தலைமை நீதிபதி கவாய், உச்சநீதிமன்ற இடஒதுக்கீட்டில் 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரின்' விலக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், இதைவிடச் சிறந்த தீர்வு உள்ளது. -இ வெங்கடேசு

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBC)) இடஒதுக்கீடு அனுபவத்தின்படி, பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவுகளின் (creamy layer) காரணமாகவே 27 சதவீத ஒதுக்கீட்டை நிரப்புவதில் தடை ஏற்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 17 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.


ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மங்களகிரியில் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், பட்டியல் சாதிகளில் (Schedule Caste (SCs)) இடஒதுக்கீட்டில் “பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரின்” (creamy layer) நீக்கத்தை ஆதரித்தார். அவரது கருத்து ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்த ‘கிரீமி லேயர்’ என்கிற  கருத்து மேற்கத்திய இலக்கியத்திலோ அல்லது இந்திய அரசியலமைப்பிலோ காணப்படவில்லை. மாறாக, இது ஒரு நீதித்துறை கண்டுபிடிப்பு ஆகும். 


கிரிமி லேயர் (creamy layer) என்கிற வார்த்தை பற்றிய முதல் குறிப்பு, அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் 1969-ஆம் ஆண்டில்  நியமிக்கப்பட்ட சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையில் காணப்படுகிறது. ஆணையத்தின் மிக முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று, பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரின் நீக்கம் (creamy layer exclusion) ஆகும். அதாவது, வசதியான குடும்பங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Backward Classes (BCs)) இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதிலிருந்து விலக்குவது ஆகும். இந்த யோசனை அப்போது முன்வைக்கப்பட்டாலும், இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.


கிரீமி லேயர் (creamy layer) கருத்தைச் சுற்றியுள்ள சட்டச் சிக்கல், 1976-ஆம் ஆண்டில் கேரள மாநில அரசு vs கே.எஸ். ஜெயஸ்ரீ (State of Kerala v. KS Jayasree) வழக்கில் எழுந்தது. அதில், வருமான அளவுகோலுடன் கூடிய மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கை நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதேபோல், கே.சி. வசந்த குமார் & மற்றவர் vs கர்நாடக மாநில அரசு (K C Vasanth Kumar & Another v. State of Karnataka) (1986) வழக்கில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் குறிப்பிடும்போது, ஒரு பின்தங்கிய சமூகத்தில் உள்ள சலுகை பெற்றவர்கள் காலவரையின்றி சலுகைகளைத் தனியுரிமை ஆக்குவதைத் தடுப்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை நீட்டிக்க மாநில அரசு "தகுதிக்கான சோதனையை" (means test) அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. 


மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் இது குறித்த வாதத்தின் ஒரு பகுதியாகும். அந்த வாதத்தின்படி, இடஒதுக்கீடு கொள்கை சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு மற்றும் பின்தங்கிய நிலையை நிவர்த்தி செய்வதற்காக இருந்தாலும், இந்த பிரிவுகளில் மிகவும் விளிம்புநிலையில் உள்ளவர்கள்தான் பயனாளிகளாக இருக்க வேண்டும். மேலும், “தகுதியானவர்களை” அடையாளம் காண, பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை (creamy layer) விலக்குவதற்கு ஒரு பொருளாதார அளவுகோல் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்து முறையிடப்படும் ஒரு சூழலில்தான், முன்னேறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (Advanced BCs) இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கும் யோசனை உருவானது. இந்தக் கொள்கை, குறிப்பாக தென் மாநிலங்களில், 1960, 70 மற்றும் 80-ஆம் ஆண்டு காலகட்டத்தில்  மாநில அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்திரா சாஹ்னி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் இதேபோன்ற ஒரு வாதம் நீட்டிக்கப்பட்டது. இந்த வழக்கானது, 1989-ஆம் ஆண்டில் வி.பி. சிங் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மத்திய அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து கேள்வி எழுப்பியது. உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் 'வருமானத்தின் அடிப்படையிலான தகுதியை' அறிமுகப்படுத்துமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, க்ரீமி லேயர் (creamy layer) சிக்கலை ஆராய்வதற்காக மத்திய அரசு நீதிபதி ஆர். என். பிரசாத் ஆணையத்தை அமைத்தது. ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதிலிருந்து, க்ரீமி லேயரைக் கண்டறிந்து விலக்குவதற்கு இந்த ஆணையம் இரண்டு வழிகளைப் பரிந்துரைத்தது. உயரிய அரசியலமைப்புப் பதவிகளான குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள், 'குரூப் ஏ' (Group A) அதிகாரிகள், ராணுவப் படைப்பிரிவுத் தலைவர் மற்றும் அதற்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகள், சேவைகள்/வணிகம்/தொழில்துறையில் வெற்றிகரமான தொழில் வல்லுநர்கள், மற்றும் பெரிய சொத்து வைத்திருப்பவர்கள் போன்றோரை விலக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும், ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பங்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.


நீதிபதி பி.ஆர். கவாய் அவர்கள், தனது முந்தைய கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். அதாவது, பட்டியலினத்தவருக்கும் (SCs) 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவின் (creamy layer) விதி பொருந்த வேண்டும் என்று கூறினார். ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அனுபவம் என்ன காட்டுகிறது என்றால், 'கிரீமிலேயர்' என்கிற விதி காரணமாக முழுமையான 27 சதவீத இடஒதுக்கீட்டை நிரப்புவது கடினமாக உள்ளது. சமூகநீதி அமைச்சகத்தின்படி, கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 17 சதவீத மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. எனவே, 'கிரீமி லேயர்' விதியை  நீக்குவதற்குப் பதிலாக, முழு ஒதுக்கீட்டையும் நிரப்ப 'வறுமைக் குறியீட்டு (deprivation points) முறையைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த அணுகுமுறையாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


எழுத்தாளர், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர்.


Original Aticle: CJI Gavai bats for ‘creamy layer’ exclusion in SC reservation. But there’s a better solution.


Share: