முக்கிய அம்சங்கள்:
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக, நீதிபதி வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் — 'நீதிபதிகள் விசாரணைச் (Judges Inquiry Act) சட்டம், 1968'-ன் கீழ் மக்களவை அமைத்திருந்த விசாரணைக் குழுவின் விசாரணையும் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம், ஒரு அரசியலமைப்பு நீதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய, நாட்டின் முதலாவது பதவி நீக்க நடவடிக்கை தவிர்க்கப்பட்டுள்ளது.
பதவியை ராஜினாமா செய்யும் ஒரு நீதிபதி, வழக்கமான பணி ஓய்வுபெறும் நீதிபதிக்குக் கிடைக்கும் அதே ஓய்வூதியப் பலன்களைப் பெறத் தகுதியுடையவர் ஆவார். நீதிபதி வர்மா 2031-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெறவிருந்தார்.
நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள், இதுவரை முன்னுதாரணமற்ற ஒரு புதிய பாதையை நோக்கி நகர்கின்றன. ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே நீதிபதியின் ராஜினாமா அமைந்துள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒரு நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானிப்பது இது முதல் முறையல்ல. 2011-ஆம் ஆண்டில், சிக்கிம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.டி.தினகரன், தனக்கு எதிரான புகார்களை விசாரித்த மூன்று பேர் கொண்ட குழுவின் மீது தனக்கு "நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கை இல்லை" என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இருப்பினும், பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்படும் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தாலும், அரசாங்கம் பிற சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அதற்கு நீதித்துறையின் ஒப்புதல் தேவைப்படலாம். ஒரு நீதிபதி பதவியில் இருந்த காலத்தில் செய்த செயல்கள் தொடர்பான குற்றத்தை எந்த நீதிமன்றமும் விசாரிக்க முன்வர வேண்டுமெனில், தலைமை நீதிபதி வழக்குத் தொடர அனுமதி (sanction) வழங்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா?
உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறை, இந்திய அரசியலமைப்பின் 124(4)-வது பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே விதிமுறைகளே உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் பொருந்தும் என்று அரசியலமைப்பின் 218-வது பிரிவு கூறுகிறது. ஒரு நீதிபதியை நாடாளுமன்றத்தின் மூலமாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனில், அரசியலமைப்பின் 124(4)-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நடைமுறையின்படி, "நிரூபிக்கப்பட்ட முறைகேடு" (proved misbehaviour) மற்றும் "திறமையின்மை" (incapacity) ஆகிய இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே செய்ய முடியும்.
உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள ஒரு நீதிபதியை, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் "அவைக்கு வருகை தந்து வாக்களித்தவர்களில்" குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அந்தப் பதவிநீக்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்போது, அந்தப்பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார். பதவி நீக்கத்திற்கு ஆதரவாகப் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, இரண்டு அவைகளின் "மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில்" 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும். நாடாளுமன்றம் இது போன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான ஆணையை குடியரசுத் தலைவர் பிறப்பிப்பார்.
Original Link: What are the constitutional provisions related to the impeachment of the judges?