உலகளாவிய 'மகிழ்ச்சியான நாடுகளின்' தரவரிசையை ஆராய்தல்

உதாரணமாக, அதிருப்தி என்பது அதிக எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கக்கூடும், துயரத்தை அல்ல.


இந்தியா 118-வது இடத்தில் இருக்கும் நிலையில், பின்லாந்து ஏன் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக இருக்கிறது? உலகிலேயே வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்போது, அரசியல் நிலையில்லாமை  மற்றும் மீண்டும் மீண்டும் வரும் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) பிணை எடுப்புகளுடன் போராடும் பாகிஸ்தான், இந்தியாவை விட எப்படி அதிக மதிப்பெண் பெற முடியும்? நாம் 'மகிழ்ச்சி'யை எவ்வாறு வரையறுக்கிறோம் என்பதைப் பற்றி இந்த ஆராய்ச்சி உண்மையிலேயே என்ன சொல்கிறது?


ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள நல்வாழ்வு ஆராய்ச்சிக் கழகத்தின், உலக மகிழ்ச்சி அறிக்கை-2025 மீண்டும் பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளை முதலிடத்தில் வைத்துள்ளது. இந்தியாவின் மதிப்பெண் 10-க்கு 4.389 ஆக உள்ளது. இது பல ஆண்டுகளாக சராசரியாக 124-ஆவது இடத்தைக் குறிக்கிறது. பாகிஸ்தான் 109-வது இடத்தில் உள்ளது. இரு நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக இயல்புநிலைக்கு எதிராக இந்த வேறுபாடு குழப்பமாகத் தெரிகிறது.


3.7 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (Gross Domestic Product (GDP)) இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகும். பாகிஸ்தானின் 375 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதில் 10 சதவீதம் மட்டுமே. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன் உள்கட்டமைப்பு விரிவடைந்து வருகிறது. அதேசமயம், பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் பிணை எடுப்புகளின் மூலம் வாழ்கிறது. இருப்பினும், பாகிஸ்தான் 'மகிழ்ச்சியான நாடாக' தோன்றுகிறதா?


மகிழ்ச்சி என்பது பொருளாதார அளவுகோலா, உணர்வின் அடிப்படையிலானதா, அல்லது வேறு எதற்காவது மாற்றாக உள்ளதா?

அளவீடுகளின் மாயை


அந்த அறிக்கை, கேலப் உலகக் கருத்துக் கணிப்பின் (Gallup World Poll) கேன்ட்ரில் வரிசை முறையை (Cantril Ladder) அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் மக்கள் தங்கள் வாழ்க்கையை 0 முதல் 10 வரை மதிப்பிடுகிறார்கள். இது ஆறு மாறிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 


குறைந்த எதிர்பார்ப்புகளைக் கொண்ட சமூகங்கள் பெரும்பாலும் அதிக மகிழ்ச்சியைப் புகாரளிக்கின்றன. ஏனெனில், மக்கள் கஷ்டங்களுக்கு ஏற்ப வாழ்வதற்கு பழகிவிடுகிறார்கள். இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாடுகளில், அதிகரிக்கும் விருப்பங்கள் மற்றும் தொடர்ச்சியான ஊடகக் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் நல்வாழ்வு மேம்பட்டாலும் கூட, உணரப்பட்ட திருப்தியைக் குறைக்கும் வாய்ப்புள்ளது. குடிமக்கள் சிறந்த நிர்வாகத்தை அல்லது தூய்மையான நகரங்களை எதிர்பார்க்கும்போது, அதிருப்தி என்பது உண்மையான துன்பத்தை குறிக்காமல், மாறாக மக்களின் உயர்வான எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கிறது.


அதிக வரிகளை விதிக்கும் நாடுகளான நோர்டிக் நாடுகள், ஆழ்ந்த சமூக நம்பிக்கையுடன் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், சாதனை அளவிலான செல்வம் இருந்தபோதிலும் அமெரிக்கா 24-வது இடத்திற்குச் சரிந்ததற்கான காரணத்தை இந்த முரண்பாடு விளக்குகிறது.


அந்த அறிக்கையே, "சமூகத்தின் கருணை மீதான நம்பிக்கை" மற்றும் சமூக நம்பிக்கை ஆகியவை வருமானத்தை விட மகிழ்ச்சியை சிறப்பாக கணிக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறது.


அப்படியானால், இந்தியாவிற்கான சவால் என்பது வளர்ச்சி அல்ல, சமூகத் தொடர்பு தான். உலகளவில், ஏறக்குறைய 19 சதவீதம் இளம் வயதினர் தங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை என்று கூறுகிறார்கள். இது 2006-ஆம் ஆண்டிலிருந்து 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இடப்பெயர்வு மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை, உறவுகளை மறுவடிவமைக்கும் நிலையில், இந்தியர்களும் குறுகி வரும் நிஜ-உலக வலையமைப்புகளையும், விரிவடைந்து வரும் மெய்நிகர் வலையமைப்புகளின் பாதிப்புகளையும்  எதிர்கொள்கின்றனர். 

அரசியல் கண்ணோட்டம்


உலகளாவிய குறியீடுகள் கருத்து அடிப்படையிலான சார்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழுவின் 2022-ஆம் ஆண்டு அறிக்கை (சஞ்சீவ் சன்யால் மற்றும் ஆகாங்க்ஷா அரோரா) ஃப்ரீடம் ஹவுஸ் (Freedom House) மற்றும் வி-டெம் (V-Dem) போன்ற குறியீடுகள் சிறிய, வெளிப்படைத்தன்மையற்ற மேற்கத்திய "நிபுணர்களின்" குழுக்களையே சார்ந்துள்ளன என்பதைக் காட்டியது. அவர்களின் அகநிலைக் கருத்துக்கள் முடிவுகளைத் திரித்துக் காட்டுகின்றன.


ஒரு-கட்சி ஆட்சி வெறுமனே எதிர்ப்பு இல்லாததால் சுதந்திரமாகத் தோன்றலாம். ஊடகங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஆட்சிகள் “நிலையானதாகத்” தோன்றலாம். ஏனெனில், குடிமக்கள் குறைந்த புகார்களையே தெரிவிக்கின்றனர். இதற்கு நேர்மாறாக, ஜனநாயகங்கள் வெளிப்படைத்தன்மைக்காகத் தண்டிக்கப்படுகின்றன. உலக மகிழ்ச்சி அறிக்கை (World Happiness Report) இந்தத் தவறை மீண்டும் செய்ய ஆபத்தை விளைவிக்கிறது. ஜனநாயகக் கூச்சலுக்கு மேல் அமைதியான இணக்கத்தை  இந்த அறிக்கை மதிப்பிடுகிறது. இந்தியாவின் குறைந்த மதிப்பெண் சுய-விமர்சன விழிப்புணர்வை  மனநிறைவடைய விரும்பாத ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கின்றது. 


கடந்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவின் தரவரிசை 94-வது இடத்திலிருந்து 144-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்பு மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா(Pradhan Mantri Garib Kalyan Yojana) போன்ற நலத்திட்டங்கள் மூலம் 2022-ஆம் ஆண்டில் சிறந்த நிலைக்கு வந்தது. ஊழல் மோசடிகள் மற்றும் மந்தநிலைக்கு மத்தியில் 2012-ஆம் ஆண்டு மிக மோசமான நிலை ஏற்பட்டது. ஆனால், மகிழ்ச்சி என்பது நிதிச் செயல்திறனை அரிதாகவே கண்காணிக்கிறது. சமூக நம்பிக்கை, நியாயம் மற்றும் சமூகம் ஆகியவை மிக முக்கியம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.


பின்லாந்தில், தொலைந்த பணப்பை திரும்பக் கொடுக்கப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். இது நிறுவன ரீதியான நம்பிக்கையின் ஒரு குறியீடு. இந்தியாவில், நிர்வாகத்தில் உள்ள சீரற்ற தன்மை அந்தக் நம்பிக்கையை அழிக்கிறது. இருப்பினும், உள்ளூர் மற்றும் குடும்ப ரீதியான நம்பிக்கை வலுவாகவே உள்ளது. கோவிட்-19 ஊரடங்கு காலக்கட்டம் இதை வெளிப்படுத்தியது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தது மட்டுமல்லாமல், நகரங்களில் இல்லாத பாதுகாப்பைச் சமுதாயத் தொடர்புகள் அளித்ததால் கிராமங்களுக்குத் திரும்பினர். உலகளாவிய அளவுகளால் புறக்கணிக்கப்படும் இத்தகைய முறைசாரா நம்பிக்கை, மீள்தன்மையைத் தக்கவைத்துக்கொள்கிறது.


இந்த அறிக்கையின் நடத்தைசார் கட்டமைப்பு,  அதாவது, மேற்கத்திய, கல்வி கற்ற, தொழில்மயமாக்கப்பட்ட, பணக்கார மற்றும் ஜனநாயக (WEIRD (Western, Educated, Industrialised, Rich and Democratic) சார்புநிலையையும் கொண்டுள்ளது. இது தனிநபர்வாத சமூகங்களின் இயல்பான நிறுவன ரீதியான நம்பிக்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள கூட்டு நம்பிக்கை வலையமைப்புகளை (collective trust networks) புறக்கணிக்கிறது. அங்கு குடும்பமும் சமூகமுமே உண்மையான பாதுகாப்பு அமைப்புகளாகக் கருதப்படுகின்றது.


