மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்த சர்ச்சை என்ன? - ஸ்ரீபர்ணா சக்ரவர்த்தி

வாக்காளர் பட்டியலிலிருந்து எத்தனை பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன? அதற்கான காரணங்கள் என்ன? இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) கண்டறியப்பட்ட 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' (logical discrepancies) எவை? பெருமளவிலான வாக்காளர்கள் ஏன் 'தீர்ப்பாய்வு' (adjudication) நிலையின்கீழ் வைக்கப்பட்டனர்?, இந்த விவகாரம் எவ்வாறு தீர்க்கப்பட்டது? சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை, மாநிலத்தின் அரசியல் களத்தை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது?


தற்போதைய நிகழ்வு :


வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகல் பதிவுகள், இடம்பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களை நீக்குதல், அத்துடன் "சட்டவிரோத குடியேறிகளை" அடையாளம் காணுதல் எனத் தொடங்கப்பட்ட ஒரு நடவடிக்கை, மேற்கு வங்கத்தில் ஒரு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் 'சிறப்புத் தீவிரத் திருத்தமானது' (Special Intensive Revision (SIR)) இதுவரை 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், மேற்கு வங்கத்தில் நிலவும் சூழலில்தான் 'தீர்ப்பாய்வு' (adjudication), 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' (logical discrepancies) மற்றும் 'வாக்காளர் தீர்ப்பாயங்கள்' (voter tribunals) போன்ற சொற்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன. சிறப்புத் தீவிரத் திருத்தச் (SIR) செயல்முறையானது, ஒரு அரசியலமைப்பு அமைப்பான இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் (ECI), மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு "நம்பிக்கை இடைவெளியையும்" (trust deficit) உருவாக்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


மேற்கு வங்கத்தின் வாக்காளர் பட்டியலை சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) எவ்வாறு பாதித்துள்ளது?


மேற்கு வங்கத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணிகள் நவம்பர் 4, 2025 அன்று தொடங்கியது. அப்போது வாக்காளர் பட்டியலில் 7.66 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். டிசம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியல்களில், 63 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதைக் காட்டின. இதனால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடியாகக் குறைந்தது. வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்கள் ஆனது வாக்களிக்க வராதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் நகல் பதிவுகள் (absent, shifted, dead, and duplicate (ASDD)) என்ற வகையின்கீழ் குறிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், வரைவுப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 7 கோடி வாக்காளர்களில், 30 லட்சம் பெயர்கள் "வரைபடப்படுத்தப்படாத வாக்காளர்கள்" (unmapped voters) என வகைப்படுத்தப்பட்டிருந்தன (அதாவது, 2002-ல் நடைபெற்ற முந்தைய சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பட்டியலுடன் இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை). மேலும், 1.20 கோடி பெயர்களில் 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' கண்டறியப்பட்டிருந்தன.


'தர்க்கரீதியான முரண்பாடுகள்' வகை என்றால் என்ன? இந்தச் செயல்பாட்டின் விளைவு என்னவாக இருந்தது?


'தர்க்கரீதியான முரண்பாடுகள்' (logical discrepancy) வகையின்கீழ் உள்ள வாக்காளர்கள், 2002-ம் ஆண்டின் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பட்டியலுடன் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தாலும்கூட, மிகவும் சர்ச்சைக்குரிய ஐந்து அம்சப் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டனர். ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) வழிமுறையைப் பயன்படுத்தி, இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து வகையான முரண்பாடுகளை அடையாளம் கண்டது. அவை (அ) 2002 மற்றும் 2025-ம் ஆண்டுகளின் வாக்காளர் பட்டியல்களுக்கு இடையே பெயர்களில் உள்ள எழுத்துப்பிழை வேறுபாடுகள் (ஆ) ஆறுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஒரே மூதாதையருடன் தங்களை இணைத்துக் கொண்ட வழக்குகள் (இ) ஒரு வாக்காளருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 15 முதல் 45 வயது வரம்பைத் தாண்டுவது (ஈ) தாத்தா பாட்டியின் வயதுக்கும் வாக்காளரின் வயதுக்கும் இடையிலான வித்தியாசம் 40 ஆண்டுகளுக்கும் குறைவாக இருப்பது மற்றும் (உ) வாக்காளரின் பாலினம் அவர் வழங்கிய பெயருடன் பொருந்தாத நிகழ்வுகள் போன்றவை ஆகும்.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விசாரணைகளுக்குப் பிறகு, 1.5 கோடி வழக்குகளில் சுமார் 60 லட்சம் வழக்குகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியவையாகவே நீடித்தன. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் நுண்-கண்காணிப்பாளர்களால் அவர்களின் தகுதி குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. இந்தச் செயல்முறையின் விளைவாக, 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் ‘தீர்ப்பிற்காகக் காத்திருக்கும்’ (under adjudication) பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. சரிபார்ப்புப் பணிகள் முடியும் வரை, இவர்கள் வாக்களிப்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.


‘தீர்ப்பிற்காகக் காத்திருக்கும்’ பிரிவில் வைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு என்ன நேர்ந்தது?


