தேசிய உற்பத்தித் திறன் குழு (National Productivity Council (NPC)) ஒரு சுற்றுச்சூழல் தணிக்கை முகமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? இதன் பணி மற்றும் செயல்பாடுகள் என்ன ?
தற்போதைய செய்தி :
தேசிய உற்பத்தித் திறன் குழு (NPC), 2025-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தணிக்கை விதிகளின் கீழ், சுற்றுச்சூழல் தணிக்கைக்காக நியமிக்கப்பட்ட முகமையாகச் செயல்படுவதற்காக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துடன் (Ministry of Environment, Forest and Climate Change (MoEF&CC)) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எனவே, தேசிய உற்பத்தித் திறன் குழு பற்றி விரிவாக அறிந்துகொள்வதும், சுற்றுச்சூழல் தணிக்கைக்கான நியமிக்கப்பட்ட முகமையாக (Designated Agency for Environmental Audit (EADA)) அதன் செயல்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதும் முக்கியமானதாகிறது.
முக்கிய அம்சங்கள்:
1. 1958-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் குழு, இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
2. தேசிய உற்பத்தித் திறன் குழு (NPC) என்பது டோக்கியோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (Asian Productivity Organisation (APO)) ஒரு துணை அமைப்பகும். இந்த அமைபு இந்திய அரசாங்கம் நிறுவன உறுப்பினராக உள்ள ஒரு அரசு அமைப்பாகும்.
3. உற்பத்தித்திறன் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதுடன், தேசிய உற்பத்தித் திறன் குழுவானது அரசு மற்றும் பொது, தனியார் துறை நிறுவனங்களுக்குத் தொழிற்பொறியியல், வேளாண் வணிகம், பொருளாதார சேவைகள், தர மேலாண்மை, மனிதவள மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை போன்ற துறைகளில் ஆலோசனை மற்றும் பயிற்சி சேவைகளை வழங்கி வருகிறது.
சுற்றுச்சூழல் தணிக்கைக்காக நியமிக்கப்பட்ட முகமையாக தேசிய உற்பத்தித் திறன் குழு
1. தேசிய உற்பத்தித் திறன் குழு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், தகுதியான அளவுகோல்களை உருவாக்குதல், சான்றிதழுக்கான தேர்வுகளை நடத்துதல், தணிக்கையாளர்களைப் பதிவு செய்தல், அவர்களின் செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தணிக்கைக் கட்டமைப்பின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பை தேசிய உற்பத்தித் திறன் குழுவிடம் ஒப்படைக்கிறது.
2. சுற்றுச்சூழல் தணிக்கைக் கட்டமைப்பு என்பது, 1986-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்; 1974-ஆம் ஆண்டின் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்; 1981-ஆம் ஆண்டின் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்; வனப் பாதுகாப்புச் சட்டம்; 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம்; மற்றும் அவற்றின்கீழ் இடம்பெற்றிருக்கும் விதிகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு ஏற்ப வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாகும்.
3. மேலும், தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance (EC)), நிறுவுவதற்கான ஒப்புதல் (Consent to Establish (CTE)) மற்றும் செயல்படுவதற்கான அனுமதி (Consent to Operate (CTO)) போன்ற கட்டுப்பாட்டு அனுமதிகளைப் பெறுவதிலும் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் இது உதவும்.
நிறுவுவதற்கான அனுமதி (CTE) மற்றும் செயல்படுவதற்கான அனுமதி (CTO)
நீர் மற்றும் காற்றுச் சட்டங்களின்கீழ், நிறுவுவதற்கான அனுமதி மற்றும் செயல்படுவதற்கான அனுமதி ஆகியவை கட்டாயமான சுற்றுச்சூழல் அனுமதிகள் ஆகும். ஒரு புதிய திட்டத்தை அமைப்பதற்கு அல்லது ஏற்கனவே உள்ள திட்டத்தில் மாற்றங்களை செயல்படுத்துவதற்கு முன்பு, செயல்படுவதற்கான அனுமதி (CTE) தேவைப்படுகிறது. செயல்படுவதற்கான அனுமதி ஆனது கட்டுமானம் மற்றும் நிறுவல் பணிகள் நிறைவடைந்த பின்னரும், உற்பத்தி தொடங்குவதற்கு முன்னரும் பெறப்படுகிறது.
4. இந்த முயற்சி சுற்றுச்சூழல் விதிமுறை பின்பற்றுதலை வலுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை (transparency) அதிகரிக்கவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுற்றுச்சூழல் தணிக்கை நடைமுறைகளை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
5. சுற்றுச்சூழல் தணிக்கைக்கான நியமிக்கப்பட்ட முகமை (Designated Agency for Environmental Audit (EADA)) என்ற வகையில், தேசிய உற்பத்தித் திறன் குழு (NPC)) ஆனது சான்றளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தணிக்கையாளர்கள் (CEA) மற்றும் பதிவுசெய்யப்பட்ட சுற்றுச்சூழல் தணிக்கையாளர்கள் (Registered Environmental Auditors (REA)) ஆகியோரின் சான்றளிப்பு, பதிவு மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கை செயல்முறைகளுக்கான டிஜிட்டல் அமைப்புகளின் மேம்பாடு மற்றும் மேலாண்மை உள்ளிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்ளும்.
6. பயிற்சித் திட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள் (workshops), விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் திறன் மேம்பாட்டை (capacity building) ஏற்படுத்தி, தணிக்கை முறையை சிறப்பாக செயல்படுத்த உதவும்.
7. சுற்றுச்சூழல் தணிக்கைக்கான நியமிக்கப்பட்ட முகமையின் பணிகள் மற்றும் பொறுப்புகளில் பின்வருவன அடங்கும்: அவை,
சான்றளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தணிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச தகுதி அளவுகோளை நிர்ணயித்தல்;
பரிசீலனை வழிமுறைகளை உருவாக்குதல்,
சுற்றுச்சூழல் தணிக்கையாளர்களுக்குச் சான்றளித்தல்,
பதிவுசெய்யப்பட்ட சுற்றுச்சூழல் தணிக்கையாளர்களின் செயல்திறனைக் கண்காணித்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்,
திறன் மேம்பாட்டிற்கு உதவுதல்,
தணிக்கையாளர்களின் பணிகளை நிர்வகித்தல் மற்றும்
சான்றளிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட அனைத்து சுற்றுச்சூழல் தணிக்கையாளர்களின், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய இணையவழிப் பதிவேட்டைப் பராமரித்தல் ஆகும்.
8. புதுடெல்லியில் உள்ள தலைமையகத்துடன் இணைந்து, இந்தியா முழுவதும் 13 அலுவலகங்களின் மூலம் செயல்படும் தேசிய உற்பத்தித் திறன் குழு, 2025-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தணிக்கை விதிகளுக்கு (Environment Audit Rules, 2025) ஏற்ப சுற்றுச்சூழல் தணிக்கைக்கான நியமிக்கப்பட்ட முகமையாக (Designated Agency for Environmental Audit (EADA)) ஆகச் செயல்படும்.
நீர் தணிக்கை (Water Audit)
நீர் தணிக்கை (Water Audit) என்பது ஒரு நிறுவனம் பயன்படுத்தும் நீரின் பயன்பாட்டை ஆய்வு செய்வதாகும். இது, நீர் வளாகத்திற்குள் வரும் இடத்திலிருந்து கழிவுநீர் வெளியேறும் வரை அனைத்து பயன்பாடுகளையும் முழுமையாக பரிசோதிக்கிறது. இந்த ஆய்வின் மூலம் பயன்படுத்தப்படும் நீரின் அளவு, வீணாகும் நீர், அதில் ஏற்படும் கசிவுகள், அதிகமான பயன்பாடு போன்றவை கண்டறியப்படுகின்றன. மேலும், நீர் பயன்பாட்டை எங்கு எவ்வாறு குறைக்கலாம் என்பதையும் இது அடையாளம் காண உதவுகிறது.
இந்திய தர ஆணையம்
1. இந்தியத் தர ஆணையம் (Quality Council of India (QCI)) என்பது, 1860-ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் (Societies Registration Act) சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற சங்கமாக 1996-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
2. இது அங்கீகாரம் மற்றும் தர மேம்பாட்டிற்கான இந்தியாவின் தேசிய அமைப்பாகும். இது பல்வேறு துறைகளில் நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் தரநிலைகளை வலுப்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் இந்தியாவின் உலகளாவிய போட்டித்திறனை அதிகரிக்கும் அமைப்புகளை உருவாக்க உதவகிறது.
3. இந்திய தர ஆணையம், இந்திய அரசாங்கத்திற்கும் இந்தியாவின் முன்னணி தொழில் சங்கங்களுக்கும் இடையேயான ஒரு முக்கிய பொது-தனியார் கூட்டாண்மை மூலம், ஒரு தன்னாட்சி பெற்ற, இலாப நோக்கற்ற அமைப்பாகச் செயல்படுகிறது.
4. அரசாங்கம், உயர்மட்டத் தொழில் சங்கங்கள், தர நிபுணத்துவ அமைப்புகள், உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 38 உறுப்பினர்களைக் கொண்ட மன்றத்தால் அனைத்து இராஜதந்திர முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இதற்குத் தலைவர் தலைமை தாங்குகிறார்.
5. குறிப்பாக, இந்திய தர ஆணையம், அமைச்சகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிலைத்தன்மை சான்றிதழ் திட்டத்தின்கீழ் உள்ள குறைபாடற்ற விளைவு பூஜ்ஜியம் (Zero Defect Zero Effectn (ZED)) சான்றிதழ் திட்டம் போன்ற முன்னெடுப்புகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குகிறது.
Original Link: National Productivity Council to lead environmental audits: What is EADA and why it matters.