‘வங்கிச் செயல்பாடுகளை நிலைகுலையச் செய்யும்’: மோசடியானவை என அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த நேரடி விசாரணை கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏன் நிராகரித்தது? -அமால் ஷேக்

வங்கிக் கணக்குகளை "மோசடி" என வகைப்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனம் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முடியாதபடி தடைப்பட்டியலில் சேர்க்கப்பட வழிவகுக்கும். இந்த விஷயத்தில், நீதி மற்றும் வங்கி நடைமுறைகளை உறுதி செய்து, கடன் வாங்குபவர்களின் உரிமைகள் குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கீழே குறிப்பிட்டுள்ளது.


ஒரு வங்கி ஒரு கடன் கணக்கை 'மோசடி' என்று முத்திரை குத்தினால், அது கடன் வாங்கியவரின் கடன் பெறும் வாய்ப்பைத் துண்டித்து, குற்றவியல் விசாரணைக்கு உள்ளாக நேரிடும். எதிர்கால நிதிப் பரிவர்த்தனைகளையும் பாதிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, ஒரு கடன் கணக்கை மோசடியானது என்று வகைப்படுத்துவதற்கு முன்பு, கடன் வாங்கியவருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்த நடைமுறைச் சிக்கலை உச்சநீதிமன்றம் இந்த வாரம் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின் மூலம்  தீர்த்து வைத்துள்ளது.


நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இயற்கை நீதி கொள்கைகளின்படி நேரில் வந்து விளக்கம் அளிப்பது அவசியமில்லை என்றும் அப்படிச் செய்வது வங்கிச் செயல்பாடுகளை நிலைகுலையச் செய்யும்" என்று கூறியது. மாறாக, கடன் வாங்கியவருக்கு இது தொடர்பாக ஒரு நோட்டீஸ் வழங்குவது, அதற்கு அவர் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க வாய்ப்பளிப்பது மற்றும் முறையான காரணங்களைக் கூறி முடிவெடுப்பது ஆகியவையே போதுமானவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த "மோசடி" வகைப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், இது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற முடியாதபடி ஒருவரைத் தடைப்பட்டியலில் (Blacklisting) சேர்த்துவிடும் என்கின்றனர்.


இந்த விவகாரம் எவ்வாறு நீதிமன்றத்தின்  கவனத்திற்குச் சென்றது?


தற்போதுள்ள இந்த வழக்கு இரண்டு விதமான உண்மைகளின்  அடிப்படையில் எழுந்துள்ளது.


கடன் வாங்கிய நிறுவனமான அமித் அயர்ன் பிரைவேட் லிமிடெட், பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) ஒரு கணக்கைக் கொண்டிருந்தது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் காரணமாக, ஆகஸ்ட் மாதம் 2019-ஆம் ஆண்டில் அந்தக் கணக்கு வராக்கடன் (Non-Performing Asset (NPA)) என அறிவிக்கப்பட்டது.. டிசம்பர்  மாதம் 2023-ஆம் ஆண்டுக்குள், கடன் ஆவணங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை மீறியது மற்றும் நிதி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டது" ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் வங்கி அந்த நிறுவனத்திற்கு ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியது.


கடன் வாங்கியவர் எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்து எழுத்துப்பூர்வமாகப் பதில் சமர்ப்பித்த பிறகு, வங்கியானது, மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டில், “இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட ஒரு தெளிவான உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறி, அந்தக் கணக்கை மோசடியானது என வகைப்படுத்தியது.


மேலும், அந்தக் கணக்கு வகைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, கடன் வாங்கியவருக்கு ஒரு “தனிப்பட்ட விசாரணை” மற்றும் முழுமையான தடயவியல் தணிக்கை அறிக்கையை அவர்களிடம் வழங்கியிருக்க வேண்டும் என்றும் கல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


லில்லிபுட் கிட்ஸ்வேர் லிமிடெட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, பேங்க் ஆஃப் இந்தியாவில் கடன் வாங்கியவரின் கணக்கு மார்ச் மாதம் 2012-ஆம் ஆண்டில் கணக்கு வாராக்கடனாக (non-performing asset (NPA)) மாறியது. ஆகஸ்ட் மாதம் 2023-ஆம் ஆண்டு மற்றும் ஜனவரி மாதம் 2024-ஆம் ஆண்டில் விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. நிறுவனத்தின் பதிலைப் பரிசீலித்த பிறகு, மே மாதம்  2025-ஆம் ஆண்டில் வங்கி அந்தக் கணக்கை மோசடி என அறிவித்தது.


தனிப்பட்ட விசாரணை தேவை என்றும், தணிக்கை ஆவணங்கள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும் என்றும் கூறி, டெல்லி உயர் நீதிமன்றம் அந்த வகைப்பாட்டை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 


இந்த இரண்டு வழக்குகளிலும், வங்கிகள் ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்றின. அவை அறிவிப்பு, எழுத்துப்பூர்வ பதில் மற்றும் காரணங்களுடன் கூடிய முடிவை வழங்கின. இந்த செயல்முறை கடுமையாக இருந்ததால், இந்த நடைமுறை போதுமானதாக இல்லை என்று கடன் வாங்கியவர்கள் வாதிட்டனர். மோசடி குற்றச்சாட்டுகளை அவர்கள் சட்ட உரிமை இழப்பிற்கு ஒப்பாக விவரித்தனர். இதன் விளைவாக தடைப்பட்டியலில் சேர்க்கப்படுதல், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுதல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.




இயற்கை நீதி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்


இந்த வழக்கில் உள்ள முக்கியப் பிரச்சினை, மோசடி வகைப்பாடு குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதல்களும், அவை இயற்கை நீதியின் கோட்பாடுகளுடன், குறிப்பாக ‘ஆடி ஆல்டெரம் பார்டெம்-(audi alteram partem)’ (மறுதரப்பு நியாயத்தையும் கேட்க வேண்டும்) என்பதனுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதும் அமைந்துள்ளன.


1949-ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 35A-பிரிவானது (Banking Regulation Act, 1949), பொது நலன் கருதியோ, வங்கிக் கொள்கையின் நலன் கருதியோ, அல்லது "வங்கிக் கணக்கு வைப்புதாரர்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது வங்கி நிறுவனத்தின் நலன்களுக்குப் பாதகமான" செயல்களைத் தடுப்பதற்காகவோ வங்கிகளுக்கு வழிகாட்ட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளித்தது. இந்த அதிகாரத்தின் மூலமே ஒரு கணக்கை "மோசடி" என வகைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


இருப்பினும், 2016-ஆம் ஆண்டின் முதன்மை வழிகாட்டுதல்களில், ஒரு கணக்கை மோசடி என்று முத்திரை குத்துவதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கடன் வாங்கியவருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிப்பது குறித்த நடைமுறைகள் எதுவும் இடம்பெறவில்லை. 2023-ஆம் ஆண்டில், பாரத ஸ்டேட் வங்கி vs ராஜேஷ் அகர்வால் (SBI vs Rajesh Agarwal) வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த வழிகாட்டுதல்களில் இயற்கை நீதியைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு கணக்கையும் மோசடியானது என வகைப்படுத்துவதற்கு முன்பு வங்கிகள் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும், அதற்கான பதிலை பரிசீலிக்க வேண்டும் மற்றும் காரணங்களுடன் கூடிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


2024-ம் ஆண்டிற்குள், இந்திய ரிசர்வ் வங்கி தனது முதன்மை வழிகாட்டுதல்களைப் புதுப்பித்து, அதில் விளக்கம் கோரும் அறிவிப்பு, குறைந்தபட்சம் 21-நாட்கள் பதிலளிக்கும் காலஅவகாசம் மற்றும் காரணத்துடன் கூடிய உத்தரவு ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்தச் செயல்முறையை முறைப்படுத்தியது.


இருந்தபோதிலும், "விளக்கம் அளிப்பது" என்பதில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வாய்ப்பும் உள்ளதா என்பதும், மோசடி என வகைப்படுத்த அடிப்படையாக இருந்த தடயவியல் தணிக்கை அறிக்கையைப்  பார்க்கும் உரிமை கடன் வாங்கியவர்களுக்கு உண்டா என்பதும் இன்னும் தீர்க்கப்படாத கேள்விகளாகவே உள்ளன.


நீதிமன்றம் கூறியது என்ன?


உச்சநீதிமன்றம் வங்கிகளின் மேல்முறையீடுகளைப் பகுதியளவு ஏற்றுக்கொண்டு, கணக்குகளை மோசடியானவை என வகைப்படுத்தும் நடைமுறையையும் மாற்றியமைத்துள்ளது. ஒரு கணக்கை மோசடியானது என அறிவிப்பதற்கு முன்பு, வங்கிகள் நேரடி அல்லது வாய்மொழி விசாரணை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை ரத்து செய்தது. ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் கையாளும் வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அத்தகைய ஒரு நிபந்தனை "நடைமுறையில் பொருத்தமற்றது" என்று நீதிமன்றம் கருதியது.


2022-2023-ஆம் நிதியாண்டில் 13,494 மோசடி வழக்குகளும், 2023-24-ஆம் நிதியாண்டில் 36,060 மோசடி வழக்குகளும், 2024-25-ஆம் நிதியாண்டில் 23,953 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியதுடன், வாய்மொழி விசாரணைகளைக் கட்டாயமாக்குவது,  முடிவெடுக்கும் செயல்முறையை முடக்கி, கடன் வாங்குபவர்கள் காலதாமதம் செய்ய வழிவகுக்கும் என்றும் எச்சரித்தது.


மேலும், பாரத ஸ்டேட் வங்காய் vs ராஜேஷ் அகர்வால் (SBI vs Rajesh Agarwal) வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அது தெளிவுபடுத்தியதுடன், நேரில் ஆஜராகி விசாரணை பெறுவதற்கான எந்தவொரு உரிமையையும் அங்கீகரிக்கவில்லை என்றும், இதை எழுத்துப்பூர்வமான மனு மூலம் இச்செயல்முறையை நிறைவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


இருப்பினும், தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டபோது, ​​கடன் வாங்கியவரின் உரிமையை நீதிமன்றம் உறுதி செய்தது. ஒரு கணக்கை மோசடியானது என வகைப்படுத்தி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு, தடயவியல் தணிக்கை அறிக்கையை கடன் வாங்கியவருக்கு வழங்குவது வங்கிகளின் கடமை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அந்த அறிக்கையில் உண்மையில் என்னென்ன அடங்கியுள்ளன மற்றும் அது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பொறுத்தே இந்த வாதம் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.


வெறும் முடிவுகளையும், தீர்மானங்களையும் மட்டும் வழங்குவது இயற்கை நீதி கோட்பாடுகளை முழுமையாகப் பின்பற்றியதாகாது, என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தக் கண்டறிதல்களுக்கான காரணங்கள் அறிக்கையின் உள்ளடக்கத்திலேயே இடம்பெற்றுள்ளன. அந்தக் காரணங்கள் இல்லாமல், கடன் வாங்கியவர் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. அறிக்கையின் முழு உள்ளடக்கத்தையும் படித்தால் மட்டுமே, எடுக்கப்பட்ட முடிவுகளின் முழுமையான பொருளைப் புரிந்துகொள்ள முடியும், என்றும் நீதிமன்றம் கூறியது.


அறிக்கையின் சில பகுதிகளைத் திருத்தி எழுத வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால், அவை மூன்றாம் தரப்பு அல்லது தனியுரிமை தொடர்பானவையாக இருந்தால் மட்டுமே என்றும், தொடர்புடைய தகவல்களை மறைப்பதற்கு வங்கிகள் இதை ஒரு காரணமாகப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் எச்சரித்தது.


இந்திய ரிசர்வ் வங்கியின் விரிவான மோசடி குறித்த வகைப்பாட்டு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் உறுதிசெய்ததுடன், இந்த மூன்று நிலைகள் கொண்ட செயல்முறையானது, வேகத்திற்கும், நியாயத்திற்கும் இடையே ஒரு சரியான சமநிலையை ஏற்படுத்துவதோடு, கடன் வாங்குபவருக்கு நியாயத்தை உறுதிசெய்யும் இயற்கை நீதியின் கோட்பாடுகளுடன் முறையாக உறுதி செய்கிறது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.


மேலும் அது, மோசடி வகைப்பாட்டை, ஒரு குற்றவியல் விசாரணை அல்ல என்றும், மாறாக, “வங்கியால் உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஒரு முறையான சரிபார்ப்புப் பணி” என்றும் விவரித்தது. நிதிநிலை அறிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைப் பதிவுகள் உள்ளிட்ட சான்றுகள் பெரும்பாலும் ஆவண வடிவில் உள்ளன. மேலும், அந்தச் சான்றுகள் ஏற்கனவே கடன் வாங்கியவருக்குத் தெரிந்தே இருக்கின்றன.


கடன் வாங்கியவர்கள் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கான வழக்குகளுடன் செய்த ஒப்பீட்டையும் நீதிமன்றம் ஆராய்ந்தது. அந்த வழக்குகளில், வழக்கமாக வாய்மொழி விசாரணைகள் வழங்கப்படுகின்றன. மோசடியும் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாததும் இயல்பில் மிகவும் வேறுபட்டவை என்று நீதிமன்றம் கூறியது. வேண்டுமென்றே தவறு செய்பவரிடம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழி இருந்தும் அவர் செலுத்தாமல் இருக்க முடிவு செய்கிறார். அதேசமயம் மோசடியில் "குற்றவியல் அம்சம்", முறைகேடு, போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவை அடங்கியுள்ளன. அவர்களுக்காக வெவ்வேறு நடைமுறைகளை வடிவமைக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு உரிமை உண்டு என்றும், இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் "ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவை கேள்விக்குட்படுத்தக் கூடாது" என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.


Original Link: ‘Would throw banking operations into disarray’: Why SC rejected oral hearings for accounts declared fraudulent,


Share: