நிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதா: என்ன மாற்றங்களை செய்கிறது? அதில் உள்ள தடைகள் என்ன? - ஜதின் ஆனந்த்

தீவிர ஆய்விற்காக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு (Joint Parliamentary Committee) அனுப்பப்படவுள்ள, 2026-ஆம் ஆண்டின் நிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதாவின் முக்கிய அம்சங்கள் இங்கே  உள்ளன.


திங்கட்கிழமை  அன்று மக்களவையில் பெருநிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-ஐ தாக்கல் செய்த பிறகு, பெருநிறுவன மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கு ஏதுவாக, இந்த மசோதாவை 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (JPC) அனுப்ப முன்மொழிந்தார். அந்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்படும் 21 மக்களவை உறுப்பினர்களையும் 10 மாநிலங்களவை உறுப்பினர்களையும் உள்ளடக்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC), இந்த வருடத்தின் பிற்பகுதியில் நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில், இந்த மசோதா குறித்த தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.


மசோதாவில் உள்ள திருத்தங்கள் மற்றும் அது ஏன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்தும் இங்கே காணலாம்.


2026-ஆம் ஆண்டு நிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதா, என்றால் என்ன?


2026-ஆம் ஆண்டு நிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதா,  நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை செயல்முறைகளை நெறிப்படுத்தவும், குற்றவியல் தண்டனைகளிலிருந்து பண அபராதங்களுக்கு மாறுவதன் மூலம் சிறிய அளவிலான குற்றங்களைக் குற்றமற்றதாக்கவும், 2008-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (Limited Liability Partnership Act) சட்டம் மற்றும் 2013-ஆம் ஆண்டு நிறுவனங்கள் (Companies Act) சட்டம் ஆகியவற்றைத் திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலப்பு முறை வருடாந்திர அல்லது சிறப்புப் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கான விதிமுறைகள், செலுத்தப்படாத ஈவுத்தொகை மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்வதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட அறக்கட்டளைகளை, இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI) அல்லது இந்திய நிதி அமைப்பு குறியீடு (Indian Financial System Code (IFSC)) அதிகார அமைப்பின்கீழ் பதிவு செய்யப்பட்ட, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகளாக (Limited Liability Partnerships (LLPs)) ஆக மாற்றுவதற்கான சட்ட வடிவமைப்பையும் அறிமுகப்படுத்துகிறது. அதேபோல், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) விதிகள் அமல்படுத்தப்படவேண்டிய லாப அளவு (profitability threshold) உயர்த்தப்பட வேண்டும் என்று இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.


முன்மொழியப்பட்ட புதிய சட்டம் எந்தெந்தச் சட்டங்களைத் திருத்த முற்படுகிறது? எவ்வாறு திருத்தத்தை மேற்கொள்கிறது?


நிறுவனங்கள் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்துத் திருத்துவதற்காக 2013-ஆம் ஆண்டு நிறுவனங்கள் (Companies Act) சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் பங்குதாரர்களுக்கான தகவல்களை வெளிப்படுத்தல் (disclosures), இயக்குநர்கள், தணிக்கையாளர்கள் (auditors) மற்றும் முக்கிய நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோரின் பொறுப்புத்தன்மை (accountability), முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஆட்சி ஆகியவற்றில் முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. குறிப்பிட்ட சில குற்றங்களை குற்றமற்றவையாக்கவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும், இணக்கத் தேவைகளை முறைப்படுத்தவும் மற்றும் புதிய கோட்பாடுகளை அங்கீகரிக்கவும், இது 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது.


2008-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைச் சட்டம், (The Limited Liability Partnership Act), வரையறுக்கப்பட்ட பொறுப்பான கூட்டாண்மைகளை அமைப்பதற்கும், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், அது தொடர்பான பிற விவகாரங்களை தெரிந்து கொள்ளும் நோக்கில் இயற்றப்பட்டது. வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைச் சட்டம் என்பது கூட்டுத்தொழில் (partnership firm) போன்ற நெகிழ்வுத்தன்மையைக் கொண்டதுடன், குறைந்த பொறுப்பு (limited liability) மற்றும் நிலையான தொடர்ச்சி கொண்ட ஒரு நிறுவனம் போல அமைக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைச் சட்டம் சட்டம் 2021-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அந்தத் திருத்தம் வணிகம் செய்வதை எளிதாக்கவும் (ease of doing business), சில குற்றங்களை குற்றவியல் தண்டனையிலிருந்து நீக்கவும் (decriminalise) உதவியது.


