அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சொத்து பரிமாற்றங்களை முன்மொழியப்பட்ட சட்டம் எவ்வாறு முறைப்படுத்தும்? இது என்னென்ன கவலைகளை ஏற்படுத்தியுள்ளது?
ராஜஸ்தான் சட்டசபை, மார்ச் மாதம் 6-ஆம் தேதி 'ராஜஸ்தான் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அசையா சொத்துக்கள் பரிமாற்றத் தடைச் சட்டத்தை' (Rajasthan Prohibition of Transfer of Immovable Property in Disturbed Areas Bill) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. அரசாங்கத்தால் "பதற்றமானவை" என அறிவிக்கப்படும் பகுதிகளில் நடக்கும் சொத்து விற்பனை மற்றும் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சட்டம் அரசியலமைப்புரீதியாக செல்லுபடியாகுமா என்பது குறித்தும், இது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதா மற்றும் இதனால் ஏற்படக்கூடிய சமூக-பொருளாதார பாதிப்புகள் குறித்தும் பல விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த மசோதா எதை முன்மொழிகிறது?
முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தின்கீழ், பிரிவு 3(1,2)-ன்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் வகுப்புவாத வன்முறை, கலவரங்கள் அல்லது பொது அமைதிக்குக் இடையூறு விளைவிக்கும் செயல்கள் நடக்கின்றன அல்லது நடக்கக்கூடும் என்று மாநில அரசு கருதினால், அந்தப் பகுதியை "பாதிக்கப்பட்ட பகுதி" (Disturbed Area) என்று அறிவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரிவு 5(1,2)-ன்படி, ஒரு பகுதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபிறகு, அங்குள்ள நிலம், வீடு அல்லது வணிகக் கட்டிடங்கள் போன்ற அசையா சொத்துக்களை மாற்றவோ அல்லது விற்கவோ மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெறுவது அவசியமாகும். விற்பனை, தானம் (Gift), பரிமாற்றம் (Exchange), குத்தகை (Lease) மற்றும் அது போன்ற அனைத்து வகையான சொத்து மாற்றங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்கின்றனர். இத்தகைய அனுமதியின்றி செய்யப்படும் சொத்து பரிமாற்றங்கள் சட்டப்படி செல்லாததாகக் கருதப்படும் என்றும் ஒரு சொத்து மாற்றமானது தன்னிச்சையாகவும் உண்மையாகவும் நடக்கிறதா, அல்லது யாரேனும் கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ அல்லது வேறு வழியின்றி அவசர கதியில் விற்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய விசாரணை நடத்த பிரிவு 7-ன்கீழ் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 9-ன்கீழ், முறையான அனுமதியின்றி சொத்துக்களை மாற்றினால் அதற்குரிய அபராதங்களை சட்டம் விதிக்கிறது. இத்தகைய முக்கியமான பகுதிகளில் குடியிருப்பவர்கள் வலுக்கட்டாயமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வெளியேற்றப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க சட்டப்பிரிவு 10-ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை மீறுவது (சட்டப்பிரிவு 12) பிணையில் வரமுடியாத மற்றும் பிடியாணை இன்றி காவல்துறையினரே நேரடியாகக் கைது செய்யக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி மாதிரி எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?
ராஜஸ்தான் மசோதாவானது குஜராத் பாதிக்கப்பட்ட பகுதிகள் சட்டத்தைப் (Gujarat Disturbed Areas Act) போன்றதாகும். அகமதாபாத்தில் ஏற்பட்ட கடுமையான வகுப்புவாதக் கலவரங்களைத் தொடர்ந்து, 1986-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலமாக இந்த நடைமுறை முதலில் தொடங்கியதாகவும், பின்னர் 1991-ஆம் ஆண்டில் ஒரு முறையான சட்டமாக இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அகமதாபாத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் அடிக்கடி நடந்த வகுப்புவாத கலவரங்களுக்குப் பிறகு, சிறுபான்மையினர் தங்களது சொத்துக்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தைத் தடுப்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இத்தகைய கலவரங்கள் பெரும்பாலும் அவர்களைத் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறச் செய்தன. பின்னர், 2020-ஆம் ஆண்டில் சட்டத்திருத்தங்கள் மூலம் இந்தச் சட்டமானது மேலும் வலுப்படுத்தப்பட்டது. இருப்பினும், குறிப்பிட்ட பகுதிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குச் சொந்தமான இடமாக அடையாளம் காணப்படும்போது, வெவ்வேறு சமூகத்தினருக்கு இடையே நடக்கும் சொத்துப் பரிமாற்றங்களை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணிப்பதால், அத்தகைய விற்பனைகள் அல்லது பரிமாற்றங்கள் செய்வது மிகவும் சிக்கலாகிறது.
அகமதாபாத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானோர் மேற்கு அகமதாபாத்தின் மிகப்பெரிய முஸ்லிம் குடியிருப்புப் பகுதியாக (Ghetto) கருதப்படும் ஜுஹாபுரா பகுதியில் வசிக்கின்றனர். இது அந்தச் சமூகத்தினர் நகரின் மற்ற பகுதிகளில் பரவலாக வசிப்பதைத் தடுப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், சொத்துக்களைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதைத் தடுக்கவும், குறிப்பிட்ட சமூகத்தினர் ஒரே இடத்தில் ஒடுக்கப்படுவதைத் தவிர்க்கவும் தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இது நகர்ப்புறங்களில் மதரீதியான பிரிவினையை அதிகப்படுத்தி, எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியுள்ளது. 2020-ஆம் ஆண்டு திருத்தங்களைப் பற்றி விவாதிக்கும்போது, அப்போதைய முதலமைச்சர் விஜய் ரூபானி, இந்துக்களும் முஸ்லிம்களும் அவரவர் பகுதிகளிலேயே தங்கியிருப்பதை உறுதி செய்வதும், அவர்களுக்கு இடையே சொத்து பரிமாற்றம் நடப்பதைத் தடுப்பதுமே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.
சட்ட மற்றும் அரசியலமைப்புரீதியான தாக்கங்கள் என்ன?
இந்திய அரசியலமைப்பின் 1978-ஆம் ஆண்டு 44-வது திருத்தத்தின் மூலம் சொத்துரிமை ஒரு அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட போதிலும், அது இன்னும் அரசியலமைப்பின் பிரிவு 300A-ன்கீழ் பாதுகாக்கப்படுகிறது. சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் ஒருவருடைய சொத்தை அவரிடமிருந்து பறிக்க முடியாது என்று இப்பிரிவு கூறுகிறது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமானது, "பாதிக்கப்பட்ட பகுதிகள்" என அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை கைமாற்றுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையானது ஒரு சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்குகிறது.
இந்த மசோதா, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 (Article 14) குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. ஒரு சட்டம் குறிப்பிட்ட பகுதிகளை அல்லது சமூகங்களை மட்டும் மற்றவர்களைவிட அதிகமாகப் பாதிக்கும் பட்சத்தில், அது முறையற்ற வகைப்பாடு அல்லது பாகுபாடு காட்டுவதாகக் கருதி சட்டரீதியாகக் கேள்விக்கு உட்படுத்தப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகள் என்னென்ன?
இந்த மசோதாவில் மதரீதியான பாகுபாடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு சொத்து மாற்றத்திற்கும் மாவட்ட அதிகாரிகளின் அனுமதி தேவைப்படுவதால், வணிக நில பரிமாற்றங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், "பாதிக்கப்பட்ட பகுதி" அல்லது "மக்கள்தொகை சமநிலையின்மை" (demographic imbalance) போன்ற தெளிவற்ற சொற்கள், அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கக்கூடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஒரு பகுதியைத் தன்னிச்சையாக "பாதிக்கப்பட்ட பகுதி" என அறிவிப்பது, குறிப்பிட்ட சமூகத்தினர் தனிமைப்படுத்தப்படுவது, அரசு சேவைகளில் பாகுபாடு மற்றும் பிரதிநிதித்துவத்தில் குளறுபடிகள் ஏற்படுவது குறித்த சிக்கல்களும் எழுந்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இந்தக் கொள்கை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, குடியிருப்புரீதியான பிரிவினையை அதிகாரப்பூர்வமாக்கி, மத ரீதியிலான பிரிவினைகளை அதிகரிக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சாயி பாண்டே, அரசியல், நடப்பு நிகழ்வுகள், சர்வதேச உறவுகள் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி எழுதி வரும் ஒரு சுதந்திர எழுத்தாளர் ஆவார்.
Original Link: Why is Rajasthan’s property Bill drawing scrutiny?