இந்தியா கடைசியாக இந்திய-ஆப்பிரிக்க உச்சிமாநாட்டை நடத்திய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த அத்தியாயம் எழுதப்பட வேண்டும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக இந்திய-ஆப்பிரிக்க உச்சிமாநாட்டை (India-Africa Forum Summit (IAFS-III)) தலைநகரான டெல்லியில் இந்தியா நடத்தியது. 2015-ஆம் ஆண்டு உச்சிமாநாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடியின்கீழ், இந்தியாவின் இராஜதந்திர கற்பனையில் ஒரு பாய்ச்சலைக் குறிக்கும் வகையில், 54 ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளையும் இந்தியா வரவேற்றது.
அப்போதிருந்து, ஆப்பிரிக்கா முழுவதும் இந்தியா 17 புதிய தூதரகங்களைச் (missions) சேர்த்துள்ளது. வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. முதலீட்டு ஓட்டங்கள் வேகமெடுத்து வருகின்றன. ஆப்பிரிக்காவின் உலகளாவிய குரலுக்கு இந்தியாவின் ஆதரவு வளர்ந்துள்ளது. G-20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு முழு உறுப்பினர் அந்தஸ்தை உறுதி செய்வதில் இது முக்கியப் பங்கு வகித்தது. இப்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மட்டுமல்ல, அமைக்கப்பட்ட அடித்தளங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
வாய்ப்புகளும் சவால்களும்
2050-ம் ஆண்டுக்குள், உலகில் நான்கு பேரில் ஒருவர் ஆப்பிரிக்காவில் இருப்பார். இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும். இந்த இரண்டிற்கும் இடையே வர்த்தகம், மக்கள்தொகை, தொழில்நுட்பம் மற்றும் அபிலாஷைகளின் சாத்தியமான வளர்ச்சிப் பாதை உள்ளது.
ஆப்பிரிக்காவின் முதல் ஐந்து முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்று, மொத்த முதலீடுகள் $75 பில்லியன் ஆகும். இருப்பினும், அடிப்படை மாதிரி மாறியுள்ளது. துறைமுகங்களிலிருந்து மின் இணைப்புகள், தடுப்பூசி உற்பத்தி டிஜிட்டல் கருவிகள் வரை, ஈடுபாட்டிற்கான செய்தி தெளிவாக உள்ளது.
உறவுகளின் பரிணாமம் தெளிவாகத் தெரிகிறது. ஏப்ரல் 2025-ஆம் ஆண்டில், இந்தியாவும் ஒன்பது ஆப்பிரிக்க கடற்படைகளும் (கொமரோஸ், ஜிபூட்டி, கென்யா, மடகாஸ்கர், மொரிஷியஸ், மொசாம்பிக், சீஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் தான்சானியா) முதல் ஆப்பிரிக்க-இந்தியா முக்கிய கடல்சார் ஈடுபாட்டில் (Africa-India Key Maritime Engagement (AIKEYME)) இணைந்து பயிற்சி மேற்கொண்டன. இது, பகிரப்பட்ட கடல்சார் புவியியலில் வேரூன்றிய பாதுகாப்பு கூட்டாண்மையைத் தொடங்கியது.
இந்தியாவின் எக்ஸிம் வங்கி சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (Economic Community of West African States (ECOWAS)) முதலீடு மற்றும் மேம்பாட்டு வங்கிக்கு (ECOWAS Bank for Investment and Development (EBIDZ)) 40 மில்லியன் டாலர் வணிகக் கடன் உதவியை வழங்கியது. இது அளவில் சிறியதாக இருந்தாலும், ஆப்பிரிக்க தலைமையிலான வளர்ச்சியில் ஆர்வத்தின் சமிக்ஞையாகும். கல்வி வளர்ச்சி ஒரு நம்பிக்கைக்குரிய தூணாகவே உள்ளது.
