காப்பீடு மட்டுமல்ல, இந்தியர்களுக்கு உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பும் தேவை. -ரமா வி பாரு, விகாஷ் ஆர் கேஷ்ரி

பொதுச் செலவினங்களுக்கான (public spending) முக்கியத்துவம், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய அம்சமாகும். கிழக்கு ஆசிய மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில், சேவைகளை வழங்குவதில் தனியார் துறையின் பங்களிப்புடன் கூடிய வலுவான பொது அமைப்புகள் உள்ளன.


டிசம்பர் 12 உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (Universal Health Coverage (UHC)) தினமாகும். இந்த ஆண்டின் கருப்பொருள், "தாங்க முடியாத சுகாதாரச் செலவுகள்? நாம் இதனால் நோயுற்று விட்டோம்!" (Unaffordable health costs? We’re sick of it!) என்பதாகும். இது சுகாதாரப் பராமரிப்பின் அதிகரித்துவரும் நிதிச் சுமையால் ஏற்படும் பெருகிவரும் விரக்தியை எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினத்தைக் கடைப்பிடிக்கும்போது, ​​உலகளாவிய சுகாதாரக் காப்பீடு மற்றும் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிவது முக்கியம். உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு என்பது பரந்த நோக்கமுடையது. இது நோய்க்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்லாமல், தடுப்பு, மேம்பாடு, குணப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் நோய்த்தணிப்பு சேவைகள் உட்பட முழுமையான முதன்மை சுகாதாரப் பராமரிப்புக்கான நியாயமான அணுகலையும் உறுதி செய்கிறது.


உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பது, பல சர்வதேச உடன்படிக்கைகளில் எடுத்துரைக்கப்பட்டு, 1978-ம் ஆண்டு அல்மா-அட்டா பிரகடனத்தில் (Alma-Ata Declaration) உலக சுகாதார அமைப்பால் (World Health Organisation (WHO)) வலுப்படுத்தப்பட்ட, ஆரோக்கியத்திற்கான உலகளாவிய மனித உரிமையில் வேரூன்றியுள்ளது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் 2010-ம் ஆண்டு உலக சுகாதார அறிக்கை, நிதி சீர்திருத்தம் மற்றும் இடர் பாதுகாப்பு ஆகியவற்றை உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பிற்கான ஒரு வழியாக வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு குறித்த தீர்மானம் இந்த செயல்திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. பின்னர், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு நிலையான வளர்ச்சி இலக்குகளில் இணைக்கப்பட்டது.


நடைமுறையில், இந்தியா உட்பட பல நாடுகளில் சமீபத்திய சீர்திருத்தங்கள், முதன்மைப் பராமரிப்பு அணுகுமுறையை பலவீனப்படுத்தி, பொது சுகாதாரக் காப்பீடு மூலம் நிதிப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளன. இந்தத் திட்டங்கள் மருத்துவமனையில் சேர்வதற்கான செலவுகளை ஈடுசெய்வதில் கவனம் செலுத்துகின்றன. மேலும், அவை வெவ்வேறு நோய்களுக்கான தொகுப்புகளையும் வரையறுக்கின்றன. நோயாளிகள் பெரும்பாலும் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளது என்பதை சான்றுகள் காட்டுகின்றன. இத்தகைய செலவினங்கள், தொகுப்புகளால் ஈடுசெய்யப்படாத அல்லது போதுமான அளவு காப்பீடு செய்யப்படாமலோ அல்லது சேவை வழங்குநர்களால் காப்பீட்டு விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாலோ ஏற்படுகின்றன.


மாறாக, நன்கு நிதியளிக்கப்பட்ட பொது சுகாதார அமைப்புக்குள், வலுவான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு மையங்கள் முன்னுரிமையாகச் செயல்படும் வகையில் பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்படும்போது, ​​அதன் விளைவுகள் சிறப்பாக இருப்பதாகத் தெரிகிறது. பல கிழக்கு ஆசிய நாடுகள் காப்பீட்டு அணுகுமுறை மூலம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை ஏற்றுக்கொண்டன. ஆனால், காலப்போக்கில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பையும் வலுப்படுத்தியுள்ளன. வயதான மக்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் இத்தகைய மாற்றங்களை அவசியமாக்கியுள்ளன. சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் இப்போது ஏறக்குறைய அனைவருக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பு உள்ளது. இருப்பினும், இது அரசாங்கத்திற்கு மிகவும் செலவு மிக்கதாக இருந்துள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனா செலவுகளைக் கட்டுப்படுத்தவும், தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் பின்தொடர் பராமரிப்பில் கவனம் செலுத்தி, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பை வலுப்படுத்துவதில் முதலீடு செய்யவும் முடிவு செய்தது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விரிவான மக்கள் நலத் திட்டங்களில் முதலீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


பொதுச் செலவினங்களுக்கான அர்ப்பணிப்பு என்பது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு நிலைகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய அம்சமாகும். கிழக்கு ஆசிய மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில், சேவைகளை வழங்குவதில் தனியார் துறையின் பங்களிப்புடன் வலுவான பொது அமைப்புகள் உள்ளன. ஒரு வலுவான பொதுத் துறை, தரம் மற்றும் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் தனியார் துறையைக் கட்டுப்படுத்துவதில் ஒரு அரணாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த நாடுகளில், கொள்கைகளைத் தீர்மானிப்பதில் தனியார் துறைக்கு உள்ள செல்வாக்கு ஒரு தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.


இந்தியா சுதந்திரத்திற்குச் சற்று முன்பு போரே குழுவால் (Bhore Committee) பரிந்துரைக்கப்பட்டபடி, அனைவருக்கும் சுகாதார வசதி வழங்குவதில் இந்தியாவுக்கு ஒரு நீண்டகால அர்ப்பணிப்பு உள்ளது. ஒரு வலுவான ஆரம்ப சுகாதார அமைப்பு உருவாகும்வரை பொதுக் காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படக்கூடாது என்று அக்குழு அறிவுறுத்தியது. இருப்பினும், ஆரம்ப சுகாதாரத்திற்குத் தொடர்ச்சியாகப் போதிய நிதி ஒதுக்கப்படாததால், பொதுத் துறையின் சேவைகள் பலவீனமடைந்துள்ளன. இது தனியார் துறையைச் சார்ந்திருப்பதை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. தேசிய மாதிரி கணக்கெடுப்புத் தரவுகள் (National Sample Survey data), ஏழைகள் பெருகிவரும் விலை உயர்ந்த தனியார் சுகாதார சேவைகளைச் சார்ந்து இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இது குடும்பக் கடன்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.


தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (National Rural Health Mission(NRHM), இப்போது National Health Mission (NHM)) போன்ற முன்முயற்சிகள் இருந்தபோதிலும், சுகாதார அமைப்பில் பலவீனங்கள் இன்னும் உள்ளன. சில மாநிலங்கள் பொதுசுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சுகாதார சேவைகளுக்கான அணுகலில் உள்ள சமமற்ற நிலைகளையும், சிகிச்சையின் அதிகரித்துவரும் செலவுகளையும் குறைக்க முயன்றன. 2008-ல், ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா (Rashtriya Swasthya Bima Yojana) காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) திட்டம் தொடங்கப்பட்டது. இந்த முன்முயற்சிகளின் மூலம், இந்தத் திட்டங்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை ஒரு நீடித்த கவனமாக மாற்ற உதவியது.


கோவிட் பெருந்தொற்று, சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்தும், பல நாடுகளில் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு என்பதிலிருந்து அனைவருக்கும் சுகாதார சேவை என்ற நிலைக்கு மாற வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனத்தை ஈர்த்தது. பல சுகாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுகாதாரத்தின் சமூகத் தீர்மானிக்கும் காரணிகளில் பொது முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் இந்தியா இந்த வழியைப் பின்பற்றுவது அவசியமாகிறது.


பாரு, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் ஜிண்டால் பொது சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுப் பள்ளியின் பேராசிரியர் ஆவார். கேஷ்ரி, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் ஜிண்டால் பொது சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுப் பள்ளியின் இணைப் பேராசிரியராகவும், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள UNSW-யின் துணை மூத்த விரிவுரையாளராகவும் உள்ளார்.


Original link:

Not just insurance, Indians need universal healthcare


Share: