1979-ஆம் ஆண்டு காவல்நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்ததைக் கண்டிப்பதன் மூலம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை சிறப்பாகப் பாதுகாப்பதையும் சம்மதத்தை மறுவரையறை செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் வளர்ந்துவரும் சட்ட சீர்திருத்தங்களை இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் எடுத்துரைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒரு பழங்குடியின இளம் பெண்ணை காவலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அந்தப் பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படாததால், அந்த இளம்பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்ததாக முடிவெடுத்து, உச்சநீதிமன்றம் இரண்டு காவல்துறையினரை விடுவித்த நாற்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் தலைமை நீதிபதி பி. ஆர். கவாய், அந்தத் தீர்ப்பை “ஒரு அமைப்புரீதியான அவமானத் தருணம்” என்று அழைத்தார். அந்தத் தீர்ப்பு, சம்மதம் குறித்த மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் ஆணாதிக்கப் புரிதலைப் பிரதிபலித்தது, இது பாலியல் வன்முறை பெரும்பாலும் நிகழும் அதிகாரம், வற்புறுத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடியத் தன்மை ஆகியவற்றின் சமூக சூழலைத் திறம்பட மறுத்தது.
1979-ஆம் ஆண்டு துக்காராம் Vs மகாராஷ்டிரா மாநில அரசு வழக்கில் வழங்கப்பட்ட “சங்கடமான” அந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறினார். ஏனெனில், சட்ட அமைப்பால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கத் தவறியதால், அந்தத் தீர்ப்புக்கு நாட்டு மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விடுதலையானது இந்தியாவில் வலுவான பாலியல் வன்முறைச் சட்டங்களுக்காகப் பெண்களின் உரிமை சார்ந்த இயக்கத்தைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.
இது குற்றவியல் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய; காவல்நிலையங்களில் வைத்து நிகழும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்த; வரதட்சணைத் தடைச் சட்டத்தின்கீழ் உள்ள தண்டனைகளை மேலும் கடுமையானதாக மாற்ற; மற்றும் குடும்ப நீதிமன்றச் சட்டத்தை அறிமுகப்படுத்தவும் நாடாளுமன்றத்தை கட்டாயப்படுத்தியது. 1983-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டில் இந்திய நியாய சன்ஹிதாவில் (Bharatiya Nyaya Sanhita (BNS)) பாலியல் குற்றங்கள் தொடர்பான விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் வரை, குற்றவியல் சட்டத் திருத்தங்களின் தொடரானது, மாதுரா பாலியல் வன்கொடுமை (துக்காராம் Vs மகாராஷ்டிரா மாநிலம்) தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் “நிறுவனரீதியான தோல்வியின்” உணர்வைக் குறிக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
வழக்கின் போக்கு
நீதிபதி கிருஷ்ணா ஐயர் அவர்கள் வழங்கிய நந்தினி சத்பதி (1978) வழக்கில் அளித்த தீர்ப்பின் "மை காய்வதற்கு முன்பே" (தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே), காவலில் வைக்கப்பட்டிருந்த, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரை மேலும் கண்டித்து, 1979-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், பெண்களை காவல் நிலையங்களுக்கு வரவழைக்கும் நடைமுறையைக் கண்டித்ததுடன், ஒரு பெண்ணை காவல்துறை அவரது வீட்டில்தான் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரா பாலியல் வன்கொடுமை வழக்கில் நடந்த சம்பவம் மார்ச் 1972-ஆம் ஆண்டில் நடந்தது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர், 14 முதல் 16 வயதுக்குட்பட்ட ஒரு இளம்பெண். இரவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட நான்கு பேரில் ஒருவர். சுருக்கமான விசாரணைக்குப் பிறகு, மற்றவர்கள் காவல் நிலையத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட பிறகு அவர் மட்டும் தங்கும்படி காவலர்களால் கேட்கப்பட்டார். காவல் நிலையத்திற்குள் ஒரு தலைமைக் காவலர் மற்றும் ஒரு காவலர் என இரண்டு அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். விசாரணை நீதிமன்றம் தனது தீர்ப்பில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரை "அதிர்ச்சி தரும் பொய்யர்" என்று கண்டறிந்ததுடன், அவரது சாட்சியம் "பொய்கள் மற்றும் நம்பத்தகாதவற்றால் நிரம்பியுள்ளது" என்றும் கூறி அதிர்ச்சி அளிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கியது. அவர் காவல் நிலையத்தில் இருந்தபோது பாலியல் உடலுறவு கொண்டார் என்றும் ஆனால் பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்படவில்லை என்றும், அவர் பாலியல் உடலுறவுக்கு "பழக்கப்பட்டவர்" என்றும் நீதிமன்றம் முடிவுசெய்து வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
1976-ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம், அமர்வு நீதிபதியின் தீர்ப்பினை ரத்து செய்து, அந்த இளம்பெண் கட்டாய பாலியல் உடலுறவுக்கு ஆளானார் என்றும் இது பாலியல் வன்கொடுமைக்கு சமம் என்ற முடிவுக்கு வந்தது. அதிகாரத்தில் இருந்த நபர்களின் அணுகுமுறையை தன்னால் எதிர்க்க முடியாத பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின், "சம்மதம்" என்று சொல்லப்படுவது 'வெறும் செயலற்ற பணிவு' மட்டுமே என்று உயர்நீதிமன்றம் கூறியது. இரண்டு காவல்துறை அதிகாரிகளின் மேல்முறையீட்டில், உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒதுக்கி வைத்ததுடன், "கூறப்பட்ட உடலுறவு அமைதியான முறையில் நடந்தது" என்றும், அந்தப் பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் மனுதாரர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டது.
நாட்டையே உலுக்கிய ஒரு கடிதம்
மதுரா பாலியல் பலாத்கார வழக்கு தேசிய அளவில் கவனத்தைப் பெறவும், கோபத்தைத் தூண்டவும் காரணம், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு காவல்துறையினரின் விடுதலைக்குச் சற்றுப் பின், செப்டம்பர் 1979-ஆம் ஆண்டில் நான்கு நபர்கள் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம்தான்.
செப்டம்பர் மாதம் 1979-ஆம் ஆண்டில், உபயேந்திர பாக்ஸி, வசுதா தகாம்வார், ரகுநாத் கேல்கர் மற்றும் லோத்திகா சர்க்கார் ஆகியோர் நீதிபதிகளுக்கு எழுதிய அக்கடிதம், 'கட்டுப்படுதலுக்கும்' (submission) 'சம்மதத்திற்கும்' (consent) இடையே உள்ள சட்ட மற்றும் பொது அறிவு ரீதியிலான தெளிவான வேறுபாட்டைக் குறிப்பிட்டது. சம்மதத்தில் கட்டுப்படுதல் அடங்கும்; ஆனால் அதன் தலைகீழ் (கட்டுப்படுதல் சம்மதமாக இருக்க வேண்டியது) உண்மையாக இருக்க வேண்டியதில்லை. எதிர்ப்பின்மை என்பது சம்மதத்தைக் குறிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.
ஒரு இளம் பெண்ணை அழைத்துக் காவல் நிலையத்தில் தடுத்து வைத்த சட்டத்தின் அப்பட்டமான மீறல் குறித்துத் தீர்ப்பில் ஒரு வார்த்தைகூட கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை அந்தக் கடிதம் குறிப்பிட்டது. பாலியல் வன்கொடுமைக்கான களமாக அல்லது பாலியல் உடலுறவுக்கு அடிபணியச் செய்வதற்கான களமாகக் காவல் நிலையம் பயன்படுத்தப்பட்டதைக் கண்டித்துத் தீர்ப்பில் ஒரு வார்த்தைகூட தெரிவிக்கப்படவில்லை. “சமூக-பொருளாதார நிலை, சட்ட உரிமைகள் பற்றி அறியாமை, பாதிக்கப்பட்டவரின் வயது, சட்ட சேவைகளுக்கான அணுகல் இல்லாமை மற்றும் இந்தியக் காவல் நிலையங்களில் ஏழைகள் மற்றும் சுரண்டப்பட்டவர்களை அச்சுறுத்தும் பய உணர்வு ஆகியவற்றைப் பற்றி நீதிமன்றம் சற்றும் கருத்தில் கொள்ளவில்லை என்று அந்தக் கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. டெல்லியை ஒட்டிய கிராமங்களில் உள்ள சில காவல் நிலையங்களுக்கு, வறுமையின் முகமூடியுடன், மறைமுகமாகச் செல்லுமாறு நாங்கள் மரியாதையுடன் பரிந்துரைக்கலாமா?" என்று அந்தக் கடிதம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குச் சவால் விடுத்திருந்தது.
எண்ணற்ற திருத்தங்கள்
1979-ஆம் ஆண்டு தீர்ப்பைத் தொடர்ந்து எழுந்த பொதுமக்களின் கோபம், முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376-ன் கீழ் காவல் பாலியல் வன்கொடுமை ஒரு தனி குற்றமாக சேர்க்கப்பட்டு, 1983-ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றம் அறிமுகப்படுத்த வழிவகுத்தது. காவலில் நிகழும் வன்புணர்வு ஒரு தனி குற்றமாக சேர்க்கப்பட்டது. இந்தத் திருத்தம், பாலியல் வன்புணர்வு நடந்தது என்ற உண்மை நிறுவப்பட்டால், காவலில் நிகழும் வன்புணர்வு வழக்குகளில் நிரூபிக்க வேண்டிய பொறுப்பை வன்புணர்வால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு மாற்றியது. குழந்தை திருமணங்களுக்கு எதிராக, குறிப்பாக உயர்சாதி குடும்பங்களில், தனது வேலையின் ஒரு பகுதியாக குரல் எழுப்பிய பன்வாரி தேவி என்ற கும்ஹர் பெண் மற்றும் துணை செவிலியரின் கூட்டு வன்புணர்வுக்குப் பிறகு ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டபோது, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க விசாகா வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வகுத்தது.
டிசம்பர் மாதம் 2012-ஆம் ஆண்டு, இரவு ஓடும் பேருந்தில் ஆறு ஆண்களால் 22 வயதுடைய இயன்முறை (physiotherapy) மருத்துவப் பயிற்சி மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகி, தாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடத்தியவர்களைத் தண்டிப்பதற்கான கடுமையான சட்டங்களை மக்கள் கோரினர். நீதிபதி ஜே.எஸ். வர்மா குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சற்றே தளர்வாக உருவாக்கப்பட்ட 2013-ஆம் ஆண்டின் குற்றவியல் சட்டம் திருத்தச் சட்டம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கையைப் (First Information Report (FIR)) பதிவு செய்யாத காவல்துறை அதிகாரிகளை தண்டிப்பதற்கான விதிகள் அல்லது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகளுக்கு எதிரான விதிகள் உள்ளிட்ட பல அம்சங்களை அறிமுகப்படுத்தியது. 2013-ஆம் ஆண்டு திருத்தங்கள், வன்கொடுமையின் வரையறையை, பிரிவு 375-ல் உள்ளபடி, கட்டாய பாலியல் உறவு தவிர பிற குற்றச்செயல்களையும் சேர்க்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டன.
மிக முக்கியமாக, ஒரு பெண்ணின் மௌனம் அல்லது பலவீனமான மறுப்பை 'ஆம்' என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பதை இச்சட்டம் தெளிவுபடுத்தியது. மேலும், இந்தத் திருத்தங்கள் சம்மத வயது வரம்பை 16-ல் இருந்து 18-ஆக உயர்த்தி தீர்ப்பு வழங்கியது.
மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு அல்லது வன்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டவர் இறக்க நேரிட்டால் அல்லது 'நிரந்தரமான உணர்வற்ற நிலைக்கு' (persistent vegetative state) செல்ல நேரிட்டால், மரண தண்டனை விதிக்கப்படும் என்று திருத்தங்கள் கூறின.
2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் நடந்த உன்னாவ் மற்றும் கதுவா பாலியல் வன்கொடுமை வழக்குகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர பாராளுமன்றத்தைக் கட்டாயப்படுத்தின. உன்னாவ் வழக்கில், முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் ஒரு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
2018-ஆம் ஆண்டின் குற்றவியல் சட்டம் திருத்தச் சட்டம், பாதிக்கப்பட்டவர் 12 வயதுக்குட்பட்டவராக இருந்தால், வன்புணர்வு வழக்குகளில் மரண தண்டனையை ஒரு தண்டனையாக வழங்கியது. பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்குட்பட்டவராக இருந்தால், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2018-ஆம் ஆண்டு திருத்தங்களில் சேர்க்கப்பட்டன. இந்தத் திருத்தங்கள் வன்புணர்வு வழக்குகளில் விசாரணை மற்றும் விசாரணைக்குப் பிந்தைய மேல்முறையீட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தின. ஒரு விசாரணையை முடிக்க இரண்டு மாதங்கள், மற்றும் மேல்முறையீடுகளை முடிக்க ஆறு மாதங்கள் என காலக்கெடுவை நிர்ணயித்தன.
இறுதியாக, பாரதிய நியாய சன்ஹிதா மூலமான 2023-ஆம் ஆண்டின் குற்றவியல் சட்டம் திருத்தச் சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் இருவருக்கும் பாலின-நடுநிலையானதாக (gender-neutral) ஆக்கியது. 18 வயதுக்குட்பட்ட பெண்ணின் மீது கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என சீரான தண்டனையை விதித்தது. தவறான வாக்குறுதியின் பேரில் பாலியல் உறவு போன்ற புதிய குற்றங்களையும் வரையறைக்குள் சேர்த்ததுடன், பாலியல் துன்புறுத்தலின் வரையறையையும் பாரதிய நியாய சன்ஹிதா விரிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
Original Article: The trajectory of anti-rape laws in India.