கனிமநீர் (Mineral Water) பாதுகாக்கப்பட்ட நிலத்தடி நீர் ஆதாரங்களிலிருந்து பெறப்படுகிறது. மேலும் இது நீண்டகால இடைவெளியில் இயற்கையாகவே உருவான தாதுக்களைத் தன்னுள் கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவில், குழாய் நீர் ஆறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலிருந்து பெறப்பட்டு, சுத்திகரிப்புக்காக குளோரின் (Chlorine) கலந்து விநியோகிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள், தங்களின் குழாய் நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதாலோ அல்லது தாதுநீரின் சுவை பிடிப்பதாலோ ஒவ்வொரு நாளும் தாதுநீரை (Mineral water) குடிக்கிறார்கள். இதில் எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்குத் தேவையான இயற்கையான தாதுக்கள் (Minerals) நிறைந்துள்ளன. மேலும், அரசாங்கங்களும் சுகாதார அமைப்புகளும் இதனை ஒரு சுத்தமான மற்றும் நம்பகமான நீரேற்ற ஆதாரமாக பரிந்துரைக்கின்றன.
கனிமநீர் என்றால் என்ன?
கனிமநீர் (Mineral water) என்பது இயற்கையாகவே தாதுக்கள் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட நீர் ஆகும். இது நீரூற்றுகள் அல்லது நிலத்தடி நீர் அடுக்குகள் (Aquifers) போன்ற பாதுகாக்கப்பட்ட நிலத்தடி ஆதாரங்களில் இருந்து கிடைக்கிறது மற்றும் இது ஒரு நிலையான தாது அமைப்பைக் கொண்டுள்ளது. ஆறுகள் அல்லது நிலத்தடி நீரிலிருந்து எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்படும் குழாய் நீரைப் போலல்லாமல், கனிமநீர் நீண்ட மாற்றங்களின் மூலம் இயற்கையாகப் பெற்ற தாதுக்களை அப்படியே தக்க வைத்துக் கொள்கிறது.
மழைநீரும் பனி உருகுவதால் ஏற்படும் நீரும் சுண்ணாம்புக்கல் (Limestone), கருங்கல் (Granite), மணற்கல் (Sandstone) அல்லது எரிமலைப் பாறைகள் (Volcanic basalt) போன்ற அடுக்குகளின் வழியாக மெதுவாக ஊடுருவிச் செல்லும்போது, அந்தப் பாறைகளில் உள்ள தாதுக்கள் நீரில் கரைகின்றன. நிலத்தடியில் ஏற்படும் அழுத்த வேறுபாடுகள், இவ்வாறு தாதுக்கள் நிறைந்த நீரை மீண்டும் நிலப்பரப்பை நோக்கித் தள்ளுகின்றன. அங்கு இது ஒரு ஊற்றாக (Spring) வெளிப்படுகிறது அல்லது நிலத்தடி நீர்த்தேக்கத்தில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் உற்பத்தியாளர்கள் கிணறுகள் தோண்டியோ அல்லது இயற்கையான ஊற்றுகளைப் பயன்படுத்தியோ இந்த நீரை கொள்கலன்களில் நிரப்புகின்றனர், தேவைப்பட்டால் இதற்காக நீரேற்றிகளைப் (Pumps) பயன்படுத்துகின்றனர்.
கனிமநீர் எவ்வாறு முறைப்படுத்தப்படுகிறது?
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration (FDA)) மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கூட்டமைப்புடன் இணைந்து, கனிமநீர் என்பது புவியியல்ரீதியாக நிலையான ஒரு நீர் நிலையிலிருந்து பெறப்பட வேண்டும் என்றும், உற்பத்தியாளர்கள் அந்த நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கின்றன. இந்த நீரில் உள்ள தாதுக்களின் அளவு (Mineral profile) வெவ்வேறு தொகுப்புகளில் மாறாமல் சீராக இருக்க வேண்டும். மேலும், அதன் தாதுக் கலவையை மாற்றுவதற்காக உற்பத்தியாளர்கள் ரசாயன முறைகளைப் பயன்படுத்தி அந்த நீரைச் சுத்திகரிக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ அனுமதி கிடையாது என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) மற்றும் இந்தியத் தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards (BIS)) ஆகியவை இயற்கை கனிம நீர் குறித்த சில முக்கியமான விதிகளை வகுத்துள்ளன. இதன்படி, அத்தகைய நீர் இயற்கை ஊற்றுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் போன்ற நிலத்தடி ஆதாரங்களில் இருந்து மட்டுமே பெறப்பட வேண்டும். மேலும், அந்த நீர் மாசுபடாதவாறு இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதன் அசல் பாக்டீரியா மற்றும் வேதியியல் தன்மைகள் மாறாத வகையில் அது சேகரிக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளைப் போலவே, இந்தியத் தரநிர்ணய அமைப்பின் (BIS) IS 13428 விதியானது, தண்ணீரில் உள்ள மொத்தக் கரைந்த உப்புகள் (Total Dissolved Solids (TDS)) மற்றும் தாதுக்களின் அளவு எப்போதும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. உற்பத்தியாளர்கள் தண்ணீரில் உள்ள தாதுக்களின் அளவை மாற்றியமைக்க அனுமதி இல்லை என்றும் அவர்கள் தண்ணீரை வடிகட்டுதல் (Filter), தெளிவூற்றுதல் (Decant), காற்றோட்டம் செய்தல் (Aerate) அல்லது கிருமி நீக்கம் (Sterilise) மட்டுமே செய்யமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. குளோரின் (Chlorine) சேர்த்தல் போன்ற வேதியியல் சுத்திகரிப்பு முறைகளுக்கு அனுமதி கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக, இந்தியாவில் உள்ள மற்ற உணவுப் பொருட்களைப் போலல்லாமல், கனிமநீர் விற்பனைக்குக் கட்டாயச் சான்றிதழ் அவசியமாகும். இதனை விற்பனை செய்ய, உற்பத்தியாளர்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India (FSSAI)) உரிமத்தையும், இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பாட்டிலிலும் கட்டாயமாக ISI முத்திரை (IS 13428 தரநிலையின்படி) இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பாட்டில்களில் அந்த நீர் எடுக்கப்பட்ட இடம் மற்றும் அதன் பெயர், அதில் உள்ள தாதுக்களின் அளவுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த நீர் மருத்துவக் குணங்கள் கொண்டதோ அல்லது நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதோ என்ற எந்தவொரு விளம்பரத்தையும் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனிமநீர் எவ்வாறு பேக் (Pack) செய்யப்படுகிறது ?
இத்தகைய கடுமையான தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்காக, உற்பத்தியாளர்கள் பொதுவாக அந்தந்த நீர் ஆதாரத்திற்கு அருகிலேயே தண்ணீரை பாட்டில்களில் அடைக்கிறார்கள். நீரை எடுத்த பிறகு, அதில் உள்ள துகள்கள் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களை வடிகட்டி நீரைத் தெளிவாக்குகிறார்கள். மேலும், கிருமிகளை நீக்க புறஊதாக் கதிர்களை பயன்படுத்தலாம் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு அளவைச் சரிசெய்வதன் மூலம் சாதாரண குடிநீர் (Still water) அல்லது நுரைப்பொங்கும் குடிநீரை (Sparkling water) அவர்கள் தயாரிக்கின்றனர்.