முன்மொழியப்பட்ட சட்டத்தின் முக்கிய விதிகள் யாவை?


இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களில், நிறுவன சமூகப் பொறுப்பிற்கான (CSR) தகுதி வரம்பை, தற்போதுள்ள ரூ.5 கோடி லாபத்திலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்துவதும் அடங்கும். தற்போதைய சூழலில், ​​நிறுவனங்கள் முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரி லாபத்தில் 2%-ஐ நிறுவன சமூகப் பொறுப்பு முயற்சிகளுக்காகச் செலவிட வேண்டும்.


மேலும், இது சிறு நிறுவனங்களுக்கு நிறுவன சமூகப் பொறுப்பு விதிகள், தணிக்கையாளர் நியமனம் தொடர்பான தேவைகளிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலமும், கூடுதல் கட்டணங்களைக் குறைப்பதன் மூலமும் தளர்வுகளை வழங்க முன்மொழிகிறது. இந்த மசோதா, நடைமுறையில் உள்ள திட்டங்கள் தொடர்பான செலவிடப்படாத நிறுவன சமூகப் பொறுப்பு தொகையை, அட்டவணையிடப்பட்ட வங்கியில் (scheduled bank) உள்ள “செலவிடப்படாத நிறுவன சமூகப் பொறுப்பு கணக்கிற்கு மாற்றவேண்டிய காலவரம்பை, 30 நாட்களிலிருந்து 90 நாட்களாக உயர்த்த முன்மொழிகிறது.


மற்ற முக்கிய அம்சங்களில், நிறுவனங்களின் வருடாந்திர கூட்டம் மற்றும் அசாதாரண பொதுக்கூட்டம் ஆகியவை வீடியோ கான்பரன்ஸ் அல்லது பிற ஒலி-ஒளி முறைகள் மூலம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், மூன்று ஆண்டுகளில் குறைந்தது ஒருமுறை, வருடாந்திர பொதுக் கூட்டம் நேரடியாக நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. மேலும், சட்டத்தின்கீழ் தேவையான சில உறுதிமொழிகள் சுய அறிவிப்பு மூலம் மாற்றப்படலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது.


மசோதா மீதான ஆட்சேபணைகள் என்ன?


முன்மொழியப்பட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியுள்ள ஆட்சேபனைகளில், நிலையான அரசியலமைப்புக் கோட்பாடுகளை மீறி, அத்தியாவசியமான சட்டமியற்றும் பணிகளை இது அளவுக்கு அதிகமாகப் பகிர்ந்தளிக்கிறது என்ற வாதங்களும் அடங்கும். விலக்கு பெறும் நிறுவனங்களின் வகைப்படுத்தல், இணக்கத் தேவைகளை நிர்ணயித்தல், பெருநிறுவன சமூகப் பொறுப்புக்கான வரம்புகள், தணிக்கைக் கடமைகள் மற்றும் அபராதக் கட்டமைப்புகள் போன்ற முக்கிய கொள்கை விஷயங்களை,  நாடாளுமன்றத்திடமிருந்து போதுமான சட்ட வழிகாட்டுதல் இல்லாமல், துணைச் சட்டங்களுக்கு இந்தச் சட்டம் விட்டுவிடுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். மேலும், இந்த மசோதா தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம்  (National Financial Reporting Authority (NFRA)) போன்ற அமைப்புகளுக்குச் சட்டமியற்றும் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரங்களை வழங்க வழிவகை செய்கிறது என்று எதிர்கட்சி கூறுகிறது.


பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் வெவ்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்காக நிறுவனங்களின் ஒரு பிரிவு அல்லது பிரிவுகளை அடையாளம் காண ஒன்றிய அரசுக்கு அனுமதி அளிப்பதையும், பொது நலன் போன்ற பரந்த மற்றும் வரையறுக்கப்படாத காரணங்களின் அடிப்படையில் தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம் (NFRA) போன்ற சட்டப்பூர்வ ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் அவற்றை மீறவும் ஒன்றிய  அரசுக்கு விரிவான அதிகாரங்களை வழங்குவதையும் சுட்டிக்காட்டி, இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


மற்ற முக்கிய வாதங்களில், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) தேவைகளை "தளர்த்தும்" முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், 2013-ஆம் ஆண்டு நிறுவனங்கள்  சட்டத்தை   மீறும் நிலைகளில் இருந்த சிறைத்தண்டனை (imprisonment) போன்ற விதிகள் நீக்கப்படுவது பற்றியும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய மாற்றங்கள் நிறுவன ஆட்சி (corporate governance) அமைப்பில் உள்ள பொறுப்புணர்வை (accountability framework) தளர்த்தும் என்றும், அதன் மூலம் பங்குதாரர்களின் பங்கேற்பு குறையும், விதிமுறைகளைப் பின்பற்றும் ஒழுங்கு (compliance discipline) பாதிக்கப்படும், மொத்த நிறுவன ஆட்சி தரநிலைகள் (corporate governance standards) பலவீனப்படலாம் என்ற கவலைகளை  எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.



அரசாங்கத்தின் பதில் என்னவாக இருந்தது?


முன்மொழியப்பட்ட விதிகள், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI), போட்டி ஆணையம் மற்றும் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (Industrial Development Bank of India (IDBI)) போன்ற பிற ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட விதிகளைப் போலவே உள்ளன என்றும், தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையத்தின் (NFRA) விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முன் கலந்தாலோசனைக்கு உட்பட்டது என்றும், ஒவ்வொரு விதிமுறையும் 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.


பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) தொடர்பாக, வளர்ச்சி அடைய விரும்பும் சிறு வணிகங்களுக்கு ஆதரவாக நிகர இலாப அளவுகோல் மட்டுமே திருத்தப்படுவதாகவும், 2013-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் வெளிக்காட்டும் வகையில், ரூ.5 கோடியாக இருந்த நிகர இலாப அளவுகோல் ரூ.10 கோடியாக உயர்த்தப்படுவதாக அரசாங்கம் கூறியுள்ளது. ரூ. 500 கோடி நிகர மதிப்பு அல்லது ரூ. 1,000 ரூபாய் வர்த்தக அளவு போன்ற பிற முக்கிய அளவுகோல்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அரசாங்கம் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.


குற்றவியல் தளர்வு (decriminalisation) தொடர்பாக, 21 குற்றங்கள் தீர்ப்பளிப்பு நடைமுறைக்கு (adjudication mechanism) மாற்றப்படுகின்றன என்றும், இதில் மசோதா மூலம் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், அபராதங்களை விதிக்கும் செயல்முறை மின்னணுத் தீர்ப்பளிப்பு (e-adjudication) தளத்தின் மூலம் வெளிப்படையாக (transparent) நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட தீர்மான அதிகாரம் (discretion) நீக்கப்பட்டுள்ளது. இது ஊழலைத் தடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.


முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம்  நிறுவன நிர்வாகத்தை எளிதாக்குவதை உறுதி செய்யும், மின்னணு வழி காணொளிக் கூட்டங்கள் பங்குதாரர்களின் பங்கேற்பை அதிகரிக்கும். மேலும், சிறு நிறுவனங்களுக்கான விதிகள் ஒருபுறம் அவற்றின் சுமையைக் குறைப்பதற்கும், மறுபுறம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (Micro, Small, and Medium Enterprises (MSMEs))  முறைப்படுத்துவதற்கு  ஒரு சிறந்த  நடவடிக்கையாக அமையும் என்று அரசாங்கம்  தெரிவித்துள்ளது.

Original link: 

Corporate Laws (Amendment) Bill: What it changes, what are the objections.


Share: