முன்மொழியப்பட்ட இந்தத் மசோதா, அந்நிய பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (Foreign Contribution (Regulation) Amendment (FCRA)) சான்றிதழ் ரத்து செய்யப்பட்டாலோ, ஒப்படைக்கப்பட்டாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோ, நிதி மற்றும் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரியை நியமிக்கும் அதிகாரத்தை, ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது.
மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, ஒன்றிய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான பேசுபொருளாக மாறியுள்ளது.
கேரளாவில், ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறுபான்மை சமூகங்களின் நிறுவனங்களைக் குறிவைக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளன. ஏப்ரல் 9 அன்று நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்த மசோதா தொடர்பாக இரண்டு கட்சிகளும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (FCRA) என்றால் என்ன?
இந்த மசோதா, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அவர்களால், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா, 2010-ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) என்ற சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய முயற்சிக்கிறது. மசோதாவிற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையில், FCRA 2011 மே 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடைகளையும் விருந்தோம்பலையும் ஏற்றுக்கொள்வதையும் பயன்படுத்துவதையும் இந்தச் சட்டம் ஒழுங்குபடுத்துகிறது. இதன் நோக்கம், வெளிநாட்டு நிதி வரவுகள் நாட்டின் நலன், பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு இருப்பதை உறுதி செய்வதாகும்.
இந்தச் சட்டம் 2016, 2018 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் மூன்று முறை திருத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தச் சட்டத்தின்கீழ் 16,000 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சங்கங்கள் ஆண்டுதோறும் ரூ.22,000 கோடி பெறுகின்றன என்று அமைச்சர் கூறினார்.
திருத்தம் என்றால் என்ன?
இந்தத் திருத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அமித்ஷா, ஒரு சங்கத்தின் FCRA பதிவு ரத்து செய்யப்படும், ஒப்படைக்கப்படும் அல்லது வேறுவிதமாக நிறுத்தப்படும் சூழல்களில், சில சட்ட குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
FCRA சான்றிதழ் ரத்து செய்யப்படும்போதோ அல்லது காலாவதியாகும்போதோ, வெளிநாட்டுப் பங்களிப்புகள் மற்றும் சொத்துகளை மேற்பார்வையிட்டு நிர்வகிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட அதிகார அமைப்பை உருவாக்குவதன் மூலம், இது போன்ற நிலமைகளுக்கு ஒரு விரிவான கட்டமைப்பு ஒன்றை வழங்க இந்தத் திருத்தம் முயல்கிறது. FCRA சான்றிதழ் ரத்து செய்யப்படும்போதோ, திரும்ப ஒப்படைக்கப்படும்போதோ அல்லது காலாவதியாகும்போதோ, அந்த நிதி மற்றும் சொத்துகளைக் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட அதிகார அமைப்பை நியமிப்பதற்கான அதிகாரத்தை இந்தத் திருத்தம் ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது.
திருத்தத்தின் பிரிவு 16A (7), ஒரு வழிபாட்டுத் தலத்தைப் பொறுத்தவரை, அந்தச் சொத்தின் மேலாண்மை அல்லது செயல்பாட்டை, பரிந்துரைக்கப்படக்கூடிய வகையில் ஒரு நபரிடம் ஒப்படைக்க, நியமிக்கப்பட்ட அதிகார அமைப்புக்கு அதிகாரம் உண்டு என்று கூறுகிறது. அத்தகைய வழிபாட்டுத் தலத்தின் மதச்சார்புத் தன்மை பாதுக்காக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் திருத்தம் குறிப்பிடுகிறது.
மசோதாவை அறிமுகப்படுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்களின் ஆட்சேபனைகளுக்குப் பதிலளித்தபோது, இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில், ஒரு அமைப்பு தனது சான்றிதழை மீண்டும் பெற்றபிறகு, அதன் சொத்துக்களைத் திருப்பித் தரும் செயல்முறைக்கு இந்த மசோதா வழிவகை செய்துள்ளது என்று கூறினார். வெளிநாட்டு நிதியுதவியின் பயன்பாட்டை வெளிப்படையானதாக (foreign funding transparent) மாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கம் என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் தேசிய நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்த ஒரு நபரையும் மோடி அரசு ஆதரிக்காது. தீய எண்ணம் கொண்டவர்களுக்கும், வெளிநாட்டு நிதியுதவியைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்த மசோதா ஆபத்தானது என்று நித்யானந்த் ராய் கூறினார்.
இது ஏன் ஒரு சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது?
கிறிஸ்தவ சிறுபான்மை நிறுவனங்களைக் குறிவைக்க இந்த மசோதா பயன்படுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த மசோதாவைத் திரும்பப் பெறுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு திங்களன்று கடிதம் எழுதினார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பித்தல் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாவிட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, FCRA சான்றிதழை ரத்து செய்ய இந்த மசோதா வழிவகுக்கும் என்றும், இதனால் சொத்துக்கள் நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்ற கவலையே இந்த மசோதாவை எதிர்ப்பதற்கு முக்கியக் காரணியாக உள்ளது. தொழில்நுட்ப அல்லது நடைமுறைத் தாமதங்கள் ஏற்பட்டால், பதிவை ரத்து செய்ய முடியும் என்றும், அதன் விளைவாக அந்த நிறுவனத்தின் சொத்துக்களை ஒன்றிய அரசு கையகப்படுத்த நேரிடும் என்றும் அவர் கூறினார். இது மத நிறுவனங்களிடையே கவலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திங்களன்று கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இந்த மசோதா தொடர்பாக அரசை கடுமையாக சாடினார். இந்த மசோதா ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பயனளிக்கும் என்றும், அதே சமயம் "தொண்டு மற்றும் பிற சமூகநல அமைப்புகள்" ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்று கூறினார்.
எதிர்க்கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருக்கும்போது, "FCRA திருத்தங்களை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற பாஜக திட்டமிடுவதாக" செவ்வாய்க்கிழமை மாலை காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இது வெளிப்படையாகவே அரசியலமைப்புக்கு முரணான சட்டம் ஆகும். இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சமூக அமைப்புகளையும், குறிப்பாக சிறுபான்மை சமூகங்களால் நடத்தப்படும் நிறுவனங்களையும் அழித்துவிடும். இந்தக் கொடூரமான மசோதாவின் மூலம் நேர்மையான தொண்டு நிறுவனங்களை பாஜக மிரட்டுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுபினர்கள் புதன்கிழமை டெல்லிக்கு வந்து நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
Original article : What FCRA Amendment Bill 2026 proposes, why it has sparked a row in Kerala?. -Damini Nath