இந்திய தடகள வீரர்களின் விளம்பர ஒப்பந்தங்கள் குறித்த 'பாதுகாப்பு' நோக்கமுள்ள சுற்றறிக்கை ஏன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது? -அமால் ஷேக்

தடகள வீரர்கள் எந்தவொரு விளம்பர ஒப்பந்தம் அல்லது மூன்றாம் தரப்பினருடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக, இந்திய தடகள கூட்டமைப்பிடம் (Athletics Federation of India (AFI)) முன் அனுமதி பெற வேண்டும் என்று இந்த ஆணை உத்தரவிடுகிறது.


இந்த மாத தொடக்கத்தில், இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) தனது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அனைத்து தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் வணிக நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. தற்காலிகச் செயலாளர் ஜி. ஸ்ரீநிவாஸ் பட்நாயக் வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, தடகள வீரர்கள் எந்தவொரு விளம்பர ஒப்பந்தம் அல்லது மூன்றாவது தரப்பினருடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக, இந்திய தடகள கூட்டமைப்பிடம் இருந்து முன் அனுமதி பெறுவது அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது


தடகள வீரர் இந்த அனுமதியைப் பெற்றுவிட்டார் என்பதை விளம்பர ஒப்பந்ததாரர்கள், இந்திய தடகள கூட்டமைப்பிற்கு (AFI) தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு, அந்த கோரிக்கையை கூட்டமைப்பு மூன்று நாட்களுக்குள் உறுதிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.


தடகள வீரர்களும் பயிற்சியாளர்களும் அடிக்கடி தங்களது விளம்பர ஒப்பந்ததாரர்களை மாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய இந்திய தடகள கூட்டமைப்பு (AFI), இந்த விதிமுறை சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை தடகள வீரர்கள் மற்றும் விளம்பர ஒப்பந்ததாரர்கள் ஆகிய இருதரப்பினரின் நலன்களையும் உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.



'X' தளத்தில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த இந்திய தடகள கூட்டமைப்பு (AFI), இந்தச் சுற்றறிக்கை "வீரர்களுக்கு முதலிடம்" அளிப்பதற்கும் மற்றும் "ஒப்பந்தங்களில் தெளிவை" உறுதி செய்வதற்கும் கொண்டு வரப்பட்டது என்று கூறியுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்களுக்கு எதிர்காலத்தில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படமால் பாதுகாப்பதற்காக, ஒப்பந்தங்களைச் சட்டவல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இதற்கு முந்தைய நடைமுறை என்ன?


இந்திய வீரர்களைப் பொறுத்தவரை, விளம்பர ஒப்பந்தங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையிலேயே கையாளப்பட்டு வருகின்றன. கௌரவ் சக்சேனா விளக்கியது போல, வீரர்கள் பொதுவாகத் தாங்களாகவே அல்லது முகவர்கள் மூலமாக விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். போட்டிகளின்போது தேசிய சீருடைகளை அணிவது அல்லது விளையாட்டு கூட்டமைப்பின் விளம்பர ஒப்பந்ததாரர்களுடன் மோதல் போக்கு இல்லாதவாறு பார்த்துக்கொள்வது போன்ற மிகக்குறைவான கட்டுப்பாடுகள் மட்டுமே அவர்களுக்கு இருந்தன. ஒட்டுமொத்தமாக, தங்கள் விளம்பர ஒப்பந்தம் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் வீரர்களுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது நடைமுறையில் உள்ள ஒரு சில கட்டுப்பாடுகள் மிகக் குறைவானவை என்றும் அவை இந்திய தடகள கூட்டமைப்பால் (AFI) விதிக்கப்பட்டவை அல்ல என்றும் கூறப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதன்படி, ஒலிம்பிக் போன்ற முக்கியப் போட்டிகள் நடக்கும் காலங்களில் வீரர்கள் தனிப்பட்ட விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபட அனுமதி இல்லை. மேலும், அதிகாரப்பூர்வ விளம்பர ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்காக, போட்டிகள் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்னிருந்தே இது போன்ற விளம்பரக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.



விளையாட்டுத்துறை வழக்கறிஞர் அபினவ் ஸ்ரீவஸ்தவா இது குறித்துக் கூறுகையில், அதிகபட்சமாக, ஒரு போட்டியில் பங்கேற்பதற்கான ஒப்பந்தங்கள், போட்டிகள் நடக்கும் காலக்கட்டத்தில் மட்டும் தனிப்பட்ட விளம்பர ஒப்பந்ததாரர்கள் தங்களது உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம். இருப்பினும், தனிப்பட்ட விளம்பர ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்திய தடகள கூட்டமைப்பின் (AFI) அனுமதி கண்டிப்பாகத் தேவை என்று கூறும் விரிவான விதிகள் எதுவும் தற்போது இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.


இந்தச் சுற்றறிக்கை முந்தைய நடைமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. இது விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கும் காலத்தை மட்டும் கட்டுப்படுத்தாமல், அவர்களின் அன்றாட வணிகச் செயல்பாடுகள் வரை கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறது. இதனால் வீரர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் அந்தந்த விளையாட்டு கூட்டமைப்பின் ஒப்புதல் பெறுவது அவசியமாகிறது. முன்பு தற்காலிகக் கட்டுப்பாடாக இருந்த ஒரு விஷயம், இப்போது நிரந்தரக் கண்காணிப்பாக மாற்றப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டது என்று இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) கூறுகிறது. விளையாட்டு வீரர்கள் அடிக்கடி தங்கள் விளம்பரம் ஒப்பந்தகளை மாற்றுவதாலும், தங்களுக்குச் சாதகமற்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவதாக சாக்ஸேனா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவே முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நடைமுறை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக வீரர்கள், அவர்களது முகவர்கள் அல்லது பிரதிநிதிகளுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்தியதற்கான எந்தவொரு பொது ஆதாரமும் இல்லை என்றும், இந்தச் சுற்றறிக்கை ஒருதலைப்பட்சமாக வெளியிடப்பட்டதாகத் தெரிவதாகவும் கூறினார்.


இந்திய தடகள கூட்டமைப்பின் அதிகாரமும் அதன் வரம்புகளும்


இந்தச் சுற்றறிக்கை மீதான விமர்சனம் ஒரு முக்கியமான சட்டக் கேள்வியை முன்வைக்கிறது. ஒரு விளையாட்டு கூட்டமைப்பால் தனியார் ஒப்பந்தங்களைக் கட்டுப்படுத்த முடியுமா?. இந்தச் சுற்றறிக்கைக்கு எந்தவிதமான சட்டப்பூர்வமான அல்லது விதிமுறை சார்ந்த ஆதரவும் இல்லை என்றும் இதற்கு சட்டரீதியான அடிப்படை எதுவும் கிடையாது என்றும் வழக்கறிஞர் ஷிவம் சிங் தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ ஆதரவு இல்லாதது மிக முக்கியமானது. ஏனென்றால், இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) ஒரு சட்டரீதியான ஒழுங்குமுறை அமைப்பு அல்ல என்றும் உலக தடகள அமைப்பால் (World Athletics) இந்தியாவின் தேசிய கூட்டமைப்பாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதன் மூலம் மட்டுமே இதற்கு அதிகாரம் கிடைக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்குமேல் இதற்கு அதிகாரங்கள் இல்லை என்றும் கூறிய சிங், இது விளையாட்டை நிர்வகிக்கும் ஒரு தனியார் அமைப்புதானே தவிர, தடகள வீரர்களின் ஒப்பந்தங்களை கட்டுப்படுத்தும் அமைப்பு அல்ல என்றும் விளக்கினார்.


இந்தக் கருத்துகளைச் சட்டரீதியாக எதிர்த்தால், இந்த வழக்கின் முடிவு ஒரு முக்கியமான வேறுபாட்டைப் பொறுத்தே அமையும் என்கின்றனர். இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872-ன் பிரிவு-27 (Section 27 of the Indian Contract Act, 1872), சட்டபூர்வமான வர்த்தகத்தைத் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்கள் செல்லாது என்று கூறுகிறது. இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கை, தடகள வீரர்களும் விளம்பர ஒப்பந்ததாரர்களும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தும் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்றும், இது வர்த்தகத்தைத் தடுக்கும் ஒரு செயல் என்றும் சிங் வாதிடுகிறார்.


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(g), நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் விரும்பும் எந்தவொரு தொழிலைச் செய்யவும் அல்லது வணிகம் மற்றும் வியாபாரத்தை மேற்கொள்ளவும் உரிமையை வழங்குகிறது. இருப்பினும், பிரிவு 19(2)-ன்படி, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான நட்புறவு மற்றும் பொது அமைதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அல்லது குற்றங்களைத் தடுக்க, இந்த உரிமையின்மீது சில "நியாயமான கட்டுப்பாடுகளை" விதிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.


நிபுணர்களின் கருத்துப்படி, இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) கொண்டு வந்துள்ள இந்த சுற்றறிக்கையை சட்டரீதியாக நியாயப்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஒரு தடகள வீரர் விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் எந்தவொரு கட்டுப்பாடும் நியாயமானதாகவும், சரியான அளவிலும் இருக்க வேண்டும். ஆனால், அனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் தடைசெய்யும் இந்த விதிமுறை, அந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிடும் என்று கருதப்படுகிறது.


விளையாட்டு வீரர்கள் தங்களுடைய தனிப்பட்ட அடையாளத்தையும் உருவத்தையும் பயன்படுத்துவது, தங்கள் விளையாட்டின் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கான அவர்களின் உரிமையாகும் என்று ஸ்ரீவஸ்தவா விளக்குகிறார். ஒவ்வொரு முறையும் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இந்த அடிப்படை உரிமையோடு முரண்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் இந்தியத் தடகள கூட்டமைப்பின் (AFI) ஒப்புதல் தேவைப்படும்போது, விளம்பரதாரர்கள் நீண்டகால முதலீடு செய்யத் தயங்கலாம் என்றும் இது வீரர்கள் ஒரு வலுவான வர்த்தகக் குறியீட்டை (Brand ) உருவாக்குவதைக் கட்டுப்படுத்துகிறது.


விளையாட்டு கூட்டமைப்புகள் பொதுப்பணி அமைப்புகளாகவே நீதிமன்றங்களால் கருதப்படுகின்றன. எனவே, அவற்றின் முடிவுகள் தன்னிச்சையானவையா அல்லது அதிகார வரம்பை மீறியவையா என்பதை அறிய, அவை அரசியலமைப்பு சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?


இந்த விதியின் உடனடித் தாக்கங்கள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம், ஆனால் ஒட்டுமொத்தக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஏற்கனவே புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை, இந்த ஒப்புதல் நடைமுறைகளால் ஒப்பந்தப் பேச்சுகள் சற்று தாமதமாகலாம் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால், விளிம்பு நிலையில் இருக்கும் அல்லது வாய்ப்புக்காகப் போராடும் வீரர்களுக்கு, ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகுமா இல்லையா என்பதையே இந்த விதிதான் தீர்மானிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


கோட்பாட்டளவில், இது ஆரம்பக்கட்ட வணிக ரீதியான ஆதரவைக் குறைக்கக்கூடும் என்று சக்சேனா கூறினார். சிறிய விளம்பர ஒப்பந்தங்களை நம்பியிருக்கும் வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களைக் குறிப்பிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வளர்ந்துவரும் தடகள வீரர்கள் இந்த விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியக்கூடும் அல்லது இந்திய தடகள கூட்டமைப்பை (AFI) எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை வீரர்கள் முன்வராவிட்டாலும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் வசதிப்படைத்த விளம்பர ஒப்பந்ததாரர்கள் இதை எதிர்த்து வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும் சிங் தெரிவித்துள்ளார்.


இதன் முக்கிய விமர்சனம் என்னவென்றால், முறையான கட்டுப்பாடுகள் இல்லாத வெற்று ஆதிக்கம் தான் என்கின்றனர். ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டதுபோல, மோதல்களைக் கையாள அல்லது வழிகாட்ட ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்பை உருவாக்குவது நியாயமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், எல்லாவற்றிற்கும் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் என்ற பொதுவான நடைமுறை, அதிகாரச் சமநிலையை முற்றிலுமாக மாற்றிவிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



Original Link: Why a ‘protective’ circular on Indian athletes’ sponsorship agreements has attracted scrutiny.


Share: