இந்தியா 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய சவால்களை எதிர்கொண்டது. அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்ற அச்சம் தவறு என்று இந்தியா நிரூபித்தது. இந்த மீண்டெழும் திறன் முக்கியமாக அரசின் சீர்திருத்த முயற்சிகளையே பிரதிபலிக்கிறது. 'சீர்திருத்தங்களைத் தொடர்ச்சியான தேசியப் பணியாக இந்தியா கருதிய ஆண்டாக 2025 நினைவுகூரப்படும் என்றும் 2026-27-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் இந்த லட்சியத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தனது உள்நாட்டு வளர்ச்சி ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும். தற்போதைய நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் இலக்கைப் பராமரிப்பதோடு, கடன் அபாயங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், உற்பத்தியை அதிகரிக்கும் முதலீடுகளுக்கும், மக்களின் நலத் திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்.
முதலாவதாக, அரசாங்கம் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான மூலதனச் செலவுகளை அதிகரித்து, அதற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டும். பாதுகாப்புத் துறையின் மொத்தச் செலவில் மூலதன ஒதுக்கீட்டின் பங்கு 26.4%-லிருந்து (2025–26 மதிப்பீடு) 30%-ஆக உயர்த்தப்பட வேண்டும். அதேபோல், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கான (Defence Research and Development Organisation (DRDO)) நிதி ஒதுக்கீட்டை குறைந்தது ₹10,000 கோடி அதிகரிக்க வேண்டும். உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பாதுகாப்புத் தொழில் வழித்தடங்கள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவியுள்ளன; எனவே, இதேபோன்ற ஒரு வழித்தடத்தை கிழக்கு இந்தியாவிலும் அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இரண்டாவதாக, தனியார் நிறுவனங்கள் பாதுகாப்புத் துறை ஏற்றுமதியை கணிசமாக அதிகரித்துள்ளன; 2024–25 ஆம் ஆண்டில் மொத்த ஏற்றுமதியில் இவற்றின் பங்கு சுமார் 65% ஆகும். ஆயுதப் படைகள், அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், இந்தியத் தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பை உருவாக்க ஒரு 'பாதுகாப்பு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலை' (Defence Export Promotion Council) அமைப்பதன் மூலம் ஏற்றுமதியை மேலும் மேம்படுத்தலாம். இது 2028–29-ஆம் ஆண்டிற்குள் நிர்ணயிக்கப்பட்ட ₹50,000 கோடி பாதுகாப்பு ஏற்றுமதி இலக்கை அடைய உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.
மூன்றாவதாக, தூய்மையான எரிசக்தி, மேம்பட்ட உற்பத்தி, மின்சார வாகனங்கள், குறைக்கடத்திகள் (semiconductors) மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களை நோக்கிய மாற்றம், முக்கியமான தாதுக்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட "தேசிய முக்கிய தாதுக்கள் இயக்கம்" (National Critical Mineral Mission), இந்த வளங்களைப் பாதுகாப்பதற்கான வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. சுரங்கக் கழிவுகளிலிருந்து இத்தகைய முக்கிய தாதுக்களை மீட்டெடுப்பதற்கான ஒரு திட்டத்தைச் சேர்ப்பதன் மூலமும், அதற்கென பிரத்யேக நிதி உதவியை வழங்குவதன் மூலமும் இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது.
நான்காவதாக, தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் ஏற்றுமதிக்கு வலுவான கொள்கை ஆதரவு தேவை. இந்திய ஏற்றுமதியை அதிகப் போட்டித்தன்மை கொண்டதாக மாற்ற, ஏற்றுமதி பொருட்களின் மீதான வரிகள் மற்றும் தீர்வுகள் தள்ளுபடி திட்டத்திற்காக (Remission of Duties and Taxes on Exported Products Scheme (RoDTEP)) தற்போது ஒதுக்கப்பட்டுள்ள சுமார் ₹18,233 கோடி நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுத்தப்படுகிறது.
ஐந்தாவதாக, இந்தியா இன்று உலகளாவிய திறன் மையங்களுக்கான (Global Capability Centres (GCC)) உலகின் முதன்மையான மையமாக உருவெடுத்துள்ளது. ஆனால், அதற்கேற்றவாறு இந்தியாவின் மாற்று விலை நிர்ணய (Transfer Pricing) விதிமுறைகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்கின்றனர், எனவே, பல்வேறு பிரிவுகளுக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று விலை நிர்ணய முறைகள் குறித்து அரசாங்கம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஆறாவதாக, ட்ரோன் (Drone) பயன்பாட்டை வேகப்படுத்தவும், உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளவும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும், அரசாங்கம் நிதி உதவி மூலம் இந்தத் துறையை விரிவுபடுத்த உதவ வேண்டும். இதில், உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் தொகையை (Production Linked Incentive (PLI)) ₹120 கோடியிலிருந்து ₹1,000 கோடியாக உயர்த்துவது, ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ₹1,000 கோடி நிதியை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் உதவும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர். .
நிதி, கடன் மற்றும் வரி தொடர்பான சிக்கல்கள்
ஏழாவதாக, வங்கிகளின் மீதான அதிகப்படியான சார்பைக் குறைக்க, நிறுவனங்களின் கடன் பத்திரச் சந்தையை (Corporate Bond Markets) வலுப்படுத்துவது அவசியமாகும். குறைந்தபட்ச கடன் பெறும் தேவையைத் தளர்த்துதல், பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் என இரண்டுமே கடன் பத்திரங்களை வெளியிட அனுமதித்தல், பெரிய நிறுவனங்கள் சந்தை மூலமாக நிதி திரட்டுவதை ஊக்குவித்தல், காப்பீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வரம்பை தற்போதைய 25%-லிருந்து உயர்த்துதல், அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டுத் தரத்தை (Rating Norm) 'AA'-விலிருந்து 'AA–'ஆகக் குறைத்தல், வருங்கால வைப்பு நிதி (Provident Fund) அமைப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளின் மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் (Non-convertible debentures) முதலீடு செய்ய அனுமதித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம், நீண்டகால நிதி ஆதாரங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளுக்குப் பெரிதும் துணையாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
எட்டாவதாக, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நேரடி வரி விவகாரங்களில் முதல் மேல்முறையீட்டு நிலையான (CIT(A) (Commissioner of Income Tax - Appeals)) அலுவலகத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, அதிக வரி மதிப்பீடு (High-pitched assessments) செய்யப்பட்டுள்ள வழக்குகள், அனைத்து ஆவணங்களும் (Records) முழுமையாக உள்ள வழக்குகள், ஏற்கனவே உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் அமைந்த வழக்குகள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள மேல்முறையீடுகள் மற்றும் மிகவும் பழைய வழக்குகள் போன்ற வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காண வேண்டும் என்று கூறப்படுகிறது. இரட்டை முறை செயல்பாடு (Dual System): எளிமையான அல்லது குறைந்த மதிப்புள்ள வழக்குகளை விரைவாகத் தீர்க்க 'விரைவுப் பாதை' (Fast-track) முறையும், சிக்கலான அல்லது அதிக மதிப்புள்ள வழக்குகளை ஆழமாக ஆய்வு செய்ய விரிவான கையாளுதல் முறையும் தேவைப்படுகிறது. மேலும், நேரடி வரி விவகாரங்களில் முதல் மேல்முறையீட்டு CIT(A) நிலையில் தற்போது காலியாக உள்ள சுமார் 40 சதவீத பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியதும் அவசியமாகிறது
ஒன்பதாவதாக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார இயக்குநரின் (Authorized Economic Operator (AEO) அங்கீகாரம் பெற்ற குழுக்களால் தொடங்கப்பட்ட புதிய நிறுவனங்கள் உட்பட, புதிதாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார இயக்குநரிடம் (Authorized Economic Operator (AEO) சான்றிதழ் பெறத் தகுதியற்றவை. அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார இயக்குநரின் (Authorized Economic Operator (AEO) அங்கீகாரம் பெற்ற குழுக்களுக்கு இந்தத் தடையை நீக்குவது, வர்த்தகத் திறனை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பத்தாவதாக, கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுங்கவரி சீர்திருத்தங்கள் தொடர வேண்டும். வரி அடுக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பது வரி அமைப்பை எளிதாக்கும், தலைகீழ் வரி விகிதப் பிரச்சினைகளைச் (Inverted duty problems) சரிசெய்யும் மற்றும் வர்த்தகத்திற்குப் பயனளிக்கும் என்கின்றனர். உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தவும், வரி முரண்பாடுகளை சீரமைக்கவும், உற்பத்தி சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் இறக்குமதி வரிகள் சீரமைக்கப்பட வேண்டும் என்கின்றனர்
போட்டித்தன்மையை உறுதிப்படுத்தவும்
பல்வேறு துறைகளில் போட்டியை அதிகரிப்பதன் மூலமும், உள்நாட்டு வளர்ச்சிக்கான காரணிகளை வலுப்படுத்துவதன் மூலமும் இந்தியாவின் வளர்ச்சியைத் தக்கவைப்பதில் 2026-27-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு அறிக்கையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, அதே நேரத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இந்த வரவுசெலவு அறிக்கை தனியார் முதலீடுகளை ஈர்க்கவும் இந்தியாவின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
ஜோதி விஜ், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (FICCI) தலைமை இயக்குநராக உள்ளார்.
Original Article : Budget 2026-27 must keep the growth momentum -Jyoti Vij