16-வது நிதி ஆணையத்தின் (16th Finance Commission (XVIFC)) பேரிடர் நிதி ஒதுக்கீட்டு முறையில் உள்ள கட்டமைப்புரீதியான குறைபாடுகள், இந்தியாவில் இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுக்குப் போதிய நிதி உதவி கிடைக்காமல் செய்கின்றன.
இந்தியாவில் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக ஒடிசா உள்ளது. அதன் 574.7 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதி, இந்தியத் துணைக்கண்டத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த சூறாவளிகளை எதிர்கொண்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக, ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள் (Early Warning Systems (EWS)), புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துதல் ஆகியவற்றில் முதலீடு செய்ததன் மூலம், ஒடிசா மாநிலம் புயல் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்களை முழுமையாகக் குறைத்துள்ளது. இருப்பினும், 15-வது நிதி ஆணையத்துடன் ஒப்பிடுகையில், தற்போது 16-வது நிதி ஆணையம் அனைத்து 28 மாநிலங்களிலும் இல்லாத வகையில், ஒடிசாவிற்கு வழங்கப்படும் பேரிடர் நிதிப் பங்கீட்டில் 1.57 சதவீதப் புள்ளிகள் என்ற மிகப்பெரிய குறைப்பைச் செய்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
அதிகப்படியான ஆபத்துக்களையும், அதே சமயம் வலுவான தயார்நிலைத் திறனையும் கொண்டுள்ள ஒரு மாநிலம், நிதி ஒதுக்கீட்டில் மட்டும் எப்படிப் பெரும் இழப்பை எதிர்கொள்கிறது? இதற்கான விடை, ஒன்றிய நிதி ஆணையத்தின் (Finance Commission (FC)) நிதிப் பகிர்வு முறையில் உள்ள கட்டமைப்புரீதியான குறைபாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
திருத்தப்பட்ட முறைகள் மற்றும் அதன் நியாயப்படுத்தல்
16-வது நிதி ஆணையம் மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்காக (State Disaster Response Fund (SDRF)) ₹2,04,401 கோடியை ஒதுக்கியுள்ளது. இது முந்தைய ஆணையம் ஒதுக்கியதைவிட 59.5% அதிகமாகும். இதற்காக, ஒரு தத்துவார்த்த மாதிரியின் அடிப்படையில் அமைந்த பேரிடர் அபாயக் குறியீட்டை (Disaster Risk Index (DRI)) அந்த ஆணையம் பயன்படுத்தியது. DRI = ஆபத்து (Hazard) × வெளிப்பாடு (Exposure) × பாதிப்புத்தன்மை (Vulnerability) என்பதாகும். இது 15-வது நிதி ஆணையத்தின் முறையிலிருந்து மாறுபட்டது. முந்தைய ஆணையம் ஆபத்தையும் பாதிப்புத்தன்மையையும் ஒன்றோடொன்று தொடர்புடைய காரணிகளாகக் கருதாமல், தனித்தனி மாற்றுகளாகக் கருதியது. ஒரு ஆபத்தானது (Hazard), அந்தப் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய மக்களையும் சூழலையும் (Exposure & Vulnerability) தாக்கும்போது மட்டுமே அது 'பேரிடர்' ஆகிறது. உதாரணமாக, மக்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரையை ஒரு பலமான சூறாவளி தாக்கினால், அது ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமே, அது பேரிடராகக் கருதப்படாது. இந்தக் கோட்பாடு சரியானது என்றாலும், இதை நடைமுறைப்படுத்திய விதத்தில் சில குறைபாடுகள் உள்ளன.
முக்கியமான சிக்கல் என்னவென்றால், 'பாதிப்பு வாய்ப்பு' (Exposure) எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதுதான். நிதி ஆணையம் ஒவ்வொரு மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையையும் அடிப்படையாகக் கொண்டு, 1 முதல் 25 வரையிலான அளவில் இந்த மதிப்பைக் கணக்கிடுகிறது. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்திற்கு 25-புள்ளிகளும், சிக்கிமிற்கு 1-புள்ளியும் வழங்கப்படுகிறது. இந்த முறை பயன்படுத்துவதற்கு எளிதானது, ஆனால் அறிவியல்ரீதியாகச் சரியானது அல்ல என்கின்றனர். காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி (Intergovernmental Panel on Climate Change Sixth Assessment Report (IPCC AR6)), 'பாதிப்பு வாய்ப்பு' என்பது ஒரு மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையைக் குறிப்பதல்ல; மாறாக, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மக்கள் வசிப்பதையே குறிக்கிறது. பாதுகாப்பான உள்நாட்டுப் பகுதியில் 10 கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தைவிட, புயல் அபாயம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் 3 கோடி மக்கள் வாழும் மாநிலத்திற்கே பாதிப்பு வாய்ப்பு அதிகம் எனப்படுகிறது. எனவே, மொத்த மக்கள்தொகையும், அபாயகரமான மண்டலங்களில் வாழும் மக்கள்தொகையும் ஒன்றல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் உண்மையான விளைவுகள் மிகத் தெளிவாக உள்ளன. இந்தியாவிலேயே ஒடிசா மாநிலம்தான் மிக உயர்ந்த ஆபத்து மதிப்பெண்ணை (Hazard Score - 12) கொண்டுள்ளது. ஆனால், அதன் மக்கள்தொகை மதிப்பெண் (Population Score) 5-ஆக மட்டுமே இருப்பதால், அதன் பேரிடர் அபாயக் குறியீடு (Disaster Risk Index (DRI)) 79.8-ஆகக் குறைந்துள்ளது. இது பீகார் (224.2) மற்றும் உத்தரப் பிரதேசம் (413.2) ஆகிய மாநிலங்களைவிட மிகக் குறைவாகும், இருப்பினும் அந்த மாநிலங்களின் ஆபத்து மதிப்பெண்கள் ஒடிசாவைவிடக் குறைவாகவே உள்ளன. நடைமுறையில், இந்தக் கணக்கீட்டு முறையானது மக்கள்தொகையின் அளவிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், ஒரு மாநிலம் மிக அதிக ஆபத்தை எதிர்கொண்டாலும், அதன் மக்கள்தொகை குறைவாக இருந்தால் குறைவான நிதியையே பெற முடியும் என்கின்றனர். இத்தகைய பாரபட்சத்தைத் தவிர்க்கவே 'அபாய அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு முறை' உருவாக்கப்பட்டது, ஆனால், இந்த முறையானது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இரண்டாவது பிரச்சனை நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. ஒரு மாநிலத்தின் பாதிப்புத் தன்மையானது, அந்த மாநிலத்தின் சராசரி தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (Net State Domestic Product (NSDP0)) மூலம் அளவிடப்படுகிறது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களிடம் பேரிடர்களைக் கையாளக் குறைந்த அளவே வளங்கள் இருக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள கருத்தாகும். இருப்பினும், மாநிலத்தின் சராசரி தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (NSDP) என்பது ஒரு மாநிலத்தின் நிதித் திறனை மட்டுமே காட்டுகிறதே தவிர, உண்மையான பேரிடர் பாதிப்புத் தன்மையைக் காட்டுவதில்லை. ஒரு இடத்தின் பாதிப்புத் தன்மை என்பது வீடுகளின் தரம், அபாயகரமான பகுதிகளில் உள்ள சுகாதார வசதிகள், முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் எவ்வளவு மக்கள் வசிக்கிறார்கள் போன்ற பல காரணிகளைச் சார்ந்ததாகும். மேலும், சராசரி வருமானம் என்பது ஒரு மாநிலத்திற்குள் நிலவும் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மறைத்துவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டில், கேரளா ஒரு நூற்றாண்டில் இல்லாத மிக மோசமான வெள்ளத்தை எதிர்கொண்டது, இதனால் சுமார் ₹31,000 கோடி மதிப்பிலான இழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், தற்போதுள்ள கணக்கீட்டு முறையின்படி, கேரளாவின் தனிநபர் வருமானம் (Per Capita Income) அதிகமாக இருப்பதால், அதன் பாதிப்புத் திறன் மதிப்பீடு 1.073 என்ற குறைவான அளவிலேயே காட்டப்படுகிறது. கேரளாவின் மக்கள் தொகை மதிப்பீடு 4-ஆக இருந்தபோதிலும், அதன் பேரிடர் அபாயக் குறியீடு (DRI) 34.5 என்ற அளவிலேயே உள்ளது. இது பேரிடர் வரலாறே இல்லாத பல மாநிலங்களைவிடக் குறைவானதாகும். மறுபுறம், ஜார்க்கண்ட் மாநிலம் உண்மையான வறுமை மற்றும் பழங்குடியின மக்களின் சவால்களால் காரணமாக இரண்டாவது மிக உயர்ந்த பாதிப்புத் திறன் மதிப்பீட்டைக் கொண்டிருந்தாலும், அதன் மக்கள் தொகை மதிப்பீடு ஈடுகொடுக்க முடியாததால், அந்த மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதியில் 0.78 சதவீத இழப்பு ஏற்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இருபது மாநிலங்கள் தங்களின் நிதிப் பங்கீட்டை இழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் அவை பாதுகாப்பானவை என்பது அல்ல, மாறாக அவை சிறிய மாநிலங்களாகவோ, ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களாகவோ அல்லது இவை இரண்டுமே காரணமாகவோ இருக்கின்றன.
மாற்றப்பட வேண்டியவை எவை?
வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமவெளிகள், புயல் தாக்கும் கடற்கரைப் பகுதிகள் மற்றும் நிலநடுக்க மண்டலங்கள் போன்ற பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கையை, கட்டிடப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம் (Building Materials and Technology Promotion Council (BMTPC)) வெளியிட்ட பாதிப்பு வரைபடம் (Vulnerability Atlas) மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் அளவிட வேண்டும். பாதிப்புத் தன்மை என்பது வெறும் மக்கள் தொகை மட்டுமல்லாது, ஓலைக்குடிசை வீடுகளின் (Kutcha houses) விகிதம், வேளாண்மையைச் சார்ந்து இருத்தல், அதிக அபாயம் உள்ள மாவட்டங்களில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பு, பயிர்க் காப்பீட்டு வசதி மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளின் செயல்திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த குறியீடாக வரையறுக்கப்பட வேண்டும். இதற்காக தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு-5 (National Family Health Survey (NFHS-5)), பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)), தேசிய நல்வாழ்வுத் திட்டம் (National Health Mission (NHM)) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. நிதி ஆணையம், வருடாந்திர 'மாநில பேரிடர் பாதிப்புக் குறியீட்டை' அதிகாரப்பூர்வமாக வெளியிடுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (National Disaster Management Authority (NDMA)) அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் எதிர்கால நிதி ஒதுக்கீடுகளுக்கு ஒரு தரப்படுத்தப்பட்ட முறையைப் பின்பற்றவும், புள்ளிவிவரங்கள் குறித்த தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும் முடியும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர்.
பேரிடர் நிதியுதவி தொடர்பான விஷயத்தில் இந்தியா தவறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர். பருவநிலை முன்னறிவிப்புகள் இரு கடற்கரைப் பகுதிகளிலும் அடிக்கடி சூறாவளிகள் தாக்கும் என்றும், தீபகற்ப மற்றும் மத்திய இந்தியாவில் வறட்சிப் பகுதிகள் விரிவடையும் என்றும், ஏற்கனவே பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கின்றன. பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களான ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் ஆகியவற்றிற்கு தற்போதைய நிதி ஒதுக்கீடு முறை போதுமான நிதியுதவியை வழங்கத் தவறிவிட்டது. ஒட்டுமொத்த மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கணக்கீடு முறை உண்மையான ஆபத்தை அளவிடப் பயன்படாது என்றும் அது வெறும் எண்ணிக்கை மட்டுமே தவிர, பாதிப்புக்குள்ளாகும் மக்கள தொகையை அது கணக்கில் கொள்ளவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அஸ்வதி ரேச்சல் வர்கீஸ், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி மற்றும் வரிவிதிப்பு நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
Original article :Counting people is not counting disaster risk. -Aswathy Rachel Varughese