இந்தியாவின் வெளிநாட்டு மசோதா புலம்பெயர் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது. -ரெஜிமோன் குட்டப்பன்

இந்தச் சட்டம் தொழிலாளர்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், 1983-ஆம் ஆண்டு குடியேற்றச் சட்டத்தின் நவீன வடிவம் என்ற பெயரில், செயல்திறன் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரமான ஏற்பாடு ஆகும்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதும், லட்சக்கணக்கான மக்கள் — குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், கேரளத்தைச் சேர்ந்தவர்கள் — கடின உழைப்பு மற்றும் தியாகத்தால் கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆபத்தான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.


இவர்கள் இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்கள். வளைகுடா நாடுகளில் உயரமான கட்டிடங்கள் கட்டும் கட்டுமானத் தொழிலாளர்கள், அரபு நாடுகளில் வீடுகளை சுத்தம் செய்யும் வீட்டு உதவியாளர்கள், தென்கிழக்கு ஆசியாவில் தொழிற்சாலைகளில் பொருட்கள் தயாரிக்கும் ஊழியர்கள் ஆவர். இவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை குடும்பங்களுக்கு அனுப்புகின்றனர். இது குடும்பங்களுக்கு உதவுவதோடு, உலக வல்லரசாக உயர விரும்பும் இந்திய பொருளாதாரத்துக்கும் பங்களிக்கிறது. எனினும், தற்போது பாராளுமன்றத்தில் உள்ள வெளிநாட்டு இடம்பெயர்வு (வசதி மற்றும் நலன்) மசோதா, 2025, இந்தத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவில்லை. மாறாக, இது அவர்கள் மேலும் சுரண்டலுக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிப்பதாகத்  தெரிவிக்கின்றனர். 

இந்தச் சட்டம், 1983 குடியேற்றச் சட்டத்தின் நவீன திருத்தம் என்று கூறிக்கொண்டு, “மேம்படுத்தல்” என்ற பெயரில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது. “வசதி செய்தல்” என்று வாக்குறுதி அளித்தாலும், புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அலுவலக நடைமுறைகளுக்கே முன்னுரிமை அளித்து அவர்களை மேலும் பாதிக்கப்படுத்துகிறது. மாற்றங்கள் செய்யாமல் இது நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் உலகளாவிய தொழிலாளர் படையை இது இன்னும் பலவீனப்படுத்தும் என்று கூறப்படுகிறது. 


முக்கியப் பிரச்சினைகள்


இந்த மசோதாவின் முக்கிய அம்சம்: வெளிநாட்டு (புலம்பெயர்) தொழிலாளர்களுக்கு இருக்க வேண்டிய சட்ட உரிமைகளைப் பறித்து, அவர்களை துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கும் வாய்ப்பை இழக்கச் செய்கிறது. 2021-ஆம் ஆண்டு வரைவு சட்டத்தில் குறைகள் இருந்தாலும், அது தொழிலாளர்களை சுயமாக செயல்படக்கூடியவர்களாகக் கருதியது. அதாவது, சுரண்டல்காரர்களை எதிர்த்து நீதிமன்றத்தில் நீதி கேட்க அவர்களுக்கு உரிமை அளித்தது. ஆனால் 2025-ஆம் ஆண்டு பதிப்பு இந்த உரிமையை முழுவதுமாக நீக்கிவிட்டது. இதனால் தொழிலாளர்கள், அலட்சியமாக இயங்கும் அரசு அமைப்பின் கருணையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இடப்பெயர்வில் கவனம் செலுத்துங்கள்


இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், இந்த மசோதா மிகவும் பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கைவிட்டுவிடுகிறது. தொழிலாளர்களின் இடம்பெயர்வு பாலின அடிப்படையில் வேறுபடுகிறது; அதில் பெண்கள் கடத்தல் மற்றும் பாலியல் வன்முறைக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். 2021 வரைவு மசோதாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருந்தன. ஆனால் புதிய பதிப்பில் அதை “பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்” என்ற தெளிவில்லாத சொல்லால் மாற்றியிருப்பதால், அது பலவீனமடைந்துவிட்டது. இந்த தெளிவற்ற சொல், சட்டத்தை அமல்படுத்தும்போது தாமதம் ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கவும் வாய்ப்பளிக்கிறது.


மசோதாவில் மனிதக் கடத்தலைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறையை ஏற்படுத்துகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல; அவர்கள் பெற்றோரின் மக்கள்கள், மகள்கள். அவர்கள் அதிக ஆபத்தில் உள்ள இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள், அங்கு சுரண்டல் விதிவிலக்கல்ல — அது வழக்கமாகவே நடக்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது.  இந்தப் பாதுகாப்புகளை நீக்குவதால், மசோதா தொழிலாளர்களின் இடம்பெயர்வுக்கு உதவுவதில்லை; மாறாக, நவீன அடிமைத்தனத்தை ஊக்குவிக்கிறது.


இந்த மசோதா, ஆள்சேர்ப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்திய சுரண்டல் தடுப்பு வழிமுறைகளை அகற்றியதால், சுரண்டல் இப்போது தடையின்றி நடக்கிறது. 2021-ஆம் ஆண்டில் வெளிப்படையான கட்டண அறிவிப்பு கட்டாயம் என்று இருந்தது நீக்கப்பட்டுவிட்டது. இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே கடன் சுமையால் மூழ்கிவிடும் நிலைக்கு ஒரு விதி முறைமைகள் இல்லாமல் போய்விட்டது.


இன்று, பீகாரின் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, ரியாத்தில் “உறுதியான” வேலை என்று நம்பி, ஏமாற்றும் முகவருக்கு இலட்சக்கணக்கான ரூபாய் கொடுக்கலாம். அங்கு போனால், பாதி சம்பளத்துடன் மாற்றப்பட்ட ஒப்பந்தமே கிடைக்கும் — அல்லது அங்கு செல்லவே முடியாமலும் போகலாம்.


மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள முகவர்களுக்கான “அங்கீகார” முறை பெரிய அளவில் மோசடிக்கு வாய்ப்பு அளிக்கிறது. குடியேற்றச் சோதனைச் சாவடிகள் மின்னணு ஒப்புதல்களால் மாற்றப்படுகின்றன — இது டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கலாம், ஆனால் ஆபத்தான மற்றும் முறைசாரா ஒப்பந்தங்களுக்கு தள்ளப்படும் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


வெளிநாடுகளில் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது. 2021 வரைவுச் சட்டத்தில், வரவேற்பு, தகராறு தீர்வு, ஆவணப் புதுப்பித்தல் போன்ற பணிகளை தனியார் முகவர்களிடம் (agencies) ஒப்படைத்திருந்தது. ஆனால், இப்போதைய பதிப்பில், இந்தப் பொறுப்புகள் ஏற்கனவே அதிக வேலைச் சுமையும் போதிய வசதிகளும் இல்லாத நிலையில் உள்ள அரசு அமைப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.


புத்திசாலித்தனமான தீர்வு என்று சொல்லப்பட்ட ஒருங்கிணைந்த தகவல் அமைப்பு, உண்மையில் புலம்பெயர்ந்தோரின் தரவுகளை அவர்கள் ஒப்புதல் இல்லாமல் சேகரிக்கும் கண்காணிப்புக் கருவியாக மாறியுள்ளது. இது வெளிநாட்டில் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக இல்லாமல், அவர்களின் நடமாட்டத்தை அரசு கண்காணிப்பதற்காகவே உள்ளது. ஆனால் வெளிநாட்டு முதலாளிகள் மீது எந்த தண்டனையும் இல்லை. வாட்ஸ்அப் மோசடி வேலை வாய்ப்புகள் மூலம் தொழிலாளர் ஆட்சேர்ப்பு இணையவழி நடத்துவது போன்ற சட்டவிரோத செயல்களை முற்றிலும் புறக்கணிக்கிறது.


மறுஒருங்கிணைப்பு வீடு திரும்புவோருக்கு பலவீனமான ஆதரவாக  இருக்கிறது; இது சிறந்த தீர்வல்ல. மசோதா “பாதுகாப்பான திரும்புதல்” என்று பேசுகிறது, ஆனால் தொழில் பயிற்சி மற்றும் ஆலோசனைக்கான நிதியை குறைக்கிறது. மேலும், 182 நாட்களுக்குள் நாடுகடத்தப்படுபவர்களை “திரும்பி வராதவர்கள்” என்று வெளிப்படையாக நீக்குகிறது.


இந்த அதிக மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறது. புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலங்களை புறக்கணித்துவிட்டு, அதிகாரம் அனைத்தும் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளது. கேரளா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும், உரிமைக் குழுக்களுக்கும் வெளிநாட்டு புலம்பெயர் கூட்டமைப்பில்  (Overseas Mobility Council) முக்கியத்துவம் இல்லை என்று கூறப்படுகிறது. 


2021 வரைவில் இருந்த மாநில முனைக் குழுக்கள் (State Nodal Committees) நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் அளவில் நெருக்கடிகள் ஏற்படும்போது, முடிவுகள் வெகு தொலைவில் எடுக்கப்படுகின்றன. அபராதங்களும் பலவீனமாகவே உள்ளன: ஆள்சேர்ப்பு முகவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது; கடத்தல்காரர்களும் தவறாக நடத்தும் வெளிநாட்டு முதலாளிகளும் தண்டனைக்கு அப்பாற்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.





செயல்பட வேண்டிய நேரம்


இந்தியாவின் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் ஏற்றுமதிப் பொருள்கள் அல்ல என்று வாதிடப்படுகிறது. அவர்கள் நாட்டுக்கு இன்றியமையாதவர்கள், ஏனெனில் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை புறக்கணித்துவிட்டு, அவர்களின் பணப் பரிமாற்றங்கள் (remittances) மூலம் நாடு பெரும் பயனடைகிறது. 2025 மசோதா இந்த அநீதியை இன்னும் தீவிரமாக்கும் என்கின்றனர். அதனால், புலம்பெயர்ந்தோரின் தற்காப்புரிமையை மீட்டெடுக்கவும், வெளிப்படையான கட்டணங்களை உறுதி செய்யவும், வெளிநாடு சென்ற பிறகு பாதுகாப்புகளை வழங்கவும், குடிமைச் சமூகத்தின் பங்களிப்புடன் மத்திய கண்காணிப்பை வலுப்படுத்தவும், இழப்பீடு உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதிக்கவும் நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. சட்டம் கடத்தலை தெளிவாக வரையறுக்க வேண்டும், “வேலை” என்பதை ஜிக் வேலைகள் (gig jobs) (நிரந்தர வேலைக்கு பதிலாக, குறுகியகால திட்டங்கள் அல்லது தற்காலிக பணிகள்)  வரை விரிவாக்க வேண்டும், மேலும் திரும்பிவரும் புலம்பெயர்ந்தோர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் மறு-ஒருங்கிணைப்பு (reintegration) திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். இப்போது தேவை வெறும் வசதி அல்ல, உறுதியான பாதுகாப்பு என்கின்றனர். வெளிநாட்டில் பணம் சம்பாதித்து, உள்நாட்டில் குடும்பத்தை காப்பாற்றும் இந்தத் தொழிலாளர்களுக்கு இதைவிடக் குறைவாக கொடுப்பது சீர்திருத்தம் அல்ல – அது பெரிய அநீதியாகும்.


ரெஜிமோன் குட்டப்பன், ஒரு தொழிலாளர் இடம்பெயர்வு நிபுணர்.


Original link:

India’s Overseas Bill betrays migrant workers 


Share: