பாலினம், மதம், சாதி, வர்க்கம் அல்லது இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தனிநபர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் விருப்பங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளையும் அரசியலமைப்புச் சட்ட வாக்குறுதிகளையும் இந்தியா கண்டுள்ளது. இருப்பினும், நீதி என்பது நீதிமன்ற உத்தரவுகள் மூலம் மட்டுமே எப்போதும் அனுபவிக்கப்படுவதில்லை. அது அன்றாட வாழ்விடங்களில்தான் வெளிப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளும், அரசியலமைப்பு உத்தரவாதங்களும் அன்றாட வாழ்விடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் திறம்பட வழங்கியுள்ளனவா? என்பது கேள்வியாக உள்ளது.
பாலின நீதி (Gender justice) என்பது அனைத்துப் பாலினத்தவருக்கும் சமத்துவம், கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். இது அனைவருக்கும் ஒரே மாதிரியான நடத்தையை வழங்குவது மட்டுமல்ல மாறாக, இது வெவ்வேறு பாலினத்தவர் எதிர்கொள்ளும் வரலாற்று மற்றும் சமூகப் பின்னடைவுகளை அங்கீகரித்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதையும் இது குறிக்கிறது. இந்த வகையில், சமமான நடத்தையில் கவனம் செலுத்தும் பாலின சமத்துவம், நியாயமான நடத்தையில் கவனம் செலுத்தும் பாலின நீதிநெறி, மற்றும் பெண்கள் தங்கள் வாழ்வின் மீது அதிகக் கட்டுப்பாட்டை வழங்கும் பெண்கள் அதிகாரம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து நீதியை நோக்கிய பாதைகளை உருவாக்குகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் பாலின நீதிக்கான அடித்தளத்தை அமைக்கிறது. இருப்பினும், வீடுகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களின் யதார்த்தம் இதைவிட மிகவும் சிக்கலானதாகவே உள்ளது. சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், பல குறிப்பிடத்தக்க சவால்கள் இன்னும் நீடிக்கின்றன.
பாலின நீதி குறித்து அரசியலமைப்பு என்ன கூறுகிறது?
அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. உதாரணமாக,
விதி 14 சட்டத்தின் முன் அனைவரும் சமத்துவத்தை உறுதி செய்கிறது.
விதி 15 பாலினத்தின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடை செய்கிறது.
விதி 15(3) பெண்களுக்கு சிறப்பு விதிகளை உருவாக்க அரசாங்கத்தை அனுமதிக்கிறது.
விதி 16 பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
விதி 21 வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்கிறது.
நீதிமன்றங்கள் விதி 21-ஐ தனியுரிமை, கண்ணியம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கியதாக விளக்கியுள்ளன.
கூடுதலாக, வழிகாட்டு நெறிமுறைகள் (Directive Principles), சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படாதவை என்றாலும், பாலின நீதியை மேம்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக,
விதி 39, ஆண் மற்றும் பெண் இருவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்யுமாறு மாநிலத்தை வழிநடத்துகிறது,
விதி 42, மகப்பேறு நலன்களுக்கு வழிவகை செய்கிறது,
விதி 51A(e) பெண்களின் கண்ணியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளைக் கைவிடுமாறு ஒவ்வொரு குடிமகனையும் கேட்டுக்கொள்கிறது.
இந்த முற்போக்கான அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பு இருந்தபோதிலும், காகிதத்தில் உள்ள சட்டங்களிலிருந்து அன்றாட யதார்த்தத்திற்குச் செல்லும் பயணம் இன்னும் நீண்டதாகவே உள்ளது. அது சீரற்றதாகவும் இருக்கிறது.
சமத்துவத்திற்கான போராட்டம் தொடர்கிறது
சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியா பாலின நீதியை நோக்கித் தெளிவான முன்னேற்றங்களை அடைந்துள்ளது. கிராமப் பஞ்சாயத்துகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கிய 73-வது அரசியலமைப்புத் திருத்தம், ஆரம்பகால முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். இராஜஸ்தான் மாநிலம் vs இந்திய ஒன்றியம்-1993 (State of Rajasthan vs Union of India) வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த மாற்றத்தை பங்கேற்பு ஜனநாயகத்தின் (participatory democracy) ஒரு மூலக்கல்லாக உறுதி செய்தது. இன்று, லட்சக்கணக்கான பெண்கள் உள்ளாட்சி நிர்வாகத்தில் பணியாற்றி, அவர்களின் இருப்பு சமூகங்களில் தலைமைத்துவத்தை மறுவடிவமைத்து மற்றும் மக்களின் குரல்கள் கேட்கப்படும் விதத்தையும் இது மாற்றுகிறது.
இருப்பினும், கிராமப் பகுதியைத் (village square) தாண்டிச் செல்லும்போது, சமத்துவம் குறைவாகவே உள்ளது. மாநில சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் தலைமைப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. 2023-ம் ஆண்டின் மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் (Women’s Reservation Act), இந்த அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவத்தை உறுதியளிக்கிறது. இருப்பினும், இந்தச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. அதுவரை, அதிகாரத்தின் உயரிய பதவிகள் பெரும்பாலும் எட்டாக்கனியாகவே இருக்கின்றன. பிரதிநிதித்துவம் ஒரு அரசியலமைப்பு உரிமை என்றாலும், சமத்துவத்திற்கான போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
மேலும், பணியிடங்களிலும் இதே போன்ற ஒரு முரண்பாடு எதிரொலிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் சம வாய்ப்புக்கும், சம வேலைக்கு சம ஊதியத்திற்கும் உத்தரவாதம் அளித்தாலும், இந்த வாக்குறுதிகளைப் பாதுகாத்து அமல்படுத்துவதற்காக நீதித்துறை பல முக்கியத் தீர்ப்புகளை வழங்க வேண்டியிருந்தது.
பாலின நீதி தொடர்பான சில முக்கியத் தீர்ப்புகள்
1980-களின் முற்பகுதியில், விமானப் பணிப்பெண்கள் திருமணம் செய்துகொள்ளவோ அல்லது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை. ஏர் இந்தியா vs நர்கேஷ் மிர்சா-1981 (Air India vs Nergesh Meerza) வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த பாகுபாடு காட்டும் விதிகளை அரசியலமைப்பிற்கு முரணானவை என்று கூறி ரத்து செய்து தீர்ப்பளித்தது.
பின்னர், மேக்கின்னன் மெக்கென்சி vs ஆட்ரி டி'கோஸ்டா-1987 (Mackinnon Mackenzie vs Audrey D’Costa) வழக்கில், பாலினத்தின் அடிப்படையில் ஒரே வேலைக்கு வழங்கப்படும் சமமற்ற ஊதியம் குறித்து நீதிமன்றம் விசாரித்து, சம ஊதியம் என்பது ஒரு நியாயமான கருத்து மட்டுமல்ல, அது ஒரு அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பு என்றும் கூறி தீர்ப்பளித்தது.
சமீபத்தில், பபிதா புனியா vs இந்திய யூனியன்-2020 (Babita Puniya vs Union of India) வழக்கில், பெண் இராணுவ அதிகாரிகள் நிரந்தரப் பணி நியமனம் மறுக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றத் தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. சமத்துவக் கொள்கை ஆயுதப் படைகளிலும் பொருந்தவேண்டும் என்பதை அது உறுதிப்படுத்தியது.
இந்தச் சட்டரீதியான தலையீடுகள் இருந்தபோதிலும், பெண்கள் பணியிடத்தில் கடுமையான சவால்களைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். இது குறிப்பாக முறைசாரா துறைகளில் பணிபுரியும் பெண்களுக்குப் பொருந்தும். பலர் சம ஊதியம், வேலைப் பாதுகாப்பு, மகப்பேறு சலுகைகள் அல்லது பாதுகாப்பு வலைகள் இல்லாமல் பணியாற்றுகின்றனர். பணியிடத்தில் பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட POSH சட்டம் 2013 கூட, நடைமுறையில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. இதன் விளைவாக, இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெண்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கு ஏற்ப மரியாதையும், உரிமைகளும், அங்கீகாரமும் இல்லை.
பாரம்பரியமே மேலோங்கி நிற்கிறதா?
மேலும், பாலின நீதிக்கான போராட்டம் நீதிமன்றங்களில் மட்டும் தொடங்குவதில்லை, அது வீட்டிலிருந்து தொடங்கி பொது இடங்களுக்கான அணுகல் வரை நீள்கிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், வீடும், அல்லது தனிப்பட்ட இடங்களும்கூட சமத்துவத்திற்கான போராட்டக் களமாகவே இருந்துள்ளன. பல ஆண்டுகளாக, மகள்களுக்கு அன்பு வழங்கப்பட்டது. ஆனால் நிலம் வழங்கப்படவில்லை. பரம்பரைச் சொத்து தந்தையிடமிருந்து மகனுக்குச் சென்றது, மகள்கள் ஓரங்கட்டப்பட்டனர்.
