வெளிப்படைத்தன்மை ஒரு தேசிய முன்னுரிமையாக மாற வேண்டும்; ஏனெனில், பொருளாதாரப் போட்டியில் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை தற்போது ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது.
‘Transparency International’ அமைப்பால் வெளியிடப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான ஊழல் தொடர்பான குறியீடு (Corruption Perceptions Index 2025) மிகத் தெளிவான ஒரு செய்தியை முன்வைக்கிறது. எனினும், உலகளாவிய ஊழல் குறைந்துவிடவில்லை; மாறாக, அது அதிகரித்து, மக்களாட்சியையும் பொது நிறுவனங்களையும் பாதித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில், முதல் முறையாக உலகளாவிய சராசரி மதிப்பெண் 100-க்கு 42 ஆகக் குறைந்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 182 நாடுகளில் 122 நாடுகள் 50-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு 12 நாடுகள் 80-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெறும் ஐந்து நாடுகள் மட்டுமே அந்த நிலையை எட்டியுள்ளன. இந்த மாற்றம் மிகவும் கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. கண்காணிப்பு அமைப்புகள் வலுவிழக்கும்போதும், மக்களின் சுதந்திரம் குறைக்கப்படும்போதும், ஊழலின் அளவுகள் அதிகரிக்கவே செய்கின்றன.
தரவுகள் எதைக் காட்டுகின்றன
உலகளாவிய சரிவின் பின்னணியில் இந்தியாவின் நிலையை நாம் கவனிக்க வேண்டும். 2025-ஆம் ஆண்டு குறியீட்டில், இந்தியா 39 புள்ளிகளைப் பெற்று 182 நாடுகளில் 91-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது பட்டியலின்கீழ் பாதியில் அமைகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பெண் பெரிய மாற்றமின்றி, 38 முதல் 41 புள்ளிகளிலேயே உள்ளது. 2014-ஆம் ஆண்டில் 38 புள்ளிகளாக இருந்தது, பத்தாண்டு காலத்திற்குப் பிறகும் ஏறக்குறைய அதே நிலையிலேயே உள்ளது. தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ள இந்தியா, 2047-ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற இலக்கு வைத்துள்ள சூழலில், இந்தத் தேக்கநிலை குறிப்பிடத்தக்கது. பொருளாதாரம் கணிசமாக வளர்ந்திருந்தாலும், நிர்வாகம் குறித்த பொதுவான பார்வையில் அதே வேகத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது. ஊழல் பற்றிய பார்வை குறியீட்டில் (Corruption Perceptions Index (CPI)) சீனா 42 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இலங்கை இந்தியாவின் நிலைக்கு அருகாமையிலும், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இந்தியாவைவிடக் குறைவான புள்ளிகளையும் பெற்றுள்ளன. இந்தியா தனது அண்டை நாடுகளைவிடச் சிறப்பாகச் செயல்பட்டாலும், ஒரு காலத்தில் இந்தியாவைப் போன்றே வளர்ச்சி நிலையில் இருந்த பல ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட ஜனநாயக நாடுகளைவிடப் பின்தங்கியே உள்ளது. அந்த நாடுகள் காலப்போக்கில் தங்களது நிறுவனங்களின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தின. ஊழல் பற்றிய பார்வை குறியீட்டின் (CPI) மதிப்பெண்கள் அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான சீர்திருத்தங்களைப் பிரதிபலிக்கின்றன.
இந்தியாவின் ஊழல் பற்றிய பார்வை குறியீடு (CPI) ஏன் முக்கியமானது? முதலாவதாக, இந்தக் குறியீடு பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்குகளைக் காட்டாமல், பொதுத்துறையின் நேர்மை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே பிரதிபலிக்கிறது. பொதுக் கொள்முதல், ஒழுங்குமுறை, நீதித்துறை மற்றும் நிறுவனப் பாதுகாப்பு போன்ற துறைகளை மதிப்பிடுவதற்கு இது 13 சுதந்திரமான தரவு ஆதாரங்களைப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் 39 என்ற மதிப்பெண், வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் தொடர்ந்து பலவீனங்கள் இருப்பதைக் காட்டுகிறது. இத்தகைய கருத்துக்கள் முதலீட்டு முடிவுகள், இறையாண்மை சார்ந்த அபாய மதிப்பீடுகள் மற்றும் நீண்ட கால மூலதன ஓட்டத்தைப் பாதிக்கின்றன. இன்றைய காலக்கட்டத்தில், சிறந்த நிர்வாகம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார பலமாகவே கருதப்படுகிறது.
