1950-ஆம் ஆண்டு சட்டத்தின் முதல் பயன்பாடாக, அசாம் மாநிலம் 5 நபர்களை 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடுகிறது: இந்தச் சட்டம் குறிப்பிடுவது என்ன? -சுக்ரிதா பருவா

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, குடியேறிகள் (அசாமில் இருந்து வெளியேற்றுதல்)-1950 சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார். அந்தச் சட்டம் என்ன சொல்கிறது, இத்தனை ஆண்டுகளாக அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது


மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு, 1950 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் (அசாமில் இருந்து வெளியேற்றம்) சட்டம் இந்த ஆண்டு பயன்படுத்தப்பட்டது. முதல் முறையாக, சோனித்பூர் மாவட்டத்தில் அதிகாரிகள் ஐந்து பேருக்கு தீர்ப்பாயத்தால் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த ஐந்து பேரும் 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டது.


கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. எனினும், அந்த ஐந்து பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர்கள் "தலைமறைவாக" இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது. இந்த நபர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அந்த ஐந்து பேர்,  நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆவர்.


அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பல மாதங்களாக 1950-ஆம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்த வலியுறுத்தி வருகிறார். ஜூன் மாதம், அவர் தனது அரசாங்கம் தற்போதுள்ள வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களை (Foreigners' Tribunals) இந்தப் பணிகளில் ஈடுபடுத்தாமல், மாவட்ட ஆணையர்களின் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் “வெளிநாட்டவர்களாக சந்தேகிக்கப்படுபவர்களை” வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்ப இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தும் என்று கூறினார்.


புலம்பெயர்ந்தோர் (அசாமிலிருந்து வெளியேற்றுதல்) சட்டம் அல்லது IEAA என்றால் என்ன?


நாடுகளுக்கிடையே பிரிவினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்து மக்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அசாம் அரசாங்கம் கொடுத்த அழுத்தத்தின் பேரில், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சட்டமே புலம்பெயர்ந்தோர் (அசாமிலிருந்து வெளியேற்றுதல்) சட்டம்  IEAA ஆகும். இது மார்ச் மாதம் 1-ஆம் தேதி  1950-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அப்போதே அந்தப் பகுதிக்குள் குடியேற்றம் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக இருந்தது. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போதும் பிரச்சனைத் தொடர்கிறது.


ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தை இயற்றியது. ஏனெனில், குடியுரிமை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறையாகும். மேலும், "விரும்பத்தகாத" புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவதற்கான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கியது. இந்தச் சட்டம் முதலில் விரும்பத்தகாத புலம்பெயர்ந்தோர் (அசாமில் இருந்து வெளியேற்றுதல்) சட்டம் என்றுகூட அழைக்கப்பட்டது.


பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட நிச்சயமற்ற சமூக-அரசியல் சூழ்நிலையில், இந்தச் சட்டம் புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண முயன்றது. மேலும், இது "தற்போது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள எந்தவொரு பகுதியிலும் உள்நாட்டுக் குழப்பங்கள் குறித்த அச்சம் காரணமாக இடம்பெயர்ந்த எந்தவொரு நபருக்கும் பொருந்தாது" என்றும் கூறியது.


மேலும், சட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ வந்தவரான  பொதுவாக இந்தியாவின் வெளியே வசித்து வந்த  எந்தவொரு நபரும் அசாமில் தங்குவது, “இந்தியாவின் பொது நலனுக்கோ அல்லது அதன் எந்தவொரு பிரிவினருக்கோ அல்லது அசாமில் உள்ள ஏதேனும் ஒரு பட்டியல் பழங்குடியினரின் நலன்களுக்கோ தீங்கு விளைவிப்பதாக” ஒன்றிய அரசு கருதினால் இந்தியாவிலிருந்தோ “குறிப்பிடப்பட்ட காலத்திற்குள், ஆணையில் குறிப்பிடப்பட்ட வழிமுறையைப் பயன்படுத்தி” வெளியேறும்படி உத்தரவிடலாம் என்று தெரிவிக்கிறது. 


ஒன்றிய அரசு அல்லது அசாம் மாநில அரசின் எந்தவொரு அதிகாரியும் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.


இந்தச் சட்டம் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டது?


இந்தச் சட்ட அமலாக்கம் குறுகிய காலமே நீடித்தது. வரலாற்றாசிரியர் அருப்ஜோதி சைகியா ‘The Quest for Modern Assam’ என்ற தனது புத்தகத்தில், இந்தச் சட்டம் இறுதி செய்யப்பட்ட அதே நேரத்தில், கீழ் அசாமின் சில பகுதிகளில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது என்றும், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த 40,000 முதல் 1 லட்சம் முஸ்லிம்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே, இந்தச் சட்டம் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பல வங்காள முஸ்லிம்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது என்றும் சைகியா குறிப்பிட்டிருந்தார். "அசாமின் ஒரு மேல் நகரத்தில் வசிக்கும் ஒரு வயதான நபரை, அவருக்கு ஒரு உத்தரவு வழங்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் அவரது வசிப்பிடத்தை விட்டு வெளியேறும்படி கேட்கப்பட்டபோது, ​​நேரு கோபமடைந்தார்” என்றும் எழுதியிருந்தார். 


இந்த ஒப்பந்தம், பிரதமர் நேரு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் இருவரும் இரு நாடுகளிலும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதே நேரத்தில் நடந்தது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி, பிரதமர் நேரு அவர்கள் அசாம் மாநில முதலமைச்சர் கோபிநாத் பர்தோலாய்க்கு கடிதம் எழுதினார். அதில், புலம்பெயர்ந்தவர்களை அசாமிலிருந்து வெளியேற்றுதல் சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஏனெனில், இரு நாட்டுப் பிரதமர்களின் விவாதங்களின் போது, பாகிஸ்தான் பிரதமர் இந்தச்  சட்டம் குறித்து  கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


"... அந்தச் சட்டத்தின் (IEAA) கீழ் இப்போது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வது மிகவும் புத்திசாலித்தனமற்றதாக இருக்கும். கிழக்கு, மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்துவதும், சிறுபான்மையினரிடமிருந்து அச்ச உணர்வை நீக்குவதும் நமது முக்கிய நோக்கமாகும். இதில் நாம் வெற்றிபெற முடியாவிட்டால், மற்ற எல்லா வகையான பிரச்சினைகளும் நம்மை மூழ்கடிக்கும்," என்று நேரு அசாம் முதலமைச்சர் பர்தோலாய்க்கு கடிதம் எழுதியிருந்தார். 


பல்வேறு அறிக்கைகளின்படி, புலம்பெயர்ந்தவர்கள் (அசாமில் இருந்து வெளியேற்றுதல்) சட்ட நடவடிக்கையால்  சில நூறு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் தெரிவிக்கின்றன.



Original Article: In first known use of 1950 Act, Assam orders 5 people to leave India within 24 hours: What is this law.


Share: