தற்போதைய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பயிற்சி (Special Intensive Revision) சரியான விதிகள், மேற்பார்வை, ஆய்வு (scrutiny) அல்லது தணிக்கை இல்லாமல் உள்ளது.
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India’s (ECI)) நடத்திக்கொண்டிருக்கும் சிறப்பு தீவிர திருத்தம் 2.0 குறித்து, பீகாரில் நடந்தது, இந்த செயல்முறை நியாயமற்ற முறையில் பல வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது. இந்தப் பயிற்சி நடைபெறும்போது, இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டைப் பாதிக்காதவாறு, குடிமை சமூகம், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
பீகார் பயிற்சி
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலின் (electoral roll) சிறப்பு தீவிர திருத்தம் சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்துள்ளது. ஆவணங்களை அதிகம் கோரிய இந்த மறு-சரிபார்ப்பு செயல்முறை, குடியிருப்பாளர்களின் வாக்காளர் தகுதியை மீண்டும் ஆராய்ந்தது. இது மக்களின் வாக்குரிமை பறிப்பு (mass disenfranchisement) மற்றும் குடியுரிமை சோதனை முறையை ரகசியமாக செயல்படுத்துவது போன்ற அச்சத்தை ஏற்படுத்தியது. 'திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்கள்' பல கடுமையான குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வயது வந்தோர்-வாக்காளர் விகிதத்தில் (adult-elector ratio) கடுமையான சரிவு, பெண்கள் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் விகிதாச்சாரமற்ற நீக்குதல்கள், மற்றும் நகல் பெயர்கள் மற்றும் போலிப் பதிவுகள் ஆகியவை அடங்கும். அனைவரும் அச்சப்பட்டது போலவே, மக்கள் ஏற்கனவே தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்துவிட்டனர்.
பீகார் சிறப்பு தீவிர திருத்தப் பயிற்சியின் போது இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்ட விதம், ஆணையம் நியாயமானதாகவும் நம்பகமானதாகவும் உள்ளதா என்பது குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. நீதிமன்றத்திலும் பொது இடங்களிலும் ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள், ஆணையம் பதில் அளிக்கத் தயாராக இல்லை மற்றும் வாக்காளர் பட்டியலை நியாயமாகவும் உள்ளடக்கியதாகவும் வைத்திருப்பதைவிட அதன் சொந்த அதிகாரத்தைப் பாதுகாப்பதில் தேர்தல் ஆணையம் அதிகக் கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
உச்சநீதிமன்றம் இந்த செயல்முறையை மேற்பார்வையிட்டு வருகிறது. இருந்த போதிலும், இந்த பயிற்சியின் சட்டப்பூர்வ தன்மையை கண்காணித்துவரும் உச்சநீதிமன்றம், சிறப்பு தீவிர திருத்த பயிற்சி நடத்துவதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் அதற்கான எந்தவொரு விதிகளின் சட்டப்பூர்வத்தன்மை பற்றிய முக்கியமான கேள்வியை கவனிக்க மறுத்துவிட்டது. இந்த நடைமுறையை தடையின்றி தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது உண்மையான வரம்புகள் இல்லாமல் செயல்முறையைத் தொடர அனுமதித்தது. நீதிமன்றம் சில நடைமுறைச் சிக்கல்களைச் சரிசெய்தாலும், அவை நிரந்தரமாக மாறுவதைத் தடுக்கவில்லை. சரியான திருத்தங்களை வலியுறுத்தாததன் மூலம், நீதிமன்றம் தேவையற்ற மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தில் பின்தங்கியுள்ள சமூகங்களின்மீது கடுமையான, நியாயமற்ற விளைவுகளுக்கு வழிவகுத்த ஒரு செயல்முறையை அங்கீகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், உள்நாட்டு இடம்பெயர்வோருக்கான (internal migrants) வாக்களிக்கும் உரிமை பிரச்சினை உள்ளது. இந்த பிரச்னை தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (Representation of the People Act,), 1950-ன் பிரிவு 19, ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு ஒரு நபர் அந்த தொகுதியில் 'இயல்பான வசிப்பவராக' (ordinarily resident) இருக்க வேண்டும் என்று கூறுகிறது. பிரிவு 20 'இயல்பான வசிப்பவர்' (ordinarily resident) என்ற சொல்லின் பொருளை வழங்குகிறது. இது காலாவதியானது மற்றும் இன்றைய இடம்பெயர்வோரின் மூன்று தனித்துவமான வகைகளை கையாளவில்லை: நீண்டகால அல்லது சிறுது கால-நிரந்தர குடியேறிகள் (long-term or semi-permanent migrants) — படிப்பு அல்லது நிரந்தர வேலைக்காக நீண்டகாலத்திற்கு இடம்பெயர்பவர்கள். குறுகியகால/பருவகால குடியேறிகள் (short-term/seasonal migrants) — ஒரு குறிப்பிட்ட பருவத்தில் (பொதுவாக வேலைக்காக) மட்டும் இடம்பெயர்பவர்கள். சுழற்சி அடிப்படையில் குடியேறுபவர்கள் (circular migrants) — சொந்த ஊருக்கும் வேலை செய்யும் இடத்திற்கும் மீண்டும் மீண்டும் பயணிப்பவர்கள் போன்றவர்கள் ஆவார்.
பங்கேற்பு ஜனநாயகம் (Participatory democracy)
தற்போதைய சிறப்பு தீவிர திருத்தப் பயிற்சிக்கு முறையான விதிகள், மேற்பார்வை, சரிபார்ப்புகள் அல்லது தணிக்கை இல்லை. வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்து சரிபார்க்கும்போது சமூக தணிக்கை ஏன் தேவை என்பதை இந்த செயல்முறை காட்டுகிறது. இந்தியாவில், சமூக தணிக்கை என்பது ஒரு முறையான செயல்முறையாகும். இதன்மூலம் தனிநபர்களும் சமூகங்களும் தங்கள் நலனுக்காகவோ அல்லது தங்கள் பெயரிலோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயல்பாட்டையும் அல்லது சேவையையும் "தணிக்கை" செய்ய மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது ஒரு செயல்பாட்டின் முழு சுழற்சியையும் மக்களே பொது தணிக்கை செய்வதை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 243A மற்றும் 243J பிரிவுகள் இத்தகைய கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு அதிகாரம் அளிக்கின்றன. சமூக ஆய்வு சட்டத்தினால் கட்டாயமாக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்ட வழிமுறையாக இது மாறியுள்ளது. எந்தவொரு பொதுத் திட்டங்களைச் சரிபார்க்க சமூகத் தணிக்கைகள் முக்கியம் என்றும், அவை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை வகுத்துள்ளதாக இந்தியக் தலைமைக் கணக்குத் தலைவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் தேர்தல் முறை உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமை (universal adult franchise) அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு நியாயமாக இருக்க, தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைக் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய சிறப்பு தீவிர திருத்த பயிற்சியில் போதுமான சரிபார்ப்பு இல்லை. மேலும், அவர்கள் எளிதில் செல்வாக்கு செலுத்தவோ அல்லது தலையிடவோ முடியும். தவிர, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 30% முதல் 40% வரை வாக்களிக்கக் கூட வராத நாட்டில், முழு வாக்களிக்கும் மக்கள்தொகையும் உண்மையில் வாக்காளர் பட்டியலில் இருப்பதற்கு விண்ணப்பிக்க மற்றும் மீண்டும் விண்ணப்பிக்க எதிர்பார்ப்பது நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு மாறானது. குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மூலம் குடியுரிமைக்கான புதிய ஆதாரத்தை சமர்ப்பிக்க அவர்களிடம் கேட்பது, வாக்காளர் பட்டியலைத் தயாரித்து துல்லியமான சேர்த்தல் மற்றும் நீக்குதல்களைச் செய்வதற்கான பொறுப்பிலிருந்து தேர்தல் ஆணையம் விலகுவதாகும். இது திறந்த மற்றும் கட்டாயமான சமூகத் தணிக்கை செயல்முறையின் மூலம் மக்களின் ஈடுபாட்டுடன் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியப் பணியாகும்.
சமூகத் தணிக்கை என்பது மக்களின் திறந்த, தனிப்பட்ட மற்றும் கூட்டுப் புத்தியின் பயன்பாடாகும். இது ஏற்கனவே உள்ள அடிப்படை ஆவணங்களையும் பதிவுகளையும் பயன்படுத்தி, அந்தப் பதிவுகளை உறுதிப்படுத்துவதற்கோ அல்லது அவற்றில் உள்ள தகவல்களை கேள்வி எழுப்புவதற்கோ சாட்சியங்களை வழங்குவதாகும். பஞ்சாயத்து / வார்டு / பூத் நிலை சமூகத் தணிக்கைகள் என்பவை, இந்தியாவில் உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமைக்கு மிகக் குறைந்த அளவு மோசடியையும், மிக அதிக அளவு உள்ளடக்கத்தையும் உறுதி செய்யக்கூடிய, வாக்காளர் பட்டியலின் சிறந்த மற்றும் தீவிரமான திருத்தமாகும்.
இத்தகைய சமூக தணிக்கை செயல்முறை J.M. Lyngdoh தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது 2003-ஆம் ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India’s (ECI)) மற்றும் குடிமக்கள் குழுக்களால் சோதனை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது. குடிமக்கள் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் அந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெறவிருந்த ஐந்து மாநிலங்களின் ஒவ்வொரு கிராம சபை அல்லது வார்டு அளவில் பரவலாக்கப்பட்ட சமூக தணிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. வாக்குச்சாவடி அலுவலரால் (booth-level officer) புதுப்பிக்கப்பட்ட தற்போதுள்ள வாக்காளர் பட்டியல்கள் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டன. ராஜஸ்தானில் மட்டும், இந்த செயல்முறையின் விளைவாக அல்லது பின்விளைவாக 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன. எனவே, இந்த செயல்முறைக்கு முன்னுதாரணம் உள்ளது.
தேர்தல் ஆணையம் இந்தப் பாதையைப் பின்பற்றுவதே சிறந்ததாக இருக்கும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2.0-ஐ பயிற்சியை மேலும் தொடர்வதற்கு முன்னதாக, குடிமை சமூகம் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து, கட்டாய சமூக ஆய்வு (mandatory social audit) உள்ளிட்ட விதிமுறைகளை உருவாக்கி அதை செயல்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும். தேர்தல் ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இது போன்ற நடவடிக்கைகள் அவசியம்.
M.G. தேவசகாயம், முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் மற்றும் தற்போது தேர்தல்கள் தொடர்பான குடிமக்கள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர்.
Original Article: The need for a social audit for SIR 2.0