இறுதியாக, நீர் மாசுபடுவதைத் தடுக்கவும் அதன் தன்மையில் மாற்றம் ஏற்படாமல் இருக்கவும், அது நீராதாரம் அல்லது ஊற்றிற்கு அருகிலேயே தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, கண்ணாடிப் பாட்டில்கள், நெகிழி பாட்டில்கள் (Polyethylene Terephthalate (PET)) அல்லது அலுமினியக் குடுவைகளில் அடைக்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு பொட்டண முறையிலும் சில குறைபாடுகள் உள்ளன. கண்ணாடி நீருடன் வினைபுரியாது (நம்பகமானது), ஆனால் அதனை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்; நெகிழி (PET) குடுவைகள் எடை குறைந்தவை என்றாலும், அதிக வெப்பத்தில் இருக்கும்போது காலப்போக்கில் மிகச்சிறிய அளவில் நெகிழி துகள்களை நீருக்குள் வெளியிட வாய்ப்புள்ளது. அலுமினியக் கேன்கள் எளிதில் மறுசுழற்சி செய்யக்கூடியவை, ஆனால் அவற்றில் ஒரு நெகிழி உள்-பூச்சு (Plastic lining) தேவைப்படும். இது வேதிப்பொருள் கசிவு பற்றிய சிக்கல்களை உருவாக்குவதோடு, உற்பத்திச் செலவையும் அதிகரிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் என்பது எப்போதும் இயற்கை தாது நீருக்கு நிகரானது அல்ல என்கின்றனர். இது குழாய்நீர் அல்லது நிலத்தடி நீரிலிருந்து எடுக்கப்பட்டு, தலைகீழ் சவ்வூடுபரவல் (Reverse Osmosis (RO)) முறையில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் சுவைக்காகக் கூடுதல் தாதுக்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அதேபோல், ஊற்று நீர் (Spring Water) நிலத்தடி மூலங்களிலிருந்து கிடைத்தாலும், அது இயற்கை தாது நீருக்குரிய அதே கடுமையான தாது அளவுத் தரங்களைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration (U.S. FDA)), "பாட்டில் குடிநீர்" (Bottled water) என்ற சொல்லுக்குள் ஆர்டீசியன் நீர் (Artesian), கனிமநீர் (Mineral), நுரைக்கும் நீர் (Sparkling), சுனை நீர் (Spring) மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீர் (Purified water - அதாவது காய்ச்சி வடிக்கப்பட்டவை, அயனி நீக்கப்பட்டவை அல்லது தலைகீழ் சவ்வூடுபரவல் (RO) முறையில் சுத்திகரிக்கப்பட்டவை) ஆகியவற்றை உள்ளடக்குகிறது. இதில் ஆர்டீசியன் நீர் என்பது நிலத்தடி அழுத்தத்தின் காரணமாக இயற்கையாகவே நிலப்பரப்பிற்கு மேலே எழும் நிலத்தடி நீர் ஆகும்.
தாதுக்கள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன?
தாது நீரில் உள்ள தாதுக்களின் அளவு, அது எந்த இயற்கை மூலத்திலிருந்து (ஆறு அல்லது நிலத்தடி நீர் போன்ற இடங்கள்) எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து மாறுபடும் என்கின்றனர். கால்சியம் (Calcium), மெக்னீசியம் (Magnesium), சோடியம் (Sodium), பொட்டாசியம் (Potassium), பைகார்பனேட்டுகள் (Bicarbonates), சல்பேட்டுகள் (Sulphates), குளோரைடுகள் (Chlorides), சிலிக்கா (Silica) மற்றும் சில நேரங்களில் மிகக் குறைந்த அளவில் ஃபுளோரைடுகள் (Fluorides) அல்லது இரும்புச்சத்து (Iron) போன்றவை இதில் பொதுவாகக் காணப்படும் தாதுக்கள் ஆகும்.
தண்ணீரில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நீரை "கடினத் தன்மை" (Hard Water) கொண்டதாக மாற்றுவதோடு, மக்கள் எதிர்பார்க்கும் அந்தப் பழக்கப்பட்ட சுவையையும் ஒருவித கனமானத் தன்மையையும் தருகின்றன. அதிகப்படியான கால்சியம் (Calcium) நீரினை வழுவழுப்பாகவோ அல்லது லேசான சுண்ணாம்புத் சுவையுடனோ உணரச் செய்யும்; அதேசமயம் மெக்னீசியம் (Magnesium) ஒருவித மிதமான கசப்புச் சுவையைத் தருகிறது. பைகார்பனேட்டுகள் (Bicarbonates) நீரின் அமிலத்தன்மையைக் குறைத்து, அதற்கு லேசான இனிப்புச் சுவையை அளிக்கின்றன. சல்பேட்டுகள் (Sulphates) தண்ணீருக்கு ஒரு புத்துணர்ச்சியான சுவையைச் சேர்க்கின்றன, மற்றும் சோடியம் (Sodium) ஒரு மங்கலான உப்புச் சுவையைத் தருகிறது.
நீரில் கரைந்துள்ள இந்தத் தாதுக்கள், நீரில் கரைந்துள்ள மொத்தக் திடப்பொருட்களின் (Total Dissolved Solids (TDS)) அளவை அதிகரிக்கின்றன. இது உணவு, சோப்பு, குழாய்கள் மற்றும் மனித உடலுடன் நீர் எவ்வாறு வினைபுரிகிறது என்பதைப் பாதிக்கிறது. கடின நீர் (Hard water) கொதியூட்டிகள் (Kettles) மற்றும் சலவை இயந்திரங்களில் உப்புப் படிவுகளைப் (Scale) படியச் செய்யும், மேலும் சோப்புடன் சேர்ந்து எளிதில் நுரையைத் தராது என்றும் கூறப்படுகிறது. இது எலும்பு வலிமை மற்றும் தசை செயல்பாட்டிற்கு ஓரளவுக்கு உதவக்கூடும் என்றாலும், ஒட்டுமொத்த ஊட்டச்சத்தோடு ஒப்பிடும்போது இதன் பங்களிப்பு மிகக் குறைவே ஆகும். இதில் உள்ள பைகார்பனேட்டுகள் (Bicarbonates) செரிமானத்திற்கும் உதவக்கூடும் என்கின்றனர்.
நீரின் மற்ற வடிவங்கள் யாவை?
தண்ணீரை வடிகட்டுதல் (Distillation) என்பது, முதலில் அதை நீராவியாகக் கொதிக்க வைத்து, பிறகு மீண்டும் திரவமாகக் குளிரூட்டும் ஒரு செயல்முறையாகும். இந்தச் செயல்பாட்டின் போது, தண்ணீரில் கரைந்துள்ள தாதுக்கள் (Minerals) மற்றும் அசுத்தங்கள் அனைத்தும் அடியில் தங்கிவிடுகின்றன. இதன் விளைவாகக் கிடைக்கும் நீர்த்துளிகள் கிட்டத்தட்ட தூய H2O ஆகும். இதனால் இதன் சுவை மற்ற தண்ணீரைவிட மாறுபட்டும், சற்றே சுவையற்றது போலவும் இருக்கும். இது உலோகப் பரப்புகளில் படிமங்களை உருவாக்குவதில்லை மற்றும் எப்போதும் ஒரே சீரான தன்மையைக் கொண்டிருக்கும். இதன் காரணமாகவே, ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகங்களில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும், காய்ச்சி வடிக்கப்பட்ட நீர் (Distilled Water) குடிப்பதற்குப் பாதுகாப்பானது என்றாலும், அதைத் தொடர்ந்து குடிப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில், இதில் உடலுக்குத் தேவையான தாதுக்கள் (Minerals) எதுவும் இல்லை. மேலும், இது உணவிலிருந்தும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மனித உடலிலிருந்தும்கூட சிறிய அளவிலான தாதுக்களை உறிஞ்சும் தன்மை கொண்டது ஆகும்.
தொழிற்சாலைகள் அவற்றின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தண்ணீரைச் சுத்திகரிக்கின்றன. கால்சியம் மற்றும் மெக்னீசியத்தை நீக்கி நீரின் கடினத்தன்மையைக் குறைக்கலாம், அல்லது கரைந்துள்ள அயனிகளை அகற்ற அதை அயனி நீக்கம் (Deionise) செய்யலாம். சில நேரங்களில் கொதிகலன்கள் அல்லது குளிர்விக்கும் அமைப்புகளுக்காக அதன் வேதியியல் தன்மையையே மாற்றலாம். மேலும், படிமங்கள் உருவாவதைத் தடுக்க கனிம நீக்கம் செய்தோ அல்லது துருப்பிடிப்பதைத் தடுக்க சோடியம் பாஸ்பேட் போன்ற பொருட்களைச் சேர்த்தோ பயன்படுத்துகின்றனர். இத்தகைய தொழிற்சாலைப் பயன்பாட்டு நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானதல்ல என்கின்றனர்.
மறுபுறம், நகராட்சி குழாய் நீர் (Municipal Tap Water), ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் போன்ற ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டு, வடிகட்டுதல் மற்றும் குளோரினேற்றம் (Chlorination) மூலம் கிருமிகள் மற்றும் வேதியியல் மாசுபடுத்திகளை அகற்றி, குளோரின் போன்ற கிருமிநாசினிகளைச் சேர்த்துத் தயார் செய்யப்படுகிறது. ஒருவேளை அது மென்மையாக்கப்படாவிட்டால் (Softened), குழாய் நீரில் தாதுக்கள் (Minerals) அப்படியே இருக்கும். இந்தத் தாதுக்களின் அளவு பகுதிக்குப் பகுதி மாறுபடும் என்கின்றனர். உதாரணமாக, லண்டனில் சுண்ணாம்புப் பாறை நீர்நிலைகள் இருப்பதால் அங்கு கடின நீர் (Hard water) கிடைக்கிறது, அதேசமயம் பல ஸ்காண்டிநேவிய (Scandinavia) நகரங்களில் குறைவான தாதுக்கள் கொண்ட இயற்கை மென்நீர் (Soft water) கிடைக்கிறது.
இந்தியாவில் குழாய் நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது?
இந்தியாவில் குழாய் நீர் விநியோகத்திற்கான முக்கிய ஆதாரங்களாக ஆறுகளும், ஆழ்துளைக் கிணறுகளும் உள்ளன.
வெப்பமண்டலப் பகுதிகளில் நோய்க்கிருமிகளின் அளவு அதிகமாக இருப்பதால், வட அமெரிக்கா அல்லது ஸ்காண்டிநேவியா போன்ற குளிர்ச்சியான பகுதிகளைவிட, இங்குள்ள நகராட்சிகள் நீரை மிகவும் தீவிரமாகச் சுத்திகரிக்கின்றன. தண்ணீரில் உள்ள அழுக்குகளை ஒன்றாகத் திரட்டி, வடிகட்டுவதை எளிதாக்குவதற்கு அவர்கள் படிகாரத்தை (Alum) சேர்க்கிறார்கள். மேலும், குழாய் கசிவுகள் போன்ற காரணங்களால் நீர் பின்னாளில் மாசடைந்தாலும் அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க, கூடுதலாக குளோரின் (Residual Chlorine) எனப்படும் எஞ்சிய குளோரினைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் இத்தகைய நீர் மாசுபாடு மிகவும் பரவலாக உள்ளதால், பெரும்பாலான இந்திய நகராட்சிகளால் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடிவதில்லை. இதற்கு ஒரு சில விதிவிலக்குகளாக ஒடிசாவின் பூரி (Puri) நகரம் மற்றும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரின் சில பகுதிகள் விதிவிலக்காக விளங்குகின்றன.
குழாய் மூலம் குடிநீர் வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பாகும், அதே வேளையில் ஒன்றிய அரசு அதற்கான தரக் கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கிறது. IS 10500:2012 என்ற தரநிலை, குடிநீரில் இருக்க வேண்டிய தாதுக்களின் அளவை வரையறுக்கிறது. இருப்பினும், இதில் சில தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. உதாரணமாக, நீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் (Total Dissolved Solids (TDS)) அளவு லிட்டருக்கு 500 மி.கி (500 mg/l) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் வேறு குடிநீர் ஆதாரம் இல்லாத பட்சத்தில், இந்த அளவை லிட்டருக்கு 2,000 மி.கி (2,000 mg/l) வரை உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
ராஜஸ்தான், குஜராத் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் தாதுக்கள் நிறைந்த பாறை அடுக்குகளில் இருப்பதால், அங்குள்ள நீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, இமயமலை நதிகளிலிருந்து நீரைப் பெறும் நகரங்கள் அல்லது அதிக மழைப்பொழிவு கொண்ட கேரளா மற்றும் மும்பை போன்ற பகுதிகளில், தாதுக்கள் குறைவாக உள்ள மென்மையான நீர் (Softer water) கிடைக்கிறது.
Original link:
What is mineral water and how does it naturally contain dissolved minerals?