முறைப்படுத்துதல் (Formalisation) என்பது சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெறுதல், அதிக பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தொழிலாளர்களுக்கான நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. புதிய தொழிலாளர் சட்டங்கள் (new labour codes), இந்தியாவின் பெரிய முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான முயற்சியாகக் காணப்படுகின்றன. ஆனால், கிக் தொழிலாளர்களுக்கு (gig workers) சட்ட அங்கீகாரம் வழங்குவது அவர்களுக்கு உண்மையிலேயே சமூகப் பாதுகாப்பை வழங்குகிறதா?
இந்தியாவின் 570 மில்லியன் தொழிலாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் முறைசாரா துறையில் (informal sector) பணிபுரிகின்றனர். இந்தச் சூழ்நிலையில், முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இந்தியாவின் வளர்ச்சி கட்டமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்படுகின்றன.
முறைப்படுத்துதல் என்பது சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெறுதல், அதிக பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தொழிலாளர்களுக்கான நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அரசாங்கம் இதை நான்கு வழிகளில் செயல்படுத்தி வருகிறது. அவை சட்ட சீர்திருத்தங்கள் (legal reforms), அமைப்பு ரீதியான மாற்றம் (systemic transformation), துறைசார் தலையீடுகள் (sectoral interventions) மற்றும் சமூகப் பாதுகாப்பு (social protection) ஆகும். சட்டச் சீர்திருத்தங்களில் தொழிலாளர் சட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள் அடங்கும்.
புதிய தொழிலாளர் சட்டங்கள், கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு (gig and platform workers) எப்படிப் பாதுகாப்பை வழங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்வோம். ஆனால் முதலில், 29 சட்டங்களை ஒருங்கிணைத்த நான்கு தொழிலாளர் குறியீடுகள் பற்றிய ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.
புதிய தொழிலாளர் சட்டங்கள் (New labour codes)
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Union Ministry of Labour and Employment), தற்போதுள்ள 29 தொழிலாளர் சட்டங்களை உள்வாங்கி ரத்து செய்து, நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை அறிவித்துள்ளது. அந்த 4 சட்டங்கள் - ஊதியச் சட்டம்-2019 (Code on Wages), தொழில்துறை உறவுகள் சட்டம்-2020 (Industrial Relations Code), சமூகப் பாதுகாப்பு சட்டம்-2020 (Code on Social Security) மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம்-2020 (Occupational Safety, Health and Working Conditions Code) ஆகும்.
ஊதியச் சட்டம்-2019 (Code on Wages)
ஊதியச் சட்டம் முன்னர் இருந்த நான்கு சட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் 1948-ம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியச் சட்டமும் (Minimum Wages Act) அடங்கும். மேலும், பெண்களுக்கு சம ஊதியம் வழங்கும் ஏற்பாட்டிற்காக இது பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு முக்கியமான கவலை மத்திய அரசு தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு நாளைக்கு ரூ.168 என நிர்ணயித்துள்ளது. இந்தத் தொகை ஏறக்குறைய அனைத்து மாநில அரசுகளும் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவானது. புதிய தொழிலாளர் சட்டங்கள் மாநிலங்கள் முழுவதும் குறைந்தபட்ச ஊதியங்களைக் குறைக்க வழிவகுக்கும் என்று சில வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
தொழில்துறை உறவுகள் சட்டம்-2020 (Industrial Relations Code)
இது தற்போதுள்ள மூன்று சட்டங்களை ஒருங்கிணைத்து, ஆட்குறைப்பு, வேலைநிறுத்தங்கள், பணிநீக்கம் போன்ற விஷயங்களைக் கையாள்கிறது. முந்தைய தொழிலாளர் சட்டங்களின்கீழ், 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் பணிநீக்கம் அல்லது மூடுவதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தது. புதிய சட்டமானது, இந்த வரம்பை 300 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களாக உயர்த்தியுள்ளது. மேலும், இந்தச் சட்டம் தொழிலாளர்களுக்கு நிரந்தரப் பணி நியமனம் வழங்குவதையும், வேலைநிறுத்தங்களையும் ஊக்கப்படுத்தவில்லை என்று சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமூகப் பாதுகாப்பு சட்டம்-2020 (Code on Social Security)
இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ள ஒன்பது சட்டங்களை ஒருங்கிணைக்கிறது. இந்தச் சட்டம், 'கிக் பணியாளர்கள்' மற்றும் 'டிஜிட்டல் இயங்குதள பணியாளர்களை' முதன்முறையாக அங்கீகரித்து வரையறுத்ததற்காகப் பாராட்டப்பட்டுள்ளது. ஒரு ‘கிக் பணியாளர்’ என்பவர், ஒரு வேலையைச் செய்பவர் அல்லது ஒரு வேலை ஏற்பாட்டில் பங்கேற்பவர் என வரையறுக்கப்படுகிறார். இத்தகைய நபர், பாரம்பரிய முதலாளி-ஊழியர் உறவுக்கு வெளியே இந்தச் செயல்பாடுகள் மூலம் வருமானம் ஈட்டுகிறார்.
இருப்பினும், புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு விமர்சனம் என்னவென்றால், இந்தச் சட்டம் 'கிக் பணியாளர்களை' (gig workers) 'ஊழியர்களாக' (employees) வரையறுக்கத் தவறிவிட்டது. இதனால், Zomato மற்றும் Swiggy போன்ற தளங்கள் பணியாளர்களுக்கு நிலையான பங்களிப்புகளைச் செலுத்தக் தேவையில்லை. இந்தச் சட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் ஆண்டு வருவாயில் 1-2 சதவீதத்தை ஒரு சமூகப் பாதுகாப்பு நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம்-2020 (Occupational Safety, Health and Working Conditions Code)
இது தற்போதுள்ள 13 சட்டங்களுக்குப் பதிலாக வருகிறது. மற்றும் 'தொழிற்சாலை' (factory) என்ற வார்த்தையை மறுவரையறை செய்கிறது. இந்த மறுவரையறையின்படி, ஒரு 'தொழிற்சாலை' (factory) என்பது மின்சாரத்தைப் பயன்படுத்தி 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களுடனோ அல்லது மின்சாரம் இல்லாமல் 40 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களுடனோ இயங்கும் ஒரு உற்பத்தி வளாகத்தைக் குறிக்கிறது. இதன் மூலம், தொழிலாளர்களின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான சிறிய உற்பத்தி அலகுகள் தொழிலாளர் ஒழுங்குமுறைகளின் வரம்பிற்கு வெளியே உள்ளன.
நான்கு தொழிலாளர் சட்டங்களும் சட்டமன்ற அதிகாரங்களை நிர்வாகத் துறைக்கு (மத்திய மற்றும் மாநில அரசுகள்) மாற்றுவதைக் குறிக்கின்றன. இது, முன்பு 'சட்டங்களில்' குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான விவரங்களை, இப்போது அறிவிப்புகள் மூலம் மாற்றியமைக்க முடியும் என்பதையும் குறிக்கிறது. இதனால் நாடாளுமன்ற ஒப்புதலுக்கான தேவையைக் குறைக்கிறது.
இருப்பினும், புதிய தொழிலாளர் சட்டங்கள் இந்தியாவின் பெரிய முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கான ஒரு தொடர்ச்சியான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துதல்
முறைசாரா துறையின் நிலையற்றத் தன்மை, குறிப்பாக அதில் ஆதிக்கம் செலுத்தும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, கோவிட்-19 பெருந்தொற்றால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 2021-ல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இ-ஷ்ரம் தேசிய தரவுத்தளத்தை (e-SHRAM National Database) அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளம் அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தரவுத்தளத்தை உருவாக்குகிறது மற்றும் முறைசாரா தொழிலாளர்களைக் கணக்கெடுப்பதையும், அவர்களை சமூகப் பாதுகாப்புப் பலன்களுக்குத் தகுதியாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய அமைப்பு ரீதியான தலையீடாக அமைகிறது.
நவம்பர் 2025 நிலவரப்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான அணுகலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த இணையதளத்தில் 31.38 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த இணையதளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், கிக் மற்றும் டிஜிட்டல் இயங்குதள பணியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தெரு வியாபாரிகள், அழகுக்கலை நிபுணர்கள், உணவு விடுதிப் பணியாளர்கள் மற்றும் ரிக்ஷா ஓட்டுநர்கள் ஆகியோர் அடங்குவர். பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை, கைபேசி மற்றும் ஒரு வங்கிக் கணக்கு (இரண்டும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்) தேவை. இந்தத் தேவை, வங்கி/நிதி உள்ளடக்கம் மற்றும் குடிமக்களின் டிஜிட்டல் அடையாளம் குறித்த முந்தைய அரசாங்கக் கொள்கைகளுடன் தரவுத்தளத்தை ஒருங்கிணைக்கிறது.
இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்வது, தொழிலாளர்களுக்கு பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் (Pradhan Mantri Suraksha Bima Yojana) கீழ் காப்பீட்டை வழங்குகிறது. இந்தத் திட்டம் விபத்து காப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்குகிறது. விபத்தினால் ஏற்படும் எந்தவொரு ஊனத்திற்கும் ரூ. 1 லட்சம் வழங்குகிறது. இந்த இணையதளம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (Pradhan Mantri Awas Yojana – Gramin (PMAY-G)), அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Yojana) போன்ற பல திட்டங்களையும் பட்டியலிடுகிறது. இருப்பினும், இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்வது, குறிப்பிடப்பட்ட அனைத்துத் திட்டங்களிலிருந்தும் நேரடிப் பலன்களை வழங்குவதில்லை. ஏனெனில், தொழிலாளர்கள் ஒவ்வொரு திட்டத்தின் அந்தந்த இணையதளங்களிலும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கான மற்ற அமைப்பு ரீதியான முயற்சிகளில் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) அமலாக்கமும் அடங்கும். துறைசார் தலையீடுகள், உத்யம் இணையதளத்தில் (Udyam portal) பதிவு செய்வதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) புத்துயிர் அளித்தல், தளர்வான விதிமுறைகள் மூலம் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல், நிதி உதவி, வரி விலக்கு மற்றும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Prime Minister’s Employment Generation Programme (PMEGP)), பிரதான் மந்திரி நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises Scheme (PMFME)) மற்றும் முத்ரா கடன்கள் (Mudra loans) போன்ற பிற கடன் சார்ந்த திட்டங்களுடன் MSME-களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
'அங்கீகரிக்கப்பட்ட' கிக் பணியாளர்கள், முழுமையான பணியாளர் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு
கூடுதலாக, முறைசாரா பணியாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பில் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) போன்ற பல திட்டங்கள் அடங்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation (EPFO)) பலன்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, "இந்தியாவின் பணியாளர்களின் போக்குகள் மற்றும் முறைப்படுத்துதலில் குவெஸ் கார்ப் பங்கு" (India’s Workforce Trends & Quess Corp Role in Formalisation) குறித்த குவெஸ் கார்ப்-ன் சமீபத்திய அறிக்கையானது, 2024-25 நிதியாண்டில் EPFO தனது வரலாற்றிலேயே அதிகபட்ச உறுப்பினர்களைப் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கை காட்டுகிறது. புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2019 நிதியாண்டில் 61 லட்சத்திலிருந்து 2025 நிதியாண்டில் 139.78 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, முறைசாரா தொழிலாளர்களை இலக்காகக் கொண்ட முறைப்படுத்தும் கொள்கைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.
முறைப்படுத்துதல் செயல்முறையின் முக்கியத்துவத்தில் கண்ணியமான வேலைவாய்ப்பை வழங்குவது உள்ளது. உத்யம் பதிவு (Udyam registration), மின்னணுமயமாக்கல் (digitisation) மற்றும் இ-ஷ்ரம் பதிவு (e-SHRAM registration) போன்ற முன்முயற்சிகள் இதை நோக்கிய முக்கியமான முயற்சிகளாகும். இருப்பினும், முறைப்படுத்துதலை வெறும் பதிவுகளின் எண்ணிக்கை அல்லது அளவுசார் குறிகாட்டிகள் மூலம் மட்டும் மதிப்பிட முடியாது. மாறாக, அது குறைந்த பாதுகாப்பின்மை, சிறந்த ஊதியம், தொழில் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். புதிய தொழிலாளர் சட்டங்களுடன் கூடிய கிக் பணியாளர்களின் நிலை, முறைசாரா பணியாளர்கள் முறையான அங்கீகாரம் பெற்றிருந்தபோதிலும், போதுமான பாதுகாப்பு இல்லாமல் எப்படி இருக்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது.
சமூகப் பாதுகாப்புச் சட்டம்-2020 (Social Security Code) கிக் பணியாளர்களை அங்கீகரித்து, சமூகப் பாதுகாப்புப் பலன்களை நீட்டித்தாலும், கிக் பணியாளர்கள் பெறக்கூடிய எந்தவொரு காலக்கெடுவையோ அல்லது குறிப்பிட்ட பலன்களையோ அது குறிப்பிடவில்லை. இந்தச் சட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் ஆண்டு வருவாயில் 1-2 சதவீதத்தை – கிக்/பிளாட்ஃபார்ம் பணியாளர்களுக்குச் செய்யப்பட்ட அல்லது செலுத்தப்பட வேண்டிய பணம் வழங்களில் 5 சதவீத வரம்பிற்கு உட்பட்டு ஒரு சமூகப் பாதுகாப்பு நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இந்தப் பங்களிப்பு, ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய மற்றும் நிலையற்ற தொழிலாளர் குழுவிற்கு மிகக் குறைந்த பலனையே வழங்கும். இதனால், கிக் பணியாளர்கள் "அங்கீகரிக்கப்பட்டவர்களாக" மாறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு இன்னும் முழுமையான தொழிலாளர் உரிமைகளோ அல்லது முதலாளியால் வழங்கப்படும் சமூகப் பாதுகாப்போ கிடைக்கவில்லை.
மற்ற கட்டமைப்பு ரீதியான பாதிப்புகளையும் கவனிக்க வேண்டும்
மேலும், கிக் பணியாளர்கள் போக்குவரத்து, இணையம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான செலவுகள் உட்பட, செயல்பாட்டின் அதிக செலவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தச் சூழலில், கட்டாயப்படுத்தப்பட்ட பங்களிப்பு போதுமானதாகத் தெரியவில்லை. மிகக் குறைந்த பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது. மேலும், இது அர்த்தமுள்ள சமூகப் பாதுகாப்பை வழங்குவதில் வெகு தொலைவில் உள்ளது.
அதேநேரத்தில், நிரந்தரப் பணியாளர்களுக்கும், கிக் பணியாளர்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளி அதிகளவில் உள்ளது. குறிப்பாக, பெண் கிக் பணியாளர்கள் ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத வேலைகளின் "இரட்டைச் சுமை" (double burden) காரணமாக பாதிக்கப்படக்கூடியவர்களாகவே உள்ளனர். இந்தியாவில் உள்ள கிக் பணியாளர்கள் அதிகப்படியான வேலைப்பளுவைக் கொண்டுள்ளனர் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. இது தொழிலாளர் சட்டங்களில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது.
கூடுதலாக, கிக் வேலைகள் அல்காரிதம்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. பிளாட்ஃபார்ம் செயல்பாடுகள் பெரும்பாலும் வெளிப்படையாக இருப்பதில்லை. இந்த காரணிகள் அனைத்தும் சேர்ந்து, "மேன்மைப்படுத்தப்பட்ட முறைசாரா மயமாக்கல்" என்று விவரிக்கப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கின்றன. இதில், தொழிலாளர்களின் கணக்குகள் தன்னிச்சையாக முடக்கப்பட்டாலோ அல்லது வேலை ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டாலோ அவர்களுக்கு முறையிட வழியில்லை. இந்தச் சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் அது கிக் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பலன்கள், முழு வேலைவாய்ப்பு உரிமைகள் மற்றும் அல்காரிதமிக் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் முதலாளியின் மீது சுமத்துகிறது.
குறிப்பிடும்படியாக, புதிய தொழிலாளர் சட்டங்கள் இந்தியாவின் பெரிய முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கியமான தொடக்கத்தைக் குறிக்கின்றன. இருப்பினும், முறைப்படுத்துதல் என்பது உத்யம் மற்றும் இ-ஷ்ரம் பதிவுகளின் எண்ணிக்கையைவிட மேலானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். அது தொழிலாளர்களுக்கு கண்ணியமான வேலை மற்றும் மரியாதையான வாழ்க்கையை வழங்குவது பற்றியது. தற்காலிகப் பணியாளர்களை அங்கீகரிப்பது ஒரு முக்கியமான படியாக இருந்தாலும், மற்ற கட்டமைப்புரீதியான பாதிப்புகளும் கொள்கைரீதியான தலையீடுகளைக் கோருகின்றன.
ரித்விகா பட்ஜிரி, தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆவார்.
Original link:
Why formalisation of economy is central to India’s growth structure?