அப்படியிருந்தாலும், நிறுவன ரீதியான நம்பிக்கை பரிணாமம் அடைந்து வருகிறது. மனநலம், பணியிட நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கம் (inclusion) ஆகியவற்றைச் சுற்றியுள்ள பரப்புரைகள் ஒரு கலாச்சார மாற்றத்தைக் குறிக்கின்றன. டெலி-மானஸ் (Tele-MANAS - மாநிலங்கள் முழுவதும் தொலை மனநல உதவி மற்றும் வலையமைப்பு) மற்றும் மைண்ட் இந்தியா போன்ற திட்டங்கள் உணர்ச்சி ரீதியான மீள்தன்மையைத் தக்கவைக்கின்றன. ஒரு காலத்தில் ஆடம்பரமாக நிராகரிக்கப்பட்ட மகிழ்ச்சி, இப்போது ஒரு நிர்வாக அக்கறையாக மாறியுள்ளது.


அனுதாபத்தை நோக்கிய உயர் இலக்குகள்


மகிழ்ச்சி படிக்கட்டுகளில் ஏறுவதற்கு, இந்தியா தனது பொருளாதார இலட்சியத்தை, இரக்க உணர்வு உள்கட்டமைப்புடன் இணைக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டுமல்லாமல், மூன்று வழிகள் மூலம் மொத்த தேசிய மகிழ்ச்சியிலும்  (Gross National Happiness (GNH)) முதலீடு செய்ய வேண்டும். முதலாவதாக, சமூக மூலதனத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். சமூக இடங்கள், கூட்டாக உண்ணும் உணவு மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்புகளை உருவாக்க வேண்டும். வீட்டுத் தேவை அளவும் மற்றும் சமூகத்தின் கருணை மீதான நம்பிக்கை ஆகியவை மகிழ்ச்சியை கணிசமாக உயர்த்துவதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.


இரண்டாவது, நிறுவன ரீதியான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். குடிமக்கள்-அரசுக்கு இடையேயான தொடர்புகளை எளிதாக்க வேண்டும்.  ரேஷன் அட்டைகள் முதல் ரயில்வே டிக்கெட்டுகள் வரை, பொது சேவைகள் வெளிப்படையாகச் செயல்படும்போது, நம்பிக்கை தானாகவே பின்தொடரும்.


மூன்றாவதாக, மன நலத்தை ஒரு பொருளாதாரக் கொள்கையாக அங்கீகரிக்க வேண்டும். உற்பத்தித் திறன் ஆதாயங்கள் உளவியல் ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் (World Health Organization (WHO)), மன நலனுக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு $1-க்கும், $4 வருமானம் கிடைப்பதாக மதிப்பிடப்படுகிறது. இது எந்தப் பொருளாதாரமும் புறக்கணிக்கக்கூடாத ஒரு முதலீடாகும். 'தி பெர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்' (The Pursuit of Happyness) நமக்கு நினைவூட்டுவது போல், மகிழ்ச்சி என்பது நாம் வைத்திருக்கும் ஒரு விஷயம் அல்ல. அது நாம் தேடிச் செல்லும் ஒரு விஷயம். இந்தியாவின் அமைதியின்மை –அதன் விவாதங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த வாழ்க்கைகளுக்கான கோரிக்கைகள்  நலவாழ்வின் மிகத் தெளிவான அறிகுறியாக இருக்கலாம். குறைவான திருப்தி என்பது மகிழ்ச்சியின்மை என்று அர்த்தம் அல்ல. மாறாக, அது லட்சியத்தைக் குறிக்கிறது.


மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவியற்கு 118-வது இடம் என்பது இந்தியர்கள் இன்னும் சுத்தமான காற்று, நியாயமான நிர்வாகம் மற்றும் முழுமையான வாழ்க்கையைத் தேடுகிறார்கள் என்றே அர்த்தமே தவிர, நாடு மகிழ்ச்சியற்றது என்று அர்த்தமல்ல. ஒருவேளை நாடு இன்னும் முழுமையடையாமல் உண்மையான மகிழ்ச்சிக்காக பாடுபடுகிறது எனலாம்.


சௌர்யபிரதா மொஹபத்ரா, ராஜஸ்தான், IIT ஜோத்பூரில் உள்ள School of Liberal Arts-ல் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார். அங்கிதா சர்மா, ராஜஸ்தான், IIT ஜோத்பூரில் உள்ள Rekhi Happiness Group குழுமத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், School of Liberal Arts-ல் உளவியல் துறையில் உதவிப் பேராசிரியராகவும் உள்ளார். சுமன் டாக்கா, ராஜஸ்தான், IIT ஜோத்பூரில் உள்ள School of Liberal Arts-ல் உளவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.


Original Article: Unpacking the global ‘happiness’ rankings 

 

Share: