மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஏன் 'குறிப்பிடத்தக்க கவலைக்குரிய' இயற்கை தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?

ஷயாதாரி (Shayadari) மலைகள் என்றும் அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், அவற்றின் விதிவிலக்கான பல்லுயிர் வளம், உள்ளூர் தன்மை, மற்றும் முக்கியமான சூழலியல் மற்றும் காலநிலை செயல்முறைகளைப் பேணுவதில் அவற்றின் பங்கு காரணமாக உலகளாவிய மிகச் சிறந்த மதிப்பைக் கொண்டுள்ளன. ஆனால், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஏன் ‘சிவப்பு பட்டியலில்’ உள்ளது? தெற்காசியாவில் வாழ்விடங்கள் மற்றும் உயிரினங்களின் இழப்புக்கு என்ன பெரிய அச்சுறுத்தல்களை அது எடுத்துரைத்துள்ளது?


உத்தரகண்டில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்தில் பெரும் சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுக்க, புலி வழித்தடங்கள் வனமற்ற நிலங்கள் அல்லது இடையக மண்டலங்களில் உள்ள சீரழிந்த வன நிலங்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்றும், மேலும், அந்தப் பகுதிகள் புலி வழித்தடத்தின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.


சமீபத்தில், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம், கடந்த மாதம் வெளியிட்ட உலக பாரம்பரியக் கண்ணோட்டம் 4 (2025) அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் உட்பட இந்தியாவின் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான நிலப்பரப்புகள் குறித்து தீவிரமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.


271 இயற்கை மற்றும் கலப்பு உலக பாரம்பரிய தளங்களை மதிப்பிடும் இந்த அறிக்கை, மேற்குத் தொடர்ச்சி மலைகளையும், இந்தியாவில் உள்ள இரண்டு தேசியப் பூங்காக்களான  அசாமின் மனாஸ் தேசியப் பூங்கா மற்றும் மேற்கு வங்கத்தின் சுந்தரவனத் தேசியப் பூங்கா ஆகியவற்றையும் “குறிப்பிடத்தக்க கவலைக்குரியவை” என்று வகைப்படுத்துகிறது. இந்த அறிக்கை இயற்கை தளங்களை “நன்று” (“good”), “சில கவலைகளுடன் நன்று” (“good with some concerns”), “குறிப்பிடத்தக்க கவலை” (“significant concern”) மற்றும் “தீவிர கவலை” (“critical”) என்று வகைப்படுத்துகிறது.


இந்தியாவில் அமைந்துள்ள உலகின் 36 பல்லுயிர் பெருக்க மையங்களில் நான்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் அடங்கும். மற்ற மூன்று பல்லுயிர் பெருக்க மையங்கள் இமயமலை, இந்தோ-பர்மா பகுதி மற்றும் சுந்தலாந்து ஆகும். இமயமலை மலைகளை விட பழமையான, 1,600 கி.மீ நீளமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், 2018-ஆம் ஆண்டில் உலகின் எட்டு உயிரியல் பன்முகத்தன்மை மையங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது. 


உலக பாரம்பரிய மதிப்பீட்டு அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கிய அச்சுறுத்தல்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியத்துவம் மற்றும் அதைப் பாதுகாக்க இந்தியாவின் முயற்சி ஆகியவற்றை பகுப்பாய்வு செய்வோம். ஆனால் முதலில், உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் அவற்றை அடையாளம் காணும் செயல்முறையைப் புரிந்துகொள்வோம்.


உலக பாரம்பரிய தளங்கள் என்றால் என்ன?


உலக பாரம்பரிய தளங்கள் மனித குலத்திற்கு 'சிறந்த உலகளாவிய மதிப்பு' (‘Outstanding Universal Value’) கொண்ட இடங்கள் ஆகும். 1972-ஆம் ஆண்டின் உலக கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பான மாநாடுதான் (Convention Concerning the Protection of the World Cultural and Natural Heritage), உலக பாரம்பரிய தளங்களை நியமிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும் முதன்மை கருவியாகக் கருதப்படுகிறது. இந்த மாநாடு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் 20 நாடுகள் இதை அங்கீகரித்த பிறகு 1975-ஆம் ஆண்டில் முறையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. 


இந்த ஆவணம் உலக பாரம்பரிய தளங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. அவை: இயற்கை பாரம்பரிய தளங்கள், கலாச்சார பாரம்பரிய தளங்கள் மற்றும் கலப்பு தளங்கள். யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழு தான் (UNESCO World Heritage Committee) இந்த மாநாட்டை நிர்வகிப்பதற்கு முதன்மை பொறுப்பாகக் கூறப்படுகிறது. 


உலகப் பாரம்பரியத் தளங்களின் தேர்வு ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் கடுமையான செயல்முறையைப் பின்பற்றுகிறது. இது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) (இயற்கைத் தளங்களுக்காக) மற்றும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு (International Council on Monuments and Sites (ICOMOS)) (கலாச்சாரத் தளங்களுக்காக) ஆகியவற்றின் அறிவியல் மதிப்பீட்டின் மூலம் வழிநடத்தப்படுகிறது. இறுதி முடிவானது உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட உலகப் பாரம்பரியக் குழுவால் எடுக்கப்படுகிறது.


ஒரு தளம், ஒர் உலகப் பாரம்பரியத் தளமாக நியமிக்கப்படுவதற்கு, அது ‘தனித்துவமான உலகளாவிய மதிப்பைக்’ கொண்டிருக்க வேண்டும் மற்றும் மாநாட்டின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள தேர்வு அளவுகோல்களில் குறைந்தது ஒன்றையாவது பூர்த்தி செய்ய வேண்டும். மாநாடானது உறுப்பு நாடுகளின் கடமைகளை வகுத்துள்ளதால், இந்த நியமனம் தளங்களுக்கு வலுவான சட்ட மற்றும் அமைப்பு  ரீதியான பாதுகாப்பைக் கோருகிறது.


உலகில் மொத்தம் 1,248 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன, அவற்றில் 44 இந்தியாவில் அமைந்துள்ளன (36 கலாச்சார, 7 இயற்கை, 1 கலப்பு தளங்கள் உட்பட). மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவில் உள்ள இயற்கை தளங்களில் ஒன்றாகும், இது 2012-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது (UNESCO) உலகப் பாரம்பரியத் தளமாக நியமிக்கப்பட்டது.


இந்தியாவிலிருந்து, 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, யுனெஸ்கோவின் பரிசீலனையில் மொத்தம் 69 இடங்கள் உள்ளன. இதில் 49 பண்பாட்டு, 17 இயற்கை மற்றும் 3 கலப்பு பாரம்பரிய இடங்கள் உள்ளன.


மேற்குத் தொடர்ச்சி மலைகள்: சஹயாத்ரி மலைகள் (Shayadari hills) என்றும் அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், மகத்தான சூழலியல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்க மதிப்பைத் தாங்கி நிற்கின்றன. இவை இந்தியாவுக்கும் உலகத்துக்கும் மிகவும் அத்தியாவசியமான இயற்கையான செல்வங்களில் ஒன்றாகும். இந்தப் பகுதியின் விதிவிலக்கான பல்லுயிர்ப் பெருக்கம், தனிச்சிறப்புடைய உயிரினங்களின் இருப்பு, மற்றும் முக்கிய சூழலியல் மற்றும் காலநிலை செயல்முறைகளைப் பேணுவதில் அதன் பங்கின் காரணமாக, இது மிகச் சிறந்த உலகளாவிய மதிப்பைக்கொண்டுள்ளது.


இது இந்திய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களை உள்ளடக்கியது. சுற்றுச்சூழல் ரீதியாக, மேற்குத் தொடர்ச்சி மலைகள் தீபகற்ப இந்தியாவிற்கு ஒரு முக்கிய காலநிலைக் கட்டுப்பாட்டாளராகச் செயல்படுகிறது. மேலும், தென்மேற்குப் பருவமழைக்கு ஒரு தடையாகச் செயல்படுவதன் மூலம், இந்தப் பகுதி அடர்ந்த காடுகளையும், கோடிக்கணக்கான மக்களைத் தாங்கும் ஏராளமான நதிகளையும் பாராமரித்து வருகிறது.

இந்தியாவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல பயிர்கள் மற்றும் மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்கள் உட்பட, அளவிட முடியாத மரபணு வளங்களையும் கொண்டுள்ளன. வெப்பமண்டல பசுமைமாறா காடுகள், புல்வெளிகள், மிர்ஸ்டிகா சதுப்பு நிலங்கள் மற்றும் தனித்துவமான ஷோலா காடுகள் உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் தாயகமாகவும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளன. இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை கொண்டுள்ளன. 


மேற்குத் தொடர்ச்சி மலைகள், சிங்கவால் குரங்கு, நீலகிரி வரையாடு மற்றும் புலி போன்ற பல அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உயிரினங்களின் வாழ்விடமாகும். இப்பகுதியில் உள்ள சுமார் 325-இனங்கள் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) குறிப்பிட்ட சிவப்பு பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவை என பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் 129-இனங்கள் பாதிக்கப்படக்கூடியவையாகவும், 145-அழிந்து வரும் உயிரினங்களாகவும், 51-இனங்கள் மிகவும் ஆபத்தானவையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஒரு உலகளாவிய பல்லுயிர் வாழிடமாக  இருப்பதன் மூலம் முழு உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


அறிக்கையில் மேற்கோள்காட்டப்பட்டுள்ள முக்கிய அச்சுறுத்தல்கள் யாவை?


இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) உலகப் பாரம்பரிய மதிப்பீட்டின் 4வது அறிக்கையின்படி, தெற்காசியாவில் வாழ்விடங்கள் மற்றும் உயிரினங்கள் இழப்பிற்கு நான்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் உள்ளன. அவை காலநிலை மாற்றம், சுற்றுலா நடவடிக்கைகள், ஆக்கிரமிப்பு அயல்நாட்டு இனங்கள் மற்றும் சாலைகள் ஆகும். 


ஆசியாவில் உள்ள இயற்கை பாரம்பரியத் தளங்களுக்கு மிகவும் பரவலான அச்சுறுத்தலாக காலநிலை மாற்றம் எச்சரிக்கைக்குரிய பகுதிகளாகக்  குறிக்கப்பட்டுள்ளன.  அதிகரித்து வரும் வெப்பநிலை, மாறிவரும் மழைப் பொழிவு மற்றும் உருகும் பனிப்பாறைகள் போன்ற காலநிலைத் தாக்கங்கள் பல்லுயிர் இழப்பைத் தீவிரப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மாற்றியமைக்கின்றன.


சுற்றுலா நடவடிக்கைகள் இரண்டாவது பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளன. சுற்றுலா முறையாகக் கட்டுப்படுத்தப்படாதபோது, ​​அது அதிக கழிவுகளை உருவாக்குகிறது. அது விலங்குகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும், இயற்கை வளங்களின் மீது, குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் பகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


இந்த அறிக்கை, அந்நிய ஆக்கிரமிப்பு இனங்களின் அதிகரித்து வரும் பிரச்சனையை மூன்றாவது மிக முக்கியமான அச்சுறுத்தலாகவும் எடுத்துரைக்கிறது. இந்த இனங்கள் தாய்நாட்டுச் சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைக்கின்றன. மேலும், பல்லுயிர்த்தன்மையை குறைக்கின்றன மற்றும் காடுகளின் மீளுருவாக்கத் திறனை பாதிக்கின்றன.


மேலும், முதல் முறையாக, சாலை மற்றும் இரயில்வே விரிவாக்கம் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடு (infrastructure development) அச்சுறுத்தல்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ஆக்கிரமிப்பு, மரம் வெட்டுதல், கழிவுகளை அகற்றுதல் மற்றும் வேளாண் விரிவாக்கம் போன்ற மனிதனால் தூண்டப்பட்ட அழுத்தங்கள் (anthropogenic pressures), பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் கூட வாழ்விடங்களை தொடர்ந்து சீரழித்து வருகின்றன.


மொத்தத்தில், இந்த அறிக்கை கவலையளிக்கும் ஒரு போக்கைப் பிரதிபலிக்கிறது: உள்ளூர் மனித அச்சுறுத்தல்கள் இப்போது பெரிய அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட அழுத்தங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காலநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, இவை அனைத்தும் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலைகள் உட்பட ஆசியாவின் மிகவும் மதிப்புமிக்க இயற்கை தளங்களின் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கின்றன. 


மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க இந்திய அரசின் முயற்சிகள்


மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் பலவீனம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்ள, இந்தியா கொள்கை கட்டமைப்புகள், சட்ட நடவடிக்கைகள் மற்றும் நிறுவன முன்முயற்சிகளை இணைத்து ஏற்றுக்கொண்டுள்ளது. இது வளர்ச்சித் தேவைகளை சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


கொள்கை அளவில், தேசிய வனக் கொள்கை (National Forest Policy) 1988, தேசிய சுற்றுச்சூழல் கொள்கை, 2006 மற்றும் தேசிய வனவிலங்கு செயல் திட்டம் ஆகியவை வனப் பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு வழிகாட்டுகின்றன.


சட்ட ரீதியாக, அரசாங்கம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்கீழ் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல பகுதிகள் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், புலிகள் காப்பகங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டப் பாதுகாப்புகள் வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்களைப் பாதுகாக்க மானுடவியல் நடவடிக்கைகளைக் குறைக்க உதவுகின்றன.


காடுகளைப் பாதுகாக்கவும், காடழிப்புக்குத் தடை விதிக்கவும், 1927 ஆம் ஆண்டின் இந்திய வனச் சட்டம் (Indian Forest Act) மற்றும் 1980-ஆம் ஆண்டின் வனப்பாதுகாப்பு மற்றும் மேம்பாடு சட்டம் (Van (Sanrakshan Evam Samvardhan) Adhiniyam) ஆகியவை இயற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனுமதியின்றி வன நிலத்தை வனமல்லாத நிலமாக மாற்றுவதை இந்தச் சட்டங்கள் தடை செய்கின்றன.


மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் மனித நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தை மதிப்பிடுவதற்கு, சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) மாதவ் காட்கில் குழு (Madhav Gadgil committee) மற்றும் கஸ்தூரிரங்கன் குழு (Kasturirangan committee) என்கிற இரண்டு நிபுணர் குழுக்களை அமைத்தது குறிப்பிடத்தக்கது. 


அவர்களின் அறிக்கைகளின் அடிப்படையில், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் பரவியுள்ள சுமார் 56,000 சதுர கி.மீ பரப்பளவை சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியாக (Ecologically Sensitive Area (ESA)) அறிவிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (Environment Protection Act) 1986ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில் ஒரு வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டது.


சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதி என்பது சுரங்கம், நீர்மின் திட்டங்கள் போன்ற மனித நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தைக் குறைப்பதற்காகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி வரையறுக்கப்பட்ட இடையகப் பகுதிகளாகும். இருப்பினும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் அதன் சாத்தியமான எதிர்மறையான தாக்கம் காரணமாக இந்த வரைவு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இன்னும் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.


மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாத்தல், நாட்டிற்கு மிக முக்கியமானதாகும்.


உலகப் பாரம்பரிய மதிப்பீட்டின் 4வது அறிக்கையின்படி மேற்குத் தொடர்ச்சி மலைகள் பெருகிவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்பதையும், அதற்கு அவசரமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்பதையும் சரியான நேரத்தில் நினைவுபடுத்துகிறது. சட்டங்கள் மற்றும் கொள்கை இயற்றப்பட்ட போதிலும், பலவீனமான நடைமுறைப்படுத்துதலே முக்கியக் காரணியாக உள்ளது.


மேலும், அதிகரித்து வரும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக, வரைவு சூழலியல் உணர்திறன் பகுதி அறிவிப்பைத் தக்க சமயத்தில் நடைமுறைப்படுத்துவது ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இருப்பினும், பாதுகாப்பு மற்றும் சமூக வாழ்வாதாரங்களைச் சமநிலைப்படுத்த, அரசாங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்புடன் கூடிய நடவடிக்கையின் அடிப்படையில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். இத்தகைய அணுகுமுறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை பொறுப்பான பொருளாதார நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்க அவசியமானதாக இருக்கிறது. 


இதனுடன் கூடுதலாக, அறிவியல் கண்காணிப்பு, காலநிலை தகவமைப்பு உத்திகள் மற்றும் சமூகம் தலைமையிலான பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பது காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விடச் சீரழிவுக்கு எதிரான மீள்தன்மையை வலுப்படுத்த உதவுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழல் முன்னுரிமை மட்டுமல்ல, சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் காலநிலை நிலைத்தன்மைக்கு இன்றியமையாத ஒரு தேசியத் தேவையாகக் கருதப்படுகிறது. 

 Original Article: Why Western Ghats are classified as natural site of ‘significant concern’ 


Share: