இணைய குற்ற விசாரணைகளின் மோசமான பின்விளைவுகள். -கங்கா நாராயண் மற்றும் ரத்சிராயு சர்மா



2025-ஆம் ஆண்டில் சுமார் 28 லட்சம்  இணையவழிக் குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இது தொடர்பான விசாரணைகளின் போது, சிறு குறு வணிகங்களின் வங்கித் கணக்குகள் நியாயமற்ற முறையில் முடக்கப்படுவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.


டிஜிட்டல் வளர்ச்சியின் பின்னணியில், ஒரு புதிய வகையான "குடிசைத் தொழில்" (“cottage industry”) உருவாகியுள்ளது. இது பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, திட்டமிட்ட முறையில் ஏமாற்று வேலைகளையும் மோசடிகளையும் செய்கிறது. நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தொடரான ‘Jamtara – Sabka Number Ayega’, கிராமப்புறங்களில் நடக்கும் இந்த இணைய மோசடி (Phishing) மையங்களின் கொடூரமான உண்மை நிலையை உலகிற்குக் காட்டியது. ஆனால், இது ஒரு பெரிய ஆபத்தான சிக்கலின் தொடக்கம் மட்டுமே என்கின்றனர்.


இந்தத் தொடர் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது.  இன்றைய இணைய மோசடிகள் மேம்பட்ட ஹேக்கிங் (Hacking) முறைகளைவிட, மக்களின் மனநிலையைக் கையாளுவதையே அதிகம் சார்ந்துள்ளன. மோசடி செய்பவர்கள் வங்கி அதிகாரிகள், முதலீட்டு ஆலோசகர்கள், காவல்துறை அல்லது நீதித்துறை அதிகாரிகளைப் போல நடித்து, அவசரத்தையும் பயத்தையும் உண்டாக்கி, மக்களைத் தூண்டிவிட்டு அவர்களின் முக்கியமான நிதித் தகவல்களைப் பெறுகின்றனர். 


இந்தியா தற்போது ஒரு இரட்டை சவாலை எதிர்கொண்டு வருகிறது: ஒருபுறம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பொருளாதாரமாகத் திகழ்கிறது மற்றும் இணையவழிக் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) மற்றும் இந்திய இணையவழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) ஆகியவற்றின் புள்ளிவிவரப்படி, 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.8 மில்லியன் இணையவழிக் குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன. இது 2024-ஆம் ஆண்டைவிட 24% அதிகம் என்கின்றனர்.


குடிமக்கள் நிதிசார் இணையக் குற்றப் புகாரளிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பை (Citizen Financial Cyber Fraud Reporting and Management System) பயன்படுத்தி, அதிகாரிகள் மேற்கொண்ட தீவிரமான உடனடி நடவடிக்கைகளால் ₹8,000 கோடிக்கும் அதிகமான பணம் காப்பாற்றப்பட்டது. இருப்பினும், ஒட்டுமொத்தப் பண இழப்பு என்பது மிகப்பெரிய அளவிலேயே உள்ளது. இந்தியர்கள் டிஜிட்டல் குற்றவாளிகளிடம் சுமார் ₹22,495 கோடியை இழந்துள்ளனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.7 சதவீதம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.


தற்போது 2026-ஆம் ஆண்டில், மோசடிகள் எந்தளவுக்குத் தொழில்ரீதியாக வளர்ந்துள்ளன என்பதற்கு, தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunication (DoT)) மற்றும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India (TRAI)) இணைந்து 3 கோடிக்கும் மேற்பட்ட போலி அலைபேசி இணைப்புகளைத் துண்டித்திருப்பது, இதற்குச் சான்றாக அமைகிறது.


முடக்கும் காரணி


டிஜிட்டல் மோசடிகளுடன் சேர்ந்து, மற்றொரு புதிய பிரச்சனையும் உருவெடுத்துள்ளது: அதுதான் அதிகாரிகளால் வங்கிக் கணக்குகள் அளவுக்கு அதிகமாகவும், எவ்வித பாகுபாடின்றியும் முடக்கப்படுவது. திருடப்பட்ட பணத்தைக் கண்டுபிடித்து மீட்பதற்கான அவசர முயற்சியில், காவல்துறை அமைப்புகள் முக்கியமாக இணையவழிக் குற்றப் பிரிவு (Cyber Crime Cell) கணக்குகளை முடக்குவதையே ஒரு முக்கியமான விசாரணை கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், பல நேரங்களில் இத்தகைய நடவடிக்கைகள், சந்தேகிக்கப்படும் குற்றத்தின் தன்மையோடு ஒப்பிடுகையில் தேவையற்றதாக இருக்கின்றன.


2026-ஆம் ஆண்டின் தொடக்கத் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 28.15 லட்சம் இணையவழிக்  குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் "ஒட்டுமொத்த கணக்கு முடக்கம்" நடவடிக்கைகள் காரணமாக, எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி மக்களுக்குச் சொந்தமான சுமார் ₹12,000 கோடி பணம் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் 6.4 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs), அவர்களின் கணக்கில் தெரியாமல் வரும் ஒரு ₹100 சந்தேகத்திற்கிடமான வரவு கூட, அவர்களின் மொத்த வேலை மூலதனக் கணக்கையும் முடக்குவதற்கு வழிவகுக்கிறது. அதேபோல, ஒரு தள்ளுவண்டி வியாபாரியின் கணக்கில் தெரியாமல் வரும் சிறிய தொகையான ₹20 கூட, அவரது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாதவாறு முடக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


சிறு வணிகர்கள் மற்றும் மாத ஊதியம் பெறுபவர்களின் நிதி பரிவர்த்தனைகளை முடக்குவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தொழில் செய்யும் உரிமை மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் செயலாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


இணையவழிக் குற்றங்கள் டிஜிட்டல் முறையில் நடந்தாலும், முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வழிமுறைகள் இப்போதும் பெரும்பாலும் நேரடி வருகை, மெதுவான வேகம் மற்றும் அதிகப்படியான ஆவணங்களைச் சார்ந்தே இருக்கின்றன. ஒரு சிறு வணிகர் அல்லது மாத ஊதியம் வாங்குபவரின் வங்கி கணக்கு வேறொரு மாநிலத்தில் உள்ள இணையவழிக் குற்றப்பிரிவால் முடக்கப்பட்டால், அவர் அங்கு நேரில் செல்வதற்கும் சட்ட உதவிகளைப் பெறுவதற்கும் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த இடமாற்றச் சிக்கலும், நடைமுறைச் சிக்கலும் சாதாரண இந்தியர்களுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.


வங்கிக் கணக்குகள் நான்கு முதல் ஏழு மாதங்கள் வரை முடக்கப்படும்போது, வணிகங்கள் அவற்றின் செயல்பாட்டுச் சுழற்சியின் போது தேவையான நடைமுறை மூலதனத்தை இழக்கின்றன. இதனால் வர்த்தகம் முடங்குதல், சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியாமை மற்றும் சில நேரங்களில் நீண்டகால நிதி நெருக்கடி போன்றவை ஏற்படுகின்றன. சிக்கலான மோசடிப் பரிவர்த்தனைகளை விசாரிக்க அதிகாரிகள் முயன்று வரும் நிலையில், சந்தேகத்திற்குரிய "நிலை 1" (Layer 1) சார்ந்த சுமார் 2.6 மில்லியனுக்கும் அதிகமான 'Mule' (மோசடிக்கு பயன்படுத்தப்படும் இடைத்தரகர் கணக்குகள்) கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) தரவுகள் தெரிவிக்கின்றன.


டிஜிட்டல் குற்றங்களைக் கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கை அவசியமாக இருக்கலாம். இருப்பினும், முறையான நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல், கணக்குகளை முழுமையாகவோ அல்லது காலவரையின்றியோ முடக்குவது, அந்த நடவடிக்கை நியாயமானதா மற்றும் விகிதாசாரமானதா என்பது குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்புகிறது என்று நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


டிஜிட்டல் அறிவு


அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிப் பிரச்சனையைத் தீர்க்க தனிநபர்கள், வங்கிகள், தொழில்நுட்பத் தளங்கள், சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் பயன்பாடு சார்ந்த அறிவை மேம்படுத்துவதே இதற்கு எதிரான முதல் கட்டப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கின்றனர். இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய நிதி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், குறிப்பாக இரண்டாம் நிலை நகரங்கள் (Tier-2 cities) மற்றும் கிராமப்புறங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். மேலும், வங்கிகளும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களும், இழப்புகள் ஏற்படும் முன்பே சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டறிய, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார்ந்த மோசடிகளை கண்டறிதல், வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தல் மற்றும் உடனுக்குடன் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல் போன்ற முறைகளை விரைவுபடுத்த வேண்டும். இதன் மூலம் இழப்புகள் ஏற்படுவதற்கு முன்பே சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டறிந்து தடுக்க முடியும் என்கின்றனர்.


இறுதியில், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பாதுகாப்பது என்பது தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்தது அல்ல என்றும் அது ஒரு பொறுப்பான டிஜிட்டல் கலாச்சாரத்தை உருவாக்குவதையும் சார்ந்தது என்றும் தெரிவிக்கின்றனர். அத்தகைய கலாச்சாரத்தில், புதிய கண்டுபிடிப்புகள் என்பது நம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் உறுதி ஆகியவற்றின் துணையோடு வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


கங்கா நாராயண் ரத், ஒரு முன்னாள் மத்திய வங்கி அதிகாரி மற்றும் சிராயு சர்மா, ஒரு சுதந்திரமான ஆராய்ச்சியாளர் ஆவார்.


Original Link: Unfortunate fallout of cyber crime investigations.


Share: