பசுமை யூரியாவை (green urea) மட்டும் உற்பத்தி செய்வது போதுமானதாக இருக்காது. யூரியா பயன்பாட்டையும் நாம் மேம்படுத்த வேண்டும். ஏனெனில், நாட்டில் யூரியா அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், நிலம், நீர் மற்றும் சூழல் ஆகியவை மாசடைகின்றன.
மேற்கு ஆசிய மோதல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பின்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த பாதிப்பு நமது உணவுப் பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி அதிகம் விவாதிக்கப்படுவதில்லை. பசுமைப் புரட்சிக்குப் (Green Revolution) பிறகு, அதிக பயிர் விளைச்சலுக்குத் தேவையான நைட்ரஜனை வழங்குவதற்காக இந்தியா யூரியாவையே சார்ந்துள்ளது. பயன்படுத்தப்படும் அனைத்து உரங்களிலும் 56 சதவீதமும், நைட்ரஜன் உரங்களில் 80 சதவீதம் யூரியா பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டு யூரியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்த நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கிற்கு அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விளைவாக, இந்தியாவில் பயன்படுத்தப்படும் யூரியாவில் 90 சதவீதம் இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது.
நிதிச் சுமை ஒரு பதிலை சொல்கிறது. யூரியா மானியம் 1980-81-ல் ரூ.500 கோடிக்கும் குறைவாக இருந்ததிலிருந்து, 2022-23-ல் ரூ. 1.65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பின்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பைத் தக்கவைத்திருக்க அதிகமாக பொதுமக்களின் வளங்கள் செலவிடப்படுகின்றன. மாற்றுத் தீர்வுகளை உருவாக்கத் தேவையான தொழில்நுட்பங்களும் அரசு திட்டங்களும் உள்ளன. ஆனால், அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் ஒரு தெளிவான முயற்சி (mission) இப்போது இல்லை.
யூரியா உற்பத்தியில் இரண்டு முக்கிய செயல்முறைகள் உள்ளன: முதலில் ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜனில் இருந்து அமோனியா தயாரிக்கப்படுகிறது; அதன் பிறகு அது CO₂ உடன் வினைபுரிந்து (reacting) யூரியா உருவாகிறது. இந்தியாவில், ஹைட்ரஜன் மற்றும் CO₂ இயற்கை எரிவாயுவிலிருந்து பெறப்படுகின்றன. நைட்ரஜன் வளிமண்டலத்திலிருந்து பெறப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் யூரியா “கிரே யூரியா” (grey urea) எனப்படுகிறது. ஆனால், ஹைட்ரஜனை நீரிலிருந்து மின்னாற்பகுப்பு (electrolysis) முறையின் மூலம் தயாரிக்கவும் முடியும். 1970-களில் இந்திய உரக் (Fertiliser Corporation of India) கழகத்தின் நங்கல் ஆலை இந்த முறையை பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரித்தது. ஆனால், பக்ரா அணை மின்சார வலையமைப்பில் ஏற்பட்ட மின்சார பற்றாக்குறையால் ஹைட்ரோகார்பன் முறைக்கு மாறப்பட்டது. மேலும், கார்பன் பிடித்தல் மற்றும் பயன்பாடு (Carbon Capture and Utilisation (CCU)) தொழில்நுட்பமும் யூரியா துறையில் ஏற்கனவே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது புகை வாயுவிலிருந்து (flue gas) CO₂-ஐ மீட்டெடுக்க உதவுகிறது. மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி யூரியாவை உற்பத்தி செய்வதற்குத் தேவையான கட்டுமான நுட்பங்கள் மின்னாற்பகுப்பு மூலம் ஹைட்ரஜன், கார்பன் பிடிப்பு மூலம் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் வளிமண்டலத்திலிருந்து நைட்ரஜன் நம்மிடம் ஏற்கனவே உள்ளன. இந்த மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் வழங்கினால், அதனால் “பசுமை யூரியா” (green urea) பெற முடியும்.
வெளிப்படையான கேள்வி, செலவு பற்றியதுதான். நானும் எனது ஊழியர்களும் இந்தியாவில் உள்ள 36 யூரியா ஆலைகள் அனைத்தையும் ஆய்வு செய்ததில், 2028-ஆம் ஆண்டுக்குள் ஒரு புதிய யூரியா ஆலைக்கு பசுமை யூரியாவே மிகவும் செலவு குறைந்த தேர்வாக மாறக்கூடும் என்று தெரியவந்துள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள், இதன் சமப்படுத்தப்பட்ட செலவு சாம்பல் யூரியாவைவிட 20 சதவீதம் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது; 2050-ஆம் ஆண்டுக்குள், இது 100 சதவீதம் விரிவடையும். இந்தத்துறையைப் பொறுத்தவரை, 2025 மற்றும் 2050-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பசுமை யூரியாவின் சராசரி சமப்படுத்தப்பட்ட செலவு ஒரு டன்னுக்கு $475 ஆக இருக்கும். சாம்பல் யூரியாவின் விலை $540-ஆக இருக்கிறது. இன்றைய நிலையில், உலக சந்தையில் கிரே யூரியா ஒரு டன்னுக்கு $600 வரை உயர்ந்துள்ளது. நிலைத்தன்மையற்ற உலக அரசியல் சூழலில், பொருளாதாரரீதியாகப் பார்க்கும்போது இப்போது பசுமைத் தீர்வுகளுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
இந்த மாற்றத்தை மேம்படுத்த இந்தியாவில் பல திட்டங்கள் உள்ளன. அவற்றை வேறு திசையில் திருப்ப வேண்டும். தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், பசுமை அம்மோனியாவை ஏற்றுமதி செய்வதிலும், அதை யூரியா அல்லாத உரங்கள் மற்றும் பிற துறைகளில் பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த கவனம் பசுமை யூரியா (green urea) தயாரிப்பிற்கும் திருப்பப்பட வேண்டும். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், கார்பன் பிடித்தல், பயன்பாடு மற்றும் சேமிப்பிற்காக ஐந்து ஆண்டுகளில் ரூ. 20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், யூரியா ஆலைகளுக்கு CO2 வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த திட்டங்களை ஒருங்கிணைத்து, அவற்றுக்கு தெளிவான உத்திகளை வழங்கினால், யூரியாத் துறையை பசுமைத் துறையாக மாற்றியமைக்க முடியும்.
நாம் யூரியாவின் பயன்பாட்டையும் மேம்படுத்த வேண்டும். ஏனெனில், நாட்டில் யூரியா கணிசமாக அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு, நிலம், நீர் மற்றும் காலநிலையை மாசுபடுத்துகிறது. இதை அடைவதற்கு, அரசாங்கம் மூன்று விஷயங்களைச் செய்யும் ஒரு பசுமை யூரியா திட்டத்தைத் தொடங்க வேண்டும்: அவை யூரியா உற்பத்தியை இயற்கை எரிவாயுவிலிருந்து பசுமை ஹைட்ரஜனுக்கு மாற்றுவது, பயன்பாட்டை மேம்படுத்துவது மற்றும் உரக் கலவையை மறுசீரமைப்பது ஆகும். 2040-ஆம் ஆண்டுக்குள், நமது நாடு 90 சதவீத யூரியா உற்பத்தியை பசுமை ஹைட்ரஜனுக்கு மாற்றி, இரசாயனமற்ற வேளாண்மையின் கீழ் உள்ள பரப்பளவை 30 சதவீதமாக அதிகரித்து, வேளாண்மையில் நைட்ரஜன் பயன்பாட்டுத் திறனை 30 சதவீதம் மேம்படுத்தி, நைட்ரஜன் உரங்களில் யூரியாவின் விகிதத்தை 30 சதவீதம் குறைத்தால், அதன் பலன்கள் முழுமையாக கிடைக்கும். யூரியா இறக்குமதிகள் முற்றிலுமாக நீக்கப்படும்; மானியங்கள் 65 சதவீதம் குறையும்; மேலும், இந்தத்துறையிலிருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் 60 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறையும். நீர் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைக்கப்படும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தப் பலன்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 1 டிரில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம்.
கட்டமைப்பு சீர்திருத்தம் இல்லாமல் எந்த மாற்றமும் நடக்காது. யூரியா துறை கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது, குறைந்த லாபத்தன்மை கொண்டது மற்றும் புதுமைகளைப் ஏற்பத்துவதற்கு எந்த ஊக்கமும் அளிக்கப்படவில்லை. மிகவும் சாத்தியமான முன்னோக்கிய பாதை என்பது படிப்படியான கட்டுப்பாட்டு நீக்கம் — பிற உரங்களின் விஷயத்தில் உள்ளதைப் போல சந்தை போட்டி.
பசுமை யூரியா திட்டம், சார்பு நிலையிலிருந்து தன்னிறைவை நோக்கி நகரும் ஒரு பாதையை வழங்குகிறது. இதன் பொருளாதார பலன்கள் வலுவானவை. தேவையான தொழில்நுட்பங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. மேலும், சுற்றுச்சூழல் தேவையும் முக்கியமானதாக உள்ளது.
இதன் கட்டுரையாளர், ஐஃபாரஸ்ட் (iForest) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.
Original Link: We need a green exit from the urea trap.