2013-ஆம் ஆண்டு ஒரு மாலையில், 20 வயதான ஹரிஷ் ராணா தனது தங்கும் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இந்த விபத்தால் அவர் படுத்த படுக்கையானதுடன், உயிர்காக்கும் குழாய்களின் உதவியுடனேயே வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் Persistent Vegetative State (PVS) எனப்படும் 'நீடித்த உணர்வற்ற நிலையில்' இருந்ததால், சுற்றியுள்ள எதற்கும் எதிர்வினையாற்ற முடியாமல் போனது; அவரது பெற்றோரே அவரை கவனித்து வந்தனர். எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஒரு இளைஞன் இப்படிப் பல ஆண்டுகள் உணர்வற்ற நிலையில் இருப்பதைப் பார்ப்பது அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மிகுந்த வேதனையை அளித்தது. சுமார் 13 ஆண்டுகள் பெற்றோரும் மருத்துவர்களும் போராடியும் அவரது நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நம்பிக்கையற்ற சூழலில், இயற்கையான முறையில் அவரது உயிர் பிரிவதற்காக, அவருக்கு அளிக்கப்படும் செயற்கை உயிர்காக்கும் சிகிச்சைகளை நிறுத்த அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்சநீதிமன்றத்தை அணுகினர். இது, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன்கீழ் (Article 21) 'வாழ்க்கை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன' என்ற மிக முக்கியமான விவாதத்தை நாடு முழுவதும் உருவாக்கியது.
ஒரு கண்ணியமான மரணம்
அரசியலமைப்பின் ‘கண்ணியத்துடன் வாழும் உரிமை’ (Right to Life with dignity) என்ற கருத்து முதன்முதலில் கியான் கவுர் Vs பஞ்சாப் அரசு (Gian Kaur vs State of Punjab) என்ற வழக்கில் விளக்கப்பட்டது. இந்த வழக்கில், இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவில் உள்ள 'வாழ்க்கை' (Life) என்ற சொல், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையையும் உள்ளடக்கியது என்று உச்சநீதிமன்றம் கூறியது. இருப்பினும், இதே 21-வது பிரிவு இறப்பதற்கான உரிமையை (Right to die) உள்ளடக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இதேபோன்ற ஒரு விவகாரம் அருணா ஷான்பாக் வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அருணா ஷான்பாக் ஒரு இளம் செவிலியர், அவர் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை பதிப்புக்குப் பிறகு, பல ஆண்டுகளாக சுயநினைவற்ற நிலையில் (Persistent Vegetative State (PVS)) மருத்துவமனையில் இருந்தார். பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான பிங்கி விரானி, அருணாவின் தோழியாக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், அருணாவுக்கு அளிக்கப்பட்டு வரும் செயற்கை உயிர் காக்கும் சிகிச்சைகளைத் திரும்பப் பெற அனுமதி கோரினார். அந்த நேரத்தில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போதிலும், இந்த வழக்கு 'அருணா ஷான்பாக் vs இந்திய ஒன்றியம்' (Aruna R. Shanbaug vs Union of India)என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புக்கு வழிவகுத்தது. இந்தத் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் பிற நாடுகளின் சட்ட நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு, நீண்டகாலம் பயனற்ற சிகிச்சையில் இருப்பவர்களுக்கு 'மறைமுகக் கருணைக் கொலை' (Passive Euthanasia) அனுமதிக்கப்படலாம் என்று அங்கீகரித்தது. இது தொடர்பாக நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும் வரை, இத்தகைய வழக்குகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் வெளியிட்டது. கூடுதலாக, இந்திய சட்ட ஆணையம் (Law Commission of India (LCI)) 2006 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் இது குறித்து ஆய்வு செய்து விரிவான கருத்துக்களை வழங்கியது. ஒரு நோயாளியின் நலனைக் கருதி, குணப்படுத்த முடியாத நிலையில் உள்ள அவருக்கு வழங்கப்பட்டுவரும் உயிர் காக்கும் சிகிச்சைகளை நிறுத்துவது குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருதப்படக் கூடாது என்று அந்த ஆணையம் குறிப்பிட்டது.
2018-ஆம் ஆண்டு 'பொது நோக்கம் vs இந்திய ஒன்றியம்' (Common Cause vs Union of India) இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின் மூலம் இந்த விவகாரத்தில் மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. சட்டரீதியான புரிதல்களின் அடிப்படையில், மருத்துவ சிகிச்சையைத் தொடர மறுப்பது அல்லது இடையில் நிறுத்துவது என்பது அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் (Article 21) வரும் ஒரு உரிமை என்பதை நீதிமன்றம் தெளிவாக அங்கீகரித்தது. ஒரு நபர் தனக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை மறுப்பதற்கான உரிமை என்பது அவருடைய கண்ணியத்தின் ஒரு பகுதி என்றும்; அது தனிமனித ரகசியம், தன்னிச்சை மற்றும் சுயமுடிவு எடுக்கும் உரிமையோடு நெருங்கிய தொடர்புடையது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்காக சில விரிவான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டன, அவை பின்னர் 2023-ஆம் ஆண்டு மற்றொரு தீர்ப்பின்மூலம் திருத்தப்பட்டன. இவை அனைத்தும் இணைந்து "பொதுநோக்கு வழிகாட்டுதல்கள்" (Common Cause guidelines) என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டு முக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை: முதலாவதாக, சம்பந்தப்பட்ட நடவடிக்கை "மருத்துவ சிகிச்சை" என்ற வரம்பிற்குள் வரவேண்டும்; இரண்டாவதாக, சிகிச்சையை நிறுத்துவது என்பது கண்டிப்பாக அந்த நோயாளியின் "நலனை" மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிகளிஞ்ச தவறான பயன்பாட்டைத் தடுக்க உச்சநீதிமன்றம் பல பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியதுடன், இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மருத்துவக் குழுக்களின் ஆலோசனைகளைப் பெறுவதை அவசியமாக்கும் விரிவான நடைமுறையையும் வகுத்துள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக முறையான சட்டம் ஏதும் இல்லாததை நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியதுடன், நாடாளுமன்றம் இதில் தலையிட்டுத் தீர்வு காணும் என்ற தனது "ஆழந்த நம்பிக்கையை" ஒரு நீதிபதி வெளிப்படுத்தினார். இருப்பினும், அந்த நம்பிக்கை இன்றுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
வழக்கு மதிப்பீடு
இந்திய உச்சநீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு ஹரிஷ் ராணா வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில், கருணைக்கொலை (Passive Euthanasia) குறித்த 'காமன் காஸ்' (Common Cause) வழிகாட்டுதல்களின்கீழ், ராணாவுக்கு வழங்கப்பட்டு வந்த உயிர்காக்கும் சிகிச்சைகளைத் திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர் உயிர்வாழ மருத்துவம் சார்ந்த ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றம் (Clinically Assisted Nutrition and Hydration (CANH)) முறையைச் சார்ந்திருந்ததால், அத்தகைய முறையை ஒரு 'மருத்துவ சிகிச்சை' எனக் கருத முடியுமா என்று நீதிமன்றம் முதலில் ஆராய்ந்தது. இத்தகைய சிகிச்சைக்குத் தகுந்த மருத்துவக் கண்காணிப்பு, முறையான மதிப்பீடு மற்றும் அவசரகால மேலாண்மை போன்றவை அவசியம் என்பதால், உயிர்வாழ மருத்துவம் சார்ந்த ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றம் (CANH) என்பது நிச்சயமாக ஒரு மருத்துவ சிகிச்சையே என்று நீதிமன்றம் உறுதிபடுத்தியது. தொடர்ந்து, இந்தச் சிகிச்சையை நிறுத்துவது ராணாவின் நலனுக்கு ஏற்றதா என்று நீதிமன்றம் பரிசீலித்தது. 'சிறந்த நலன்' என்பது நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவக் குழுவினரின் பார்வையில் இருந்து புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது. மேலும், ஒரு நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் கடமை, அந்தச் சிகிச்சையினால் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும்வரை மட்டுமே தொடரும் என்றும் குணமடைய வாய்ப்பே இல்லாத நிலையில், சிகிச்சையைத் தொடர்வது பயனின்றி வெறும் உடல்ரீதியான இருப்பை மட்டுமே நீட்டிக்கும் என்று கருதிய நீதிமன்றம், சிகிச்சையைத் திரும்பப் பெறுவதே ராணாவின் நலனுக்கு ஏற்றதுதான் எனத் தீர்ப்பளித்தது.
ஒரு தீர்க்கமான முடிவு
"இந்த மரண உறக்கத்தில் நாம் என்ன மாதிரியான கனவுகளைக் காண்போமோ—இந்த உலக வாழ்க்கையெனும் சிக்கல்களைவிட்டு நாம் பிரிந்த பிறகு—என்ற எண்ணமே நம்மைத் தயங்க வைக்கிறது." மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மையே மனிதனைத் தயங்க வைக்கிறது என்று கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர் (The Bard) தனது வரிகளில் குறிப்பிடுகிறார். இருப்பினும், மறைந்தவர்கள் மற்றவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் மூலமாகத் தொடர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி. ஹரிஷ் ராணா விரைவில் இயற்கை எய்தக்கூடும், ஆனால் அவரது பங்களிப்புகள் வரலாற்றிலும் நமது அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்கின்றனர்.
எனவே, அரசியலமைப்பு ஒழுக்கத்தை (Constitutional morality) மேம்படுத்துவது என்பது ஒட்டுமொத்த நாட்டிற்காக இயற்றப்படும் சட்டங்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மிகவும் சிறிய மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாத சிறுபான்மையினரை மட்டுமே பாதிக்கும் சிக்கலாக இருந்தாலும், மனிதநேயத்தைப் பாதுகாக்கும் வகையில் அந்த கடினமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பது அரசியலமைப்பு ஒழுக்கத்தை நிலைநாட்டுவதாகக் கருதப்படுகிறது.
சாத்விக் வர்மா, புது தில்லியில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞர் ஆவார். இந்த உரை வழக்கறிஞர் சாந்தனு பர்மரின் கருத்துக்களையும் உள்ளடக்கியது ஆகும்.
Original Link: On the right to die with dignity