காலநிலை நிதி என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 அமெரிக்கா, பல முக்கியமான சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறி, பருவநிலை பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை கைவிட முடிவு செய்துள்ள உலகில், பன்னாட்டுக் கொள்கை (Multilateralism) பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச பருவநிலைக் கொள்கையின் தார்மீக மற்றும் அறநெறி கட்டமைப்பு பலவீனம் அடைந்துள்ளதாக ஆர். ஆர். ரஷ்மி  குறிப்பிடுகிறார். 


முக்கிய அம்சங்கள்:


— உலக நாடுகளின் ஒத்துழைப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பது, உலகின் அமெரிக்கா போன்ற மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகள் பன்னாட்டு அமைப்புகளில் இல்லாதது மட்டும் அல்ல என்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இயங்கும் அமைப்புகளுக்கு ஒரு நீண்டகால ஆபத்தும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடுகளுக்கு இடையே பெருகிவரும் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள், ஒருமித்த கருத்துடைய சட்டமுறைமையின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து வருவதைக் காட்டுகின்றன. இது பொதுவான சர்வதேச இலக்குகளுக்குப் பதிலாக, இரு நாடுகளுக்கு இடையிலான லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தங்களாக மாறி வருகின்றன.


— இது சர்வதேச அளவிலான காலநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு இரண்டு மடங்கு சிக்கலை உருவாக்குகிறது. உலகளாவிய காலநிலை இலக்கை நாம் தவறவிடக்கூடும் என்றும், 1.5°C வெப்பநிலை வரம்பைத் தாண்டிவிட வாய்ப்புள்ளதாகவும் அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் கொள்கை மாற்றம், தூய்மையான எரிசக்தி மீதான அரசு மற்றும் தனியார் முதலீடுகளைக் குறைக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இது உலகளாவிய காலநிலை மாற்ற இலக்குகளை அடைவதில் உள்ள இடைவெளியை இன்னும் அதிகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 


— இந்தச் சவாலை உணர்ந்து, 30-வது காலநிலை மாநாட்டின் (COP30) தலைமைத்துவம் வருங்கால நடவடிக்கைகளுக்கான சட்டபூர்வமான ஒருமித்த கருத்தைத் தேடுவதோடு மட்டும் நின்றுவிடாமல், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட காலநிலை நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்தது. இந்த அணுகுமுறையிலிருந்துதான் உலக அளவிலான செயல்படுத்தல்களை  துரிதப்படுத்தும் (Global Implementation Accelerator) முன்முயற்சி திட்டம் உருவானது. இது உலகளாவிய செயல்முறைகளை மறுசீரமைப்பதன் மூலம் பன்னாட்டுக் கொள்கைகளுக்கு (multilateralism) ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைச் சரிசெய்யும் முயற்சியைக் காட்டுகிறது. பெலெம் (Belém) மாநாட்டில் உருவாக்கப்பட்ட இரு அடுக்கு முறை—இதில் ஒன்று சட்டபூர்வமான அர்ப்பணிப்புகளை வலுப்படுத்துவதிலும், மற்றொன்று அவற்றைச் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. 


— தற்போதைய சூழலில், நடைமுறைச் சிக்கல்களில் சிக்கிக்கொள்வதைத் தவிர்த்து, முக்கியப் பொருளாதார நாடுகள் எடுக்கக்கூடிய நேரடிச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது சிறந்தது என்றும் கூறப்படுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு அல்லாத மாசுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு போன்ற நடவடிக்கைகளைத் தலைமை முன்னிலைப்படுத்தினாலும், காலநிலை நிதி (climate finance), எரிசக்தி மாற்றம் மற்றும் சமமான உலகளாவிய செயல்பாட்டு கட்டமைப்பு போன்ற தீர்க்கப்படாத பிரச்சனைகளால் உலக நாடுகள் இன்னும் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.


— நிதி என்பது தொடர்ந்து பெரும் சிக்கலாகவே இருந்து வருகிறது. இந்தியாவின் 'நிகர பூஜ்ஜிய' (Net Zero) இலக்கை அடைவதற்கான நிதியுதவியில் பெரும் இடைவெளி இருப்பதை நிதி ஆயோக்கின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலகளாவிய காலநிலை நிதியோட்டம் ஆண்டுக்கு சுமார் $1.9 டிரில்லியன் டாலராக உள்ளது. ஆனால், புவி வெப்பமடைதலை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த ஆண்டுதோறும் $6-9 டிரில்லியன் டாலர் தேவைப்படுகிறது. இந்தியாவிற்கு மட்டும் 2070-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் $10-20 டிரில்லியன் டாலர் அல்லது ஆண்டுக்கு $250-450 பில்லியன் டாலர் தேவைப்படும் நிலையில், தற்போது சுமார் $135 பில்லியன் டாலர் மட்டுமே கிடைக்கிறது. இதன் பொருள், உள்நாட்டு நுகர்வைப் பாதுகாக்கவும், மக்கள் நலன் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும் கூடுதல் முதலீடுகள் மிக அவசியமாகும். எனவே, தூய்மையான மற்றும் சமமான எரிசக்தி மாற்றத்திற்கான உலகளாவிய நிதி ஆதரவைத் தக்கவைக்க, விருப்பமுள்ள நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியமாகிறது. 


— காலநிலை பாதுகாப்பை முன்னிறுத்தி எடுக்கப்படும் ஒருதலைபட்சமான வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து, நாடுகளுக்கு இடையிலான பலதரப்பு ஒத்துழைப்பைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். உலகின் சில முக்கிய வல்லரசு நாடுகள், உலகளாவிய கார்பன் தரநிலைகளைத் திணிப்பது போன்ற செயல்களின் மூலம் தங்களின் சுற்றுச்சூழல் இலக்குகளை நிலைநாட்ட வர்த்தகக் கொள்கைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன. எனவே, சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட பருவநிலை கட்டமைப்போடு ஒத்துப்போகக்கூடிய உள்நாட்டுக் கொள்கைகள் குறித்த பொதுவான புரிதல் சர்வதேச நாடுகளிடையே ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


உங்களுக்குத் தெரியுமா?


— காலநிலை நிதி (Climate finance) என்பது பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கும் அல்லது அதன் பாதிப்புகளைச் சமாளிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் பெருமளவிலான முதலீடுகளைக் குறிக்கிறது.


— தகவமைப்பு (Adaptation) என்பது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்வதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அல்லது குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் ஆகும். உதாரணமாக, உயர்ந்து வரும் கடல் மட்டத்திலிருந்து கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கத் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் போன்ற முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் ஆகும். 


— காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடையாமல் இருக்க, பசுமை இல்ல வாயுக்களின் (GHG) வெளியேற்றத்தைக் குறைப்பதே 'தணிப்பு' (Mitigation) நடவடிக்கை எனப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும், காடுகளின் பரப்பளவை விரிவுபடுத்துவதன் மூலமும் இதனைச் சாதிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


Original article :  What is climate finance? -Roshni Yadav

Share: