பசுமை அம்மோனியா வழியிலான இந்தியாவின் ஆற்றல் மாற்றம் -பவன் முலுக்குட்லா, அனுராக் நல்லபனேனி, சினேகா மல்ஹோத்ரா

 நாட்டின் பசுமை அம்மோனியா ஏல மாதிரியானது (ammonia auction model), தூய்மையான எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான உலகளாவிய தரநிலைகளை மறுவரையறை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


ஜனவரி 2026-ல், இந்திய எரிசக்தி வாரத்தின் (India Energy Week (IEW)) முதல் அமர்வில், பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய எரிசக்தியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், எரிசக்தித் துறையில் $500 பில்லியன் முதலீட்டிற்கான வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார். இந்தியா எரிசக்தி பாதுகாப்பிலிருந்து எரிசக்தி சுதந்திரத்திற்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், பசுமை ஹைட்ரஜன் போன்ற தூய்மையான ஆற்றலை மலிவு விலையில் வழங்குவது வெற்றிகரமான எரிசக்திக்கு மாறுவது முக்கியமானதாகும். நைட்ரஜனுடன் பசுமை ஹைட்ரஜனைச் சேர்த்து தயாரிக்கப்படும் பசுமை அம்மோனியா, இப்போது உரங்கள் முதல் தூய்மையான ஆற்றல் மற்றும் கடல் எரிபொருள் வரை பல பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. பசுமை அம்மோனியா ராஜதந்திர நடவடிக்கை மூலம், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் தென்கொரியா போன்ற பிராந்தியங்களில் முன்னேறியுள்ளது.


ஒருங்கிணைந்த கொள்முதல் வழிமுறைகள் உலகளாவிய பசுமை அம்மோனியா சந்தைக்கு அடித்தளத்தை உருவாக்க தொடங்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஹைட்ரஜன் இறக்குமதி உத்தியின்கீழ் H2Global-ன் பசுமை அம்மோனியா ஒப்பந்தம், மொத்த எரிபொருளாக தூய்மை அம்மோனியாவை கொள்முதல் செய்வதற்கான தென் கொரியாவின் தூய்மை ஹைட்ரஜன் போர்ட்ஃபோலியோ தரநிலை (Clean Hydrogen Portfolio Standard (CHPS)) ஒப்பந்தம் மற்றும் இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் பசுமை ஹைட்ரஜன் மாற்றத்திற்கான ராஜதந்திர தலையீடுகள் (Strategic Interventions for Green Hydrogen Transition (SIGHT)) திட்டத்தின்கீழ் இந்திய சூரிய ஆற்றல் கழகம் (Solar Energy Corporation of India (SECI)) சமீபத்தில் முடிவு செய்த ஒப்பந்தம் போன்றவை சில குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும்.


பசுமை அம்மோனியா  ஏலம்


இந்த உலகளாவிய கொள்முதல் நடைமுறைகளுடன் ஒப்பிடுகையில், இந்திய சூரிய ஆற்றல் கழகத்தின் (Solar Energy Corporation of India (SECI)) மூலம் நடத்தப்பட்ட இந்தியாவின் பசுமை அம்மோனியா ஏலத்தில் அதிகமான நபர்கள் பங்கேற்றனர். 15 ஏலதாரர்கள் பங்கேற்று 7 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். SIGHT திட்டத்தின் கீழ், SECI ஜூன் 2024-ல் இந்தியாவின் 13 உர அறுவடை தொழிற்சாலைகளுக்காக ஆண்டுக்கு அதிகபட்சம் 724,000 டன் பச்சை அமோனியாவிற்கான ஒப்பந்தத்தை வெளியிட்டது. இந்த ஒப்பந்தங்கள் ஆகஸ்ட் 2025-ல் முடிவடைந்தன. வெற்றி பெற்ற ஏலதாரர்களுக்கு 10 ஆண்டு நிலையான விலையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. விலை மற்றும் கொள்முதல் குறித்த இந்த தெளிவு, முதலீட்டிற்குத் தேவையான சந்தை உறுதிப்பாட்டை உற்பத்தியாளர்களுக்கு வழங்கியது. இந்த ஏலங்கள் செலவு-போட்டித்தன்மை கொண்ட பசுமை அம்மோனியா கொள்முதலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தின. இது புதிய உலகளாவிய அளவுகோல்களை அமைத்தது. இது H2Global ஏலத்தின் விலைகளை விட ஏறக்குறைய 40%-50% குறைவானவான அளவாகும்.


ஒப்பந்த செயல்முறை பல முறை நீட்டிக்கப்பட்டு திருத்தப்பட்டன. இது, திட்ட உருவாக்குபவர்களும் வாங்குபவர்களும் எழுப்பிய அபாயங்கள், பணம் பாதுகாப்பு, விலை மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து, அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு நியாயமான அமைப்பை உருவாக்கியது.


இந்த ஏலத்தில், ஏழு ஏலதாரர்கள் பசுமை அம்மோனியாவிற்கான  13 விநியோக ஒப்பந்தங்களைப் பெற்றனர். ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 3,70,000 டன்களுக்கு ஆறு ஒப்பந்தங்களை வென்றது. இந்த ஒப்பந்தங்களில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு கிலோவிற்கு ₹8.82, ஒரு கிலோவிற்கு ₹7.06 மற்றும் ஒரு கிலோவிற்கு ₹5.3 உற்பத்தி மானியங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ஏற்கனவே உள்ள உர உற்பத்தியாளர்களுக்கு 10 ஆண்டு நிலையான விலை விநியோக ஒப்பந்தம் ஆகியவை அடங்கும்.


இந்த ஒப்பந்தங்களில் பசுமை அம்மோனியாவின் விலைகள் ₹49.75 மற்றும் ₹64.74/கிலோ (ஒரு டன்னுக்கு $572 மற்றும் $744) வரை இருக்கும். இந்தியாவில், சாம்பல் அம்மோனியா (grey ammonia) விலை டன்னுக்கு $515 வரை அதிகமாக உள்ளது. நீண்டகால ஒப்பந்தங்களால் ஆதரிக்கப்படும் பசுமை அம்மோனியாவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விலையை காரணியாக்கும்போது, ​​செலவு இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது.


விநியோகம் மற்றும் போக்குவரத்து


குறிப்பாக, இந்திய சூரிய ஆற்றல் கழகம் (Solar Energy Corporation of India (SECI)) ஒப்பந்தத்தின் ஒரு தனித்துவமான அம்சம், விநியோக புள்ளிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பது ஆகும். ஏனெனில், பசுமை அம்மோனியாவிற்கு தேவையான உர ஆலைகள் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன. இது கப்பல் போக்குவரத்து மூலமாக பசுமை அம்மோனியாவை கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும். ஒப்பந்தங்களின் கீழ் வாங்கப்படும் பசுமை அம்மோனியா அனைத்து அம்மோனியா இறக்குமதிகளிலும் 30% பங்களிலிக்கிறது. இது கணிக்கக்கூடிய விலைகளை வழங்குகிறது மற்றும் உலகளாவிய எரிவாயு சந்தைகள், நாணயம் மற்றும் அரசியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. சாம்பல் அம்மோனியாவின் விலை அதிகமாக உள்ள இடங்களில், பசுமை அம்மோனியாவை வாங்குவது பயன்பாட்டாளர்க்கு உதவியாக இருக்கும். 


வேகத்தை ஊக்குவித்தல்


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செலவுகள், பெரிய அளவிலான தளவாடங்கள், வலுவான ஒப்பந்த வடிவமைப்பு மற்றும் இலக்கு சார்ந்த ஊக்கத்தொகைகள் போன்றவற்றின் காரணமாக, இந்தியாவின் அணுகுமுறை உலகளவில் தூய்மையான அம்மோனியா நிலப்பரப்பை அதிகளவில் வடிவமைத்து வருகிறது. தொழில், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை கார்பனை நீக்க நம்பகமான சுத்தமான அம்மோனியா இறக்குமதியை அதிக நாடுகள் இந்தியாவை நாடுவதால், இந்தியாவின் வெற்றிகரமான ஏல மாதிரி வளர்ந்து வரும் உலகளாவிய சந்தை கட்டமைப்புகளை வடிவமைக்கவும், அதிக அளவில் பயன்படுத்தவும் சிறந்த நிலையில் உள்ளது.


இருப்பினும், இந்தியாவின் பசுமை அம்மோனியா ஏலங்களால் உருவாக்கப்பட்ட வேகத்தைத் தக்கவைக்க கொள்கை வகுப்பாளர்கள், திட்ட உருவாக்குநர்கள் மற்றும் நிதியாளர்களிடமிருந்து ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நடவடிக்கை தேவைப்படும். உருவாக்குநர்கள் வலுவான தொழில்நுட்ப மற்றும் நிதிரீதியான விடாமுயற்சியில் கவனம் செலுத்த வேண்டும். கலப்பின புதுப்பிக்கத்தக்க அமைப்புகளை சேமிப்பகத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும். மேலும், நீண்டகால செயல்பாட்டு நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வெளிப்படையான கண்காணிப்பு கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய நடைமுறைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு தரங்களை மேம்படுத்தி சான்றிதழைப் புதுப்பித்து, மின்சாரக் கட்டமைப்புடன் இணைதல் (grid access) வங்கி மற்றும் சலுகைகளுக்கான தெளிவான மற்றும் நிலையான விதிகளை உருவாக்க வேண்டும்.


நீண்டகால, கலப்பான நிதி வசதிகள் (blended finance), நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அபாயம் குறைக்கும் கருவிகளால் (risk-mitigation instruments) திட்டங்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி தனியார் முதலீட்டை ஈர்க்க முடியும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சேர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், இந்தியாவை ஒரு பங்கேற்பாளராக மட்டுமல்லாமல், தூய்மையான அம்மோனிய சந்தைகளில் முன்னணி  நாடாக நிலைநிறுத்த உதவும்.


பவன் முலுகுட்லா, உலக வள நிறுவனத்தில் (World Resources Institute India (WRI)) இந்தியாவின் ஒருங்கிணைந்த போக்குவரத்து, தூய்மை காற்று மற்றும் ஹைட்ரஜன் துறையின் நிர்வாகத் திட்ட இயக்குநராக உள்ளார். அனுராக் நல்லபனேனி WRI இந்தியாவில் ஹைட்ரஜன் துறையின் திட்டத் தலைவராக உள்ளார். சினேகா மல்ஹோத்ரா WRI இந்தியாவில் எரிசக்தி கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையின் திட்ட இணை இயக்குநராக உள்ளார்.


Original article :  India’s energy shift through the green ammonia route -Pawan Mulukutla, Anuraag Nallapaneni, Sneha Malhotra

Share: