இந்தியாவில் வயதான பெண்கள் ஏழைகளாக இருந்து, அவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டால், இந்தியா ஒரு உண்மையான வளர்ச்சி பெற்ற நாடாக மாற முடியாது. நீண்ட ஆயுள் என்பது வெறும் பெயரளவில் நீண்ட காலம் வாழ்வதைக் குறிக்கக்கூடாது. அது நல்ல ஆரோக்கியம், தன்னாட்சி மற்றும் கண்ணியம் ஆகியவை இன்றியமையாத கூறுகளாகக் கொண்ட ஒரு சிறந்த வாழ்க்கையாக வெளிப்பட வேண்டும்.
இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை 2050-ம் ஆண்டில் 319 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், 2046-ம் ஆண்டில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதாகும். அதேசமயம், இந்தியாவில் முதுமையில் பெண்களின் ஆதிக்கம் தெளிவாக அதிகரித்து வருகிறது. ஆண்களைவிட பெண்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். இதன் விளைவாக முதியோர்களிடையே 1,000 ஆண்களுக்கு 1,065 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. ஆனால் வருந்தத்தக்க வகையில், நீண்ட ஆயுள் என்பது நல்ல ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் குறிக்கும் என்று சொல்ல முடியாது. பல வயதான பெண்களுக்கு, குறிப்பாக விளிம்புநிலை மக்களில் பெரும்பகுதியினர் கிராமப்புற மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய சமூகங்களில் உள்ளவர்களுக்கு, நீண்ட ஆயுள் என்பது நீடித்த பாதிப்புக்குள்ளாகும் தன்மை, தனிமை மற்றும் பிறரைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறிக்கலாம்.
நமது சமூகத்தின் வயதான பெண் குடிமக்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெண்கள் மேம்பாடு குறித்த உரையாடல்களில் பெரும்பாலானவை இளைய தலைமுறையினரை மையமாகக் கொண்டிருக்கும் வேளையில், நமது சமூகங்களைச் சேர்ந்த வயதான பெண்கள், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் உள்ளவர்கள், கவனிக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றனர்.
பாதுகாப்பற்ற வேலை
இந்தியாவில் ஒரு வயதான பெண்ணின் கதை முதுமையில் தொடங்குவதில்லை. அவர் அந்த வயதை அடைவதற்கு முந்தைய பத்தாண்டுகளிலேயே அது தொடங்குகிறது. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளைச் செய்வதிலும், வீடுகளைக் கட்டுவதிலும், குழந்தைகளை வளர்ப்பதிலும், எதிர்கால பணியாளர் வர்க்கத்தை வளர்ப்பதிலுமே செலவிடுகிறார். இருப்பினும், அவர் வயதாகும் நிலையை அடையும்போது, அவருக்கு ஆதரவாக எதுவுமே இருப்பதில்லை. சுமார், 75% வயதான பெண்களிடம் சேமிப்பு என்பதே இல்லை. மேலும், 66% பேரிடம் முற்றிலும் எந்தச் சொத்தும் இல்லை. இந்த நிலை தற்செயலானது அல்ல. இது வாழ்நாள் முழுவதும் ஊதியம் பெறாத மற்றும் அங்கீகரிக்கப்படாத வேலையின் விளைவாகும்.
இந்தப் பொருளாதாரச் சரிவு அவரை (வயதான பெண்களை) ஆதரவற்றவராக ஆக்குவது மட்டுமல்லாமல், அவரைச் சக்தியற்றவராகவும் ஆக்குகிறது. இதில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான வயதான பெண்கள், தங்களின் மிக அடிப்படையான வாழ்வாதாரத் தேவைகளுக்காக மற்றவர்களை (குடும்ப உறுப்பினர்கள் உட்பட) சார்ந்திருக்கிறார்கள். 86% முதியவர்கள் குடும்பப் பராமரிப்பைச் சார்ந்திருப்பதால், வயது மற்றும் பாலினம் ஆகிய இரண்டின் காரணமாகவும் வயதான பெண்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மற்றவர்களைப் பராமரிப்பதிலேயே செலவிடுகிறார்கள். ஆனால் இறுதியில் பதிலுக்கு ஏதாவது ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
முதியவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் ஒரு முக்கியக் கவலையாகவே உள்ளது. பல தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில், மருத்துவ வசதிகள் குறைவாகவும், பெரும்பாலும் வெகு தொலைவிலும் இருப்பதால், முதியவர்கள் வழக்கமான சிகிச்சையைப் பெறுவது கடினமாகிறது. வயதான பெண்களுக்கு, நிதி மற்றும் நடமாடுவதில் சிக்கல்கள் காரணமாக நிலைமை இன்னும் கடினமாக உள்ளது. மேலும், மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லும்போது, அவர்கள் பெரும்பாலும் தங்களோடு வருவதற்கு இளைய குடும்ப உறுப்பினரைச் சார்ந்திருக்கிறார்கள். நடமாடும் சுகாதாரத் திட்டங்கள், அடிப்படை மருத்துவ சேவைகளை நேரடியாக சமூகங்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம், இந்த இடைவெளியை ஓரளவிற்குக் குறைக்க உதவியுள்ளன. ஆனால், இந்த இடைவெளியை முழுமையாக நிவர்த்திசெய்ய, இன்னும் மிக அதிகமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
நீதியின் மூலம் கண்ணியம்
மூத்த குடிமக்களான பெண்களுக்கு உண்மையான அதிகாரமளித்தலுக்குக் கட்டமைப்புச் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. முதியவர்களுக்கு நம்பகமான ஓய்வூதிய ஆதரவு இன்றியமையாதது. குறிப்பாகப் பெண்களுக்கு இது மிகவும் பொருந்தும். இவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியங்கள் வலுவானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வது, அவர்களுக்கு ஓரளவிற்கு நிதிப் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் அளிக்கும்.
ஆனால், நிதிப் பாதுகாப்பு மட்டுமே இந்தப் பெரிய பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இந்தியாவில் பராமரிப்புப் பணிகள் இன்னும் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாமலும், மதிப்பளிக்கப்படாமலும் இருக்கின்றன. பராமரிப்புப் பொருளாதாரம் (care economy) குறித்த விவாதங்கள் நடைபெறும் போது, பராமரிப்பு பொதுவாகக் குழந்தை பராமரிப்பு மற்றும் ஆரம்பகால வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டின் வயதான மக்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையிலும், முதியவர்களின் தேவைகளுக்கு மிகக் குறைவான கவனமே அளிக்கப்படுகிறது. பராமரிப்பாளர்களாக அவர்களின் பங்கு அங்கீகரிக்கப்பட்டாலும், அவர்கள் பராமரிப்பைப் பெறுபவர்களாக மாறவேண்டிய தேவை அடிக்கடி புறக்கணிக்கப்படுகிறது. மேலும், வயதான பெண்களுக்குப் பராமரிப்புத் தேவைப்படத் தொடங்கும் போது, அமைப்புகள் பொதுவாக மெதுவாகவே பதிலளிக்கின்றன. நாம் கேட்கவேண்டிய கேள்வி எளிமையானது. இந்த ஏற்றத்தாழ்வு நியாயமானதா?
வயதான பெண்களுக்கு நீதியை உறுதிசெய்வது என்பது, இந்த இரண்டு யதார்த்தங்களையும் அங்கீகரிக்கும் அமைப்புகளை உருவாக்குவதாகும். கண்ணியத்தை மீட்டெடுப்பதில் நிதிப் பாதுகாப்பும், வாழ்வாதார வாய்ப்புகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதியோர் சுய உதவிக் குழுக்கள், ஒருவேளை இவ்விரண்டையும் ஊக்குவிப்பதற்கான ஒரு வழியாகும். அவற்றின் மூலம், உறுப்பினர்கள் சிறு கடன்களைப் பெறலாம், சிறிய சேமிப்புகளை உருவாக்கலாம், மேலும் தேவைப்படும்போது ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கலாம். இல்லையெனில் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரக்கூடிய பெண்கள், கூட்டுச் செயல்பாட்டின் மூலம் வலிமையைக் கண்டறிந்து, தங்கள் நிதி வாழ்க்கையின்மீது ஓரளவு கட்டுப்பாட்டை மீண்டும் பெறத் தொடங்கலாம். சரியான ஆதரவுடன், இந்த மாதிரியானது மேம்பட்டு இன்னும் பலரைச் சென்றடைய முடியும்.
பாதிக்கப்படக்கூடிய வயதான பெண்களை மனதில் கொண்டு, சுகாதாரத் தேவைகளும், பராமரிப்பு நடைமுறைகளும் வடிவமைக்கப்பட்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும். புதுமையான சமூக அடிப்படையிலான நோய்த்தணிப்புப் பராமரிப்புத் திட்டங்கள், நாள்பட்ட நோய்களுடன் வாழும் முதியவர்களுக்கு அத்தியாவசியமான மருத்துவ, உணர்ச்சி மற்றும் சமூக ஆதரவை வழங்குவதோடு, அவர்களின் பராமரிப்பாளர்கள் இந்தக் கடினமான சூழலைக் கடந்து செல்லவும் உதவுகின்றன. இதன்மூலம், முதியவர்கள் தங்களுக்குப் பழக்கமான சூழலிலேயே கருணையான கவனிப்பைப் பெறுவதை உறுதிசெய்கின்றன.
இந்தப் பாதையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், கண்ணியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் முதுமையைக் கையாள்வதற்கு ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்க முடியும்.
இது ஏன் முக்கியம்?
இந்தியாவின் வயதான பெண்கள் வறுமையில் வாடி, அவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டால், இந்தியா ஒருபோதும் உண்மையான வளர்ச்சி பெற்ற நாடாக ஆகாது. நீண்ட ஆயுள் என்பது வெறும் பெயரளவில் நீண்ட காலம் வாழ்வதைக் குறிக்கக்கூடாது. அது நல்ல ஆரோக்கியம், தன்னாட்சி மற்றும் கண்ணியம் ஆகியவை இன்றியமையாத கூறுகளாகக் கொண்ட ஒரு சிறந்த வாழ்க்கையாக வெளிப்பட வேண்டும். அரசாங்கத்தின் முன்னெடுப்புகள், மூத்த குடிமக்களை ஒரு சக்திவாய்ந்த மக்கள்தொகைப் பிரிவாக அடையாளம் காணத் தொடங்கியுள்ளன. இது, நடமாடுவதற்கான உதவிகள், சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் அவர்களுக்கென நேரடியாக வடிவமைக்கப்பட்ட சேவைகள் உள்ளிட்டவற்றை உருவாக்க சந்தையை ஊக்குவிக்கிறது.
அரசாங்கம் சமீபத்தில் 1.5 லட்சம் முதியோர் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கை, அதிகரித்துவரும் வயதான மக்களின் நீண்டகாலத் தேவைகளை அங்கீகரிக்கிறது. நிதி ஆதரவு இல்லாத முதியோர்களுக்காக, முறைப்படுத்தப்பட்ட பராமரிப்புக் கட்டமைப்புகள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களைக் கொண்டு நமது நாடு மேலும் முன்னேறுவது இன்றியமையாதது.
தொலைநோக்குத் திட்டம்
நமது நிகழ்காலத்தை உருவாக்க உதவிய பெண்கள், அதன் விளிம்பு நிலையில் வாழ்வதைவிட மிக மேலானதற்குத் தகுதியானவர்கள் ஆவர். உண்மையாக அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பாதை, ஒரு தெளிவான உறுதிமொழியுடன் தொடங்க வேண்டும். பராமரிப்பின் பொருளாதார மதிப்பை அங்கீகரிப்பது, அதை அதிகம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் பதிலுக்கு அவர்களைப் பாதுகாக்கப் போதுமான வலுவான அமைப்புகளை உருவாக்குவது ஆகும்.
ரம்ஜும் சாட்டர்ஜி, ஹெல்ப்ஏஜ் இந்தியாவின் துணைத் தலைவர் ஆவார்.
Original Link: Embracing older women in India: with security, healthcare and dignity.