கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி மாதம் 9-ஆம் தேதி), பிணை வழக்கு ஒன்றில் வயது நிர்ணயம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், போக்சோ (POCSO) சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய சட்டச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
குழந்தை பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், உண்மையான இளம் வயது காதல் உறவுகளைத் தண்டிப்பதிலிருந்து விலக்கு அளிப்பதற்காக, 'ரோமியோ-ஜூலியட் விதியை' (Romeo-Juliet clause) அறிமுகப்படுத்தலாம் என்று நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு பரிந்துரைத்தது."
ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் இளம் காதலர்களின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த விதி (Clause), நெருக்கமான வயதுடைய பதின்ம பருவத்தினருக்கு (Teenagers) இடையே ஒருமனதாக ஏற்படும் பாலியல் உறவுகளைப் பாதுகாக்கும். இதன் மூலம் அவர்கள் 'பாலியல் வன்புணர்வு' குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவதைத் தடுக்க முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது போன்ற சட்டவிதிகள் நடைமுறையில் உள்ளன.
சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதைக் குறைப்பது தொடர்பான பொதுநல மனு ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கு இடையே இருதரப்பு சம்மதத்துடன் ஏற்படும் உடலுறவை 'குற்றமாக' கருதுவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கள் அதிகரித்து வரும் நீதித்துறை அக்கறையைப் பிரதிபலிக்கின்றன.
பாதுகாப்பு மற்றும் சுயமுடிவு அதிகாரம்
போக்சோ (Protection of Children from Sexual Offences (POCSO)) சட்டத்தின்படி (குழந்தைகள் மீதான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டம்), 18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகளாகவே கருதப்படுகிறார்கள். பாலியல் செயல்பாடுகளுக்கு ஒரு சிறார் (18 வயது பூர்த்தி அடையாதவர்) அளிக்கும் சம்மதத்தை இந்தச் சட்டம் அங்கீகரிப்பதில்லை. எனவே, 18 வயதிற்குட்பட்ட ஒருவருடன் ஈடுபடும் எந்தவொரு பாலியல் செயல்பாடும், அது சம்மதத்துடன் நடந்திருந்தாலும் அல்லது சுரண்டல் நோக்கம் இல்லாததாக இருந்தாலும், தானாகவே குற்றமாகவே கருதப்படும் என்று தெரிவிக்கிறது.
வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில், போக்சோ (POCSO) சட்டம் ‘நீதிக்கான ஒரு புனிதமான வெளிப்பாடு’ என்றாலும், அதன் தவறான பயன்பாடு ஒரு ‘கொடூரமான சமூக இடைவெளியை’ உருவாக்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இளைஞர்களுக்கு இடையேயான உறவுகளை எதிர்ப்பதற்காக, குடும்பத்தினர் இந்தச் சட்டத்தை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாற்றத்திற்கான கோரிக்கை
சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை புதியதல்ல. ஆனால், பாலியல் குற்றங்களின் விசாரணையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொதுநல மனு (PIL) காரணமாக அது வேகம் பெற்றுள்ளது. இந்த வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞராக (Amicus Curiae) ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், சம்மதத்திற்கான வயதைக் குறைப்பதையோ அல்லது சில விலக்குகளை உருவாக்குவதையோ ஆதரித்துள்ளார்.
கடந்த ஆண்டு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதங்களில், தற்போதுள்ள ஒட்டுமொத்த குற்றமயமாக்கல் நடவடிக்கை, அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின்கீழ் இளம் பருவத்தினரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக ஜெய்சிங் வாதிட்டார். 16 முதல் 18 வயது வரையிலான இளம் பருவத்தினர் தங்கள் பாலியல் உறவு ரீதியிலான சுயமுடிவு (Sexual autonomy) குறித்து முடிவெடுப்பதில் 'வளர்ந்து வரும் திறனை' கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார். பொதுச் சட்டத்தின் 'முதிர்ந்த மைனர்' (Mature minor) கோட்பாட்டைக் குறிப்பிட்ட அவர், 18 வயதிற்குட்பட்ட அனைவரையும் சம்மதம் தெரிவிக்கத் தகுதியற்றவர்கள் என்று கருதுவது, அறிவியல் புரிதலையும் பருவமடைதலின் உயிரியல் யதார்த்தத்தையும் புறக்கணிப்பதாக அமையும் என்றும் வாதிட்டார்.
'நெருங்கிய வயதுடையவர்களுக்கு இடையிலான விதிவிலக்கு' (close-in-age exception) என்ற முறையை அறிமுகப்படுத்த ஜெய்சிங் பரிந்துரைத்தார். இதன்கீழ், இரண்டு பேருமே பருவ வயதினராக இருந்து (உதாரணமாக 16 வயது மற்றும் 17 வயதுடையவர்கள்), அவர்களின் உறவு இருதரப்புச் சம்மதத்துடன் இருந்தால், அது குற்றமாகக் கருதப்படாது. இதன் மூலம், கட்டாயப்படுத்துதல் இல்லாத, சம்மதத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடும் இளம் சிறுவர்கள் போக்ஸோ (POCSO) சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற அரசின் நிலைப்பாடு
சம்மத வயதைக் குறைப்பது அல்லது சட்டத்தில் விதிவிலக்குகளை உருவாக்குவது போன்ற முடிவுகளுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கென ஒரு கண்டிப்பான மற்றும் சமரசம் செய்து கொள்ளமுடியாத பாதுகாப்பை வழங்குவதற்காகவே, 18 வயதை நிர்ணயிப்பது ஒரு கவனமான மற்றும் நிதானமான முடிவாக எடுக்கப்பட்டது என்று ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சட்டபூர்வமான சம்மதத்தை வழங்குவதற்குத் தேவையான சட்ட அறிவோ அல்லது மன முதிர்ச்சியோ சிறுவர்களுக்கு இல்லை என்று அரசு தரப்பு வாதிட்டது. நம்பிக்கைக்குரிய இடங்களில் உள்ள பெரியவர்களால் குழந்தைகள் எளிதாக அழுத்தம், ஏமாற்று வேலை மற்றும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட வாய்ப்புள்ளதால், சம்மதம் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத ஒரு கடுமையான சட்டம் அவசியம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்மதத்திற்கான வயதைக் குறைப்பதோ அல்லது அதில் விதிவிலக்குகளை அனுமதிப்பதோ சட்டத்தில் தளர்வுகளை உருவாக்கும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் ஆள் கடத்தல் போன்ற குற்றங்களை, 'இருதரப்பு சம்மதத்துடன் நடந்த உறவு' என்று கூறி தப்பிப்பதற்கு வழிவகுத்துவிடும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் மீதான அத்துமீறலை தடுப்பதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என்றும், வயது வரம்பைத் தளர்த்துவது அந்தச் சட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அதே பிரச்சினையை மீண்டும் உருவாக்கிவிடும் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
சட்டப்பூர்வமான மாற்றங்கள் மூலம் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்குப் பதிலாக, நீதிபதிகள் ஒவ்வொரு வழக்கின் தன்மைக்கும் ஏற்பத் தங்கள் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியது.
2023-ஆம் ஆண்டில், இந்திய சட்ட ஆணையம் (Law Commission of India) திருமணத்திற்கு முந்தைய உடலுறவுக்கான சம்மத வயது வரம்பை 16-ஆகக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், இதிலுள்ள சிக்கல்களைப் புரிந்துகொண்ட ஆணையம், இதற்கு முழுமையான சட்ட விலக்கு அளிப்பதற்குப் பதிலாக, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் விரும்பி இணையும் வழக்குகளில், தண்டனை வழங்கும்போது நீதிபதிகள் தங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்தி முடிவெடுக்க அனுமதிக்கலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்தது.
தரவுகள் உணர்த்தும் உண்மை
போக்சோ (POCSO) சட்டத்தைப் பற்றிய நீதித்துறையின் கவலைகள் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மகாராஷ்டிரா, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் பதிவான போக்சோ வழக்குகளில் கிட்டத்தட்ட 25% வழக்குகள், பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையிலான இருதரப்பு சம்மதத்துடன் கூடிய காதல் உறவுகள் தொடர்பானவை என்று Enfold Proactive Health Trust மற்றும் ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (United Nations International Children's Emergency Fund (UNICEF)) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்கள் தங்கள் விருப்பப்படி எடுக்கும் முடிவுகளைக் கட்டுப்படுத்த, குடும்பத்தினர் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதைத் தரவுகள் காட்டுகின்றன. இத்தகைய சூழல்களில், குறிப்பாக வேறு சாதி அல்லது வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுடன் தங்கள் மகள்கள் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த இளைஞர்கள் மீது பெற்றோர்கள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைப் புகார்களைப் பதிவு செய்கிறார்கள். இந்த வழக்குகளில் தண்டனை விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. ஏனெனில், பாதிக்கப்பட்டவர்களாகக் கூறப்படும் பெண்கள் பெரும்பாலும் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே சாட்சியம் அளிக்கின்றனர்.
பருவவயதினரின் பாலியல் உறவுகளைக் குற்றமாகக் கருதுவது அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. வழக்கறிஞர் ஜெய்சிங் சுட்டிக்காட்டியபடி, போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் உள்ள கட்டாயத் தகவல் அளிக்கும் விதியானது, இளம் வயதினர் கருவுற்றல் அல்லது பாலியல் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் காவல்துறையிடம் புகார் அளிப்பதைக் கட்டாயமாக்குகிறது. இதனால் ஏற்படும் சட்ட நடவடிக்கை குறித்த பயம், தங்களுக்குத் தேவையான பாலியல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதாரச் சிகிச்சைகளைப் பெறுவதிலிருந்து பருவவயதினரைத் தடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
நீதித்துறையின் விருப்புரிமை போதுமானதாக இல்லை
தற்போது, இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் இந்தத் தெளிவற்ற சூழலைத் தங்களின் சுயவிருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி கையாண்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், பல உயர் நீதிமன்றங்கள் 'போக்சோ' (POCSO) சட்டம் பதின்ம வயதினரின் காதலைத் தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல என்று கூறி, காதல் உறவுகள் தொடர்பான குற்றவியல் வழக்குகளை ரத்து செய்துள்ளன. இருப்பினும், அந்த உத்தரவு வருவதற்குள்ளாகவே, குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் பல மாதங்கள் அல்லது வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில், வளரிளம் பருவத்தினரின் பாலுணர்வை குற்றமாக கருதும் நடைமுறைக்கு, வெறும் நீதித்துறை சார்ந்த தீர்வு மட்டும் போதாது என்றும், ஒரு கட்டமைப்பு ரீதியான தீர்வு அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது. அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டபடி, குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் 'பழிவாங்குவதற்கான ஒரு கருவியாக' மாறும்போது, நீதியின் அடிப்படை நோக்கமே தலைகீழாக மாறிவிடும் அபாயம் ஏற்படுவதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
Original Article : Why Supreme Court wants government to consider a ‘Romeo-Juliet’ exception in POCSO Act? -Vineet Bhalla