உச்ச நீதிமன்றத்தின் ஒரு ஆலோசனைத் தீர்ப்பில், டாக்டர் அம்பேத்கர் ஒரு காலத்தில் வெறும் 'பெயரளவிலான' தலைவர் என்று வர்ணித்த ஆளுநருக்கு, அதிக அதிகாரமும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, ஆளுநர்கள் மசோதாக்களை நிறுத்திவைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. பெரும்பாலும், அவர்கள் மத்தியிலுள்ள ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். மேலும், அவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்கள் விதிவிலக்கின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவையாகவே இருக்கின்றன.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக பல மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். எனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். ஏப்ரல் 8 ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக தீர்ப்பு வழங்கியது. சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்மீது ஆளுநர்கள் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலாகக் கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த முடிவால் அதிருப்தியடைந்த குடியரசுத் தலைவர், மே 13 அன்று, அரசியலமைப்பின் 143வது பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்திடம் ஒரு ஆலோசனை கருத்தைக் (advisory opinion) கோரினார். அதில் கேட்கப்பட்ட கேள்விகள் பின்வருமாறு: சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்மீது ஆளுநர்களும் (மற்றும் குடியரசுத் தலைவரும்) நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடுவை நீதிமன்றங்கள் நிர்ணயிக்க முடியுமா? நவம்பர் 20 அன்று, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மசோதாக்களை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ ஆளுநர்களுக்கு நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது (cannot impose timelines) என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.
நல்ல செய்தி: ஆலோசனை இந்த தீர்ப்பு எந்த நீதிமன்றத்தையும் கட்டுப்படுத்தாது. கெட்ட செய்தி என்னவென்றால், தீர்ப்பு பல்வேறு குறைபாடுடைய கருத்துகளை கொண்டுள்ளது.
வாசகருக்கு 111 பக்கங்கள் கொண்ட தீர்ப்பைத் திணிக்க விரும்பாமல், பக்கம் 108-இல் உள்ள சுருக்கத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்: “165.1 ஆளுநருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவின்கீழ் மூன்று அரசியலமைப்பு விருப்பத்தேர்வுகள் உள்ளன, அதாவது — ஒப்புதல் அளித்தல், மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கீடு செய்தல், அல்லது ஒப்புதலைத் தடுத்து மசோதாவை கருத்துகளுடன் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்புதல்.”
சரி. ஆனால், ஆளுநர் நடவடிக்கை எடுக்க எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்து என்ன சொல்வது—இதுதானே இங்குள்ள முக்கியப் பிரச்சினை? அது குறித்து, தீர்ப்பின் சுருக்கம் மேலும் கூறுவதாவது: 165.3 பிரிவு நீண்டகாலமாக, விளக்கமளிக்கப்படாத மற்றும் காலவரையற்ற செயலற்ற தன்மையின் வெளிப்படையான சூழ்நிலைகளில் — ஆளுநரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதன் தகுதிகள் குறித்து எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்காமல், அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவின்கீழ் தனது கடமையை ஒரு நியாயமான காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுமாறு நீதிமன்றம் ஒரு வரையறுக்கப்பட்ட நீதிப்பேராணையை வழங்கலாம்.
மன்னிக்க வேண்டும், மாண்புமிகு நீதிபதிகளே, அப்படியென்றால், ஆளுநர் ஒரு மசோதாவின்மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் இதே தீர்ப்பை வழங்கியது. ஆனால், 'நீண்டகாலம், விளக்கமற்ற மற்றும் காலவரையற்ற செயலற்ற தன்மையின் வெளிப்படையான சூழ்நிலைகளை' நீங்கள் வரையறுப்பீர்கள் என்றும், 'ஒரு நியாயமான காலக்கெடுவை' குறிப்பிடுவீர்கள் என்றும் நாங்கள் நினைத்தோம். ஆனால், பிரிவு 165.3 உண்மையில் எதையும் மாற்றிவிடவில்லை. உதாரணமாக, மேற்கு வங்கத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது—அது அதிகப்படியான தாமதமாகக் கருதப்படுமா? அல்லது ஆளுநர் ரவி மூன்று வருடம் மசோதாவை நிறுத்தி வைத்திருப்பது என்பது ஒரு வழக்கமான செயலா?
அமெரிக்க உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பொருளைப் புரிந்துகொள்வதற்காக ஃபெடரலிஸ்ட் ஆவணங்களை (Federalist Papers) அடிக்கடிப் பார்ப்பது போலவே, நீதிபதிகள் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கத்தை நன்கு ஆராய்ந்திருந்தால், இந்த குழப்பங்களில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
ஆளுநர்களின் பங்கு, அந்தப் பதவியை வகிக்க வேண்டிய நபர்களின் தகுதி அல்லது தரம், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா அல்லது நியமிக்கப்பட வேண்டுமா மற்றும் அவர்களின் ஊதியம் போன்ற பிரச்சினைகள் குறித்து, அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்களால் மே 31, 1949 அன்று ஆழமாகவும் விரிவாகவும் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஒரு ஆளுநர் என்னென்ன செய்ய முடியும், என்னென்ன செய்ய முடியாது என்பது குறித்த அவர்களின் ஒருமித்த கருத்து, உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைத் தீர்ப்பில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரைவுக் குழுவின் தலைவர் பி.ஆர். அம்பேத்கரின் வார்த்தைகளை நான் மேற்கோள் காட்டுகிறேன். மே 31, 1949 அன்று அம்பேத்கர், “இந்த அவையில் உள்ள அனைவருக்கும் தெரிந்தபடி, ஆளுநருக்குத் தன்னிச்சையான அதிகாரங்களோ அல்லது தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் உரிமையோ இருக்கக்கூடாது என்பதை வரைவுக் குழு தெளிவுபடுத்தியது. புதிய அரசியலமைப்பின் கொள்கைகளின்படி, ஆளுநர் அனைத்து விவகாரங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
ஆளுநர் ஏன் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், அரசியலமைப்புச் சட்டத்தில் அவரது பங்கு குறித்தும் தனது கருத்துக்களை அம்பேத்கர் சுருக்கமாக கூறினார்.
இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு, வாக்காளர்கள் மீது அதிக நேரத்தையும், அதிக சிரமத்தையும், மேலும் நான் சொல்வதென்றால் அதிக பணத்தையும் செலவழிக்கக்கூடிய ஒரு தேர்தல் செயல்முறையைத் திணிப்பது விரும்பத்தக்கதா என்று கருதப்பட்டது. அரசியலமைப்பின் கீழ் தனக்கு என்னென்ன அதிகாரங்கள் கிடைக்கக்கூடும் என்பதை நன்கு அறிந்த எவரும் தேர்தலில் போட்டியிட முன்வர மாட்டார்கள் என்றும் கருதப்பட்டது. ஆளுநரின் அதிகாரங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டவை, பெயரளவிலானவை. தேர்தலில் போட்டியிட மிகச் சிலரே முன்வருவார்கள் என்று நாங்கள் கருதினோம். அதனால் தான் வரைவுக் குழு மற்றொரு மாற்று வழியைப் பரிந்துரைக்கலாம் என்று நினைத்தது. இந்த கருத்து வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது.
இருப்பினும், இந்த உச்சநீதிமன்ற ஆலோசனைக் கருத்தில், அம்பேத்கரின் கூற்றுப்படி 'பெயரளவிலான' தலைவர் என்று வர்ணித்த ஆளுநருக்கு, அதிக அதிகாரமும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் நமது நாட்டில் உள்ள ஆளுநர்களின் அதிகாரங்களைப் பார்த்து பொறாமைப்படுவார் என்று நான் நம்புகிறேன்.
எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரி (Westminster model) நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நம்பப்பட்டு நீதித்துறைக்கு அனுப்பப்பட வேண்டியிருந்தால் தவிர, தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின்மீது தனது கருத்துக்களைத் திணிக்க அனுமதிப்பது மிகவும் அநீதியானது. அதுபோல செய்யப்படும் ஒவ்வாரு நடவடிக்கையும் ஜனநாயகக் கொள்கைகளை அவமதிப்பதற்கு சமமானதாகும்.
இந்த ஆலோசனை முடிவு ஒரு ஆலோசனையாகவே இருக்கட்டும். தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் நியமிக்கப்படும் ஒரு ஆளுநரின் அதிகாரங்களை (clarity the powers) உச்சநீதிமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ தெளிவாக வரையறுக்க வேண்டும்.
அரசியலமைப்பு சபையில் ஆளுநர்கள் பற்றிய விவாதத்தில் ஒரு சுவாரஸ்யமான மேற்கோளுடன் நான் முடிக்கிறேன். இந்த மேற்கோள் பிஸ்வநாத் தாஸிடமிருந்து வந்தது. 1935ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், இந்திய மாகாணங்களுக்கு பிரதமர்கள் இருந்தனர். மேலும், தாஸ் ஒரிசாவின் பிரதமராக இருந்தார். அவரது நேரடி மேற்கோள், "ஐயா, ஆளுநருக்கு மிகக் குறைவான பணிகள் மட்டுமே உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பில் நாம் வகுத்துள்ள அமைப்பின் கீழ் அவருக்கு மிகக் குறைவான அதிகாரங்களே இருக்குமானால், பிறகு ஆளுநர் பதவி எதற்கு? ஆளுநருக்கு நல்ல சம்பளமும் படிகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், அவர் செய்யவேண்டிய வேலை முக்கியமற்றதாகவோ அல்லது அந்தப் பணத்திற்குத் தகுதியற்றதாகவோ இருந்தால், ஒரு ஆளுநர் பதவி என்பதே தேவையா என்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்” என்பதாகும்.
ஒருவேளை டாக்டர் அம்பேத்கர் பிஸ்வநாத் தாஸின் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும்.
எழுத்தாளர் டெகோடரில் ஒரு ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Original link:
SC advisory opinion on Governor’s role is flawed, let it stay advisory.