டெல்லி, வெளியிலிருந்து வரும் BS-VI அல்லாத வாகனங்களுக்குத் தடை விதித்துள்ளது. ஆனால், BS விதிமுறைகள் என்றால் என்ன? BS-VI விதிமுறைகள் வாகனங்களின் புகையை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன?
தற்போதைய செய்தி:
கடந்த மாதம், டெல்லி அரசு, டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட BS-VI அல்லாத தனியார் வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவதற்குத் தடை விதித்தது. மேலும், நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தங்கள் வாகனங்களுக்குச் செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Under Control Certificate (PUCC)) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கும் என்றும் அறிவித்தது. சமீபத்திய தரவுகளின்படி, BS, BS-I மற்றும் BS-II தரநிலைகளுக்கு முந்தைய 41.1 லட்சம் பழைய இருசக்கர வாகனங்களும், BS-III தரத்திலான 25.4 லட்சம் கார்கள் மற்றும் பிற வாகனங்களும் உள்ளன.
முக்கிய அம்சங்கள்:
1. பாரத் ஸ்டேஜ் உமிழ்வு விதிமுறைகள் என்பது மோட்டார் வாகனங்களிலிருந்து வரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் தரநிலைகள் ஆகும். அவை கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோகார்பன்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் துகள்கள் போன்ற மாசுபடுத்திகளின் வெளியேற்ற உமிழ்வுகளுக்கு சட்ட வரம்புகளை நிர்ணயிக்கின்றன. அடுத்தடுத்த ஒவ்வொரு BS தரநிலையும் இந்த வரம்புகளை மேலும் கடுமையாக்குகிறது. இது வாகன உற்பத்தியாளர்களை தூய்மையான இன்ஜின்கள், மேம்படுத்தப்பட்ட புகை வெளியேற்ற அமைப்புகள் மற்றும் தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.
2. இந்தியா முதன்முதலில் 1991ஆம் ஆண்டில் மாசு உமிழ்வு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. 1996ஆம் ஆண்டில் அவற்றை மேலும் கடுமையாக்கியது. அப்போது பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள், வெளியேறும் புகையின் உமிழ்வைக் குறைக்க, வினையூக்கி மாற்றிகள் (catalytic converters) போன்ற தொழில்நுட்ப மேம்பாடுகளைப் உருவாக்க சூழல் ஏற்பட்டது. சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட எரிபொருள் தரநிலைகள் ஏப்ரல் 1996-ல் அறிவிக்கப்பட்டன. அவை 2000ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டு, BIS 2000 விதிகளில் சேர்க்கப்பட்டன.
3. ஏப்ரல் 1999-ல் உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு பாரத் ஸ்டேஜ்-I (BIS 2000) மற்றும் பாரத் ஸ்டேஜ்-II விதிமுறைகளை அறிவித்தது. BS-IIதரநிலை டெல்லி மற்றும் மற்ற பெருநகரங்களுக்கும் பொருந்தும்; BS-I தரநிலை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்குப் பொருந்தும்.
4. ஏப்ரல் 2005 முதல், 2003-ஆம் ஆண்டின் ஆட்டோ எரிபொருள் கொள்கையின்படி, முறையே 13 முக்கிய நகரங்களுக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் BS-III மற்றும் BS-II எரிபொருள் தர விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. ஏப்ரல் 2010 முதல், 13 முக்கிய நகரங்களிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் BS-IV மற்றும் BS-III விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
5. 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் BS IV விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. 2016ஆம் ஆண்டில், நாடு BS-V விதிமுறைகளை முற்றிலுமாகத் நீக்கப்பட்டு, 2020ஆம் ஆண்டுக்குள் BS-VI விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.
6. இந்த விதிமுறைகளின் கீழ் கட்டுப்படுத்தப்படும் முக்கிய உமிழ்வுகள் கார்பன் மோனாக்சைடு உமிழ்வுகள் மற்றும் ஹைட்ரோகார்பன் உமிழ்வு வரம்புகள் ஆகும். நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் துகள் பொருட்கள் ஆகியவையும் குறிப்பிடத்தக்க அளவீடுகளாகும். மேலும், தரநிலைகளின் ஒவ்வொரு படிநிலை உயர்வுக்கும், மேம்படுத்தப்பட்ட தரத்திலான எரிபொருள் தேவைப்படுகிறது. BS-IV வாகனங்கள் இயங்குவதற்கு, BS-IV தர எரிபொருள் தேவைப்படுகிறது.
7. BS-IV-க்கு முந்தைய வாகனங்களில் வெளியேறும் புகையைச் சுத்திகரிக்க போதுமான அமைப்புகள் இல்லை. அதே சமயம், BS-IV வாகனங்கள் தீங்கு விளைவிக்கும் துகள்களை ஓரளவு மட்டுமே குறைக்கும் எளிய வினையூக்கிகளைப் பயன்படுத்துகின்றன.
8. BS-IV மற்றும் BS-VI ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு, எரிபொருளில் உள்ள கந்தகத்தின் அளவில்தான் உள்ளது. BS-VI எரிபொருள், கந்தகத்தின் அளவை ஒரு மில்லியனுக்கு 50 பாகங்களிலிருந்து (parts per million (ppm)) 10 பாகங்களாகக் குறைத்து, 80% வரை குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
9. BS-VI விதிமுறைகளின்கீழ், டீசல் துகள் வடிகட்டிகள் (diesel particulate filters (DPFs)) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வினையூக்கி ஒடுக்கம் (selective catalytic reduction (SCR)) அலகுகள் போன்ற முழுமையான நவீன புகைபோக்கிப் பிந்தைய சுத்திகரிப்பு அமைப்புகள் (வாகனத்தின் புகைபோக்கியில் பொருத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்) கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் வெளியேற்றுக் குழாயில் வடிகட்டிகள் மற்றும் இரசாயன உலைகள் போலச் செயல்பட்டு, தீங்கு விளைவிக்கும் வாயுக்களையும் துகள்களையும் காற்றில் கலப்பதற்கு முன்பு சிதைக்கின்றன.
10. உதாரணமாக, வினையூக்கி மாற்றிகள் (catalytic converters) கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் போன்ற நச்சு வாயுக்களை கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் மற்றும் நீராவி போன்ற குறைந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களாக மாற்றுகின்றன. அதே நேரத்தில், டீசல் துகள் வடிகட்டிகள் டீசல் என்ஜின்களால் வெளியேற்றப்படும் நுண்ணிய புகைத்துகள்களை இயற்பியல் ரீதியாகப் பிடித்து, துகள் மாசுபடுத்திகளின் வெளியேற்றத்தை 90%-க்கும் மேலாகக் குறைக்கின்றன. இந்த செயல்முறையின் மூலம் BS-VI வாகனங்கள் துகள் மாசுபடுத்தி வெளியேற்றங்களையும், மற்ற உமிழ்வுகளையும் கணிசமாகக் குறைக்க முடியும்.
11. டெல்லியில் நிலவி வரும் தொடர்ச்சியான காற்று மாசுபாடு பிரச்சனை காரணமாக, நாட்டின் மற்ற பகுதிகளை விட முன்னதாகவே கடுமையான உமிழ்வு விதிமுறைகள் வரலாற்று ரீதியாக அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், BS-II விதிமுறைகள் 2001-ஆம் ஆண்டிலும், BS-III விதிமுறைகள் 2005-ஆம் ஆண்டிலும், BS-IV விதிமுறைகள் 2010-ஆம் ஆண்டிலும் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டததாக கூறுகிறது
காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management (CAQM))
1. இந்த ஆணையம், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த காற்று தர மேலாண்மை ஆணைய சட்டம், 2021-ன் கீழ் அமைக்கப்பட்டது.
2. காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பு, டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீட்டைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் மற்றும் தொடர்புடைய விவகாரங்களை சிறப்பாக ஒருங்கிணைப்பது, ஆராய்ச்சி செய்வது, அடையாளம் காண்பது மற்றும் தீர்ப்பது ஆகியவற்றுடன் பணிபுரிகிறது. பிராந்தியத்தில் காற்றின் தரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும், வழிமுறைகளை வழங்கவும், புகார்களை விசாரிக்கவும் ஆணையம் அதிகாரம் கொண்டுள்ளது.
3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறையில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் அல்லது குறைந்தது 25 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் கொண்ட ஒரு முழுநேரத் தலைவர் ஆணையத்திற்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
Original Article : No entry for Non-BS-VI vehicles in Delhi. -Khushboo Kumari