ஜான்சிபாரில் (Zanzibar) உள்ள IIT மெட்ராஸின் புதிய வளாகம், மிகவும் வெளிப்படையான எடுத்துக்காட்டாக அமைகிறது. இதற்குப் பின்னால் பல ஆண்டுகால அறிவுசார் கூட்டாண்மைகள் உள்ளன. அஇந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (Indian Technical and Economic Cooperation (ITEC))வற்றில் Pan-African e-Network மற்றும் இந்தியாவின் திட்டம் ஆகியவை அடங்கும், இவை கண்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றன.
இவை தனிப்பட்ட முயற்சிகள் அல்ல; மாறாக, வளர்ந்து வரும் வலைப்பின்னலின் ஒரு பகுதியாகும். அதற்கு அப்பால், உலகளாவிய நிறுவனங்களில் ஆப்பிரிக்காவின் பிரதிநிதித்துவத்திற்காக இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேலும், இந்த கண்டத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கும் பங்களித்து வருகிறது.
ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம் வளர்ந்து வருகிறது. ஆனால், இன்னும் சீனாவைவிட பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்திய நிறுவனங்கள் பெரும் நம்பிக்கையுடன் வருகின்றன, ஆனால் பெரும்பாலும் சிறிய இருப்புநிலைக் குறிப்புகள் (balance sheets) மற்றும் அதிகாரத்துவ இழுபறியால் மெதுவாகச் செல்கின்றன. குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்மையானதுதான் என்றாலும் அது தவறானது என்று வலியுறுத்தப்படுகிறது.
அதற்குப் பதிலாக, இந்தியா மதிப்புச் சங்கிலியில் உயர வேண்டும். அதாவது எதிர்காலத்தை நோக்கிய துறைகளான — பசுமை ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இணைந்து முதலீடுகள் செய்யப்பட வேண்டும். ஆப்பிரிக்கா இன்று அதன் நிபந்தனைகளை வலியுறுத்துகிறது. ஆப்பிரிக்க கண்டத்திற்கான சுதந்திர வர்த்தகப் பகுதி (African Continental Free Trade Area (AfCFTA)) ஒரு மொத்த கண்டத்தின் சந்தைக்கான அடித்தளத்தை அமைக்கிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகள் இந்தப் பரிமாற்றத்திற்கு துணை புரிய வாய்ப்புள்ளது. ஆனால், கருவிகள் மட்டும் வியூகமாக அல்லாமல் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கிகாலி (ருவாண்டா), நைரோபி (கென்யா) மற்றும் லாகோஸ் (நைஜீரியா) போன்ற நகரங்களில், ஆப்பிரிக்காவின் புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்புகள் வளர்ந்து வருகின்றன என்றாலும் போட்டி உலகளாவியது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
மனித இணைப்பு
ஆப்பிரிக்காவிற்கு இந்தியாவின் மிக நீண்டகாலம் நிலைத்து நிற்கும் ஏற்றுமதி தொழில்நுட்பம் அல்ல. அது திறமைசாலிகள் தான். கடந்த பத்தாண்டில் ஏறத்தாழ 40,000 ஆப்பிரிக்கர்கள் இந்தியாவில் பயின்றுள்ளனர் – ITEC, இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) மற்றும் e-Network தளங்கள் மூலம். அவர்களில் பலர் தாயகம் திரும்பி, கொள்கைகளை வடிவமைத்தல், அமைச்சகங்களை நடத்துதல் அல்லது புத்தாக்கத்திற்கு தலைமையேற்றல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். அவர்கள் எல்லைகளுக்கு அப்பால் நம்பிக்கையைச் சுமந்து செல்லும் உயிரோட்டமான பாலங்கள் ஆவார்கள்.
இந்த நகர்வு ஒரு வழிப்பாதை மட்டுமல்ல. ஆப்பிரிக்க மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தியாவில் தங்களுக்கான இடத்தை செதுக்கி வருகின்றனர். ரான்டி மார்டின்ஸ் போன்ற நைஜீரிய கால்பந்து வீரர்கள் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்ட பெயர்களாகியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் தென்னாப்பிரிக்காவின் மோர்கன் மோர்கெல் ஆவார். இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களில் ஆப்பிரிக்கர்களின் குரல்கள் ஒலிக்கின்றன. இந்தக் கூட்டுறவு வெறும் ராஜதந்திர ரீதியிலானது மட்டுமல்லாமல் வாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது.
எதிர்காலத்தை நோக்கி
இந்த வேகத்தை இந்தியா தக்கவைத்துக் கொள்ள விரும்பினால், மூன்று நகர்வுகள் மிக முக்கியமானது.
முதலில், நிதியை உண்மையான விளைவுகளுடன் இணைக்க வேண்டும். ஒவ்வொரு கடன் ஒதுக்கீடும் புலப்படும் மற்றும் மதிப்புமிக்க இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். பொது நிதி தனியார் மூலதனத்தை இடமாற்றம் செய்யாமல், ஆபத்தைக் குறைக்கும் காரணியாகச் செயல்பட வேண்டும்.
இந்திய-ஆப்பிரிக்க டிஜிட்டல் வழித்தடத்தை உருவாக்குவது இரண்டாவது முக்கிய இலக்காகும். இது, UPI மற்றும் India Stack ஆகியவற்றை மட்டும் சார்ந்து இல்லாமல், ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் பலங்களையும் பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும். சுகாதாரம், கல்வி மற்றும் பணம் செலுத்துவதற்கான தளங்களை இணைந்து உருவாக்கி, உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு சேவைகளை வழங்கும் திறன் கொண்ட நாடுகளாக உருவாக வேண்டும்.
மூன்றாவதாக, நிறுவனரீதியான கட்டமைப்பை புதுப்பிக்க வேண்டும். இந்திய-ஆப்பிரிக்க உச்சிமாநாடு (India-Africa Forum Summit (IAFS)) 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படவில்லை. அந்த உச்சி மாநாடு அனைத்து ஆப்பிரிக்க நாடுகளையும் பிரதமர் மோடியின் வற்புறுத்தலால் ஒன்றிணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக, அது வெளிப்படுத்திய இராஜதந்திர ஆற்றலை நான் நேரில் கண்டேன் என்றும் இந்தியாவின் இராஜதந்திர நாட்காட்டியில் அந்த உணர்வை ஒரு தேதியாக மீண்டும் கொண்டுவர வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில், வணிகர்கள் நறுமணப் பொருட்கள் மற்றும் தங்கத்தைத் தேடி இந்தியப் பெருங்கடலைக் கடந்து வந்தனர். இன்று, இந்தியாவும் ஆப்பிரிக்காவும் வெறும் பொருட்களை மட்டும் பரிமாறிக்கொள்ளவில்லை. மாறாக, அவை நம்பிக்கையையும், திறனையும், கருத்துக்களையும் பரிமாறத் தொடங்கி எதிர்காலங்களை இணைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா முழு ஆப்பிரிக்காவையும் டெல்லிக்கு வரவேற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த அத்தியாயம் எழுதப்பட வேண்டும். ஒரு காலத்தில் இந்தியா ஆப்பிரிக்கா முழுவதற்கும் உதவிக் கரத்தை நீட்டியது. தற்போது ஒன்றாகக் கைகோர்த்து கட்டியெழுப்ப வேண்டிய சரியான நேரம் இதுவென்று கருதப்படுகிறது.
சையத் அக்பருதீன், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இந்திய நிரந்தரப் பிரதிநிதி ஆவார். தற்போது ஹைதராபாத்தில் உள்ள கௌடில்யா பொது கொள்கைப் பள்ளியின் (Kautilya School of Public Policy) தலைவராகப் பதவி வகிக்கிறார்.
Original Article: India needs to ‘connect, build and revive’ with Africa