மம்தா பானர்ஜி அரசுக்கும், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே நிலவி வந்த தொடர் ‘நம்பிக்கையின்மை’ காரணமாக ஒரு ‘முட்டுக்கட்டை’ (stalemate) நிலை உருவாகிவிட்டதாகவும், கால அவகாசம் குறைந்து வருவதாகவும் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், மார்ச் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, ​​சிறப்புத் தீவிரத் திருத்தச் (SIR) செயல்முறையில் நீதித்துறையையும் ஈடுபடுத்துவது என்ற ஒரு “அசாதாரணமான” முடிவை மேற்கொண்டது.


இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு, தேர்தல் பதிவு அலுவலர்கள் (Electoral Registration Officer(ERO) மற்றும் உதவித் தேர்தல் பதிவு அலுவலர்கள் Assistant Electoral Registration Officers(AERO) மேற்கொள்ள வேண்டிய ‘பகுதியளவு-நீதித்துறை’ (quasi-judicial) சார்ந்த பணிகளை ஏற்று நடத்துவதற்காக, இந்தப் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்குமாறு கல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கேட்டுக்கொண்டது. பிப்ரவரி 28 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் இறுதிப் பட்டியல்களாகக் கருதப்படாது என்றும், நீதித்துறை விசாரணையின் மூலம் தகுதி உறுதிசெய்யப்படுபவர்களின் பெயர்கள், பின்னர் வெளியிடப்பட்டு கூடுதல் பட்டியல்களில் சேர்க்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். அதன்படி, மேற்கு வங்கம் மற்றும் அண்டை மாநிலங்களான ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 700 நீதித்துறை அதிகாரிகள், ‘தீர்ப்பிற்காகக் காத்திருந்த’ 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்தனர்.


நீதித்துறை அதிகாரிகள் எத்தனை பெயர்களுக்கு ஒப்புதல் அளித்தனர்? பெயர்கள் ஒப்புதல் பெறாதவர்களின் நிலை என்ன?


நீதித்துறை அதிகாரிகள் 60 லட்சம் பெயர்களில் 27 லட்சம் பெயர்களை நீக்கம் செய்துள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தகுதி உறுதிசெய்யப்படாத வாக்காளர்கள், தற்போது ஆணையத்தால் அமைக்கப்பட்ட 19 சிறப்புத் தீர்ப்பாயங்களை அணுகி முறையிடலாம். இருப்பினும், வரவிருக்கும் தேர்தல்களுக்காக வாக்காளர் பட்டியல்களைத் தேர்தல் ஆணையம் முடக்கி  வைத்துள்ளதால், சிறப்புத் தீர்ப்பாயங்கள் மூலம் வாக்காளர்களின் பெயர்களுக்கு ஒப்புதல் கிடைத்தாலும்கூட, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இவர்களால் வாக்களிக்க முடிவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. இருப்பினும், ஏப்ரல் 13 அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணையானது, இவர்களுக்கு ஒரு நிவாரணம் கிடைப்பதற்கான ஒரு சிறிய வாய்ப்பாக உள்ளது.


இதுவரை, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) 2025-க்கு முந்தைய பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பெயர்களின் மொத்த எண்ணிக்கை 90.8 லட்சம் ஆகும். வங்காளத்தில் தகுதியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 6.77 கோடி ஆகும்.


இதன் அரசியல்ரீதியான விளைவுகள் என்ன?


மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக இந்தச் செயல்முறையைத் தீவிரமாக ஆதரவளித்தாலும், திரிணாமூல் கட்சி இந்த செயல்முறையின் காலத்தையும் அளவையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஆரம்பத்தில், இந்த செயல்முறைக்கான குறுகிய காலக்கெடு தவறுகளுக்கு வழிவகுக்கும் என்று வாதிட்டு, அக்கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து, சட்டமன்றத் தேர்தல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) முக்கிய தேர்தல் அம்சமாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சிக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும், மேலும் தங்களுக்கு விசுவாசமான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்க முயற்சிப்பதாகவும் திரிணாமூல் கட்சி குற்றம் சாட்டுகிறது. திரிணாமூல் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் பலமுறை அணுகியுள்ளது. மம்தா பானர்ஜி தனது வாதங்களை முன்வைப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.


குடிமைச் சமூகம் மற்றும் எதிர்க்கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்ட மற்ற பிரச்சினைகள் என்ன?


யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் போன்ற சமூக ஆர்வலர்கள், இந்தியத் தேர்தல் ஆணையம் முஸ்லிம் வாக்காளர்களை 'வேண்டுமென்றே' குறிவைப்பதாகக் குற்றம் சாட்டி, வங்காள சிறப்பு தீவிர திருத்த (SIR) அறிக்கையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். டெல்லியில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், யோகேந்திர யாதவ், “இது திருத்தம் அல்ல, இது மீண்டும் எழுதுதல்” என்று கூறினார். அவர் நந்திகிராமத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார். அங்குள்ள வாக்காளர்களில் சுமார் 25% பேர் முஸ்லிம்கள் என்றும், மேலும், அப்பகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் 95% பேர் முஸ்லிம்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட முர்ஷிதாபாத், மால்டா மற்றும் உத்தர் தினாஜ்பூர் மாவட்டங்களில் இருந்து அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மத்துவாக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் பெண்களும் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


Original Link: What is the SIR controversy in West Bengal?.


Share: