குற்றவியல் நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும் பயணத்திற்கு அனுமதி வழங்கவோ அல்லது தடுக்கவோ முடியும் என்பதால், ஒரு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு கடவுச்சீட்டு (passportt) வழங்குவதையோ அல்லது புதுப்பிப்பதையோ அதிகாரிகள் மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிலுவையில் உள்ள குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு கடவுச்சீட்டு (passport) வழங்குவதையோ அல்லது புதுப்பிப்பதையோ அதிகாரிகள் மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஏனெனில் இந்த உரிமை, அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படும் மீற முடியாத வாழ்வுரிமையின் (right to life) கீழ் வருகிறது. நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நேரடி கடவுச்சீட்டு மறுப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை நீதிமன்றம் வலியுறுத்தியது. கடவுச்சீட்டு அதிகாரிகளால் முழுமையாக மறுக்கப்படுவதைவிட விகிதாசார மற்றும் நீதித்துறை மேற்பார்வை தேவை என்பதை வலியுறுத்தியது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோரைக் அடங்கிய அமர்வு, டிசம்பர் 19 அன்று, அரசியலமைப்பின் கீழ் உள்ள சுதந்திரம் என்பது "அரசு வழங்கும் ஒரு பரிசு அல்ல, மாறாக அது அரசின் முதல் கடமையாகும்" என்றும், அது நடமாடுவதற்கும், பயணம் செய்வதற்கும், வாழ்வாதாரத்தையும் வாய்ப்புகளையும் தேடுவதற்கும் உள்ள சுதந்திரத்தையும் கொண்டுள்ளது என்றும் கூறியது.
இரண்டு குற்றவியல் நீதிமன்றங்கள் 'ஆட்சேபனை இல்லை' என உத்தரவிட்டிருந்தபோதிலும், கடவுச்சீட்டு வழங்கும் அதிகாரிகள் (passport authorities) ஒரு சாதாரண கடவுச்சீட்டைப் புதுப்பிக்க மறுத்தபோதுதான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது, உச்சநீதிமன்றம் இந்த மறுப்பை ரத்து செய்துள்ளது.
என்ன வழக்கு?
இந்தியக் குடிமகனான மகேஷ் குமார் அகர்வால், ஆகஸ்ட் 2013-ல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரு சாதாரண கடவுச்சீட்டைப் பெற்றார். இந்தக் காலகட்டத்தில், அவர் ஜார்க்கண்டில் மிரட்டிப் பணம் பறித்ததாகவும், தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதியளித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக தேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency (NIA)) வழக்கினை எதிர்கொண்டார். மேலும், டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு முகமையின் (Central Bureau of Investigation (CBI) நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், அவரது மேல்முறையீடு விசாரிக்கப்படும்வரை டெல்லி உயர்நீதிமன்றம் அந்தத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
இரண்டு வழக்குகளிலும், அகர்வாலிடம் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறும், அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இந்த விதிகள், அவர் தனது விசாரணை மற்றும் மேல்முறையீட்டிற்காக நாட்டில் இருப்பதை உறுதிசெய்வதற்காகவே விதிக்கப்பட்டன.
அகர்வால் தனது கடவுச்சீட்டு காலாவதியாகவிருந்த நிலையில், அதை புதுப்பிப்பதற்காக ராஞ்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார். நீதிமன்றம் அதற்கு ஒப்புக்கொண்டு, இந்த நோக்கத்திற்காக மட்டுமே கடவுச்சீட்டைப் புதுப்பிக்க அனுமதித்தது. அவர் அனுமதியின்றி வெளிநாடு பயணிக்கவோ அல்லது விசாவுக்கு விண்ணப்பிக்கவோ மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும் என்றும் புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில், அகர்வாலுக்கு இன்னும் பயணக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், அவரது கடவுச்சீட்டை வழக்கமான 10 ஆண்டுகளுக்குப் புதுப்பிப்பதைத் தடுப்பதற்கு எந்த சட்டப்பூர்வ காரணமும் இல்லை (no legal basis to deny renewal of the passport) என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது.
இது போன்ற நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், பிராந்திய கடவுச்சீட்டு (regular passport) அலுவலகம் அகர்வாலுக்கு வழக்கமான கடவுச்சீட்டை வழங்க மறுத்துவிட்டது. ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தால், கடவுச்சீட்டை மறுக்கலாம் என்று கூறும் கடவுச்சீட்டுச் சட்டத்தின் பிரிவு 6(2)(f)-ஐ அவர்கள் மேற்கோள் காட்டினர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வெளிநாடு செல்ல ஒருவருக்கு நீதிமன்றம் தெளிவாக அனுமதி அளித்திருந்தால் மட்டுமே, இந்த விலக்கு பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகர்வால் இந்த நிராகரிப்பை எதிர்த்து கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே புதுப்பிக்க அனுமதித்ததாலும், வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதிக்காததாலும், பிரிவு 6(2)(f)-ன் கீழ் உள்ள சட்டம் இன்னும் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.
சட்டம் என்ன சொல்கிறது?
1967-ஆம் ஆண்டு கடவுச்சீட்டுச் சட்டம் தெளிவான விதிகளை வழங்குகிறது. பிரிவு 5, கடவுச்சீட்டுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதையும், கடவுச்சீட்டு அலுவலகம் அதனை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ எழுத்துப்பூர்வமான முடிவை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. பிரிவு 6, ஒரு கடவுச்சீட்டு நிராகரிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட காரணங்களைப் பட்டியலிடுகிறது. பிரிவு 6(2)(e)-ன் கீழ் உள்ள அந்த அடிப்படைகளில் ஒன்று, தண்டனை விதிக்கப்பட்ட பிறகு செயல்படுத்தப்படுகிறது. மேலும், அது ஒழுக்கக்கேடான தன்மையைக் கொண்ட குற்றங்களுக்கும், இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளுக்கும் மட்டுமே பொருந்தும்.
இந்தச் சட்டம் சட்டத்தின்படி, ஒரு கடவுச்சீட்டு 10 வருடங்களுக்கு செல்லுபடியாகும் காலத்தை நிர்ணயிக்கிறது. ஆனால், பிரிவு 7-ன் படி அது குறுகிய காலத்திற்கும் வழங்கப்படலாம். பிரிவு 8 இந்தக் குறுகியகால கடவுச்சீட்டுகளை நீட்டிக்கவ அனுமதிக்கிறது. ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தாலோ, விதிகள் மீறப்பட்டாலோ அல்லது நீதிமன்றம் பயணிக்கத் தடை விதித்தாலோ, அதிகாரிகள் ஒரு கடவுச்சீட்டைத் திரும்பப் பெறலாம் அல்லது ரத்து செய்யலாம் என்று பிரிவு 10 கூறுகிறது .
பிரிவு 22, பொது நலன் கருதி, இந்தச் சட்டத்தின் செயல்பாட்டிலிருந்து சில நபர்களுக்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் செயல்பட்டு, அரசாங்கம் 1993-ல் பொது சட்ட விதிகள் 570(E) என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தனது முடிவை ஆராய்ந்து, தேவைப்படும்போதெல்லாம் ஆஜராவதற்கு விண்ணப்பதாரர் ஒரு உறுதிமொழியை வழங்கினால், பிரிவு 6(2)(f)-லிருந்து ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விலக்கை வழங்குகிறது. இந்த அறிவிப்பு, கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலத்தை நீதிமன்றத்தின் உத்தரவுடன் இணைக்கிறது. மேலும், நீதிமன்றம் ஒரு காலவரையறையைக் குறிப்பிடாத பட்சத்தில், நிலையான செல்லுபடியாகும் காலங்களை வழங்குகிறது.
2019ஆம் ஆண்டில், வெளியுறவு அமைச்சகம் கடவுச்சீட்டு அலுவலகங்களை பொது சட்டவிதிகள் 570(E) என்ற அறிவிப்பைத் தவறாமல் பின்பற்றுமாறு அறிவுறுத்தியது. ஒருவரிடம் நீதிமன்றத்திடம் இருந்து 'ஆட்சேபனை இல்லை சான்றிதழ்' (No Objection Certificate (NOC)) இருந்தால், அது காவல்துறையின் எந்தவொரு எதிர்மறை அறிக்கையையும்விட முக்கியமாகக் கருதப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பு கூறியது. உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு, நீதிமன்றத்தின் அனுமதிக்குக் காவல்துறை அறிக்கையைவிட முன்னுரிமை உண்டு என்று கூறியது.
உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?
ஆரம்பத்தில், காலாவதியான கடவுச்சீட்டைப் புதுப்பிப்பது என்பது, புதிதாக வழங்குவதற்குரிய அதே சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்பட்டது என்ற அனுமானத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தனது விசாரணையைத் தொடங்கியது. அந்த அடிப்படையிலேயேகூட, விலக்கு அறிவிப்பின்கீழ் உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், கடவுச்சீட்டுச் சட்டத்தின் பிரிவு 6(2)(f)-ஐ ஒரு "தளர்த்த முடியாத தடையாக" கருதமுடியாது என்று தீர்ப்பளித்தது.
ராஞ்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency (NIA)) நீதிமன்றத்திற்கும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்துத் தெரிந்திருந்தும், அகர்வாலின் பயணத்தின் மீது கட்டுப்பாட்டை விதித்தபடியே அவரது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க அனுமதித்தன என்று நீதிமன்றம் கூறியது. இந்த அமைப்பு, ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் இந்திய நீதிமன்றங்களின் அதிகாரத்தின்கீழ் இருப்பதை உறுதி செய்வதே என்ற பிரிவு 6(2)(f)-ன் முக்கிய நோக்கத்தை நிறைவேற்றுகிறது.
கல்கத்தா உயர்நீதிமன்றமும் கடவுச்சீட்டு அதிகாரிகளும் எடுத்த அணுகுமுறையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கடவுச்சீட்டு வழங்குவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ ஒரு முன்நிபந்தனையாக, ஒரு குற்றவியல் நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுப் பயணத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று எந்த ஒரு சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று தீர்ப்பளித்தது. கடவுச்சீட்டுச் சட்டம் அல்லது பொது சட்டவிதிகள் 570(இ) ஆகியவற்றில் உள்ள எதுவும், புதுப்பித்தலுக்கான அனுமதியை 'ஒரு குறிப்பிட்ட பயணத்தை மேற்கொள்வதற்கான ஒருமுறை உரிமமாக' மாற்றுமாறு நீதிமன்றங்களை வற்புறுத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிமன்றத்தின் வாதத்தின் முக்கிய அம்சம், ஆவணத்திற்கும் செயலுக்கும் இடையிலான வேறுபாடுதான். கடவுச்சீட்டு என்பது ஒரு குடிமை அடையாள ஆவணம் என்றும், வெளிநாட்டுப் பயணம் என்பது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாடு என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. குற்றவியல் நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும் பயணத்தை அனுமதிக்கவோ அல்லது தடைசெய்யவோ அதிகாரம் கொண்டிருக்கும்வரை, கடவுச்சீட்டையே மறுப்பது என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று கண்டறியப்பட்டது.
அவ்வாறு செய்யும்போது, சட்ட நடைமுறைகள் சுதந்திரத்திற்கு நிரந்தரத் தடைகளாக மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது. “செயல்முறைப் பாதுகாப்பு அம்சங்கள் விறைப்பான தடைகளாக மாற்றப்படும்போது, அல்லது தற்காலிகத் தகுதியின்மைகள் காலவரையற்ற விலக்குகளாக அனுமதிக்கப்படும்போது, அரசின் அதிகாரத்திற்கும் தனிநபரின் கண்ணியத்திற்கும் இடையிலான சமநிலை பாதிப்படையகூடிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், அரசியலமைப்பின் வாக்குறுதி ஆபத்தில் ஆழ்த்தப்படக்கூடும் என்று நீதிமன்றம் கூறியது.
கடவுச்சீட்டை வழங்குவது மாநிலத்தின் கட்டுப்பாட்டை பறிக்காது என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. சூழ்நிலைகள் மாறினால், நிபந்தனைகள் மீறப்பட்டால் அல்லது புதிய நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய அல்லது ரத்து செய்ய சட்டத்தின் பிரிவு 10-ன் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் அதிகாரிகள் சட்டப்பூர்வ அதிகாரங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறார்கள்.
குற்றவியல் நீதிமன்றங்களால் நிர்ணயிக்கப்பட்ட பயண விதிகளைப் பின்பற்றியே, அகர்வாலுக்கு நான்கு வாரங்களுக்குள் வழக்கமான 10 வருட கடவுச்சீட்டை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.
Original Article : Why SC said pending criminal cases can’t bar a citizen from obtaining passport?. -Amaal Sheikh