சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய காசநோய் அறிக்கை 2025, இந்தியாவில் காசநோயின் சுமை தொடர்ந்து குறைந்து வந்தாலும், நாடு அதன் ஒழிப்பு இலக்கை அடைவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால், காசநோய் என்றால் என்ன? இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன? மற்றும் காசநோயை ஒழிப்பதில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் காசநோயின் சுமை தொடர்ந்து குறைந்து வந்தாலும், நவம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட உலகளாவிய காசநோய் அறிக்கை 2025-ன் படி, இந்தியா இந்த நோயை ஒழிக்கும் இலக்கை அடைவதற்கான விகிதத்தில் அருகில்கூட இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. 2024-ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 27.1 லட்சம் காசநோய் பாதிப்புகளும் மற்றும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன. இது உலகெங்கிலும் உள்ள காசநோய் பாதிப்புகளின் எண்ணிக்கையில் இந்தியாவை முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தச் சூழலில், இந்த ஆண்டு காசநோய் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. உலக காசநோய் அறிக்கை 2025 நவம்பர் 12-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்டது. இது உலகளாவிய, பிராந்திய மற்றும் நாடுகள் அளவிலான காசநோய் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றிய விரிவான மற்றும் புதுப்பித்த மதிப்பீட்டை வழங்குகிறது.
2. இந்த ஆண்டு அறிக்கை, 2015 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியா புதிய வழக்குகளில் 21 சதவீத குறைப்பையும், இறப்புகளில் 28 சதவீத குறைப்பையும் மட்டுமே அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. காசநோய் பாதிப்பைக் 50% குறைத்தல் மற்றும் காசநோய் இறப்புகளை 75% குறைத்தல் என்ற 2025-க்கான காசநோய் முடிவுக்குக் கொண்டுவரும் இலக்குகளை நெருங்கக்கூட இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
3. உண்மையில், 2015-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது காசநோய் பாதிப்புகளை 20 சதவீதம் குறைத்தல் மற்றும் இறப்புகளை 35 சதவீதம் குறைத்தல் என்ற 2020-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய இலக்குகளில் பாதியை மட்டுமே 2024-ஆம் ஆண்டில் இந்தியாவால் அடைய முடிந்தது என்பதையே இந்த அறிக்கை முக்கியமாகக் குறிக்கிறது. ஆனால், இந்தியாவால் அடையப்பட்ட இந்த காசநோய் பாதிப்பு குறைப்பு விகிதம் உலக சராசரியைவிட அதிகமாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. உலகளவில் 2015 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் காசநோய் பாதிப்பு 12 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. இந்த அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில், இந்தியா சுமார் 27.1 லட்சம் பாதிப்புகளையும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. இது உலகளவில் காசநோய் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிக பங்களிப்பை வழங்கும் நாடுகளில் இந்தியாவையும் ஒன்றாக ஆக்கியுள்ளது.
5. இந்தியாவின் சிகிச்சைப் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் 85 சதவீதமாக இருந்த சிகிச்சைப் பாதுகாப்பு, 2024-ஆம் ஆண்டில் 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தச் சிகிச்சைப் பாதுகாப்பின் விரிவாக்கமானது, 'BPaL நெறிமுறை' (BPaL regimen) போன்ற முயற்சிகளால் சாத்தியமானது என்கின்றனர். இந்த நெறிமுறை, மருந்துகளுக்குக் கட்டுப்படாத (resistant) காசநோய் தொற்றுக்கான சிகிச்சை காலத்தை, முன்பு தேவைப்பட்ட 18 முதல் 24 மாதங்களிலிருந்து, ஆறு மாதங்களாகக் குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
6. மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோய்க்கான (Drug-Resistant TB) மிகப்பெரிய பங்களிப்பாளர்களில் இந்தியாவும் தொடர்ந்து இருந்துவருகிறது. உலகளாவிய அளவில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பாதிப்புகள் இந்தியாவில் உள்ளன. இத்தகைய எதிர்ப்புத் திறன் கொண்ட தொற்றுகளின் சுமை குறையவில்லை என்றாலும், பெரிய அளவில் அதிகரிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7. 2023-ஆம் ஆண்டில் சிகிச்சையைத் தொடங்கியவர்களுக்கு காசநோய் சிகிச்சையின் வெற்றி விகிதம் 90 சதவீதமாக இருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது. இது உலகளாவிய அளவிலா வெற்றி விகிதமான 88 சதவீதத்தைவிட அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசநோய் என்றால் என்ன?
1. காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (mycobacterium tuberculosis) எனப்படும் ஒரு கிருமியால் ஏற்படுகிறது. இது முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கிறது. ஆனால் உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. காசநோய் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது காற்றின் மூலம் இந்த நோய் பரவுகிறது.
2. கடந்த ஆண்டு, உலகளவில் காசநோய்தான் (TB) மிகவும் கொடிய தொற்றுநோயாக இருந்தது. ஏனெனில், இது 10.7 மில்லியன் மக்களைப் பாதித்து 1.23 மில்லியன் உயிர்களைப் பலிகொண்டது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
3. நோய் கண்டறியப்பட்டபிறகு, சிகிச்சை முறையானது மருந்து-எதிர்ப்பு காசநோயா அல்லது சாதாரண காசநோயா என்பதைப் பொறுத்தது. நிபுணர்களின் கூற்றுப்படி, காசநோயில் இருந்து மீளும்போது, நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவும் வகையில், நன்கு சமநிலைப்படுத்தப்பட்ட மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிக அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள்
2018-ஆம் ஆண்டில், உலக இலக்கைவிட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் லட்சிய இலக்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மதிப்பிடப்பட்ட காசநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை, அத்துடன் 1,00,000 மக்களுக்கு காசநோய் பாதிப்பு விகிதம், போன்றவற்றில் தொடர்ச்சியான சரிவு இருந்தபோதிலும், 2025-ஆம் ஆண்டுக்குள் பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோயை ஒழிப்பதற்கான இலக்குக்கு அருகில்கூட இந்தியா இல்லை என்பதையே இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. காசநோயை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவை:
1. இந்தியாவில், காசநோய் சிகிச்சைக்கான மருந்துகளை அரசாங்கம் இலவசமாக வழங்குகிறது. ஏனெனில், இந்த மருந்துகள் விலை உயர்ந்தவை மற்றும் இந்தச் சிகிச்சை இரண்டு ஆண்டுகள் வரைகூட தொடரலாம் என்பதால், இது மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
2. காசநோய் பாதிப்புகளைக் கண்காணிக்க, ஆன்லைன் நி-க்ஷய் (Ni-kshay) இணையதளம் நிறுவப்பட்டுள்ளது. நி-க்ஷய் மித்ராக்கள் (Ni-kshay Mitras) காசநோயாளிகளைத் தத்தெடுத்து அவர்களுக்கு மாதாந்திர ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும் ஒரு சமுதாய ஈடுபாட்டுத் திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது.
3. காசநோய் சிகிச்சையில் உள்ள பெரிய சவால்களில் ஒன்று, மக்கள் நீண்ட காலத்திற்கு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதுதான். நோயாளியைக் கண்காணித்து மருந்து எடுத்துக்கொள்ள நினைவூட்டும் மாத்திரைப் பெட்டிகள் மற்றும் குறுகிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவது போன்ற புதுமையான வழிகளை உருவாக்குவதில் அரசு செயல்பட்டு வருகின்றது.
4. BPaL போன்ற குறுகியகால சிகிச்சை முறைகளுடன் கூடுதலாக, சமுதாயப் பரிசோதனையின்போது அறிகுறியற்ற காசநோய் நிகழ்வுகளைக்கூட கண்டறியக்கூடிய, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயக்கப்படும் கையடக்க எக்ஸ்ரே சாதனங்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட 100 நாள் பிரச்சாரத்தின்போது இந்தக் கருவியானது பயன்படுத்தப்பட்டது. மேலும், அதிக ஆபத்துள்ள மாவட்டங்கள் அல்லாத மற்ற பகுதிகளில் 100 நாட்களுக்குப் பிறகு பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
5. மருந்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் காசநோய்க்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பெடாக்குலின் (Bedaquiline) மற்றும் டெலமானிட் (Delamanid) போன்ற புதிய மருந்துகள், காசநோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் அரசின் மருந்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உலக காசநோய் தினம்
1. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24-ஆம் தேதி உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது காசநோயின் உலகளாவிய தொற்றுநோய் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிப்பதையும், நோயை அகற்ற மேற்கொள்ளப்படும் பல முயற்சிகளைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தேதியானது 1882-ஆம் ஆண்டில் டாக்டர் ராபர்ட் கோச், காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்ததாக அறிவித்த நாளைக் குறிக்கிறது. இது காசநோயைக் கண்டறிந்து குணப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்கிறது.
2. இந்த ஆண்டின் கருப்பொருள், "ஆம்! நம்மால் காசநோயை முடிவுக்குக் கொண்டுவர முடியும்: உறுதிகொள், முதலீடு செய், செயல்படுத்து" என்பதாகும். இது குறிப்பாக அதிகரித்து வரும் மருந்து-எதிர்ப்பு காசநோய்க்கு எதிராக, வலுவான உறுதிப்பாடுகளின் மற்றும் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
Original Article: About WHO’s Global TB Report 2025 and beyond.