இரண்டாவதாக, ஊழல் என்பது நேரடியான பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது வணிகப் பரிவர்த்தனைகளில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது, விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான செலவுகளை அதிகரிக்கிறது மற்றும் தொழில்முனைவோரை மதிப்புமிக்க புதிய உருவாக்கங்களில் ஈடுபடவிடாமல், முறையற்ற ஆதாயம் தேடும் அமைப்புகளைச் சார்ந்து இருக்கச் செய்கிறது. இதனால் உற்பத்தித்திறன் குறைவதோடு முதலீடுகளும் முடக்கப்படுகின்றன. உலகளாவிய மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஊழலினால் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) குறைந்தது 5% இழப்பு ஏற்படுகிறது. இது ஏறத்தாழ 2.6 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான உற்பத்தி இழப்பாகும். இதில் லஞ்சம், சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் திறமையற்ற பொதுச் செலவினங்கள் ஆகியவையும் அடங்கும். துல்லியமான புள்ளிவிவரங்கள் மாறுபட்டாலும், இதன் ஒட்டுமொத்த பாதிப்பு மிக அதிகமாகவே உள்ளது.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு, இதன் தாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்பான ஆய்வுகள், ஊழல் காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) ஆண்டுதோறும் நேரடியாக சுமார் 0.5% இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றன. மறைமுக வளர்ச்சிப் பாதிப்புகளையும் சேர்த்தால், இந்த மொத்த இழப்பு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% முதல் 1.5% வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய உற்பத்தி அளவுகளின்படி, இது ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயைக் குறிக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி அல்லது தொழில்துறை மேம்பாட்டிற்காக நிதி உதவியாகப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
விதிமுறை தொடர்பான கட்டமைப்பில் உள்ள தடைகள்
இந்தியாவின் விதிமுறை இணக்க அமைப்பில் உள்ள சிக்கல்கள் மூன்றாவது முக்கியக் கட்டமைப்புச் சிக்கலாகக் கருதப்படுகிறது. சமீபத்திய அறிக்கை படி, தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் வணிகச் சட்டங்களில் உள்ள 26,134 விதிகள் சிறைத் தண்டனைக்குரியவையாக உள்ளன. இந்தச் சுமை தொழில் துறை அளவில் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. 2026–27-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலைத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் ₹10,000 கோடி மதிப்பிலான சக்தி (அறிவு மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் மூலம் உயர் வளர்ச்சி அமைப்புகளை ஊக்குவித்தல்) (Stimulating High-growth Agencies through Knowledge and Technology Integration (SHAKTI)) முன்முயற்சியைப் பரிந்துரைத்தாலும், ஒரு மருந்தாக்கத் தொடக்க நிறுவனம் (Pharmaceutical Start-up) தனது உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன் 998 இணக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதில் சுமார் 49% குற்றவியல் பொறுப்புகளை உள்ளடக்கியவை ஆகும். இத்தகைய பரவலான குற்றமயமாக்கல், தொழில் செய்வதற்கான செலவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிகாரிகளின் தன்னிச்சையான அதிகாரத்தையும் விரிவுபடுத்துகிறது. இது தேவையற்ற ஊழல் அல்லது முறையற்ற ஆதாயம் தேடும் சூழலை உருவாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
நம்பிக்கையூட்டும் மாற்றங்கள்
இருப்பினும், சில நேர்மறையான மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)), வங்கி கணக்குகள் மற்றும் டிஜிட்டல் அடையாளங்களுடன் (Aadhaar) இணைக்கப்பட்ட நேரடிப் பயன் பரிமாற்றத்தை (Direct Benefit Transfer (DBT)) பயன்படுத்துவதன் மூலம், சில நலத்திட்டங்களில் நிதி கசிவு ஏற்படுவதைக் குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கட்டணக் குறியீடு (Reserve Bank of India’s Digital Payments Index (RBI-DPI)), மார்ச் மாதம் 2018-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 2021-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களைக் கண்காணித்து வருகிறது. இந்தக் குறியீடு மார்ச் மாதம் 2025-ஆம் ஆண்டில் 493.22-ஆக இருந்து, செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் 516.76-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) வலைப்பின்னலும் மறைமுக வரிகளில் முறைப்படுத்தப்பட்ட தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
மின்னணு கொள்முதல் இணையதளங்கள் (E-procurement portals) மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகள், முறையற்ற ஆதாயம் தேடும் சில வாய்ப்புகளைக் குறைத்துள்ளன. இந்தச் சீர்திருத்தங்கள், முறையான நிறுவன வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் தனிநபர்களின் தன்னிச்சையான அதிகாரத்தைக் குறைக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றன. எனவே, ஊழல் என்பது வெறும் தார்மீக அல்லது சட்ட ரீதியான சிக்கல் மட்டுமல்ல என்றும் அது ஒரு பொருளாதாரத் தடை மற்றும் நாட்டின் பலவீனமாகவும் கருதப்படுகிறது. இது நிதி செயல்திறனை பலவீனப்படுத்துவதோடு, அரசின் ஒழுங்குமுறை நம்பகத்தன்மையைக் குலைத்து, சமூக நம்பிக்கையையும் குறைக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர இலக்கு வைத்துள்ள ஒரு நாட்டிற்கு, நிர்வாகத் தரம் அப்படியே தேக்க நிலையில் இருக்க முடியாது என்கின்றனர். நிறுவன ரீதியான கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் வெறும் பொருளாதார விரிவாக்கம் மட்டும் நிகழ்ந்தால், அது ஒரு சமநிலையற்ற நிலையை உருவாக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
2025-ஆம் ஆண்டுக்கான இந்த ஊழல் பற்றிய பார்வை குறியீடு (CPI), ஒரு தீர்ப்பாகக் கருதப்படாமல் ஒரு ஒப்பீட்டு அளவுகோலாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். இந்தியா வலுவான அரசியலமைப்பு அடித்தளங்கள், போட்டித்தன்மை வாய்ந்த தேர்தல்கள், திறமையான நீதித்துறை மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வெளிப்படைத்தன்மை, நீதித்துறை செயல்திறன், ஒழுங்குமுறை எளிமைப்படுத்தல் மற்றும் நிறுவனங்களின் சுதந்திரம் ஆகியவற்றில் சிறிய அளவிலான ஆனால் நிலையான முன்னேற்றங்கள் ஏற்பட்டாலே, காலப்போக்கில் நாட்டின் மீதான நேர்மறையான பார்வையை அது கணிசமாக மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர். ஊழல் பற்றிய பார்வை குறியீட்டில் முன்னேறிய நாடுகள், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் அதிரடி நடவடிக்கைகள் மூலமாக அல்லாமல், தொடர்ச்சியான மற்றும் ஒட்டுமொத்த சீர்திருத்தங்கள் மூலமாகவே அந்த நிலையை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலிமையாக உள்ளது. அதே உறுதியுடன் அதன் ஆட்சி நிர்வாகமும் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
சௌமித்ரா பதுரி, மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் பேராசிரியர் ஆவார். இவர் நிதிப் பொருளாதாரம் மற்றும் பொருளியல் அளவியல், வளர்ச்சிப் பொருளாதாரம் மற்றும் கொள்கைப் பகுப்பாய்வு ஆகியவற்றில் ஆய்வு செய்கிறார். மேலும், சர்வதேச இதழ்களில் பரவலாகப் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
Original link:
Deepening global corruption as a pointer for India.