ஆரவல்லி மலைத்தொடர் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும்? -ஜேக்கப் கோஷி

ஆரவல்லி மலைகளும் தொடர்களும் இந்திய-கங்கை சமவெளியின் பாலைவனமாவதை எவ்வாறு தடுக்கின்றன? மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (Central Empowered Committee) பரிந்துரைகள் என்னென்ன? ஆரவல்லி மலைகளுக்கு ஒரு சீரான வரையறையை (uniform definition) வகுப்பது ஏன் அவசியமாக இருந்தது? உச்சநீதிமன்றம் இந்த மலைத்தொடரில் சுரங்கத் தொழிலை முற்றிலுமாக தடை செய்துள்ளதா?


உச்சநீதிமன்றம், கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில், ஆரவல்லி மலைகள் மற்றும் மலைத்தொடர்களுக்கு ஒரே மாதிரியான வரையறையைத் தீர்மானித்தது, மேலும் டெல்லி, ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் குஜராத் வரையிலான அதன் பகுதிகளுக்குள் புதிய சுரங்க குத்தகை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


அந்த வீச்சின் முக்கியத்துவம் என்ன?


சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகள் பழமையானதாகவும், இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடராகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆரவல்லி மலைத்தொடர் இந்தோ-கங்கைச் சமவெளிகளைப் பாலைவனமாக மாறுவதிலிருந்து தடுக்கும் ஒரு முக்கியமான சூழலியல் தடையாகச் செயல்படுகிறது. இவை தார் பாலைவனம் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் நோக்கி கிழக்கே பரவுவதைத் தடுத்து, காலநிலையைச் சமநிலைப்படுத்தவும், பல்லுயிர்களை நிலைநிறுத்தவும், நிலத்தடி நீரின் அளவை பாதுகாக்க உதவுகின்றன. டெல்லியில் இருந்து குஜராத் வரை சுமார் 650 கி.மீ தூரத்திற்கு நீண்டுள்ள இந்த மலைத்தொடர், நீர் மீண்டும் நிரப்பும் அமைப்புகளை ஆதரிக்கிறது. மேலும் சம்பல், சபர்மதி மற்றும் லூனி போன்ற நதிகளை உருவாக்குகிறது. இது மணற்கல் (sandstone), சுண்ணாம்புக்கல் (limestone), பளிங்குக்கல் (marble), கிரானைட் மற்றும் ஈயம், துத்தநாகம், செம்பு, தங்கம் மற்றும் டங்ஸ்டன் போன்ற கனிமங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக இந்தக் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டாலும், கடந்த நான்கு தசாப்தங்களாக அளவுக்கு அதிகமான கல் மற்றும் மணல் குவாரிகள் காற்றுத் தரத்தை மோசமாக்கியதோடு, நிலத்தடி நீர் நிரப்பப்படுவதைக் கடுமையாகக் குறைத்துள்ளன. இதில் சில சுரங்கங்கள் சட்டவிரோதமானவை ஆகும். ஐ.நா.வின் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான மாநாட்டின்கீழ் (UN Convention to Combat Desertification) இந்தியா தனது கடப்பாடுகளின்படி, ஆரவல்லி மலைத்தொடர் போன்ற பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல்களைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


சுரங்கத் தொழிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா?


1990-களின் முற்பகுதியில் இருந்து, சுற்றுச்சூழல் அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் மட்டுமே சுரங்க நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கும் விதிகளை வகுத்துள்ளது, ஆனால் இவை பெரும்பாலும் மீறப்பட்டுள்ளன. 2009-ஆம் ஆண்டில், ஹரியானாவின் ஃபரிதாபாத், குருகிராம் மற்றும் மேவாட் மாவட்டங்களில் சுரங்கம் தோண்டுவதற்கு உச்சநீதிமன்றம் முழுமையான தடை விதித்தது. 2024-ஆம் ஆண்டு மே மாதம், ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கக் குத்தகைகளை வழங்குவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தியதுடன், அதன் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் (Central Empowered Committee (CEC)) விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. இந்த ஆய்வின் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சில பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.  மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் ஒரு விரிவான  ஆய்வுக்கு உத்தரவிட்டது. ஆரவல்லி மலைத்தொடர் முழுவதையும் விஞ்ஞான ரீதியில் வரைபடமாக்குதல், சுரங்கத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஒரு பரந்த மதிப்பீடு, பாதுகாக்கப்பட்ட வாழ்விடங்கள், நீர்ப்பிடிப்புகள், புலிகள் வழித்தடங்கள், முக்கிய நிலத்தடி நீர் நிரப்பும் பகுதிகள் மற்றும் தேசிய தலைநகர் பகுதிக்குள் உள்ள பகுதிகள் போன்ற சுற்றுச்சூழல் உணர்திறன் நிறைந்த பகுதிகளில் சுரங்கத்திற்கு கடுமையான தடை போன்ற பரிந்துரைகளை மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு அளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.  மேலும், இது கல் உடைக்கும் அலகுகளின் (Stone-crushing units) மீதான விதிமுறைகளை இறுக்கப்படுத்தவும் வலியுறுத்தியது. முறையான வரைபடமாக்கல் மற்றும் மதிப்பீடுகள் முடியும் வரை புதிய குத்தகைகள் அல்லது புதுப்பித்தல்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் பரிந்துரைத்தது. உச்ச நீதிமன்றம் அதன் 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாத உத்தரவில் இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம், குஜராத், இராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 29 மாவட்டங்களில், ஆரவல்லி மலைத்தொடரைச் சுற்றியுள்ள ஐந்து கி.மீ. இடைவெளியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க, மத்திய அரசு ஆரவல்லி "பசுமைச் சுவர்" (Green Wall) திட்டத்தையும் தொடங்கியது. 2030-ஆம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுக்க இந்தத் திட்டம் உதவும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.


ஏன் ஒரு சீரான வரையறை?


ஆரவல்லி மலைத்தொடர்களை அடையாளம் காண மாநிலங்கள் வெவ்வேறு மற்றும் முரண்பட்ட அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றன என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வன ஆய்வுக் கழகம் (Forest Survey of India (FSI)) போன்ற நிபுணர் அமைப்புகள்கூட 'ஆரவல்லி மலைகள் மற்றும் மலைத்தொடர்கள்' எதைக் குறிக்கிறது என்பதில் வேறுபட்ட வரையறைகளை வழங்கியுள்ளன. 2010-ஆம் ஆண்டில், வன ஆய்வுக் கழகமானது சரிவு (slope), அடிவாரப் பாதுகாப்புப் பகுதி (foothill buffer), மலைகளுக்கு இடையேயான தூரம் (inter-hill distance) மற்றும் உட்பட்ட பகுதி போன்ற அளவுருக்களைப் பயன்படுத்தி ஆரவல்லி மலைகளை வரையறுத்தது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, ஆரவல்லி மலைத்தொடருக்கான அறிவியல் பூர்வமான, ஒரே மாதிரியான வரையறையை உருவாக்க, சுற்றுச்சூழல் அமைச்சகம், வன ஆய்வுக் கழகம், மாநில வனத்துறைகள், இந்திய புவியியல் ஆய்வுத் துறை (Geological Survey of India) மற்றும் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை அக்டோபர் 2025-ஆம் ஆண்டில் சமர்ப்பித்ததுடன், 100-மீட்டருக்கு மேல் உள்ள மலைகளை மட்டுமே ஆரவல்லி மலைகளாகச் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தது. நீதிமன்றத்தின் நண்பர் (Amicus Curiae) கே. பரமேஸ்வர், இந்த வரையறை மிகவும் கட்டுப்பாடானது என்றும், இது தாழ்வான மலைகளில் சுரங்கம் தோண்ட அனுமதித்து, அவற்றின் தொடர்ச்சியையும், ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் என்றும் வாதிட்ட வேளையில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, முந்தைய வன ஆய்வுக் கழகம் அளவுகோல் உண்மையில் மிகப்பெரிய பகுதிகளை விலக்கிவிடும் என்றும், எனவே 100-மீட்டர் அளவுகோல் அதிக பகுதிகளை உள்ளடக்கும் என்றும் வலியுறுத்தினார்.


உச்சநீதிமன்றத்தின்  வழிகாட்டுதல்கள் என்னென்ன?


ஆரவல்லி மலைத்தொடர் முழுவதற்கும் ஒரு விரிவான நிலையான சுரங்க மேலாண்மைத் திட்டம் (Management Plan for Sustainable Mining (MPSM)) தயாரிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் திட்டமானது, சுரங்கம் தோண்டத் தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தெளிவாகக் குறிக்க வேண்டும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் சுரங்கம் அனுமதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண வேண்டும், உணர்திறன் கொண்ட வாழ்விடங்கள் மற்றும் வனவிலங்கு வழித்தடங்களை வரைபடமாக்க வேண்டும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கங்கள் மற்றும் தாங்கும் திறனை மதிப்பிட வேண்டும், மேலும் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்ட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.


சுரங்கத் தொழிலுக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை?


கடந்தகால அனுபவங்கள் காட்டுவது என்னவென்றால், மொத்தத் தடைகள் பெரும்பாலும் சட்டவிரோத சுரங்கங்களையும், வன்முறை மணல் மாஃபியாக்களையும், கட்டுப்பாடற்ற மணல் எடுப்பையும் அதிகரிக்கவே வழிவகுக்கின்றன. எனவே, நீதிமன்றம் சமநிலையான ஒரு அணுகுமுறையைத் தேர்வு செய்தது: ஏற்கனவே உள்ள சட்டப்பூர்வ சுரங்கங்கள் கடுமையான ஒழுங்குமுறைகளுடன் தொடர அனுமதிக்கப்படுகின்றன. அறிவியல் அடிப்படையிலான திட்டம் தயாராகும் வரை புதிய சுரங்கங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. உணர்திறன் வாய்ந்த பகுதிகள் நிரந்தரமாக சுரங்கத்திற்கு தடைசெய்யப்பட்டவையாகவே இருக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Original link:

How is the Aravalli range to be protected?


Share: