உயிரி எரிபொருள் அடுப்புகள், சமையல் எரிவாயுக்கு (LPG) ஒரு தூய்மையான, மலிவான மாற்றாக உள்ளதா? -அங்கித் மாத்தூர்

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) நெருக்கடியின் போது, ​​விறகின் மீள் பயன்பாட்டை, ஒரு நிலையான தேர்வாக நவீன சமையல் அடுப்புகளால் (modern cookstoves) மாற்ற முடியுமா?


தற்போது வரை நடந்த நிகழ்வு :


எல்பிஜி நெருக்கடியின் காரணமாக, பல பகுதிகளில் குறிப்பாக கிராமப்புறங்கள் மீண்டும் விறகுப் பயன்பாட்டிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. விறகுப் பயன்பாடு பொதுவாக பெண்களுக்கு அதிக உடல் உழைப்பை அதிகரிப்பதாகவும், அதேநேரத்தில் மாசுபாடு மற்றும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.

இன்றைய விறகு அடுப்புகள் குறைந்த அளவு சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவையாகவும், மனித பயன்பாட்டிற்குத் தீங்கற்றவையாகவும் உள்ளனவா?


மேம்படுத்தப்பட்ட சமையல் அடுப்புகள் (improved cookstoves (ICS)) என்று பொதுவாக அழைக்கப்படும் நவீன உயிரிஎரிபொருள் அடுப்புகள், பாரம்பரிய சமையல் முறைகளிலிருந்து ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. பழைய காலத்து மண் அடுப்புகளைப் போலல்லாமல், இவை எரிபொருள் பயன்பாட்டை மூன்றில் இரண்டு பங்கு வரை குறைப்பதோடு, புகையையும் பெருமளவில் குறைக்கின்றன.


பாரம்பரிய அடுப்புகள், மோசமான காற்றோட்டத்தின் காரணமாகத் தங்களின் பெரும்பாலான வெப்பத்தை வீணாக்குவதோடு, வெறும் 10% செயல்திறனையே கொண்டுள்ளன. இதற்கு மாறாக, நவீன அடுப்புகள் 38% முதல் 45% வரையிலான வெப்ப செயல்திறன் நிலைகளை எட்டுகின்றன. இரண்டாம் நிலை காற்றோட்டம் போன்ற தொழில்நுட்பங்கள், கரி மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் புகையாக மாறுவதற்கு முன்பே அவற்றைப் பிடிக்க உதவுகின்றன.


பெருமளவில் விறகு கொண்டு சமைப்பதை எவ்வாறு நீடித்த நிலைத்தன்மை கொண்டதாக மாற்றுவது?


பொறுப்புடன் செய்தால், விறகைப் பயன்படுத்தி சமைப்பது நீடித்த நிலைத்தன்மை கொண்டதாக இருக்க முடியும். விறகு ஒரு புதுப்பிக்கத்தக்க வளம். இருப்பினும், எடுக்கப்படும் விறகின் அளவு, மீண்டும் வளரும் விறகின் அளவைத் தாண்டாதபோது மட்டுமே இது உண்மையாகும். மேம்படுத்தப்பட்ட சமையல் அடுப்புகள் எரிபொருளை மிகவும் திறமையாக எரிப்பதால், ஒரு வேளை உணவிற்குத் தேவைப்படும் விறகின் அளவை அவற்றால் குறைக்க முடியும்.


நவீன சமையல் அடுப்புகள், மரத்தூள் அல்லது விவசாயக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உருண்டைகள் மற்றும் கட்டிகள் உள்ளிட்ட மாற்று உயிரி எரிபொருட்களிலும் இயங்க முடியும். இது எரிபொருள் ஆதாரத்தை விரிவுபடுத்துவதோடு, பதப்படுத்தப்படாத விறகின் மீதான அழுத்தத்தையும் ஓரளவு குறைக்கிறது.


பெரிய அளவில் பயன்பாட்டை அடைவதற்கு நிதியுதவி மிக முக்கியமானது. மேம்படுத்தப்பட்ட சமையல் அடுப்புகளால் ஏற்படும் மாசு சேமிப்புகளைக் கண்காணித்து, அவற்றை கார்பன் வரவுகளாக மாற்றுவதன் மூலம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அடுப்புகளை மேலும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் ஒரு நிதி ஆதாரத்தை உருவாக்க முடியும்.


உபகரணங்களின் விலை மற்றும் எரிபொருள் செலவுகள் பற்றி என்ன?


வெவ்வேறு வகையான அடுப்புகளுக்கு ஆரம்பகட்ட செலவுகள் வேறுபடுகின்றன. வீட்டு உபயோக மாதிரிகளின் விலை ₹2,000-க்கும் குறைவாகத் தொடங்குகின்றன. அதேசமயம், வணிக அமைப்புகளின் விலை, உற்பத்தியாளர் மற்றும் வாங்கும் வழிமுறையைப் (நேரடியாக, இணையவழி வர்த்தகம் மூலமாக, அல்லது விநியோகர்கள் வழியாக) பொறுத்து ₹20,000-ஐத் தாண்டக்கூடும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, குறுநிதி, பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டங்கள் (CSR) மற்றும் கார்பன் நிதி ஆகியவற்றை உள்ளடக்கிய நிதிக் கூட்டாண்மைகள் மூலம் ஆரம்பகட்ட செலவுகளை நிர்வகிப்பதை எளிதாக்க முடியும்.


முக்கியமாக தொடர்ச்சியான இயக்கச் செலவாக எரிபொருள் உள்ளது. மேலும், நவீன சமையல் அடுப்புகளின் உயர் வெப்பத் திறன் எரிபொருள் தேவைகளைக் கணிசமாகக் குறைக்கும். இன்றைய அடுப்புகள் விறகுப் பயன்பாட்டை 50%-க்கும் மேலாகக் குறைத்துள்ளன.


எல்பிஜியுடன் ஒப்பிடும்போது விறகு மிகவும் செலவு குறைந்ததாகும். குறிப்பாக, முக்கிய நகரங்களில் வணிக எல்பிஜி விலை ஒரு கிலோவுக்கு ₹100-ஐத் தாண்டியுள்ள இந்த விலை, தற்போதைய விநியோகப் பற்றாக்குறையின்போது இது மிகவும் பொருந்தும். பல்வேறு வகையான விறகுகளுக்குக் கிடைக்கும் பரந்த விலை வரம்பிலிருந்து, ஒரு கிலோவின் தோராயமான சராசரி விலை சுமார் ₹10 ஆக இருக்கும் என்று கணிக்க முடியும் (விறகுகளைச் சும்மா சேகரிப்பதற்குப் பதிலாக வாங்கினால்). மேம்படுத்தப்பட்ட சமையல் அடுப்பில், 4 கிலோ விறகும் 1 கிலோ வணிக எல்பிஜிக்குச் சமமான சமையல் ஆற்றலைத் தருகிறது என்பதைக் கருத்தில் கொண்டால், விறகு மூலம் 60%-க்கும் அதிகமான செலவு சேமிப்பை வழங்க முடியும்.


பரவலான பயன்பாட்டிற்கு எவ்வகையான விநியோகச் சங்கிலி தேவைப்படும்? இதற்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படுமா?


உயிரி எரிபொருள் சமையல் அடுப்புகளைப் பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு, எரிபொருள் விநியோகச் சங்கிலிகளில் மிகப்பெரிய முதலீடு தேவைப்படாது. விறகு, பயிர்க் கழிவுகள் மற்றும் சாண வறட்டிகள் போன்ற முதன்மை எரிபொருட்கள் கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புறங்களில் ஏற்கனவே பரவலாகக் கிடைப்பதால், விலையுயர்ந்த, மையப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பிற்கான தேவை குறைவாகவே உள்ளது.


மாசுபடுத்தும் சமையல் எரிபொருளைப் பயன்படுத்துபவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


எனவே, உற்பத்தியை அதிகரிப்பது என்பது விநியோக வலையமைப்புகளை வலுப்படுத்துவதையே முக்கியமாகக் கொண்டுள்ளது. இதற்கு சிறந்த தளவாட மேலாண்மை, இறுதிநிலை விநியோகம் மற்றும் உள்ளூர் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதில்தான் முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல் முக்கியமாக, இந்த அடுப்புகள் அன்றாட வாழ்வின் ஒரு நிரந்தர அங்கமாகத் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய, பயனர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை வழங்குவதும் அவசியமாகும்.


கட்டுரையாளர் கிரீன்வே கிராமீன் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.


Original Link: Are biomass stoves a cleaner, cheaper alternative to LPG? 


Share: