மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) விநியோகத் தடைகள், இந்தியாவின் தூய்மையான சமையல் எரிசக்தி அமைப்பில் உள்ள பலவீனங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேற்கு ஆசியப் போரைத் தொடர்ந்து 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஏற்பட்ட சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டிற்கு வழக்கமான சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: அவை, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து பாதையில் ஏற்பட்ட இடையூறு, இறக்குமதியை அளவுக்கு அதிகமாக நம்பியிருப்பது மற்றும் போதுமான சேமிப்பு வசதிகள் இல்லாதது போன்றவை ஆகும். இந்தக் காரணங்கள் ஒரு அளவிற்கு உண்மையாக இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் 32.83 கோடி குடும்பங்களுக்குத் தூய்மையான சமையல் எரிவாயுவை வழங்கிய ஒரு மக்கள் நலத்திட்டம், ஒரு விநியோகப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டபோது ஏன் எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்படுகிறது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட விரிசல் இந்த நெருக்கடியை ஏற்படுத்தியது என்றால், நமது நலத்திட்ட அமைப்பின் பலவீனமே அதன் பாதிப்பு இவ்வளவு கடுமையாக இருக்கக் காரணம் என்றும் இதுவே நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்றும் கூறப்படுகிறது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)) என்ற நலத்திட்டத்தின்கீழ், 2016-ஆம் ஆண்டு முதல் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு 10.33 கோடி சமையல் எரிவாயு (LPG) இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் சமையல் எரிவாயு பயன்பாடு இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் மிகவும் உண்மையானது மற்றும் அதன் பலன்களும் தெளிவாகத் தெரிந்தன. சர்வதேச நீடித்த வளர்ச்சிக்கான நிறுவனம் (International Institute for Sustainable Development (IISD)) நடத்திய ஆய்வில், சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற பிறகு பெண்கள் சமையல் மற்றும் சுத்தம் செய்யும் பணிகளில் தினமும் சுமார் ஒரு மணி நேரத்தைச் சேமிப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக விறகு மற்றும் பிற உயிரி எரிபொருட்களை (Biomass) கொண்டு சமைத்து வந்த கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .
ஒரு மாற்றத்தில் உள்ள குறைபாடுகள்
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம் எதை வழங்கியது என்பது சிக்கலல்ல, மாறாக அது எதை மாற்றீடு செய்தது என்பதுதான் உண்மையான பிரச்சினை ஆகும். முன்னதாக, மண்ணெண்ணெய் பொது விநியோகத் திட்டத்தின் (Public Distribution System (PDS)) மூலம் வழங்கப்பட்டது. அந்த அமைப்பில் முறைகேடுகள் மற்றும் கசிவுகள் இருந்தபோதிலும், அது குடும்ப அட்டை (Ration Card) வைத்திருப்பவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு அமைப்பாகும். அரசு படிப்படியாகப் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெயை நிறுத்திவிட்டு, தூய்மையான மாற்றாக சமையல் எரிவாயுவிற்கு (Liquefied Petroleum Gas (LPG)) மக்களை மாற்றியபோது, எரிபொருள் வழங்குவதில் தனது நேரடிப் பங்களிப்பையும் குறைத்துக்கொண்டது. 2024-ஆம் ஆண்டிற்குள் 13-மாநிலங்கள் 'மண்ணெண்ணெய் இல்லாத மாநிலங்களாக' மாறின, இதனால் மில்லியன் கணக்கான குடும்பங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத உலகளாவிய சமையல் எரிவாயு சந்தையைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றம், குறைகள் நிறைந்திருந்தாலும் அரசு நிர்வகித்த ஒரு முறைக்குப் பதிலாக, தரமான ஆனால் சந்தை விலையைச் சார்ந்த ஒரு விநியோக முறையைக் கொண்டுவந்தது. எனினும், அந்தச் சந்தை ஒருவேளை தோல்வியடைந்தால் என்ன நடக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவில்லை. இந்தியா தனது சமையல் எரிவாயுத் தேவையில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது, இதில் 90 சதவீத இறக்குமதிகள் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே வருகின்றன. இந்தியாவின் அவசரகால தேவைக்கான பெட்ரோலிய இருப்பு (Strategic Petroleum Reserve (SPR)) சுமார் 9.5 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயை மட்டுமே ஈடுசெய்யும், அதுவும் தற்போது 64 சதவீத அளவிலேயே உள்ளது. மேலும், சமையல் எரிவாயுவிற்கு (LPG) என்று இது போன்ற பாதுகாப்பு இருப்பு ஏதுமில்லை. இதன் விளைவாக, நாட்டின் தூய்மையான சமையல் எரிபொருள் இலக்கானது உலகளாவிய தடையற்ற விநியோகத்தையே முழுமையாகச் சார்ந்துள்ளது. ஆனால், எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட நமது நலத்திட்ட அமைப்பு, விநியோகத்தில் இடையூறு ஏற்படும் காலங்களில் அதைச் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
இறையாண்மை சார்ந்த பொறுப்புகளில் உள்ள குறைபாடுகள்
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் வாக்குறுதியானது அரசின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது என்கின்றனர். சிலிண்டரில் உள்ள அதன் முத்திரை, பெண்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரும் மானியத் தொகை (Direct Benefit Transfer (DBT)), மற்றும் பிரதமரின் பெயரிலேயே அமைந்த இத்திட்டம் என அனைத்தும் அரசு இதில் நேரடியாகப் பங்கெடுத்துப் பொறுப்பேற்பதைக் காட்டின. இருப்பினும், மேற்கு ஆசியப் போர் மற்றும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஆகியவை, அரசின் தகவல் தொடர்பும் அதன் செயல்பாட்டுத் திறனும் ஒருங்கிணையவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்தத் திட்டத்தின் பெயர் மற்றும் விளம்பரம் அரசினுடையதாக இருந்தபோதிலும், அதன் விநியோகச் சங்கிலி சர்வதேச சந்தைகளையும், கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளையும் மட்டுமே நம்பியுள்ளது; இவற்றை எரிவாயு மாற்றத்திற்குப் பிறகு அரசு தூரத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்படும்போது, இத்திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வலுவான உள்க்கட்டமைப்பு வசதிகள் எதுவும் அரசிடம் இல்லை என்பது தெளிவாகிறது.
இந்த இடைவெளியின் தாக்கம் அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை என்கின்றனர். சாதாரண காலங்களில்கூட, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களில் நான்கு பேரில் ஒருவர், ஒருமுறைகூட சிலிண்டரை நிரப்பவில்லை அல்லது ஒரே ஒரு முறை மட்டுமே நிரப்பியுள்ளனர். இதற்குக் காரணம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தைவிட, சிலிண்டரை மீண்டும் நிரப்புவதற்கான செலவு மிக அதிகமாக இருப்பதே ஆகும். கிராமப்புறங்களில் 45 நாட்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 25 நாட்கள் என கட்டாய முன்பதிவு இடைவெளிகள் (Mandatory booking gaps) உள்ளதோடு, மார்ச் மாதத்தில் சிலிண்டர் விலையில் ₹60 உயர்த்தப்பட்டதால், இத்தகைய குடும்பங்கள் தங்களின் சமையல் தேவைக்காக விறகு அடுப்பு (Biomass) போன்ற பழைய முறைகளுக்கே மாறுகின்றனர்; வருமானத்தைப் பொருட்படுத்தாமல், பட்டியலின (SC) மற்றும் பழங்குடியினக் குடும்பங்களுக்கு, உயர் சாதி குடும்பங்களைவிட 10% முதல் 30% வரை குறைவான அளவே சமையல் எரிவாயு (LPG) கிடைக்கிறது. இதற்கு கிராமப்புறங்களில் உள்ள விநியோக அமைப்புகள், வரையறுக்கப்பட்ட சிலிண்டர் விநியோகத்தின்போது நிலவும் சாதிப் படிநிலைகளைப் பின்பற்றுவதும் ஒரு காரணமாகும். மேற்கு ஆசியாவில் ஏற்படும் போர் இத்தகைய சமமற்ற நிலையை மேலும் மோசமாக்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சனையின் பாலினரீதியான அம்சம் ஒரு கட்டமைப்புரீதியிலான குறைபாடாகும். இத்திட்டம் பெண்களை அதிகாரப்பூர்வப் பயனாளிகளாக்கிய போதிலும், எரிவாயு விநியோகத்தின்மீது அவர்களுக்கு எந்தவொரு உண்மையான கட்டுப்பாட்டையும் வழங்கவில்லை. நிலையான வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IISD) நடத்திய ஆய்வில், 74% வீடுகளில் பெண்களே சமையல் எரிசக்தி ஆதாரங்களைத் தீர்மானிக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் (LPG) விலை கடுமையாக உயரும்போது, 14% குடும்பங்கள் மீண்டும் பழைய விறகு அடுப்பு போன்ற உயிரியல் எரிபொருளுக்கே (Biomass) மாறப்போவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்படும் மாற்றங்களை எந்தவொரு ஆதரவும் இன்றி பெண்களே கையாள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கடின உழைப்பிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளிப்பதாகக் கூறப்படும் இத்திட்டம், எரிவாயு விநியோகம் தடைபடும்போதோ அல்லது விலை உயரும்போதோ, மீண்டும் அதே கடின உழைப்பை அவர்கள் மீது திணிக்கிறது. எவ்வித நிறுவனரீதியிலான உதவியும் இன்றி பெண்கள் இந்தச் சுமையை அமைதியாகத் தாங்கிக் கொள்கின்றனர்.
இதற்குப் புதிய தொடக்கம் ஏதும் தேவையில்லை. தற்போதைய அமைப்பில், இரண்டு மாதங்களுக்கான சமையல் எரிவாயு கையிருப்பு, ஹார்முஸ் ஜலசந்திக்கு (Strait of Hormuz) வெளியிலிருந்து இறக்குமதி செய்வதற்கான சட்டப்பூர்வக் கட்டாயம் மற்றும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட நெருக்கடி காலத் திட்டங்கள் போன்ற முக்கிய நடவடிக்கைகள் இதுவரையிலும் செயல்படுத்தப்படவில்லை. கோபர்தன் (Galvanizing Organic Bio-Agro Resources Dhan (GOBARdhan)) திட்டத்தின்கீழ் சமூக உயிரி எரிவாயு உற்பத்தி, செயலற்று இருக்கும் ஐந்து மில்லியன் ஆலைகளை மீண்டும் இயக்க இந்திய உயிரி எரிவாயு சங்கம் (Indian Biogas Association (IBA)) முன்மொழிந்துள்ள ₹10,000 மானியம் மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் குழாய் வழி எரிவாயுவை வேகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள், தேவைப்படும் இடங்களில் வலுவான மாற்று ஆதரவை வழங்கும் என்கின்றனர். ஒரு சிறந்த நலத்திட்ட அமைப்பு என்பது, நெருக்கடியான நேரங்களில் அதன் முக்கிய விநியோக முறையை மாற்றுவது அல்ல; மாறாக, அந்த நெருக்கடி பொதுமக்களைச் சென்றடையாத வகையில் அதன் மாற்றுப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதே ஆகும்.
தொலைநோக்குப் பார்வை
கடந்த பத்தாண்டுகளில், நலத்திட்டங்களின் விரிவாக்கம் என்பது எத்தனை சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன என்ற எண்ணிக்கையிலேயே கவனம் செலுத்தியதே தவிர, ஒரு நெருக்கடி காலத்தில் அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்பதைப் புறக்கணித்துவிட்டது என்பதுதான் இங்குள்ள ஆழமானப் பிரச்சனை ஆகும். சாதாரணச் சூழலில் மட்டுமே பயன்படும் ஒரு சலுகையை உண்மையான பாதுகாப்பாகக் கருத முடியாது. கோடிக்கணக்கான மக்களுக்குத் தூய்மையான சமையல் எரிபொருள் வசதியை (LPG) ஏற்படுத்திக் கொடுத்து, அதை ஒரு மிகப்பெரிய மாற்றம் என்று இந்தியா அரசாங்கம் அழைத்தது. ஆனால், எவ்வித மாற்றுக் ஏற்பாடுகளோ அல்லது தெளிவான முன்னுரிமைகளோ இன்றி, தடையற்ற உலகளாவிய விநியோகச் சங்கிலியை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தை, உண்மையில் ஒரு 'உறுதிமொழி' அல்லது 'உத்தரவாதம்' என்று சொல்ல முடியுமா? என்கிற முக்கியக் கேள்வி எழுப்பப்படுகிறது.
ராகுல் வர்மா, சுதந்திரமான ஆராய்ச்சியாளர் மற்றும் சமூகவியல் கல்வியாளர் ஆவார்.
Original Link: A flame the state cannot guarantee.