நிவாரணத் தொகுப்பு, சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை நிதியாண்டு FY32 முதல் FY41 வரை 10 ஆண்டு காலத்திற்குள் திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்க அனுமதிக்கிறது. நிதியாண்டு FY18 மற்றும் FY19 நிதியாண்டுக்கான சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகைகள் எந்த மாற்றமும் இன்றி தொலைத்தொடர்பு நிறுவனத்தால் FY26 முதல் FY31 வரையிலான காலப்பகுதியில் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
— வோடபோன் ஐடியா நிறுவனம் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகையில், ஆண்டுக்கு ரூ. 18,000 கோடி மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டு முதல் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், இந்த சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரம் தொடர்பாக அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. மேலும், அந்தத் தொகையைச் செலுத்துவதில் இருந்து சலுகை கிடைக்காவிட்டால், அது நிறுவனத்தின் நிதிசார் உறுதித்தன்மைக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அரசாங்கத்தின் பங்குகள் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
— இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றத்தில் அளித்த ஒரு மனுவில், வோடபோன் ஐடியா நிறுவனம் தளர்வு தேவை என்று வாதிட்டது. பின்னர் இந்த அவகாசம் கிடைக்கவில்லை என்றால், அது திட்டமிட்ட முதலீடுகளை செய்யமுடியாது என்றும், நிறுவனத்தின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படுவதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் நீர்த்துப்போகும் என்றும் குறிப்பிட்டது. அபராதம் மற்றும் வட்டி உட்பட, அரசாங்கத்திற்கு இந்நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த கடன்கள் சுமார் ரூ. 2 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
— இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிதிச்சுமை உள்ளது. அதோடு, வருவாயும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இதனால், நிலுவைத் தொகையை செலுத்த போதிய பணப்புழக்கம் நிறுவனத்திடம் இருக்காது. எனவே, அதிகக் கடன் காரணமாக முதலீட்டாளர்களும் விலகுவதால் பங்குச் சந்தையில் பணம் திரட்டுவதில் சிரமப்பட்டு வந்த இந்நிறுவனத்திற்கு, அமைச்சரவையின் இந்த முடிவு பெரிய ஊக்கமாக அமையும் என்று கருதப்படுகிறது.
— நிதிச் சுமையால் போராடி வரும் இந்த நிறுவனத்திற்கு அரசாங்கம் வழங்கிய இரண்டாவது உதவி இதுவாகும். 2021-ஆம் ஆண்டில் அந்நிறுவனத்திற்காக கொண்டு வரப்பட்ட நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வோடபோன் ஐடியாவின் ரூ. 6,133 கோடி வட்டி நிலுவைத் தொகையை சமபங்குகளாக (equity) மாற்ற அரசாங்கம் பிப்ரவரி 2023-ஆம் ஆண்டில் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்குத் தெரியுமா?
— தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிமக் கட்டணம் மற்றும் அலைக்கற்றை கட்டணங்களை மத்திய அரசுக்கு ‘வருவாய் பங்கு’ வடிவில் செலுத்த வேண்டும். இந்த வருவாய் பங்கை கணக்கிடப் பயன்படுத்தப்படும் வருவாய் தொகையே சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue (AGR)) எனப்படுகிறது.
— 1999-ஆம் ஆண்டில் தான் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிதிநிலை மோசமடைந்தது. அப்போது தொலைத்தொடர்பு துறைக்கான நிலையான கட்டண முறையிலிருந்து வருவாய்-பகிர்வு மாதிரிக்கு மாற அரசாங்கம் முடிவு செய்தது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு அல்லாத வருவாய்கள் மூலம் அவர்கள் ஈட்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை உரிமம் மற்றும் அலைக்கற்றை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
— இந்தக் கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டதால், பல நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்தன. அதிகபட்சமாக, இந்தியாவில் 14-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் பிராந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் இருந்தனர்.
— 2003-ஆம் ஆண்டில், தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கட்டணங்களுக்கான கோரிக்கையை எழுப்பியது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் துணை நிறுவனங்களிடமிருந்து ஈட்டிய பகிர்வுத்தொகை, குறுகிய கால முதலீடுகளின் மீதான வட்டி, வணிகர் தள்ளுபடியாகக் கழிக்கப்பட்ட பணம், அழைப்புகளுக்கான தள்ளுபடி மற்றும் பிற, தொலைத்தொடர்பு சேவைகளில் இருந்து வரும் வருவாய்க்கு மேல் இருந்த அனைத்து வருவாய்களும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கணக்கீட்டிற்குள் சேர்க்கப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
— தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT)) அணுகின. ஜூலை மாதம் 2006-ஆம் ஆண்டு இந்த விவகாரம் ஒழுங்குமுறை ஆணையமான இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (Telecom Regulatory Authority of India (TRAI)), புதிய ஆலோசனைக்காக மீண்டும் அனுப்பப்பட வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
— தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது (Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT)) அரசாங்கத்தின் வாதத்தை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்குகள் நடந்துகொண்டிருந்தபோது, 2012-ஆம் ஆண்டில் 2G ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் 122 தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்தது. இதனால் நிறுவனங்கள் அனைத்தும் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, அலைக்கற்றை ஏலம் மூலமாகவே ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
— 2019-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் முதல் தீர்ப்பை வழங்கியது. அதில், தொலைத்தொடர்புத் துறையின் (DoT) சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தின் (AGR) வரையறைதான் முறையானது என்றும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயையும், அதற்கான வட்டியையும், செலுத்தாததற்கான அபராதத்தையும் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Original Article : What is the adjusted gross revenue (AGR)? -Khushboo Kumari