காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100% ஆக உயர்த்துவதற்கான மசோதாவை மக்களவையில் அரசு அறிமுகப்படுத்துகிறது.


Oபிரதமர் மோடி எப்போதும் சாதாரண மக்களுக்குக் காப்பீடு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும், கோவிட் பெருந்தொற்று காலத்திலும் அரசாங்கம் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் காப்பீட்டு வசதியை வழங்கியது என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (Foreign Direct Investment (FDI)) 100%-ஆக உயர்த்துவதற்கான மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.


நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிரப்பட்ட மசோதாவின்படி, சப்கா பீமா சப்கி ரக்ஷா (காப்பீட்டுச் சட்டங்கள் திருத்தம்) சட்டம், 2025, 1938-ஆம் ஆண்டு காப்பீட்டுச் சட்டம், 1956ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் மற்றும் 1999ஆம் ஆண்டு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் போன்ற சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.


காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100%-ஆக உயர்த்துவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ளது.


மசோதாவை அறிமுகப்படுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பொது மக்களின் காப்பீடு எப்போதும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தில் இருந்து வருகிறது. மேலும், கோவிட் தொற்றுநோய்களின் போதும் ஒன்றிய அரசு சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினருக்கு காப்பீட்டை வழங்கியுள்ளது” என்று கூறினார்.


எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலரின் ஆட்சேபனைகள் விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். மேலும், முன்மொழியப்பட்ட சட்டம் குறித்த விவாதத்தின்போது அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக இருப்பதாக என்று நிதியமைச்சர் கூறினார்.


இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதை எதிர்த்து, ஆர்.எஸ்.பி உறுப்பினர் என்.கே. பிரேமச்சந்திரன், "இந்த மசோதாவின் பெயருக்கும் அதன் உள்ளடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறினார். காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்ற முன்மொழிவையும் அவர் எதிர்த்தார்.


திமுக உறுப்பினர் டி. சுமதி அவர்களும், காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்த்தார். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சௌகதா ராய், "இந்த மசோதாவின் பெயர் ஆளும் கூட்டணியின் முழக்கங்களைப் போலத் தெரிகிறது என்றும் இதுபோன்ற பெயர்கள் எந்த மசோதாவிலும் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்று கூறினார். 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது காப்பீட்டுத் துறையில் ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.


மசோதாவின் வரைவின்படி, இந்தத் திருத்தம் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும், தலைவர், நிர்வாக இயக்குநர் அல்லது தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.


இது காப்பீட்டு அல்லாத ஒரு நிறுவனத்தை காப்பீட்டு நிறுவனத்துடன் இணைப்பதற்கும் வழிவகுக்கிறது. இந்த மசோதா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12, 2025) அன்று ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது. குறிக்கோள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையின்படி, காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துவதையும், பாலிசிதாரர்களின் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்வதையும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த மசோதா, காப்பீட்டுதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக காப்பீட்டுதாரர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியை உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது. இது காப்பீட்டு நிறுவனங்கள், இடைத்தரகர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்குவதுடன், ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் மற்றும் இந்தத் துறை மீதான ஒழுங்குமுறை மேற்பார்வையை மேம்படுத்தும்.


தலைவர் மற்றும் பிற முழுநேர உறுப்பினர்களின் பதவிக்காலத்தைப் பொறுத்தவரை, ஐந்து ஆண்டுகள் அல்லது அவர்களுக்கு 65 வயது ஆகும் வரை, இவற்றில் எது முன்னர் நடைபெற்றாலும் அதுவரை பதவியில் இருக்கலாம் என்று இந்த மசோதா வழிவகை செய்கிறது. தற்போது, ​​முழுநேர உறுப்பினர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 62 ஆண்டுகளாகவும், தலைவருக்கு 65 ஆண்டுகளாகவும் உள்ளது. நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், புதிய தலைமுறை நிதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, காப்பீட்டுத் துறையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை தற்போதுள்ள 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தார்.


இதுவரை, காப்பீட்டுத் துறை ரூ.82,000 கோடியை அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் ஈர்த்துள்ளது. LIC சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், கிளை விரிவாக்கம் மற்றும் ஆட்சேர்ப்பு போன்ற செயல்பாட்டு முடிவுகளை எடுக்க அதன் வாரியத்திற்கு அதிகாரம் அளிக்க முன்மொழிகின்றன.

முன்மொழியப்பட்ட திருத்தம், முதன்மையாக காப்பீட்டுதாரர்களின் நலன் மற்றும் அவர்களின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துதல், காப்பீட்டு சந்தையில் கூடுதல் பங்குதாரர்கள் நுழைவதை எளிதாக்குதல், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Original link:

Government introduces Bill in Lok Sabha to hike FDI in insurance sector to 100%


Share: