மக்களவையின் பலத்தை அதிகரிக்கும் வகையிலான எந்தவொரு தொகுதி மறுவரையறையும், வெறும் கணக்கியல் (arithmetical) அடிப்படையில் மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக நியாயமானதாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும்போது, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் அரசு விரைவாக நிறைவேற்ற விரும்பும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அவசரத்திற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். அது அரசியல்ரீதியாக ஆதாயம் அடைவதும், எதிர்க்கட்சிகளை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதுமே ஆகும்.
பிரதமர் வழக்கம் போல் உண்மையை மறைக்கிறார்.
2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்றம் 'பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா (Nari Shakti Vandan Adhiniyam), 2023'-ஐ ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த மசோதா, அரசியலமைப்பில் 334-அ என்ற பிரிவை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இது அடுத்த ஆண்டு நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை, அடிப்படையாகக் கொண்ட தொகுதி மறுவரையறை (delimitation) செயல்முறை நிறைவடைந்த பிறகே அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ளவில்லை. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இட ஒதுக்கீடு தொடர்பான பிரிவை 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். காரணங்கள் அரசுக்குத் தெரிந்திருந்ததால், அரசு அந்த கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
தற்போது, சட்டப்பிரிவு 334-அ திருத்தப்பட்டு, பெண்களுக்கான இடஒதுக்கீடு 2029-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் செய்ய பிரதமருக்கு 30 மாதங்கள் ஏன் தேவைப்பட்டது? மேலும், சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு இன்னும் சில வாரங்கள் காத்திருக்க முடியாதா? மேற்குவங்கத்தில் ஏப்ரல் 29 அன்று நடைபெறும் தேர்தலின் கடைசி கட்டம் முடிந்த பிறகு, அரசின் புதிய முன்மொழிவுகளைப் பற்றி விவாதிக்க அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருமுறை அல்ல, மூன்று முறை அரசுக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அந்த நியாயமான கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, பிரதமர் கட்டுரைகள் (op-eds) எழுதுதல், அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தல், மற்றும் சந்திப்புகள் நடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இது ஒரு மறைமுகமான யுக்தியாகும். இது பிரதமரின் மேலாதிக்க மனப்பான்மையையும், ‘என் வழி அல்லது வேறு வழியில்லை’ (my way or the highway) என்ற முடிவெடுக்கும் அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது.
கடந்த காலத்திலிருந்து கிடைத்த பாடங்கள்
இதற்கு மாறாக, 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் 1993 ஜூன் மாதங்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதாக்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பதுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த மசோதாக்கள் ஐந்து ஆண்டுகள் விவாதங்களும் கலந்துரையாடல்களும் நடந்த பின்னரே நிறைவேற்றப்பட்டன. அதன் விளைவாக, பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் முக்கிய சாதனையாகும். இன்று, கிராம மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் 15 லட்சம் பெண்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 40%-க்கும் அதிகமாகும். 2023-ஆம் ஆண்டின் 'பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா (Nari Shakti Vandan Adhiniyam), இந்த மசோதாவின் சாதனையின் காரணமாக உருவாக்கப்பட்டது.
கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2021-ல் நடத்தப்பட வேண்டியிருந்தது. மோடி அரசு அதைத் தொடர்ந்து தாமதப்படுத்தியது. இதன் ஒரு விளைவாக, பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்திற்கு அடிப்படையாக விளங்கும் 2013-ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கிய விவரங்கள், அதன் டிஜிட்டல் மாயாக்களின் காரணமாக, 2027-ஆம் ஆண்டிலேயே கிடைத்துவிடும் என்று உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த கூட்டத்தை அவசரமாக நடத்தவும், தொகுதி மறுவரையறையை (delimitation) விரைவாக மேற்கொள்ள அரசு கூறும் காரணங்கள் பலவீனமானவையாக உள்ளன.
ஒரு வருடத்திற்கு முன்பு, 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதி கணக்கெடுப்பாகவும் இருக்கும் என்று அறிவித்தார். இது, முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்து, பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது சாதி கணக்கெடுப்பு தேவையில்லை என்று கூறியதற்குப் பிறகு வந்த மாற்றமாகும். மேலும், சாதி கணக்கெடுப்பை கோரிய காங்கிரஸ் தலைவர்களை “நகர நக்சல் மனப்பான்மை” (urban naxal mindset) கொண்டவர்கள் என்று பிரதமர் விமர்சித்ததும் இதற்கு முன்பே நடந்தது. சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு (empowerment) அதிக பயனுள்ளதாக அமைய, 2027-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. பீகார் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் தங்களது மாநிலங்களில் விரிவான சாதி கணக்கெடுப்புகளை மேற்கொண்டுள்ளன; முழு செயல்முறையும் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டது.
எனவே, 2027-ஆம் ஆண்டு சாதி கணக்கெடுப்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் வெளியீட்டைத் தாமதப்படுத்தும் என்ற பிரச்சாரம் உண்மையல்ல என்பது தெளிவாக தெரிகிறது. இப்போது பிரதமரின் உண்மையான நோக்கம் சாதி கணக்கெடுப்பை மேலும் தாமதப்படுத்தி, அதை பலவீனப்படுத்துவதாகும்.
சிறப்புக் கூட்டத்தொடர் ஏப்ரல் 16 அன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடர் எதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று அரசு விரும்புகிறது என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முன்மொழிவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிரவில்லை. தொகுதி மறுவரையறைக்கான ஏதோ ஒரு சூத்திரம் முன்மொழியப்படுவதாகத் தெரிகிறது. கடந்த காலத்தைப் போலவே, எந்தவொரு தொகுதி மறுவரையறைக்கும் முன்பாக ஒரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மேலும், மக்களவையின் பலத்தை அதிகரிக்கும் எந்தவொரு தொகுதி மறுவரையறையும், வெறும் கணிதரீதியாக மட்டுமல்லாமல், அரசியல்ரீதியாகவும் சமமானதாக இருக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது. குடும்பக் கட்டுப்பாட்டில் முன்னோடிகளாக விளங்கிய மாநிலங்களும், சிறிய மாநிலங்களும் முழுமையான அல்லது ஒரு சார்புடைய பாதகமான நிலைக்குத் தள்ளப்படக்கூடாது.
உண்மையில், விகிதாசார அடிப்படையிலான அதிகரிப்பு மற்றும் முழுமையான எண்களுக்கு இடையிலான வேறுபாட்டின் காரணமாக, முக்கியத்துவதை இழக்க நேரிடலாம்.
கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய தேவை
2023-ஆம் ஆண்டு பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா (Nari Shakti Vandan Adhiniyam) இட ஒதுக்கீட்டிற்குள்ளேயே மற்றொரு இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்கிறது. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக முறையே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மூன்றில் ஒரு பங்கு, பெண்களுக்கும் ஒதுக்கப்படும்.
2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த விவாதத்தின்போது, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் (Other Backward Classes (OBCs)) சேர்ந்த பெண்களுக்கும் இதேபோன்ற இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். உயர்கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
மக்களவை மழைக்கால அமர்வு ஜூலை மாத நடுப்பகுதியில் தொடங்கும். ஏப்ரல் 29-க்குப் பிறகு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, எதிர்க்கட்சிகளுடன் தனது முன்மொழிவுகளை விவாதித்து, பொதுமக்கள் விவாதத்திற்கு நேரம் அளித்த பிறகு, அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை மழைக்கால அமர்வில் பரிசீலிக்கச் செய்தால் பெரிய பிரச்சனை ஒன்றும் ஏற்படப் போவதில்லை. தொல்லைக்காலங்களில் கதை நிர்வாகம் (narrative management) செய்வதைத் தவிர, நமது அரசியல் அமைப்பில் மிகவும் தூரநோக்கமான மாற்றங்களை அவசர அவசரமாகத் திணிக்க இந்தக் கண்மூடித்தனமான அவசரத்திற்கு எந்த நியாயமும் இல்லை. இந்த நடைமுறை ஆழமாகக் குறைபாடுள்ளது மற்றும் ஜனநாயக விரோதமானது. பெண்களுக்கான இடஒதுக்கீடு இங்கு பிரச்சினையல்ல. அது ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டது. உண்மையான பிரச்சினை தொகுதி மறுவரையறை (delimitation) ஆகும். இது, அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, மிகவும் ஆபத்தானது மற்றும் அரசியலமைப்புக்கே எதிரான தாக்குதல் ஆகும்.
சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக உள்ளார்.
Original Link: Delimitation, and not women’s reservation, is the issue.