இது 1986-ல் மேரி ராய் என்பவர் நீதிமன்றத்திற்குச் சென்று, கிறிஸ்தவப் பெண்களுக்குச் சம சொத்துரிமையை மறுத்த கேரளாவின் பழைய விதிகளுக்கு எதிராகப் போராடியபோது இந்த நிலை மாறத் தொடங்கியது. இந்திய வாரிசுரிமைச் சட்டம்-1925 (Indian Succession Act), முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள இந்திய கிறிஸ்தவ சமூகத்திற்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, வினிதா சர்மா vs ராகேஷ் சர்மா-2020 (Vineeta Sharma vs Rakesh Sharma) வழக்கில், நீதிமன்றம் இந்த நிலைப்பாட்டை மேலும் தெளிவுபடுத்தியது. இந்த தீர்ப்பில், தந்தை உயிருடன் இல்லாவிட்டாலும், மகள்களும் மகன்களுக்குச் சமமான உரிமைகளைக் கொண்ட சம பங்குதாரர்கள் என்று தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பு அத்துடன் முடிந்துவிடவில்லை. பல குடும்பங்களில், இந்த அழுத்தமானது அமைதி, வழக்கம் அல்லது கடமை என்ற பெயரில், மகள்கள் தங்கள் சொத்துப் பங்கைக் கைவிடுமாறு இன்றும் வற்புறுத்தப்படுகிறார்கள். சட்டம் அவர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், அன்றாட நடைமுறைகள் மூலம் பாரம்பரியமே தொடர்ந்து உரக்கப் பேசுகிறது.
அரசியலமைப்பு உரிமைகளுக்கும் மதச் சடங்குகளுக்கும் இடையிலான இந்த முரண்பாடு வழிபாட்டுத் தலங்களிலும் காணப்படுகிறது. இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் vs கேரள அரசு-2018 (Indian Young Lawyers Association vs State of Kerala) வழக்கில், வயது வித்தியாசமின்றி பெண்கள் கேரளாவின் சபரிமலை கோவிலுக்குள் நுழையலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சமத்துவத்தை மறுக்க நம்பிக்கையை ஒரு காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
இதேபோல், ஜி. சுப்பிரமணியன் vs தமிழ்நாடு அரசு-2019 (G Subramanian vs State of Tamil Nadu) வழக்கில், பெண்கள் கோவில் அர்ச்சகர்களாவதைத் தடுத்த ஒரு விதியை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தத் தீர்ப்புகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறித்தாலும், போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தன. சட்டச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து சமூக மாற்றம் எப்போதும் நிகழ்வதில்லை என்பதை இது காட்டுகிறது. வீடு மற்றும் கோவிலுக்கு அப்பாலும்கூட, நிலைமை சிக்கலானதாகவே உள்ளது.
வன்முறை மற்றும் இனப்பெருக்க உரிமைகள்
பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் பாலின நீதி குறித்த கேள்வி மிகவும் அவசரமானதாகிறது. விஷாகா மற்றும் பலர் vs ராஜஸ்தான் அரசு-1997 (Vishaka and Ors. vs State of Rajasthan) வழக்கில், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க உச்சநீதிமன்றம் விஷாகா வழிகாட்டுதல்களை (Vishaka Guidelines) வகுத்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த சமூக சேவகியான பன்வாரி தேவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கிலிருந்து எழுந்த இது ஒரு வலுவான மற்றும் முக்கியமான நடவடிக்கையாகும்.
இந்த வழிகாட்டுதல்கள் பாலியல் துன்புறுத்தலை வரையறுத்து, நிறுவனங்கள்மீது மூன்று முக்கிய கடமைகளை விதித்தன. அவை தடை செய்தல் (prohibition), தடுத்தல் (prevention), தீர்வு காணுதல் (redress) ஆகும். பின்னர், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம்-2013 (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act) இந்த வழிகாட்டுதல்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியது.
பெண்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால் இனப்பெருக்க உரிமை (right to reproduction) ஆகும். சுசிதா ஸ்ரீவஸ்தவா vs சண்டிகர் நிர்வாகம்-2009 (Suchita Srivastava vs Chandigarh Administration) வழக்கில், ஒரு பெண்ணுக்குத் தன் சொந்த உடல் குறித்து முடிவெடுக்கும் உரிமை உண்டு என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியது. மேலும், மருத்துவக் கருக்கலைப்பு (திருத்தச்) சட்டம்-2021 (Medical Termination of Pregnancy (Amendment) Act), அதிக பெண்களுக்குப் பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உரிமையை வழங்கியது.
அரசியலமைப்புச் சட்டம் சுதந்திரம், கண்ணியம், உடல் மீதான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதால், இந்த உரிமைகள் வலுவான வேரூன்றிய கலாச்சார நெறிமுறைகளுடன் அடிக்கடி மோதுகின்றன. ஜோசப் ஷைன் vs இந்திய ஒன்றியம்-2018 (Joseph Shine vs Union of India) வழக்கில் இது தெளிவாகத் தெரிந்தது. அதில் நீதிமன்றம் பழைய விபச்சாரச் சட்டத்தை (old adultery law) ரத்து செய்து, ஒரு பெண் தன் கணவனின் சொத்து அல்ல என்பதை உறுதிப்படுத்தியது. இருப்பினும், திருமணத்திற்குள் ஒரு பெண்ணின் சம்மதம் அல்லது மறுப்புக்கு இன்னும் போதுமான முக்கியத்துவம் இல்லை. சட்டம் பல கதவுகளைத் திறந்துவிட்டது. ஆனால் எண்ணற்ற பெண்களுக்கு, நீதி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.
அன்றாட வாழ்வில் நீதி எவ்வாறு வெளிப்படுகிறது?
பாலினம், மதம், சாதி, வர்க்கம் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல், தனிநபர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் தேர்வுகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளையும் அரசியலமைப்பு வாக்குறுதிகளையும் இந்தியா கண்டுள்ளது. இருப்பினும், நீதி எப்போதும் நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அனுபவிக்கப்படுவதில்லை. அது அன்றாட வாழ்விடங்களான வீடுகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், பேருந்துகள், கோயில்கள் போன்ற இடங்களில் வெளிப்படுகிறது, அங்கு பல பெண்கள் தொடர்ந்து பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் தங்கள் குரலுக்காகத் தேடுகிறார்கள். சட்டம் வாக்குறுதியளிப்பதற்கும் வாழ்க்கை வழங்குவதற்கும் இடையிலான இந்த இடைவெளி சட்டபூர்வமானது மட்டுமல்ல, அது கலாச்சார, நிறுவன மற்றும் வலுவான தனிப்பட்ட தன்மையையும் கொண்டது.
சட்ட வெற்றிகளை அன்றாட நீதியாக மாற்ற, அமலாக்கத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது உதவும். POSH சட்டம், பரம்பரை பாதுகாப்புகள் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் போன்ற சட்டங்கள் கொள்கையை விட அதிகமாக தேவைப்படுகின்றன. அவற்றுக்கு வழக்கமான மேற்பார்வை, பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் பொறுப்புணர்வுக்கான தெளிவான வழிமுறைகள் தேவை.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள பெண்களிடையே சட்ட விழிப்புணர்வு, குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தொடர்பு மற்றும் அணுகக்கூடிய சட்ட உதவி மூலம் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில், உண்மையான மாற்றத்திற்கு சமூக மனப்பான்மைகளை மாற்றுவதும் அவசியம். பள்ளிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் பாலின நெறிமுறைகளுக்குச் சவால்விட உதவ முடியும். இது சமத்துவத்திற்கு ஒரு நீடித்த அடித்தளத்தை உருவாக்கும்.
பிரதிநிதித்துவம் என்பது வெறும் எண்ணிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தலைமைப் பதவிகளில் உள்ள பெண்கள் வெறும் ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்திருப்பதோடு மட்டுமல்லாமல், முடிவெடுப்பதில் உண்மையான அதிகாரமும் செல்வாக்கும் கொண்டிருக்க வேண்டும். பாலின நீதி ஏற்கனவே சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அடுத்த கட்டம், அதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவதாகும்.
அர்ச்சனா சிங், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தில் பாலினம் மற்றும் பொருளாதாரம் குறித்த உதவிப் பேராசிரியராக உள்ளார். புஷ்பேந்திர சிங், மும்பையில் உள்ள சோமையா வித்யவிஹார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியராக உள்ளார்.
Original link:
Why gender justice needs to be woven into the fabric of everyday life?