இந்தியா தனது முதல் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையான 'பிரஹார்' (PRAHAAR) திட்டத்தை வெளியிட்டுள்ளது. -விஜைதா சிங்

 வெளிநாடுகளில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் தவிர, குற்றச் செயல்களில் ஈடுபடும் ஹேக்கர்களும் (Hackers) மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களும் கூட சைபர் தாக்குதல்கள் மூலம் இந்தியாவைக் குறிவைப்பதாக உள்துறை அமைச்சகத்தின்  கொள்கை கூறுகிறது.


திங்கட்கிழமை பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் முதலாவது பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை வெளியிட்டது. அதில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் தவிர, குற்றச் செயல்களில் ஈடுபடும் முடக்குநர்கள் (Hacker) மற்றும் சில நாடுகளும் இணையதளம் (Cyber) வழியாக இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியா நீர், நிலம் மற்றும் வான் வழியாகப் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்று இந்தக் கொள்கை கூறுகிறது. அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத அமைப்புகளிடமிருந்து மின்சாரம், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளைப் பாதுகாப்பதற்கான தனது திறனை நாடு வலுப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை மற்றும் உத்திமுறைகள் (National Counter Terrorism Policy and Strategy) இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அது விரைவில் வெளியிடப்படும் என்றும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு 'தி இந்து' நாளிதழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.


மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பிரஹார் (PRAHAAR) எனப் பெயரிடப்பட்டுள்ள, அந்த கொள்கை அறிக்கையில், இந்தியா பயங்கரவாதத்தை எந்தவொரு குறிப்பிட்ட மதம், இனம், தேசியம் அல்லது நாகரிகத்துடன் தொடர்புபடுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.


இந்தியா நீண்டகாலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஜிகாதி பயங்கரவாத குழுக்களும் அவற்றின் முன்னணி அமைப்புகளும் நாட்டில் தொடர்ந்து தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. 


அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் இலக்காக இந்தியா இருந்து வருகிறது. இந்த அமைப்புகள் 'ஸ்லீப்பர் செல்கள்' (sleeper cells) மூலம் நாட்டில் வன்முறையைத் தூண்ட முயற்சி செய்து வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து செயல்படும் வன்முறை தீவிரவாதிகள், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கச் சதித் திட்டங்களைத் தீட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 


பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்களை எளிதாக்குவதற்கு, ட்ரோன்கள் (Drones) உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களை அந்தப் பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கும், அதற்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்கும், பயங்கரவாதக் குழுக்கள் பெருகிவரும் அளவில் திட்டமிடப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களை (Organized criminal networks), தளவாடங்கள் மற்றும் ஆள் சேர்ப்புக்காகப் பயன்படுத்தி வருகின்றன என்றும் அந்தக் கொள்கை விளக்குகிறது.


இந்தக் குழுக்கள் தங்களது பிரச்சாரம், தகவல் பரிமாற்றம், நிதி திரட்டுதல் மற்றும் தாக்குதல்களைத் திட்டமிட சமூக ஊடகங்களையும் (Social Media) உடனடி செய்தி பரிமாற்றச் செயலிகளையும் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. குறியாக்கம் (Encryption), இருண்ட வலையமைப்பு (Dark Web) மற்றும் டிஜிட்டல் நாணய சேமிப்பகம் (Crypto Wallets) போன்ற தொழில்நுட்பங்கள் அவர்கள் தங்களது அடையாளத்தைக் காட்டாமல் ரகசியமாகச் செயல்பட உதவுகின்றன.


வேதியியல், உயிரியல், கதிரியக்க, அணுக்கரு, வெடிபொருள் மற்றும் டிஜிட்டல் ((Chemical, Biological, Radiological, Nuclear, Explosive, Digital) (CBRNED)) சாதனப் பொருட்களை பயங்கரவாதிகள் கைப்பற்றுவதையும் பயன்படுத்துவதையும் தடுப்பது, பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளுக்கு இன்றும் ஒரு சவாலாகவே இருப்பதாக அந்தக் கொள்கை குறிப்பிடுகிறது. மேலும், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் ட்ரோன்கள் (Drones) மற்றும் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பங்களை ஆபத்தான நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவது மற்றொரு முக்கிய சிக்கலாக உள்ளது.


பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வலுவான வழக்குகளை உருவாக்க, முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்வது முதல் வழக்கு விசாரணை முடியும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் சட்ட வல்லுநர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று இந்தக் கொள்கை பரிந்துரைத்தது.


வெளிநாடுகளைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள், இப்போது உள்நாட்டுக் குழுக்களின் ஆதரவு, தளவாடங்கள் (Logistics) மற்றும் உள்ளூர் அறிவைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்துகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைச் சமாளிக்க, சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்புடன் கூடிய தேசிய முயற்சிகள் அவசியம் என்று அந்தக் கொள்கையில் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. 


இந்திய இளைஞர்களைத் தங்களது அமைப்பில் சேர்ப்பதற்கு பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தடுப்பதற்காக, இந்திய உளவுத்துறையும் சட்ட அமலாக்க அமைப்புகளும் அவர்களது திட்டங்களை அவ்வப்போது முறியடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய கொள்கையின்படி, தீவிரவாதப் போக்கிற்கு மாறிய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் மீது படிபடியான காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல தரப்பினரை உள்ளடக்கிய ஒரு அணுகுமுறையின் மூலம், தீவிரவாதம் மற்றும் வன்முறையை முழுமையாக ஒழிப்பதே இதன் நோக்கமாவும் கூறப்படுகிறது. ஒரு நபர் எந்த அளவிற்குத் தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைப் பொறுத்து, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சமூக மற்றும் மதத் தலைவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், தீவிரவாதம் மற்றும் வன்முறையினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிதமான போக்கைக் கொண்ட மத போதகர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (NGOs) ஈடுபட்டுள்ளதாக அந்தக் கொள்கை தெரிவிக்கிறது.


அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்க, இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறைகளில் தீவிரவாதச் சிந்தனைகள் பரவுவதைத் தடுக்க, கடினமான குற்றவாளிகள் பாதிப்புக்குள்ளாகக்கூடிய கைதிகளின் மனதை மாற்றாமல் இருக்க சிறை ஊழியர்கள் தொடர்ந்து எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், தீவிரவாதச் சிந்தனைகளிலிருந்து விடுவிக்கும் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. 


Original article :  India releases first anti-terror policy PRAHAAR -Vijaita Singh

Share: