வரதட்சணை என்பது தானாக முன்வந்து வழங்கப்படும் பரிசாக இருந்து கட்டாயக் கோரிக்கையாக மாறி, பெரும்பாலும் மணமகளின் குடும்பத்தின்மீது நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், சில முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த நடைமுறை ஏன் தொடர்கிறது?, இதற்கு சமூக அங்கீகாரத்தை எது அளிக்கிறது? இதை எவ்வாறு முழுமையாக ஒழிப்பது? முக்கியமான நுண்ணறிவுகளுக்குத் தகவல் வரைபடங்களைப் பார்க்கவும்.
வரதட்சணை தொடர்பான குற்றச் செயல்களைத் தடுப்பதற்குப் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், "நிதர்சனமான உண்மை என்னவென்றால், வரதட்சணை என்பது நாட்டின் பரந்த பிரிவுகளில் வலுவாக வேரூன்றிய சமூகத் தீமையாகத் தொடர்கிறது" என்று குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு ஜன்ஷ்ருதி (மக்கள் குரல்) vs இந்திய ஒன்றியம் மற்றும் பிறர் வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) பிரிவு 498A (ஒரு கணவன் அல்லது அவனது உறவினர்கள் ஒரு பெண்ணிடம் காட்டும் கொடுமை பற்றிக் குறிப்பிடுகிறது) அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை சவால் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தை வெளியிட்டது.
இருப்பினும் முக்கியமான கேள்விகள் எழுப்பியுள்ளன. கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், வரதட்சணை நடைமுறை ஏன் தொடர்கிறது?, சமூகரீதியாக அதை நியாயப்படுத்துவது எது?, இதை எவ்வாறு முழுமையாக ஒழிப்பது?
தன்னார்வப் பரிசுகளாக வரதட்சணை
மணப்பெண்ணின் திருமணத்தின்போது மணமகள் குடும்பத்தினரால் வழங்கப்படும் ஒரு தன்னார்வ பரிசாக இருந்த வரதட்சணையானது எவ்வாறு வழக்கமான நடைமுறையாக மாறியது என்பதை நிபுணர்கள் விளக்குகின்றன. இந்த வழக்கம் பெரும்பாலும் வட இந்தியாவில் உயர் சாதியினரிடையே மட்டுமே காணப்பட்டது. வரதட்சணையானது பெரும்பாலும் கன்னியாதானம் (மகளைத் தானமாக வழங்கும் சடங்கு) என்ற வழக்கத்துடன் தொடர்புடைய ஸ்திரீதனத்தின் (இறப்பிற்கு முந்தைய பரம்பரைச் சொத்து) ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. இந்து குடும்பங்களில், ஒரு மகளுக்கு அவளது பெற்றோர் குடும்பச் சொத்தில் பங்கு இல்லை என்பதை குறிப்பிடுகிறது.
பவுலின் கோலிண்டாவின் "பெண் ஒரு காணிக்கையாக, பெண் ஒரு மலராக: வட மற்றும் தென்னிந்தியாவில் திருமணங்களில் "பெண்" பற்றிய பிம்பங்கள்-1984" (Woman as Tribute, Woman as Flower: Images of “Woman” in Weddings in North and South India) என்ற ஆய்வு, திருமணத்திற்குப் பிறகு, மகளுடனான பிறப்பு உறவுகள் அவளுடைய குடும்பத்தினரால் எவ்வாறு விலக்கி வைக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த சூழலில், வரதட்சணை என்பது மகளின் திருமணத்திற்கு முந்தைய அல்லது திருமணத்தின் போது எதிர்பார்க்கப்படும் பரம்பரை சொத்தாக வழங்கப்பட்டது. பாரம்பரியமாக, வரதட்சணை என்பது ஆடைகள், நகைகள் மற்றும் சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் போன்ற வீட்டுப் பொருட்களைக் கொண்டிருந்தது.
காலப்போக்கில், இந்த நடைமுறை இந்தியா முழுவதும் பரவியது. 1974-ம் ஆண்டில், இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த குழு (Committee on the Status of Women in India (CSWI)) மற்றும் நாடாளுமன்ற கூட்டுத் தேர்வுக் குழு (Parliamentary Joint Select Committee) ஆகியவை வரதட்சணை அனைத்து சாதிகள், சமூகங்கள், மதங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கும் பரவியிருப்பதைக் கண்டறிந்தன. இந்தப் பழக்கம் விரிவடைந்தபோது, விலையுயர்ந்த பொருட்களும் பணமும் வரதட்சணையின் ஒரு வழக்கமான பகுதியாக மாறியது. பல சமூகங்களில், மணமகனின் தொழில் மற்றும் சமூக அந்தஸ்தால் தீர்மானிக்கப்படும் அவரது 'சந்தை மதிப்பு'டனும் இணைக்கப்பட்டது.
அது எப்படி ஒரு கட்டாயக் கோரிக்கையாக மாறியது?
அனைத்து சமூகங்களிலும் வரதட்சணையை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளும் தன்மை, 2003-ம் ஆண்டு அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் (All India Democratic Women’s Association (AIDWA)) அறிக்கையில் மேலும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த அறிக்கை இந்திய திருமணங்களை ஆடம்பரமான நிகழ்வுகளாக விவரித்தது. திருமண விழாக்களின் மாறிவரும் நுகர்வோர் தன்மையின் ஒருங்கிணைந்த பகுதியாக பணமும் பரிசுகளும் உள்ளன. இதனால், வரதட்சணை என்பது தன்னார்வ பரிசாக இல்லாமல், கட்டாயக் கோரிக்கையாக மாறியுள்ளது.
இந்தக் கட்டாயக் கோரிக்கை பெரும்பாலும் மணப்பெண்ணின் குடும்பத்தின் மீது ஒரு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இந்த அழுத்தம் சில சமயங்களில் சமூக விதிமுறைகள் மற்றும் போட்டி மனப்பான்மையிலான சமூக ஒப்பீடு (சமூகத்தில் உள்ள மற்ற குடும்பங்கள் தங்கள் மருமகன்களுக்கு என்ன கொடுத்தார்களோ, அதைப் போலவே தாங்களும் கொடுக்க வேண்டும்) ஆகியவற்றால் ஏற்படுகிறது.
மேலும், பரிசுகள் வழங்கும் வழக்கம் திருமணத்துடன் முடிவடைவதில்லை. இது கர்ப்பம், பிரசவம், பண்டிகைகள் போன்ற சடங்குகள் மூலம் தொடர்கிறது. இது இரு குடும்பங்களுக்கிடையேயான சமூக உறவுகளைப் பேணுவதற்கான ஒரு வழியாக வெளித்தோற்றத்தில் காணப்படுகிறது. ஆனால் நடைமுறையில், இது பெரும்பாலும் பெண்கள் பிறந்த குடும்பத்திற்கு எதிராகவே உள்ளது.
இந்த தொடர்ச்சியான நிதிச் சுமை, கருக்கொலை மற்றும் சிசுக்கொலை போன்ற பிற சமூக தீமைகளுடனும், மகள்களை சமூக மற்றும் பொருளாதாரச் சுமைகளாகக் கருதும் பார்வையையும் வலுப்படுத்துகிறது. இதன் விளைவாக, வரதட்சணை ஒரு அவசர சட்ட மற்றும் சமூகப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.
சட்ட மற்றும் சமூக தலையீடுகள்
வரதட்சணை நடைமுறையை நிவர்த்தி செய்ய பல சட்ட தலையீடுகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, வரதட்சணை தடைச் சட்டம்-1961 (Dowry Prohibition Act), பிரிவு-3 மற்றும் பிர்வு-4 ஆனது இந்தியா முழுவதும் வரதட்சணை கோருதல், வாங்குதல் மற்றும் கொடுப்பதை குற்றமாக பார்க்கிறது. மேலும், இந்தச் சட்டத்தின் பிரிவு-2 வரதட்சணையை "நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொடுக்கப்பட்ட அல்லது கொடுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட எந்தவொரு சொத்து அல்லது மதிப்புமிக்க பாதுகாப்பையும், அ) ஒரு திருமணத்திற்கு ஒரு தரப்பினரால் மற்றொரு தரப்பினருக்கு கொடுப்பது, அல்லது ஆ) ஒரு திருமணத்திற்கு இரு தரப்பினரின் பெற்றோராலோ அல்லது வேறு எந்த நபராலோகூட கொடுப்பது, வரதட்சணை திருமணத்தில் ஈடுபடும் இருவரில் ஒருவருக்கோ அல்லது வேறு எந்த நபருக்கோ கொடுப்பது" என்று வரையறுக்கிறது.
வரதட்சணை என்பது ஒரு மரபுரிமை வடிவமாகக் கருதப்பட்டாலும், அது பெண்களின் கட்டுப்பாட்டில் அரிதாகவே உள்ளது, அதற்குப் பதிலாக ஆண்களின் குடும்பங்களின் சொத்தாக மாறுகிறது. எனவே, வரதட்சணைக்கு எதிரான வாதம் இந்திய பெண்ணிய இயக்கத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வருகிறது. 1972-ஆம் ஆண்டு ஷஹாதா இயக்கம் மற்றும் 1975-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பெண்கள் முற்போக்கு அமைப்பின் போராட்டங்கள் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தன.
1970-களில், டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் வங்காளத்தில் வரதட்சணைக்கு எதிராக வலுவான அணிதிரட்டல் நடைபெற்றது. இது புதிதாகத் திருமணமான பெண்கள் தீக்காயங்களால் இறக்கும் வழக்குகளில் ஏற்பட்ட கவலைக்கிடமான அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருந்தது. ஆனால், அவற்றில் பல எரிவாயு கசிவு, மண்ணெண்ணெய் தீ அல்லது தற்கொலையால் ஏற்படும் விபத்துகள் என்று முத்திரை குத்தப்பட்டன.
‘பெண்கள் எரிப்பதற்காக அல்ல’
1970-களின் பிற்பகுதியில், 21 வயது மணப்பெண் ஹர்தீப் கவுர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது. டெல்லியை வரதட்சணைக்கு எதிரான போராட்டங்களின் முக்கிய மையமாக மாற்றியது. மேலும், வரதட்சணை பற்றிய புரிதலை தனிப்பட்ட, குடும்ப விஷயத்திலிருந்து பொது மற்றும் அரசியல் பிரச்சினையாக மாற்றுவதில் இது ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
வரதட்சணை எதிர்ப்புப் போராட்டங்கள், "தனிப்பட்டரீதியிலான அரசியல்" என்ற முழக்கத்தை மையமாகக் கொண்ட பெண்ணியத்தின் இரண்டாவது அலையின் ஒரு பகுதியாக இருந்தன. குறிப்பாக, "பெண்கள் எரிப்பதற்காக அல்ல" என்ற முழக்கம் ஒரு சக்திவாய்ந்த போராட்டக் குரலாக மாறியது. இது ரஜினி பல்ரிவாலாவின் Women Are Not For Burning: The Anti-Dowry Movement in Delhi என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, வரதட்சணை தடைச் சட்டம்-1961, ஆனது 1984 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது. வரதட்சணை கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் ஆன தண்டனை கடுமையாக்கப்பட்டது. அதில் இப்போது குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை சேர்க்கப்பட்டது. இது ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். வரதட்சணைத் தடை (மணமகன் மற்றும் மணமகளுக்கு வழங்கப்படும் பரிசுகளின் பட்டியலைப் பராமரித்தல்) விதிகள், 1985-ம் (Dowry Prohibition (Maintenance of List of Presents to the Bride and Bridegroom) Rules) அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதிகள் திருமணத்தின்போது பரிமாறப்பட்ட பரிசுகளின் எழுத்துப்பூர்வ பட்டியலைக் கட்டாயமாக்கின.
குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது மாறுகிறது
வேறு சட்ட விதிகளும் உள்ளன. 1983-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A இன் கீழ் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது புகார்தாரர் திருமணமானவராக இருந்து அவரது கணவர் அல்லது அவரது கணவரின் உறவினரால் கொடுமைக்கு ஆளான வழக்குகளையும் உள்ளடக்கும். இது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக கைது மற்றும் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க உதவியது.
1986-ம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304B வரதட்சணை மரணம் (dowry death) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. இந்த விதியின் கீழ், ஒரு பெண்ணின் மரணம் "திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் ஏதேனும் தீக்காயங்கள் அல்லது உடல் காயத்தால் ஏற்பட்டாலோ அல்லது சாதாரண சூழ்நிலைகளைத் தவிர வேறு விதமாக நிகழ்ந்தாலோ, அவள் இறப்பதற்கு சற்று முன்பு அவள் கணவர் அல்லது அவரது கணவரின் உறவினர்களால் வரதட்சணை கோரிக்கைக்காகவோ அல்லது அது தொடர்பாகவோ கொடுமை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் காட்டப்பட்டால், அத்தகைய மரணம் 'வரதட்சணை மரணம்' என்று அழைக்கப்படும். மேலும், அத்தகைய கணவர் அல்லது உறவினர் அந்த பெண்ணுடைய மரணத்திற்குக் காரணமாகக் கருதப்படுவார்."
1986-ம் ஆண்டு பிரிவு 113B-ஐச் சேர்ப்பதன் மூலம் இந்திய சாட்சியச் சட்டம்-1872 (Indian Evidence Act) திருத்தப்பட்டது. இது வரதட்சணை மரண வழக்குகளில் ஆதாரத்தின் சுமையை குற்றம் சாட்டப்பட்டவர் மீது மாற்றுகிறது. இத்தகைய வழக்குகளில் தங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Women from Domestic Violence Act (PWDVA)), 2005, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு மேலும் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த சட்ட தலையீடுகள் வரதட்சணை தொடர்பான அடையாள அங்கீகாரத்திலிருந்து குற்றவியல் மற்றும் குடிமை பொறுப்புணர்வு கவனத்தை மாற்றுகின்றன.
இந்த வழக்கம் ஏன் தொடர்கிறது?
ஆனால், இவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், வரதட்சணை வழக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau (NCRB)) படி, 2018 மற்றும் 2022-க்கு இடையில் இந்தியாவில் 34,000-க்கும் மேற்பட்ட வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல் வழக்குகளும் பதிவாகின்றன.
வரதட்சணை பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை மற்றும் நுட்பமான குறிப்புகளின் அடிப்படையில் சமூக வலைப்பின்னல்களுக்குள் நடைபெறுகின்றன. எனவே, ஒவ்வொரு கோரிக்கையும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படுவதில்லை. எனவே, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக்கூடிய ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. மேலும், பெரும்பாலான வழக்குகள் காவல்துறையினரால் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வரதட்சணை வழக்குகளைப் புகாரளிக்க குடும்பங்களும் தயங்குகின்றன. பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் பற்றி கூட தெரியாது.
பரிசுகளை கலாச்சார ரீதியாக இயல்பாக்குவது வரதட்சணையை எளிதாக்க உதவுகிறது. சில மணப்பெண்களின் குடும்பங்கள் வரதட்சணையை தங்கள் செல்வத்தையும் சமூக அந்தஸ்தையும் வெளிப்படுத்தும் ஒரு வழியாகக் கருதுகின்றன. அதேநேரத்தில், மணமகன் தரப்பிலிருந்து வரும் கோரிக்கைகள் பெரும்பாலும் அவர்களின் தொழில் மற்றும் சமூக அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டவை.
ஆண்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை பெரும்பாலும் வரதட்சணைப் பழக்கத்திற்கு பங்களிப்பதாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு நிதி சுதந்திரம் இல்லாதபோது இந்த நம்பிக்கை வலுவாக இருக்கிறது. லீலா டுபே போன்ற நிபுணர்களால் விளக்கப்பட்டபடி, இத்தகைய ஆணாதிக்க மதிப்புகள் இந்திய உறவுமுறை அமைப்பின் ஒரு பகுதியாகும். இதை, பெண்கள் மற்றும் உறவுமுறை: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாலினம் குறித்த ஒப்பீட்டு பார்வைகள்-1997 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது.
நவீன திருமணச் சந்தையில் பெண்களை குறைத்து மதிப்பிடுவதில் வரதட்சணையின் சமூக நியாயத்தன்மை வேரூன்றியுள்ளது. கௌரவ் சிப்லுங்கர் மற்றும் ஜெஃப்ரி வீவர் ஆகியோரின் 2023-ம் ஆண்டு ஆய்வு "இந்தியாவில் திருமணச் சந்தைகள் மற்றும் வரதட்சணையின் எழுச்சி" (Marriage Markets and the Rise of Dowry in India), வரதட்சணைப் பழக்கத்தைத் தக்கவைப்பதில் நவீனமயமாக்கல் எவ்வாறு உதவியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஆண்கள் உயர்பதவிகளில் இருக்கும்போது, பெண்களின் குடும்பங்கள் 'நவீன' மற்றும் 'நல்ல தகுதி வாய்ந்த' ஆண்களுடன் இணையாக பொருந்துவதாக வரதட்சணை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திருமண சந்தை ஆண்களையும் பெண்களையும் சமமற்றவர்களாகவே பார்க்கிறது. எனவே, சட்டத்திற்கும் சமூக விழுமியங்களுக்கும் இடையில் நிலவும் கலாச்சார பின்னடைவு காரணமாக, சட்ட தலையீடுகள் இருந்தபோதிலும் வரதட்சணை தொடர்ந்து நீடிக்கிறது.
ஒருங்கிணைந்த முயற்சிகளின் தேவை
சுருக்கமாக, வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வின் கவனம் ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் மீது திரும்ப வேண்டும் என்று தோன்றுகிறது. வரதட்சணை ஒரு குற்றம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதைப் பற்றிய பொது விவாதம் அதிகமாக இருக்க வேண்டும். வரதட்சணை இல்லாத திருமணங்களை பொதுமக்கள் அங்கீகரித்து கொண்டாடுவது சரியான திசையின் ஒரு படியாக இருக்கலாம்.
வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த, பாடத்திட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளாலும் வெற்றிகரமான வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க முடியும். உதாரணமாக, பிரேக்த்ரூவின் ‘பெல் பஜாவோ’ பிரச்சாரம், குடும்ப வன்முறைக்கு எதிரான வாசிப்புப் பொருட்களைக் கொண்ட ஒரு பரப்புரைக் கருவித் தொகுப்பை உருவாக்கியது. இதில் வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல்களும் அடங்கும். அத்தகைய உள்ளடக்கம் உள்ளூர் அமைப்புகள் மற்றும் குழுக்களால் வட்டார மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால், அது அதிக புழக்கத்திற்கு வழிவகுக்கும்.
வரதட்சணை முறை ஒரு தீய பழக்கம் என்றும், அது அவசரமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதுடன், சட்டமன்றம், சட்ட அமலாக்கம், நீதித்துறை, குடிமை சமூக அமைப்புகள் போன்ற "சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளின்" அவசியத்தையும் எடுத்துக்காட்டியது. ஏனெனில், இது "விரைவான மாற்றத்திற்குரிய விஷயம்" அல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
பெண்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். சட்டம் ஒரு கருவியாக இருந்து உதவ முடியும். இருப்பினும், உண்மையான மாற்றம் சமூக இயல்புடையதாக இருக்க வேண்டும். அது தலைமுறை தலைமுறையாகவும் நிகழ வேண்டும்.
Original Article : To eradicate dowry, why changes have to be social and generational, not just legal. -Rituparna Patgiri