லோக்பால் அமைப்பின் பொறுப்பு என்ன? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி: ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் (Prevention of Corruption Act (PCA)) பிரிவு 17A-ன் அரசியலமைப்புச் சட்டத்தன்மைக்கு சவால் விடுத்த மனு மீது, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு செவ்வாய்க்கிழமை அன்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.


முக்கிய அம்சங்கள்:


2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதி, அரசு ஊழியர் ஒருவர் தனது கடமைகளை நிறைவேற்றும்போது எடுக்கப்பட்ட பரிந்துரைகள் அல்லது முடிவுகள் தொடர்பான குற்றங்களுக்காக எந்தவொரு விசாரணையையும் நடத்துவதற்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறது.


மனுதாரரான பொதுநல வழக்கு மையம், இந்தச் சட்டம் ஊழல் அதிகாரிகளுக்கு ஒரு 'கேடயமாக' (shield) செயல்படுகிறது என்றும், இது அவர்களுக்கு எதிரான விசாரணைகளைத் தடுக்கிறது என்றும் கூறியது.


நீதிபதி கே. வி. விஸ்வநாதன், லோக்பால் மூலம் ஒரு சுதந்திரமான பரிசீலனை வழிமுறையைச் சேர்ப்பதன் மூலம் அந்த விதியை உறுதிப்படுத்தினார். இருந்தபோதிலும், நீதிபதி பி. வி. நாகரத்னா, அந்த விதியை அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி முழுமையாக ரத்து செய்தார். மாறுபட்ட தீர்ப்புகளின் காரணமாக, இந்த வழக்கு ஒரு முதன்மை அமர்வை அமைப்பதற்காக இந்தியத் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.


நிர்வாகச் சட்டத்தில் உள்ள ஒரு தொடர்ச்சியான சவாலை இந்தத் தீர்ப்பு கவனத்திற்குக் கொண்டுவருகிறது. நேர்மையான அதிகாரிகளைத் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், ஊழல் குறித்து விசாரணை நடத்த முகமைகளை எவ்வாறு அனுமதிப்பது என்பதே இந்த சட்டத்தின் மிகப் பெரிய சவாலாக உள்ளது.


பிரிவு 17A-ன் தற்போதைய செயல்பாட்டில் உள்ள ஒரு பெரும் குறைபாட்டை நீதிபதி விஸ்வநாதன் சுட்டிக்காட்டினார். ஒப்புதல் அளிக்கும் அல்லது மறுக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது. இது, ஊழல் விசாரணைகளுக்குத் தேவையான சுதந்திரம் என்ற கோட்பாட்டை மீறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


சட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானது என்ற நிலையிலிருந்து காப்பாற்ற, அவர் ஒரு ‘ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைக்’ கையாண்டார். முன் அனுமதி பெறுவதற்கான நிபந்தனை செல்லுபடியாகும் என்றாலும், அந்த முடிவு முழுவதுமாக அரசாங்கத்திடம் மட்டுமே இருக்கக்கூடாது என்று நீதிபதி விஸ்வநாதன் தீர்ப்பளித்தார். மாறாக, புகார்களை அரசாங்கம் மட்டும் விசாரிக்காமல், தேசிய அளவில் லோக்பால் மற்றும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா போன்ற ஒரு சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.


 இதற்கு மாறாக, நீதிபதி நாகரத்னா, பிரிவு 17A ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது (contrary to the object and purpose) என்று கூறினார். இது விசாரணைகளைத் தடுத்து, நேர்மையான அதிகாரிகளுக்குப் பதிலாக ஊழல் அதிகாரிகளையே பாதுகாக்கிறது என்று தனது கருத்தை தெரிவித்தார்.


விசாரணைகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரசாங்கம் நேர்மையாகச் செயல்பட முடியும் என்ற கருத்தை நீதிபதி நாகரத்னா விமர்சித்தார். குறிப்பாக, உயர் அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, ​​ஒரு கீழ்நிலை அதிகாரியால் பாரபட்சமின்றி செயல்பட முடியாது என்பதால், அதில் பாரபட்சம் அல்லது முரண்பாடுகள் ஏற்படக்கூடும் என்று நீதிபதி நாகரத்னா கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா?


லோக்பால் என்பது இந்தியாவில் ஒரு தன்னிச்சையான ஊழல் எதிர்ப்பு (anti-corruption authority) அமைப்பாகும். இது பொதுநலனைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், ஒன்றிய அரசில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கவும் உருவாக்கப்பட்டது.


இது 2010ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையிலான ஜன் லோக்பால் இயக்கத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம், 2013-ன் கீழ் நிறுவப்பட்டது. இந்தியா தனது முதல் லோக்பால் அமைப்பை 2019ஆம் ஆண்டில் பெற்றது.


2013ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், லோக்பால் ஒரு தலைவரையும் 8 உறுப்பினர்களுக்கு குறையாமல் உறுப்பினர்களையும் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் 50% நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக இருக்க வேண்டும். லோக்பாலின் உறுப்பினர்களில் 50%-க்கும் குறையாமல் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.


பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் ஒன்றிய  அரசின் A, B, C மற்றும் D பிரிவு ஊழியர்கள் வரை பரந்த அளவிலான அரசு ஊழியர்கள் லோக்பாலின் அதிகார வரம்பிற்குள் வருகின்றனர். லோக்பாலின் உறுப்பினர்களே கூட 'அரசு ஊழியர்' (public servant) என்ற வரையறைக்குள் இடம் பெற்றிருப்பார்கள்.


— பிரதமர் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்தால், அதில் சில நிபந்தனைகள் உள்ளன. வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி அல்லது விண்வெளி தொடர்பான புகார்களாக இருந்தால், லோக்பால் அமைப்பால் பிரதமருக்கு எதிரான புகார்களை விசாரிக்க முடியாது.


மேலும், இதுபோன்ற புகார்களை விசாரிக்க வேண்டுமானால், முழு லோக்பால் அமர்வும் ஒப்புக்கொண்டு, குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதற்கு அங்கீகாரம் அளித்தால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும்.


Original Article : What is the role of Lokpal? -Kushboo Kumari

Share: