உச்ச நீதிமன்றத்தின் நியாம்கிரி (Niyamgiri) தீர்ப்பு, பழங்குடியினரின் சுயநிர்ணய உரிமைக்கான அரசியலமைப்பு வாக்குறுதிக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்தது. ஹஸ்டியோவில் (Hasdeo) வெளிப்பட்டவை அந்தக் கொள்கைக்கு முரணாக உள்ளது.
கடந்த மாதம், சத்தீஸ்கரின் ஹஸ்டியோ அரண் காடுகளில் உள்ள கட்பாரா (Ghatbarra) கிராமத்தின் சமூக வன உரிமைகள் (community forest rights (CFR)) ரத்து செய்யப்பட்டதை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அந்தத் தீர்ப்பு ஒரு சட்ட வழக்கினை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. மாறாக, நீதிக்கான கதவையும் மூடியது போல ஆகிவிட்டது. பெரும்பாலும் ஆதிவாசிகள் வசிக்கும் கட்பாராவின் மக்களுக்கு, அவர்களின் காடுகள் பார்சா கிழக்கு (Parsa East) மற்றும் காந்தா பசன் நிலக்கரிச் சுரங்கத்திற்காக (Kanta Basan coal mine) எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஏற்கனவே ஏற்பட்ட காயத்தில் மேலும் அவமானத்தைச் சேர்த்தது. தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி அவர்கள் நீதிமன்றத்தை அணுகிய ஒன்பது ஆண்டுகளில், சேதம் பெருமளவில் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதே, அவர்களது சமூக வன நிலங்களில் சுரங்கப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. இப்போது, அவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்குப் பதிலாக, நீதிமன்றம், உரிமைகளுக்கான அங்கீகாரத்தை ஒரு "தவறு" என்று கூறி நிராகரித்துள்ளது. மேலும், எந்தவொரு உரிமை கோரல்களுக்கும் பணமாக நஷ்ட ஈடு வழங்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஆதிவாசிகளைப் பொறுத்த வரையில் காடு என்பது ஒரு சொத்துரிமை கோரல் அல்ல; அது அவர்களோடு வாழும் ஒரு உறவு. இந்தத் தீர்ப்பு சட்ட ரீதியான பின்னடைவு என்பதையும் தாண்டி ஒரு தார்மீகப் பின்னடைவுமாகும். இது, வன உரிமைகள் சட்டம் (Forest Rights Act (FRA)), 2006 எதனைச் சவால் செய்ய முயன்றதோ, அதே முதலாளித்துவ வளர்ச்சியின் தர்க்கங்களுக்கு வன நிர்வாகக் கட்டமைப்பானது தொடர்ந்து எவ்வாறு உதவி செய்கிறது என்பதை இந்தத் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.
சட்டப் போராட்டங்களின் நீண்ட வரலாறு
வன நிலத்தை சுரங்கத்திற்காக வழங்கிடும் திட்டத்தை 2011-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனைக் குழு (Forest Advisory Committee (FAC)) நிராகரித்தது. அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் வளத்தைக் குறிப்பிட்டது. வன உரிமைகள் தீர்க்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சட்டம் குறித்த அடிப்படை விழிப்புணர்வு இல்லை என்றும் வன ஆலோசனைக் குழுவின் துணைக்குழு அறிக்கை அளித்தது. 2009-ஆம் ஆண்டு முதல், வன உரிமைகளுக்குத் தீர்வு காணப்படுவதும், பாதிக்கப்பட்ட கிராமசபைகளின் முன் ஒப்புதல் பெறுவதும் வனப் பாதுகாப்புச் சட்டம், 1980-ன் கீழ் செய்யப்படும் சட்டப்பூர்வ முன்நிபந்தனையாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும், அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மேம்பாட்டுத் தேவைகள் சுற்றுச்சூழல் பரிசீலனைகளை விட முக்கியமானவை என்றும், அவற்றை நிர்வகிக்க முடியும் என்று வாதிட்டு, திட்டத்தைத் தொடர அனுமதித்தார். கிராமவாசிகளின் வேண்டுகோள்கள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி, 2012-ஆம் ஆண்டில் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
2014-ஆம் ஆண்டில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal - NGT) இந்த அனுமதியை ஒதுக்கி வைத்து, திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் சுரங்கப் பணிகளை நிறுத்துமாறும் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், சுரங்க குத்தகைதாரர் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, சிறிது காலத்திற்குப் பிறகு, உச்சநீதிமன்றம் சுரங்கப் பணிகளை மீண்டும் தொடர அனுமதித்தது. இருப்பினும், அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவில் உச்சநீதிமன்றம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. 2023-ஆம் ஆண்டில் மேல்முறையீடு திரும்பப் பெறப்படும் வரை வெளிப்படையான இந்த வித்தியாசமான நிலையே தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. வன ஆலோசனைக் குழு (Forest Advisory Committee (FAC)) 2018-ஆம் ஆண்டில் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்தது. அப்போதே, சுரங்கம் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த நிலையில் மேலும், அதை ஒரு நிறைவேற்றப்பட்ட விஷயமாக (fait accompli) மட்டுமே வன ஆலோசனைக் குழு குறிப்பிட்டது.
இதற்கிடையில், 2013-ல், காட்பர்ரா கிராம சபையின் சமுதாய வன உரிமைகள் (Community Forest Rights (CFRs)), வன உரிமைகள் சட்டத்தின்கீழ் அதிகாரப்பூர்வமாக (ஓரளவு என்றாலும்) அங்கீகரிக்கப்பட்டன. ஆனால், சுரங்கத்திற்கு எதிராக சமூகம் அந்த உரிமைகளை வலியுறுத்தத் தொடங்கியவுடன், மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழு (District Level Committee (DLC)) 2016-ஆம் ஆண்டில் அந்த கிராம மக்களின் பட்டாவை தன்னிச்சையாக ரத்து செய்தது மேலும் தீவிரமான சிக்கலுக்கு வழிவகுத்தது. இதனால் கிராம மக்கள் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது.
கண்டறிதலும் அதன் குறைபாடுகளும்
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, காட்பராவின் சமூக வன உரிமைகள் ஆரம்பத்திலிருந்தே செல்லாதவை (void ab initio) என்று கூறி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏனெனில், அந்த நிலம் ஏற்கெனவே சுரங்கத் தொழிலுக்காக வழங்கப்பட்டிருந்தது. இந்தக் காரணம், வன உரிமைகள் "அனைத்து சுமைகளிலிருந்தும் விடுபட்டவை" என்று கூறும் வன உரிமைச் சட்டத்தின் பிரிவு 4(7)-ஐ புறக்கணித்தது. சுரங்க குத்தகை என்பது ஒரு சமூகத்தின் பாரம்பரிய வனத்தின் மீதான சுமையாக இருந்தால், உரிமைகளை அங்கீகரிப்பதற்கு அல்லது மீட்டெடுப்பதற்கு முன்பு அதை நீக்குவது அரசாங்கத்தின் கடமையாகும். இதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
சொத்துரிமைகள், பழங்குடியினர் மற்றும் பாலின சமத்துவ இடைவெளி
சமூக வன உரிமைகளை (CFRs) அங்கீகரிப்பது என்றால், சுரங்கங்கள் எப்பொழுதும் தடுக்கப்படும் என்று அர்த்தமல்ல. ஏனெனில், கிராம சபைகள் இன்னும் தங்கள் ஒப்புதலை வழங்க முடியும். இதில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அங்கீகாரம் என்பது ஒரு கிராம சபைக்கு தன்னுடைய சொந்த முடிவை எடுக்கும் அதிகாரத்தை அளிக்கிறது, மேலும் தேவைப்பட்டால், பொருத்தமான இழப்பீட்டைத் தீர்மானிக்கவும் அதிகாரம் அளிக்கிறது. இதற்கு நேர்மாறாக, அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளை நிலைநாட்ட மறுக்கும் அதே வேளையில், எந்தவொரு கோரிக்கைக்கும் இழப்பீடு வழங்கப்படலாம் என்று நீதிமன்றம் பரிந்துரைப்பது, கட்டுப்படுத்தும் உத்தரவாக இல்லாமல் நீதித்துறையின் அலட்சியமாகவே கருதப்படுகிறது.
வன உரிமைகளைத் தீர்த்து வைப்பதற்கும் கிராம சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கும் வன அனுமதிசட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்ததா என்பது குறித்த மையக் கேள்வியைத் தவிர்க்க, இந்தத் தீர்ப்பு தொழில்நுட்ப அம்சங்களையும் நம்பியிருந்தது. அனுமதிக்கு முன்னர் காட்பரா கிராம சபையின் பதிவு செய்யப்பட்ட எதிர்ப்பும் அதைத் தொடர்ந்து வந்த சமூக வன உரிமை அங்கீகாரமும் வேறுவிதமாகக் கூறுகின்றன. வன உரிமைச் சட்ட விதிகளின் விதி 12(B)-ன் கீழ், சமூக வன உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதும், அவை அங்கீகரிக்கப்படாவிட்டால் காரணங்களைப் பதிவு செய்வதும் மாவட்ட அளவிலான குழுவின் (District Level Committee (DLC)) கடமையாகும். ஆயினும்கூட, அனுமதி வன உரிமைச் சட்டத்தை மீறுவதாக நிரூபிக்கத் தவறியதற்காக மனுதாரர்களை நீதிமன்றம் குறை கூறியது. சமூக வன உரிமைகள் இல்லாததற்கு மாவட்ட அளவிலான குழுவின் விளக்கமான காரணங்கள் இல்லாமல், அனுமதி வழங்கப் பயன்படுத்தப்பட்ட வன உரிமைச் சட்ட ஒப்புதலுக்கான எந்த ஆதாரமும் தவறாக இருக்க வாய்ப்புள்ளது. இது வெறும் ஊகமாகக் கருதப்படவில்லை. ஏனெனில், அருகில் உள்ள பார்சா நிலக்கரித் தொகுதியில் கிராம சபையின் ஒப்புதல்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் மனுதாரர்களின் சட்டபூர்வமான உரிமையை (locus standi) நிராகரித்ததும் ஒரு சிக்கலான விஷயம் ஆகும். சமூக வன உரிமைகள் என்பவை முழு கிராம சமூகத்திற்கும் அதன் கிராம சபை பெயரால் உள்ள உரிமைகள் ஆகும். மேலும், ரத்து செய்யப்பட்டதால் மனுதாரராகிய கிராம மக்கள் தெளிவாகப் பாதிக்கப்பட்டனர். அசல் நிலப் பயன்பாட்டு மாற்ற உத்தரவை எதிர்த்து அவர்கள் சவால் செய்யவில்லை என்று நீதிமன்றம் கிராம மக்களைக் குற்றம் சாட்டியது. ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) அதை ஏற்கனவே ரத்து செய்துவிட்டது என்பதையும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் அவர்களின் சட்டரீதியான விருப்பங்களை முடக்கிவிட்டன என்கிற வாதத்தையும் நீதிமன்றம் புறக்கணித்தது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆதிவாசி அடையாளத்தை அங்கீகரித்தல்
உச்சநீதிமன்றத்தின் நியாம்கிரி தீர்ப்பு (2013) என்பது பழங்குடியினரின் வழக்கமான காடுகளின் மீதான சுயநிர்ணய உரிமை குறித்த அரசியலமைப்பு உறுதிமொழிக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தது. ஹஸ்டியோவில் நடந்தவை அந்தக் கொள்கைக்கு முரணாக உள்ளன. இந்தத் தீர்ப்பு நீதியின் செயல் என்பதைவிட நிர்வாக ரீதியான சட்ட அங்கீகாரத்தின் ஒரு செயலாகவே கருதப்படுகிறது. சட்டத்தின் மொழி எவ்வாறு நீதிக்கு எதிராகத் திருப்பப்படலாம் என்பதையும், நீதித்துறை போன்ற அமைப்புகள்கூட நடைமுறையை சடங்குமயமாக்கி, அதே நேரத்தில் நிலப்பறிப்பைச் சட்டப் பூர்வமாகச் செய்யலாம் என்பதையும் இந்த நடவடிக்கை காட்டுகிறது. வன உரிமைகள் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படாவிட்டால், ஹஸ்டியோவில் உள்ள சுரங்கக் குழிகள் எவ்வளவு வெறுமையாக இருக்கிறதோ, அவர்களுக்கான நீதியும் அவ்வளவு வெறுமையாக இருக்கும்.
Original Article: The legal hoodwinking of Adivasis