மெக்காலேயின் 1835ஆம் ஆண்டின் தொலைநோக்குப் பார்வையில் வேரூன்றிய காலனித்துவ மனநிலையை மாற்றியமைக்க பிரதமர் மோடி விரும்புகிறார். பிரிட்டிஷ் ஆட்சி இந்திய கல்வியை குருகுல முறையிலிருந்து மேற்கத்திய நாடுகளின் மாதிரி கற்றலுக்கு எவ்வாறு மாற்றியது என்பதையும், மெக்காலேயின் குறிப்புகள் இந்தியாவின் கல்வியை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் பார்ப்போம். மேலும், இந்திய குடிமைப்பணி சேவையில் மெக்காலேயின் பங்கைப் பற்றி கீழே குறிப்பிட்டுள்ளது
தற்போதைய நிகழ்வு என்ன?
ஆறாவது ராம்நாத் கோயங்கா சொற்பொழிவை நிகழ்த்திய பிரதமர், மெக்காலேயின் பிரச்சாரத்தின் 200-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த மரபை மாற்றியமைக்க 10 ஆண்டு காலக்கெடுவை நிர்ணயித்தார். 1835ஆம் ஆண்டு முதல் நிலவும் மேற்கத்திய மனநிலையை இந்தியா "முற்றுகையிட வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்த மனநிலை, பூர்வீக அறிவு அமைப்புகளை பலவீனப்படுத்தி, காலனித்துவ கல்வியை அமல்படுத்துவதன் மூலம் இந்திய சிந்தனையை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட தாமஸ் மெக்காலேயின் திட்டத்திலிருந்து வளர்ந்தது. இந்தச் சூழலில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கல்வியின் வரலாற்றையும், இந்திய கல்வியில் மெக்காலேயின் குறிப்புகளின் தாக்கத்தையும் புரிந்துகொள்வது முக்கியம்.
முக்கிய அம்சங்கள் :
1. காலனித்துவத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது, மத மற்றும் சாதி அடிப்படையில், குருகுல முறை (Gurukul system) என்று அழைக்கப்பட்டதன் கீழ் பிரிக்கப்பட்டது. பழமையான கல்வி அமைப்புகளில் ஒன்றாக, குருகுல முறை பாரம்பரிய அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. பெண்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் பிற பின்தங்கிய மக்கள் பெரும்பாலும் கல்வி பெறும் வாய்ப்பு அனுமதிக்கப்படவில்லை.
2. ஆரம்பகால இந்தியக் கல்வி பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், 17-ம் நூற்றாண்டின் பிரெஞ்சு பயணியும் மருத்துவருமான பிராங்கோயிஸ் பெர்னியர், பெர்னியர் அதை கடுமையாக விமர்சித்திருந்தார். புனித நகரமான பனாரஸைப் பற்றி (அல்லது வாரணாசி) அவர் குறிப்பிட்டதாவது, “அங்கு ஒரு சரியான பல்கலைக்கழகம் போல் எதுவும் இல்லை; கல்லூரிகளோ வகுப்புகளோ இல்லை, பணக்கார வணிகர்களின் வீடுகளில் மத குருக்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் சிறிய குழுக்களை மட்டுமே அவர் கண்டதாக” குறிப்பிட்டிருந்தார்.
3. இருப்பினும், 1830-ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு பயணம் செய்த ஸ்காட்டிஷ் மதபோதகர்கள் வில்லியம் ஆடம், இந்திய கல்வியின் முன்னேற்றம் குறித்து கிழக்கிந்திய கம்பெனியிடம் அறிக்கை அளிக்கும்படி கேட்கப்பட்டபோது, அவர் மிகவும் உண்மையான நிலையை வழங்கினார். பாடசாலைகள் (patshalas) குறைவாகவே இருந்தன என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், அவை அந்தக் காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகத் தோன்றியது என்றும், மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப என்ன கற்பிக்க வேண்டும் என்பதை குருக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கல்வி
1. ஆரம்பத்தில், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கல்விக்கு குறைந்தபட்ச பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 18-ம் நூற்றாண்டின் கல்வியில் முதலில் ஆர்வம் காட்டியவர்கள் கிழக்கத்திய நிபுணர்கள் (Orientalists) ஆவர். வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் வில்லியம் ஜோன்ஸ் மற்றும் பம்பாயின் ஆளுநர் ஜோனாதன் டங்கன் ஆகியோர் பண்டைய மற்றும் இடைக்கால இந்தியாவைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். அவர்கள், குறிப்பாக சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழி கலாச்சாரங்கள் பற்றிய ஆய்வால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். அவர்களின் முயற்சிகள் இந்தியாவின் முதல் இலக்கிய சங்கமான கல்கத்தாவின் ஆசிய சமூகத்துடன் (Asiatic Society of Calcutta) சேர்ந்து நாடு முழுவதும் மதரஸாக்கள் மற்றும் கல்லூரிகள் உருவாக வழிவகுத்தன.
2. 1813-ம் ஆண்டுதான், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வளர்ச்சிக்கு பங்களித்ததுடன், 'இந்தியாவின் கற்றறிந்த பூர்வீக மக்களின் இலக்கிய மறுமலர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும், ஊக்குவிப்பிற்காகவும், அறிவியல் அறிவை அறிமுகப்படுத்தி மேம்படுத்துவதற்காகவும்' ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டைச் சட்டமாக்கியது.
3. அரசின் நிதி ஆரம்பத்தில் பாரம்பரியக் கற்றலை ஆதரிக்கும் நிறுவனங்களுக்குச் சென்றாலும், அதற்கு இணையாக, கிறிஸ்தவ அறக்கட்டளைகள் கான்வென்ட் பள்ளிகளைத் திறக்கத் தொடங்கினர். இந்தப் பள்ளிகள் கல்வியின் தரங்களை சீர்திருத்தி நவீனப்படுத்தியது.
4. கல்வியில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் லண்டனில் பெரும்பாலும் பிரபலமடையவில்லை. மேற்கத்திய நாடுகளின் கல்வியின் பரவல் இந்தியர்களிடையே கிளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடும் என்று கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் கவலை தெரிவித்தனர். இருப்பினும், தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் பிரபு இந்தக் கவலைகளை நிராகரித்தார்.
5. இந்தியாவில் மேற்கத்திய நாடுகளின் கல்வி வளர்ந்தால், லண்டனில் உள்ள பிரிட்டன் அரசியல்வாதிகளின் பார்வையானது, படித்த இந்தியர்களின் இந்தப் புதிய குழு பிரிட்டனுக்கு ஆதரவாகச் செயல்பட முடியும். இந்தியா போன்ற ஒரு பெரிய காலனியை நடத்த, ஆங்கிலேயர்களுக்கு பல படித்த நிபுணர்கள் தேவைப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து அதிக பணியாளர்களை கொண்டுவருவது சாத்தியமில்லாத நிலையில் தங்களிடம் வேலை செய்ய ஆங்கிலேயர்களுக்கு படித்த நிபுணர்கள் தேவைப்பட்டனர்.
6. இந்தப் பின்னணியில் தான் மெக்காலே 1835-ம் ஆண்டு ஆங்கிலக் கல்விச் சட்டத்தை வரைந்தார்.
இந்திய கல்வி குறித்த மெக்காலேயின் குறிப்பு
1. மெக்காலே கல்விக் கொள்கையை தயாரித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், இந்தியாவில் என்ன மாதிரியான கல்வி தேவை என்பது குறித்து இந்தியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது. கிழக்கத்திய நிபுணர்கள் (Orientalists), பாரம்பரிய இந்தியக் கல்வியை உள்ளூர் மொழிகளில் மேம்படுத்துவதில் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், ஆங்கிலேயர்கள், மேற்கத்தியக் கல்விக்கு ஆங்கிலத்தில் மட்டுமே நிதியளிக்க வேண்டும் என்று விரும்பினர்.
2. பிரிட்டிஷ் நலன்களுக்கு சேவை செய்வதை ஆதரித்த குழுவில் மெக்காலே இருந்தார். "இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும், ரசனைகள், கருத்துகள், ஒழுக்கங்கள் மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றில் ஆங்கிலேயர்களாகவும்" இருக்கும் இந்தியர்களின் குழுவை உருவாக்க அவர் விரும்பினார். ஒரு சில இந்தியர்கள் மட்டுமே இந்தக் குழுவில் சேர முடியும். இந்த இந்தியர்கள் பின்னர் மீதமுள்ள மக்களுக்கு கல்வி கற்பிப்பார்கள். பின்னர் அவர்கள் மெக்காலேயின் சர்ச்சைக்குரிய கீழ்நோக்கிய வடிகட்டுதல் கோட்பாட்டைப் (Downward Filtration Theory) பின்பற்றி மீதமுள்ள மக்களுக்கு கல்வி கற்பிப்பார்கள்.
3. இருப்பினும், மெக்காலேயின் கோட்பாடு ஆங்கிலேயர்களிடையே கூட சர்ச்சைக்குரியதாக இருந்தது. 1857-ம் ஆண்டு கிளர்ச்சியைத் தொடர்ந்து பிரிட்டிஷ் முடியாட்சி நிறுவனத்திடமிருந்து பொறுப்பேற்ற பிறகு, வைஸ்ராய் மேயோ பிரபு நாட்டின் கல்விக் கொள்கையைப் பற்றி ஒரு கடுமையாக விமர்சித்தார். ஆங்கிலேயர்கள் சில நூறு அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே பெரும் செலவில் கல்வி கற்பித்ததாகவும், பின்னர் அவர்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு அறிவைப் பரப்புவதற்கு எதுவும் செய்ய மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
4. வைஸ்ராய் மேயோ பிரபு, 1854-ம் ஆண்டு ''உட்ஸ் அறிக்கை'' (Wood’s Despatch) பரிந்துரைகளில் கவனம் செலுத்தினார். இந்தப் பரிந்துரைகள் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகள் இரண்டிலும் கல்வியைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
5. குறிப்பிடத்தக்க வகையில், பல நூற்றாண்டு காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, 1900-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், ஆங்கிலத்தில் கல்வி கற்ற, ஐரோப்பிய பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்ட, மேற்கத்திய நிறுவனங்களில் சலுகைப் பெற்ற கல்வி கற்ற ஒரு இந்திய வர்க்கம் இருந்தது. இந்த இந்தியர்கள் பேரரசுக்கும் அதன் காலனித்துவ குடிமக்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகராகச் செயல்பட போதுமான அளவு ஆங்கிலமயமாக்கப்படுவார்கள் (anglicised) என்று ஆங்கிலேயர்கள் நம்பினர். ஆனால், விதியின் முரண்பாடாக, மேற்கத்திய கல்வி மூலம் 'நாகரிகமயமாக்கம்' செய்ய ஆங்கிலேயர்கள் விரும்பிய இந்திய வர்க்கமே இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடிகளாக மாறியது. இந்த எதிர்பாராத விளைவு 1835-ம் ஆண்டு தாமஸ் பாபிங்டன் மெக்காலேயின் கல்விக் கொள்கையால் ஏற்பட்டதாக சிலர் நம்புகிறார்கள்.
மெக்காலே மற்றும் இந்திய குடிமைப் பணி (ICS)
1. கார்ன்வாலிஸ் பிரபு 'இந்தியாவில் குடிமைப் பணிகளின் தந்தை' (Father of Civil Services in India) என்று கருதப்படுகிறார். 1793-ம் ஆண்டு சாசனச் சட்டம் (Charter Act) உடன்படிக்கை அடிப்படையிலான குடிமைப் பணிகளுக்கு வழிவகுத்தது. இது பணியாளர்களுக்கு மிகவும் கட்டமைக்கப்பட்ட நிர்வாகம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு வழிவகுத்தது. 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, கிழக்கிந்திய நிறுவனத்தின் இயக்குநர்கள் இளைஞர்களை குடிமைப் பணிக்கு பரிந்துரைத்தனர். உடன்படிக்கை அடிப்படையிலான குடிமைப் பணி இந்திய நிர்வாகத்தின் ஐரோப்பிய உயரடுக்காக மாறியது.
2. 1800-ம் ஆண்டில், வெல்லஸ்லி பிரபு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் கல்லூரியைத் தொடங்கினார். குடிமை சேவைகளுக்கு இளைஞர்களை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. இருப்பினும், 1806-ம் ஆண்டில், நிறுவனத்தின் இயக்குநர்கள் அதை இங்கிலாந்தில் உள்ள ஹைலிபரியில் (Haileybury) உள்ள கிழக்கிந்தியக் கல்லூரியுடன் மாற்றினர்.
3. ஹெய்லிபரியில் உள்ள கம்பெனி கல்லூரியில் சேருவதற்கு ஒரு எளிய தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒரு புரவலர் முறை (patronage system) மூலம் தேர்ச்சி பெற வேண்டும். ஹெய்லிபரி சட்டம், அரசியல் பொருளாதாரம் மற்றும் இந்திய மொழிகளில் 2 ஆண்டுகள் படிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
4. 1853-ஆம் ஆண்டுக்கு முன்பு , கிழக்கிந்திய கம்பெனி (EIC) இயக்குநர்கள் அரசு குடிமைப் பணியாளர்களை நியமித்தனர். கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்கள் (Board of Control) சில பரிந்துரைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 1853-ம் ஆண்டின் சாசனச் சட்டம் புரவலர் முறையை (patronage system) ஒழித்து திறந்த நிலை போட்டித் தேர்வுகளை (open competitive examinations) அறிமுகப்படுத்தியது. சர் சார்லஸ் ட்ரெவெல்யன் மற்றும் ராபர்ட் லோவ் போன்ற சீர்திருத்தவாதிகள் போட்டித் தேர்வுகளை குணநலனும் திறனும் கொண்ட போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வழியாக இதை ஆதரித்தனர்.
5. மெக்காலே குழு (1855) பரிந்துரைகள்: மெக்காலே பிரபுவின் அறிக்கை தகுதி அடிப்படையிலான குடிமை சேவையை முன்மொழிந்தது.
அரசு ஊழியர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாக இருக்க வேண்டும், (முன்னுரிமை ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜிலிருந்து).
தொழில் அல்லது சட்டப் பயிற்சியில் அல்ல, பொது கல்விக் கல்வியில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
புரவலர் முறையை (patronage system) போட்டித் தேர்வுகளால் மாற்ற வேண்டும்.
6. 1854-ம் ஆண்டு லண்டனில் ஒரு குடிமை சேவை ஆணையம் (Civil Service Commission) அமைக்கப்பட்டது. போட்டியாளர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 25 ஆண்டுகள் வரை இருந்தது. இதில் பாடத்திட்டம் ஐரோப்பிய கலாச்சாரங்களில் அதிக கவனம் செலுத்தியது. இது இந்திய போட்டியாளர்களுக்கு எதிராக இருந்தது. இந்திய குடிமை சேவைக்கான (ICS) முதல் போட்டித் தேர்வுகள் 1855-ல் லண்டனில் நடத்தப்பட்டன.
Original Article: Macaulay and his ‘Minute on Indian Education’: As PM Modi urges for 10-year pledge to reverse colonial legacy.