உச்சநீதிமன்றம் காலப்போக்கில் ஆளுநரின் அதிகார எல்லைகளை எவ்வாறு வரையறுத்துள்ளது? -அமால் ஷேக்

1952 முதல் 2025 வரையிலான வழக்குகளின் காலவரிசை, உச்சநீதிமன்றம் ஆளுநரின் அதிகார வரம்புகளையும் அவர்கள் தங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலைகளையும் எவ்வாறு வரையறுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.


இந்தியாவில் ஆளுநர்கள் எவ்வளவு அதிகாரத்தையும் (gubernatorial power) விருப்புரிமையையும் பயன்படுத்தலாம் என்பது குறித்து உச்சநீதிமன்றம் தனது சமீபத்திய ஆலோசனைக் கருத்தை நவம்பர் 20-ஆம் தேதி தெரிவித்தது.


சமநிலை நடவடிக்கை என்ற பெயரில், உச்சநீதிமன்றம் “தானாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக்” (deemed assent) கருதுவதை முற்றிலும் நிராகரித்தது; ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பளித்தது. ஆனால் ஆளுநரின் முடிவின் உள்ளடக்கம் நீதித்துறை மறுஆய்வுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், நீடித்த மற்றும் விவரிக்கப்படாத தாமதத்தை ஆராய முடியும் என்று கூறியது.


ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கும் உள்ள அதிகாரங்கள் முறையே அரசியலமைப்பின் பிரிவுகள் 200 மற்றும் 201-லிருந்து வருகின்றன. பிரிவு 200-ன் படி கவர்னர் ஒரு மசோதாவிற்கு:


ஒப்புதல் அளிக்கலாம் (assent),


ஒப்புதலைத் நிறுத்தி வைக்கலாம் (withhold assent),


மசோதாவைத் திருப்பி அனுப்பலாம் (return the Bill) அல்லது


குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக மசோதாவை அனுப்பி வைக்கலாம் (reserve for the President). 


மேலும், “ஆளுநரின் கருத்துப்படி” அந்த மசோதா உயர்நீதிமன்றத்தின் அதிகாரங்களைப் பாதிக்கும் என்றால் கட்டாயம் அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப  வேண்டும். பிரிவு 201, ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு (President’s options) அனுப்பும்போது அவர் என்ன செய்ய முடியும்  என்பதை விளக்குகிறது.


காலப்போக்கில், அரசியலமைப்புச் சட்டம் சில விருப்புரிமையை அனுமதிக்கும் சூழல்களைத் தவிர, பிரிவு 163-ன் கீழ், ஆளுநர்கள் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் கூறியுள்ளன - இதற்கு பிரிவு 200 ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது ஆளுநர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய நபர்கள் இல்லை என்பதையும், ஒரு சில வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே விருப்புரிமையைப் பயன்படுத்த முடியும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.


காமேஷ்வர் சிங் வழக்கின் தீர்ப்பு: பிரிவு 200 மற்றும் 201-க்கான அடிப்படை விதிகள்


பிரிவுகள் 200 மற்றும் 201 தொடர்பான முதல் வழக்கு, மசோதாக்களைக் கையாளும் போது ஆளுநர் எவ்வாறு செயல்பட வேண்டும் நடைமுறை கட்டமைப்பை (procedural framework) உருவாக்கியது. 1952ஆம் ஆண்டு காமேஷ்வர் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் பீகார் நிலச் சீர்திருத்தச் சட்டத்திற்கு (Bihar Land Reforms Act) எதிரான சவால்களைக் கேட்டுக் கொண்டிருந்தது; இந்தச் சட்டம் ஜமீன்தாரி முறையை (zamindari system) ஒழித்து, நில உரிமைகளை (estates) மாநிலத்திற்கு மாற்றியது. பிரிவு 31(3)-ன் கீழ், இத்தகைய சட்டங்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக (President’s assent) அனுப்ப வேண்டும். நீதிமன்றம் முடிவுசெய்ய வேண்டிய கேள்வி, ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்குமுன் முதலில் ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பதுதான்.


ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்படும்போது: ஒப்புதல் அளிப்பது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பது போன்ற மூன்று வாய்ப்புகள் உள்ளன என்று நீதிமன்றம் விளக்கியது. ஆளுநர் ஒப்புதல் நிறுத்தி வைத்தால், சட்டமன்றம் விதிமுறையில் வழங்கப்பட்ட வழியைப் பயன்படுத்தாவிட்டால் மசோதா முடிவுக்குவரும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசியலமைப்பு செயல்முறை வடிவம் பெற்று வந்த நேரத்தில், பிரிவுகள் 200 மற்றும் 201-க்கான அடிப்படை விதிகளை இந்த வழக்கு அமைத்தது.


ஷம்ஷேர் சிங் வழக்கின் தீர்ப்பு:: ஆளுநரின் விருப்புரிமையை கட்டுப்படுத்துதல் (limiting Governor’s discretion)


1974-ஆம் ஆண்டு ஷம்ஷேர் சிங் வழக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. மனுதாரர்கள் முன்பு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதிட்டனர். அந்த தீர்ப்பில் பதவி நீக்க உத்தரவுகள் குடியரசுத் தலைவரின் அல்லது ஆளுநரின் “திருப்தி” (satisfaction) அடிப்படையில் மட்டுமே இருக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே, தங்கள் பதவி நீக்கத்திற்கு ஆளுநரின் தனிப்பட்ட திருப்தி (personal satisfaction) அவசியம் என்றும், அந்த தீர்ப்பு ஆளுநருக்கு முன் வைக்கப்பட வில்லை என்றும், ஆளுநரின் தனிப்பட்ட, பகிர்ந்தளிக்க முடியாத திருப்தி தேவைப்படுவதால் அவரது பெயரில் வெளியிடப்பட்ட உத்தரவு சட்டரீதியாக குறைபாடுடையது என்றும் எனவே தீர்ப்பு தவறானது என்றும் அவர்கள் வாதிட்டனர். உச்சநீதிமன்றம் அந்த யோசனையை நிராகரித்தது. அரசியலமைப்பு வேறுவிதமாகக் கூறாவிட்டால், அனைத்து விவகாரங்களிலும் ஆளுநர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்படுவார் என்று தீர்ப்பளித்தது.


அரசியலமைப்பின்ப்படி, ஒரு ஆளுநரின் "திருப்தி" என்பது அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விளக்கியது. ஆளுநரின் பெயரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அரசின் செயலாகும். அரசியலமைப்புச் சட்டம் அதைக் கூறாவிட்டால், எந்தவொரு செயல்பாடும் தனிப்பட்ட முடிவை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த தீர்ப்பு மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை தெளிவாக விவரித்தது மற்றும் ஆளுநர் இரண்டாவது நிர்வாக மையமாக செயல்படுவதைத் தடுக்கிறது.


சில விருப்புரிமைப் பகுதிகளை மட்டுமே (pockets of discretion) உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. அரசியலமைப்பில் ஆளுநரின் சில அதிகாரங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவை பிரிவு 356-ன் கீழ் அறிக்கையாக வெளியிடுதல், பிரிவு 200-ன் கீழ் சில மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்புதல் அல்லது சில மாநிலங்களில் "சிறப்புப் பொறுப்புகளை" கையாளுதல் போன்றவையாகும். மற்ற அதிகாரங்கள் மறைமுகமாக உள்ளன. அவை அமைச்சரவையின் நடுநிலை ஆலோசனை வழங்கமுடியாத சூழ்நிலைகளில் அல்லது அரசியலமைப்பு வழிகாட்டுதலை வழங்காத சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தெளிவான பெரும்பான்மை இல்லாதபோது யார் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்தல், ஆதரவை இழந்த அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்தல், அரசாங்கம் மறுத்தால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுதல் அல்லது ஒரு மசோதா பிற அரசியலமைப்பு விதிகளை பாதிக்கும் என்பதால் அது குடியரசுத்தலைவரிடம்  செல்ல வேண்டுமா என்று மதிப்பிடுவது செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.


2000-களின் முற்பகுதியில், இந்த நிலைப்பாடு ஒரு முடிவை எட்டியது. நபம் ரேபியா வழக்கின் தீர்ப்பில், ​​ஆளுநரின் ஒருதலைபட்ச நடவடிக்கை எச்சரிக்கையுடன் பார்க்கப்பட்டது.


நபம் ரேபியா வழக்கு: ஆளுநரின் அதிகார எல்லைகளை மீண்டும் உறுதிப்படுத்திய தீர்ப்பு (restating limits of Governor power)


2016-ஆம் ஆண்டு நபம் ரெபியா வழக்கு, ஆளுநரின் அதிகார வரம்புகளை மீண்டும் வலியுறுத்தும் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகும். இது 2015ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேச நெருக்கடியிலிருந்து வந்தது, அப்போது பல காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கிளர்ச்சி செய்து சபாநாயகர் மற்றும் முதல்வர் இருவரையும் பதவி நீக்கம் செய்ய முயன்றனர். ஆலோசனை இல்லாமல் செயல்பட்ட ஆளுநர், சட்டமன்றக் கூட்டத்தொடரை முன்னெடுத்துச் சென்று, சபாநாயகரை நீக்குவதற்கான தீர்மானம் உட்பட சட்டமன்ற செயல்பாடுகளை ஆணையிடும் செய்தியை வெளியிட்டார். தகுதி நீக்க மனுக்கள் நிலுவையில் இருந்தபோது இவை அனைத்தும் நடந்தன. சபாநாயகர் 14 அதிருப்தியாளர்களை தகுதி நீக்கம் செய்வதன் மூலம் பதிலளித்தார். ஆனால் துணை சபாநாயகர் இந்த முடிவை மாற்றினார். பின்னர், ஒரு தனி சட்டமன்றக் கூட்டத்தின் மூலம் சபாநாயகரை பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், உச்சநீதிமன்றம் இந்த நடவடிக்கைகளை அரசியலமைப்பின் கடுமையான மீறலாகக் கண்டது.


விருப்புரிமை அதிகாரங்களை கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அவையைக் கூட்டவோ, ஒத்திவைக்கவோ அல்லது கலைக்கவோ முடியும். அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மறுக்கும் குறுகிய வழக்குகளைத் தவிர, சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநருக்கு எந்த தன்னிச்சையான அதிகாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.


பிரிவு 175-ன் கீழ், ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றவோ அல்லது செய்திகளை அனுப்பவோ முடியும். அந்த செயல்முறைகளில் அமைச்சரின் ஆலோசனையை ஆளுநர் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஆளுநர் அவையின் அலுவல்களை வடிவமைக்கவோ அல்லது "மாநில சட்டமன்றத்தின் குறைதீர்ப்பாளராகச் செயல்படவோ" (act as the Ombudsman of the State Legislature) முடியாது.


10-வது அட்டவணையின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில், ஆளுநருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தகுதி நீக்க அதிகாரம் முழுமையாக சபாநாயகரிடமோ அல்லது சபாநாயகரின் அதிகாரம் மாற்றப்பட்ட நீதிமன்றத்திடமோ (tribunal) மட்டுமே உள்ளது. தகுதிநீக்கம் தொடர்பான விஷயங்களைக் கையாளவோ அல்லது முடிவெடுக்கவோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை நபம் ரேபியா தீர்ப்பு தெளிவாகக் கூறியது.


கெய்ஷாம் மேகச்சந்திர சிங், தமிழ்நாடு கவர்னர் & குடியரசுத் தலைவர் கேள்வி: காலக்கெடு விவகாரம் (question of timeline)


2020ஆம் ஆண்டு கெய்ஷாம் மேகசந்திர சிங் வழக்கில் காலக்கெடு பற்றிய பிரச்சினை எழுந்தது. தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க சபாநாயகர் அதிக நேரம் எடுத்துக்கொள்வது பற்றிய வழக்காக இருந்தது. உச்ச நீதிமன்றம் அதிகபட்ச வரம்பை மூன்று மாதங்கள் என நிர்ணயித்து, தாமதங்களை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறியது.


ஏப்ரல் 2025-ல், நீதிமன்ற விசாரணையின்போது, ​​ஆளுநர்கள் அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ், மற்ற பகுதிகளைப் போலவே, தங்கள் அதிகாரத்தில் வரம்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது. உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டது. நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியின் முடிவை சட்டவிரோதமானது என்று கூறி, ஆளுநர் செயல்பட வேண்டிய காலக்கெடுவை நிர்ணயித்தது.


இப்போது, ​​உச்சநீதிமன்றம் தனது குடியரசுத்தலைவர் குறிப்பு கருத்தில், இந்த ஒப்பீட்டை நிராகரித்தது. கெய்ஷாம் வழக்கில் சபாநாயகர் ஒரு நீதிபதியைப் போல செயல்படுவது சம்பந்தப்பட்டது என்று உச்சநீதிமன்றம் கூறியது. இது ஆளுநர் செய்வதிலிருந்து வேறுபட்டது. பிரிவு 200 என்பது ஆளுநரின் பங்கை குறிப்பிட்டுள்ளது. அதில் விருப்புரிமையும் (discretion) அடங்கும். ஆளுநருக்கு காலக்கெடுவை நிர்ணயிப்பது அல்லது "கருதப்பட்ட ஒப்புதலை" உருவாக்குவது அரசியலமைப்பை மீண்டும் எழுதுவதற்கு சமம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நீதிமன்றங்கள் நீண்ட தாமதங்களை கேள்வி கேட்கலாம். ஆனால், நீதிமன்றங்கள் கால அளவைக் கட்டுப்படுத்தவோ அல்லது அரசியலமைப்பில் உள்ள வழிமுறைகளை நீதித்துறை புதுமைகளால் (judicial innovations) மாற்றியமைக்கவோ முடியாது.


Original Article: How Supreme Court has defined contours of gubernatorial power, over the years?.


Share: