தற்போது, இந்து வாரிசுரிமைச் சட்டம் (Hindu Succession Act) பழங்குடி சமூகங்களுக்குப் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், பழங்குடி மக்களிடையே பரம்பரை உரிமையை நிர்வகிக்க ஒரு தனிச் சட்டத்தை அறிமுகப்படுத்தப்படலாம்.
பழங்குடி சமூகங்களில் பெண்களின் வாரிசுரிமைகள் குறித்த கேள்வி தீர்க்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான பழங்குடி சமூகங்களின் வழக்கமான சட்டங்கள் பழங்குடி சமூகப் பெண்களுக்கு முழுமையான சொத்துரிமைகளை வழங்க மறுக்கின்றன. மேலும், மூதாதையர் சொத்தில் மகள்களுக்கு பரம்பரை உரிமைகளை வழங்கும் 1956-ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம், பழங்குடிப் பெண்களை அதன் வரம்பிலிருந்து விலக்கி வைக்கிறது. இருப்பினும், உச்சநீதிமன்றம் சில வழக்குகளில், தங்கள் வழக்கமான நடைமுறைகளைக் கைவிட்டு, இந்து மாத பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை ஏற்றுக்கொண்ட பழங்குடிப் பெண்களுக்கு பரம்பரை உரிமைகளை வழங்கியது. இந்த சீரற்ற அணுகுமுறை இந்து சட்டங்களின் கீழ் விலக்கு பிரிவுகளை ஏற்றுக்கொள்வதன் காரணமாக சில சூழல்களில் பழங்குடிப் பெண்களை பரம்பரை உரிமைகளிலிருந்து விலக்கியது. அதே நேரத்தில் 'இந்துமயமாக்கல்' (Hinduisation) காரணமாக மற்றவற்றில் உரிமைகளை வழங்கியது. பரம்பரை உரிமை தொடர்பான கேள்விகள் எழும்போதெல்லாம் பழங்குடிப் பெண்களுக்கு நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கியது.
பழைய கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துதல்
அக்டோபர் 8, 2025 அன்று, நீதிமன்றம் இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் முக்கிய வாரிசுரிமை விதிகளை உறுதிசெய்து ஒரு தீர்ப்பை வழங்கியபோது இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தச் சட்டத்தை எந்த சூழ்நிலையிலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்காகப் பயன்படுத்த முடியாது என்று கூறியது. இந்தக் கருத்து புதியதல்ல என்றாலும், சட்ட அமைப்பின்கீழ் பழங்குடி சமூகங்களுக்கு சிறப்புப் பாதுகாப்பை வழங்கும் சட்டத்தின் கொள்கையை தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.
நவாங் vs பகதூர் (Nawang v. Bahadur) வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜூன் 23, 2015 அன்று சிம்லாவில் உள்ள இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் ஜூன் 23, 2015 அன்று சொத்துரிமை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குடிமை மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்து பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்ட பழங்குடி மகள்கள், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்கீழ் சொத்து பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. பழங்குடி சமூகங்களுக்கு இந்தச் சட்டத்தை விரிவுபடுத்த நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறி உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. சட்டத்தை மாற்ற முயற்சிப்பதன் மூலம் உயர்நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறிச் சென்றுள்ளதாக நீதிமன்றம் கூறியது. பழங்குடி சமூகங்களின் பரம்பரை சொத்துக்கள், ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக தலையிடாவிட்டால், பழங்குடியினரின் வாரிசுரிமை அவர்கள் சமூகத்தின் வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும் என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியது.
ராம் சரண் vs சுக்ராம் (Ram Charan v. Sukhram) வழக்கில், மூதாதையர் சொத்தில் இருந்து மகள்களை விலக்குவது அவர்களின் அடிப்படை சமத்துவ உரிமையை மீறுகிறது (fundamental right to equality) என்பதை அங்கீகரித்த சில மாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. இது ஆழமான ஆய்வை மட்டுமல்ல, சில கேள்விகளுக்கு சிறிதளவு பதிலளிக்கிறது. பழங்குடியினரை ‘இந்துமயமாக்குவது’ (Hinduising) மட்டுமே, பழங்குடி பெண்களுக்கு வாரிசுரிமையை உறுதி செய்யும் ஒரே வழியா? பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (Scheduled Tribes), அவர்களின் தனிப்பட்ட சமூக மற்றும் கலாசார சிறப்பம்சங்களை புறக்கணித்து, மத அடிப்படையில் மட்டும் வாரிசுரிமை வழங்கப்பட வேண்டுமா? வேறு எந்தச் சட்டத்தையும் விரிவுபடுத்தி, அவர்களுக்கு சமமான வாரிசுரிமை வழங்க முடியாதா? அல்லது, பழங்குடிப் பெண்களின் பரம்பரை உரிமைகளை உத்தரவாதம் செய்யும் நிலையான சட்டரீதியான மற்றும் வழக்கமான சட்டம் இல்லாத நிலையில், பாரம்பரியத்தை நிலைநிறுத்துகிறோம் என்ற காரணத்தின்கீழ் பழங்குடிப் பெண்கள் தொடர்ந்து பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டுமா?
‘இந்து’ என்ற சொல்லை வரையறுத்தல்
‘இந்து’ என்ற சொல்லை வரையறுப்பது குறித்து, உச்சநீதிமன்றம், 1966-ஆம் ஆண்டு சாஸ்திரி யக்ஞபுருஷத்ஜி vs முல்தாஸ் புருதர்தாஸ் வைஷ்யர் வழக்கில், “உலகின் பிற மதங்களைப் போல, இந்து மதம் ஒரே ஒரு கடவுளை மட்டும் ஏற்றுக்கொள்ளாது; ஒரே ஒரு கடவுளை மட்டும் வழிபடாது; ஒரே ஒரு கொள்கையையோ அல்லது தத்துவத்தையோ மட்டும் பின்பற்றாது; ஒரே மாதிரியான மத சடங்குகளையோ முறைகளையோ மட்டும் கடைப்பிடிக்காது. உண்மையில், இது ஒரு மதம் அல்லது சமயத்தின் குறுகிய பாரம்பரிய அம்சங்களுக்கு உட்படுவது போல தோன்றாது. இதனை பரந்த வகையில் ‘ஒரு வாழ்க்கை முறை’ என்று விவரிக்கலாம். ஒருவர் பிறப்பின் மூலம் அல்லது மதமாற்றத்தின் மூலம் இந்துவாக இருக்கலாம். மதமாற்றம் என்பது, குறிப்பிட்ட ஒரு மதத்தை உண்மையான நோக்கத்துடன் பின்பற்ற விரும்பும் மனநிலையுடன் தொடர்புடையது. அதனை தெளிவாக வெளிப்படுத்தும் நடத்தையையும் அதனை பின்பற்றுபவர்கள் கொண்டிருக்க வேண்டும். மதம் மாறிய ஒருவரின், மூதாதையர்கள் நீண்டகாலத்திற்கு முன்பே மதம் மாறி, திருமணம் மற்றும் பரம்பரை தொடர்பான பாரம்பரிய விதிகள் உட்பட பழங்குடியினரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதை நிறுத்தவிட்டால், அவர் தொடர்ந்து பழங்குடியினராகவே கருதப்படுவார்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு கேள்வியை எழுப்புகிறது. முன்னர் பழங்குடியினரை ‘இந்துமயமாக்கும்’ நடைமுறை, அவர்களின் தனித்துவமான அடையாளத்தை பாதுகாக்கும் அரசியலமைப்பு உறுதியை மறுப்பதாக இல்லையா? இந்த தீர்ப்பு, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 2(2)-ன் அரசியலமைப்பு சட்டத்தின் தன்மையை உறுதிப்படுத்துகிறது. இந்தப் பிரிவு, பட்டியலிடப்பட்ட பழங்குடியினரை (Scheduled Tribes) இந்து வாரிசு சட்டத்தின் வரம்பில் இருந்து விலக்குகிறது. முன்னதாக, இந்த விதி பட்டியலிடப்பட்ட பழங்குடியின பெண்களுக்கும், அந்த வகைப்பாட்டில் இல்லாத பெண்களுக்கும் இடையில் தவறான பாகுபாட்டை உருவாக்குகிறது என்ற காரணத்தால் சவால் செய்யப்பட்டது.
முன்னதாக, நீதிமன்றங்கள், பட்டியல் பழங்குடியினரைச் சேர்க்க, பிரிவு 2(1)-ன் வரம்பை விரிவுபடுத்தின, அவர்கள் இந்தப் பிரிவின்கீழ் வெளிப்படையாக விலக்கப்படவில்லை என்பதால், சட்டத்தின் பிரிவு 2(1)-ன் கீழ் ‘இந்து’ என்ற வரையறைக்குள் அவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கூறியது. இது, பிரிவு 2(2)-க்கு எதிராகவும் உள்ளது. பிரிவு 2(1)-ல் எதுவும் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அறிவிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு சட்டத்தின் எந்த விதிகளும் பொருந்தாது என்று கூறுகிறது. ஆனால், பழங்குடி பெண்கள் தங்கள் பழங்குடி அடையாளத்தை கைவிட்டு இந்துக்களாக மாற அழுத்தம் கொடுப்பதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது.
ஒரு வாய்ப்பு
பழங்குடி மக்களின் மத விசுவாசத்தைப் பொருட்படுத்தாமல் இந்தச் சட்டத்தை நீட்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இப்போது கூறியுள்ளதால், பழங்குடி மக்களிடையே பரம்பரை உரிமைகளை நிர்வகிக்கும் ஒரு சிறப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது சிறந்ததாக இருக்கும். மிசோரமைப் போலவே குறிப்பிடத்தக்க பழங்குடி மக்கள்தொகைக் கொண்ட பிற மாநிலங்களிலும் வாரிசுரிமைக்கான வழக்கமான சட்டங்களாக்குவது, பழங்குடி அடையாளத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கான ஒரு தீர்வை வழங்கக்கூடும்.
Original article : Rethinking tribal women’s inheritance rights -Shalini Saboo