சுகாதாரப் பாதுகாப்பு (Health Security) மற்றும் தேசியப் பாதுகாப்பு மசோதாவானது (National Security Bill), மாநிலங்களுடன் வருவாயைப் பகிர்ந்துகொள்ளும் முறையை மாற்றுவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.
ஒன்றிய அரசு, பான் மசாலா துறை மீது 'சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு வரை' (Health Security and National Security (HSNS)) செஸ் என்ற புதிய கூடுதல் வரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது 'சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு செஸ் மசோதா, 2025' (National Security Cess Bill) மூலம் விதிக்கப்பட உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள இந்த மசோதாவின்படி, அடுத்த ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு வரி (GST Compensation Cess) படிப்படியாக நீக்கப்பட்ட பிறகு இந்த வரி வசூலிக்கப்பட உள்ளது.
ஒரு செஸ் (cess) என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வசூலிக்கப்படும் ஒரு வரி முறையாகும். அரசியலமைப்பின் 270-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வசூலிக்கப்படும் வருவாய் ஒரு "குறிப்பிட்ட நோக்கத்திற்காக" (specific purpose) வசூலிக்கப்படுகிறது. ஒரு மேல்வரி என்பது பொதுமக்களின் பொதுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வரியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சேவைக்கு பணம் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் கட்டணமாகவோ இருக்கலாம்.
மசோதாவின் பிரிவு 7-ன் படி, சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு வரி, "இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரச் செலவுகளுக்குப் பணம் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும். வரி செலுத்த வேண்டியவர், பான் மசாலா இயந்திரங்களின் உரிமையாளர், உடைமையாளர், இயக்குபவர் அல்லது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பான் மசாலா தயாரிப்பில் எந்த வகையிலும் ஈடுபட்டுள்ளவர்கள் என அனைவருக்கும் இந்த வரி பொருந்தும்.
இரண்டு நோக்கங்கள்
மேலோட்டமாகப் பார்க்கும்போது, சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு வரை' (Health Security and National Security (HSNS)) செஸ் வேறுவிதமாகத் தெரிகிறது. பொதுவாக, செஸ் வரிகள் தொடக்கக் கல்வி போன்ற ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக விதிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோக்கம் என்பது, அதன் மூலம் கிடைக்கும் முழு வருமானமும் (நிர்வாகச் செலவுகளைத் தவிர்த்து) அந்த நோக்கத்திற்காகவே செலவிடப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு செஸ் வரியின் மூலம், இந்த மசோதா தொடர்பில்லாத இரண்டு நோக்கங்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், அந்த இரண்டு நோக்கங்களுக்கும் வருவாயைப் பிரித்து ஒதுக்கீடு செய்யவும் இல்லை. விவரங்கள் எதுவும் தெளிவாக விளக்கப்படவில்லை. உதாரணமாக, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையேயான ஒதுக்கீடு 50:50-ஆக இருக்கலாம் அல்லது 20:80-ஆகவும் இருக்கலாம். இந்த மசோதா எந்தவொரு விகிதாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்வதற்கும், அது ஆண்டுதோறும் மாறுவதற்கும் போதுமான வாய்ப்பை வழங்குகிறது.
மிக முக்கியமாக, இந்த சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு வரி, பொதுவாக மாநில அரசாங்கங்களின் பொறுப்பில் உள்ள துறைகளுக்காகப் பணத்தை ஒதுக்கும் நடைமுறையைத் தொடர்கிறது. உதாரணமாக, முந்தைய கிருஷி கல்யாண் மற்றும் தூய்மை இந்தியா இயக்க மேல்வரிகள் முறையே விவசாயிகளின் நலன் மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டன. மேலும், இவ்விரண்டும் மாநில அரசாங்கங்களின் பிரத்யேக அதிகாரம் மற்றும் பொறுப்பின் கீழ் வருபவை. சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு மேல்வரியானது, மாநிலங்களின் பிரத்யேகப் பட்டியலில் உள்ள ஒரு துறையான பொது சுகாதாரத்திற்காகப் பகுதியளவு ஒதுக்கப்படுகிறது.
ஒன்றிய அரசு ஒருமுறை மேல்வரியை விதிக்கும் வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நிதி குழுவின் (Finance Commission (FC)) பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. அரசியலமைப்பில் உள்ள வடிவமைப்பின்படி (சரத்து 270), மேல்வரிப் பணம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பிரிக்கப்படும் நிதித் தொகுப்பிற்கு (divisible pool) வெளியே உள்ளது.
மாநிலப் பட்டியல் (State subject) விவகாரம்
மக்களவை விவாதங்களின்போது, நிதி அமைச்சர் சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு விவகாரம் என்றும், சுகாதார மற்றும் தேசியப் பாதுகாப்பு மேல்வரி வருவாய் மாநில அரசங்கங்களுடன் பகிரப்படும் என்றும் விளக்கினார். மேலும், சுகாதாரத்துடன் தொடர்புடைய வருவாய் மட்டுமே பகிரப்படும் என்பதால், முன்னரே குறிப்பிடப்பட்ட அந்த விகிதாச்சாரம் மாநில அரசாங்கங்களுக்கு மிகவும் முக்கியமானது.
இந்த வரி விதிப்பு தவிர்க்க முடியாதது என்ற நிலையில், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு வரியை ஒரு வழக்கமான வரியாக அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பாக இருந்திருக்காதா? ஆம், அப்படியானால் அந்தப் பணம் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிரப்படும் நிதிகளின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்குமான பங்கு, உள்ள நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி அமைந்திருக்கும். அந்தப் பணம் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படாததால், மாநிலங்கள் அந்தப் பணத்தைத் தாங்கள் விரும்பிய எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தியிருக்கலாம்.
இருப்பினும், மேல்வரி முறையைப் பின்பற்றுவதன் மூலம், நிதிக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றாமல் இருப்பதற்கான நெகிழ்வுத்தன்மை ஒன்றிய அரசுக்குக் கிடைக்கிறது. சுகாதார மற்றும் தேசியப் பாதுகாப்பு மேல்வரி, மத்திய அரசால் பிற்காலத்தில் அறிவிக்கப்படும் "நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு" நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் என்று அந்த மசோதா குறிப்பிடுகிறது. எனவே, அதிகாரப் பரவலாக்கமானது (devolution) ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதையும், குறிப்பிடப்பட்ட வேறு எந்த ஒரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதையும் சார்ந்திருக்கலாம்.
மாநில அரசாங்கங்களுக்கு இந்த மசோதா நிச்சயமற்றத் தன்மையையும், பாரபட்சமான நடத்தையைப் பற்றிய கவலையையும், கணிக்கமுடியாத நிதி வரவையும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப நிதியை செலவிடுவதில் குறைந்த சுதந்திரத்தையும் வழங்குகிறது.
கட்டுரையாளர், தேசிய இந்திய சட்டப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் ஆவார். இவருக்கு NLSIU-வின் ஐந்தாம் ஆண்டு மாணவரான சித்தாந்த் பெங்கோரியா உதவியுள்ளார்.
Original link:
A cess for two disparate ends is unconvincing.